அமெரிக்க இந்திய சீன நலன்களில் எமது நலனை முன்னிறுத்தல்



ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல் எனும் தலைப்பில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் “புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அமெரிக்க இந்திய சீன நலன்களை விளங்கிக் கொள்ளல்”; எனும் தலைப்பில் பேராசிரியர் சிற்றம்பலம் ஆற்றிய உரைவருமாறு,

இலங்கையிலே காணப்படும் இனப்பிரச்சனையும், அதனை தீர்ப்பதில் தமிழ்மக்களுடைய பங்களிப்பும் தான் முக்கியமானவை. இதில் எமது பங்கு என்ன? நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி ஆராய வேண்டியது தான் இன்றைய கருத்தரங்கிலே பார்க்க வேண்டியவையாகும்.  எமது பிரச்சனை இன்று உள்நாட்டு பிரச்சனை அல்ல. இது ஒரு சர்வதேச பிரச்சனையாக இருப்பது மட்டுமல்ல, ஐக்கிய நாட்டு சபையிலும் அரங்கேறியிருக்கிறது.

1961 ஆம் ஆண்டு வடகிழக்கு நிர்வாகத்தை மூன்று மாதம் ஸ்தம்பிதம் செய்த சத்தியாக்கிரகம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். தந்தை செல்வா அவர்களுடைய பாசறையில் வளர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் பல்வேறு தரப்பினரும் அதிலே பங்கு பற்றியிருந்தார்கள்.  இளைஞர்களாக இருந்த நானும், கௌரவ சித்தார்த்தனும் அந்த சத்தியாக்கிரகத்தில் பங்கு பற்றுவதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி நடுநிசியிலே இராணுவம் பலவந்தமாக நுழைந்து சத்தியாக்கிரகிகளை நையப்புடைத்து எல்லோரையும் தூக்கிச் சென்றது.  சாத்வீகப் போராட்டம் ஆயுதப் போராட்டத்தால் அடக்கப்பட்டது.  ஆனால் அன்று சர்வதேசம் மௌனமாகத்தான் இருந்தது.  அதுவும் தமிழ்நாட்டிலே இருந்த அறிஞர் அண்ணா, ராஜாஜீ போன்றோர் கவலை தெரிவித்தனரேயொழிய இந்திய அரசோ அமெரிக்க மேற்குலக நாடுகளோ இந்தப் பிரச்சனையிலே அக்கறையும் கரிசனையும் கொள்ளவில்லை.  அது அன்றைய நிலை.

இன்று எங்களுடைய பிரச்சனையில் சாத்வீக ரீதியான போராட்டமும் பின் ஆயுதப் போராட்டமும் சர்வதேசத்தின் கண்களை திறந்தது மட்டுமல்ல அவர்கள் பங்காளிகளாக இந்த நாட்டினுடைய பிரச்சனையிலேயே தலையிடுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது.  தந்தை செல்வா ஒன்றையும் சாதிக்காவிட்டாலும் ஒன்றை மட்டும் சாதித்திருக்கிறார். தமிழர் பிரச்சனையை பிரச்சனையாகவே விட்டுச் சென்றிருக்கிறார்.  அந்தப் பிரச்சனை அவரோடும் மறையவில்லை.  அடுத்த சந்ததியிடமும் கையளிக்கப்பட்டு இன்று சர்வதேச அரங்கிலே நீதி கேட்டு நிற்கின்றது. இதிலே வருகின்ற வல்லரசுகள் தங்களுடைய தேவைகளுக்காக வந்தாலும் கூட அவற்றை எமது தேவைக்கேற்ப பயன்படுத்துகின்ற கடப்பாடும் தகுதியும் எமக்கு இருக்கின்றது.

உதாரணமாக 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  அதுவும் எங்களுடைய பங்களிப்புடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  நாங்கள் நல்ல ஒரு சந்தர்ப்பத்தை தவற விட்டோம் என்பது தான் எனக்கு மிக கவலை.  ஏனென்றால் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற பொழுது ஒரு நடுவர் மூலம் எங்களுடைய தேவை என்ன,  எங்களுடைய தீர்வு என்ன என்பது உள்ளிட்ட ஒரு தெளிவான உடன்படிக்கையிலே கைச்சாத்திட நாங்கள் தவறிவிட்டோம்.  நாம் 2015 ஆம் ஆண்டிலே அமெரிக்காவை நடுவராக வைத்திருந்திருக்கலாம்; அயல் நாடான இந்தியாவை நாம் நடுவராக வைத்திருந்திருக்கலாம்; காரணம் இந்திய அரசினருடன் மேற்கொள்ளப்பட்ட 13 வது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற அங்கலாய்ப்பு எங்களுக்கு இருக்கின்றது.   அதை முழுமையாக கவனித்து நடத்தவில்லை என்ற குறைபாடு இந்தியாவிற்கும் இருக்கின்றது.  அந்த நிலையிலே ஆட்சி மாற்றத்திற்கு கை கொடுத்து எங்களையும் பயன்படுத்திய அவர்களிடம் இந்த ஆட்சி மாற்றத்திலே எங்களுடைய நிச்சயமான தீர்வு இதுதான் என்பதை தமிழர் தரப்பு பகிரங்கமாக மனம் திறந்து வெளிப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் அது.

அது எப்படியான தீர்வு என்றால் வடக்கு-கிழக்கிலே எங்களுடைய தாயகத்திலே சுயாட்சி. எங்களுடைய அதிகாரம் வடக்கு-கிழக்கிலே ஏற்கனவே இருக்கின்றது.  மத்தியிலும் எமக்கு கணிசமான பங்காளிகள் இருக்கின்றார்கள்.  இதுவரையில் நாங்கள் மத்தியில் பங்காளிகளாக இருக்கவில்லை.  இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் தவறவிட்டோம.; “உடன்படிக்கைகள் எழுதலாம் ஆனால் அவர்கள் அவற்றைக் கிழித்துப் போடுவார்கள்” என்று சிலர் சொல்லலாம் .  கடந்த காலத்திலும் உடன்படிக்கைகள் கிழிக்கப்பட்டது தான். தந்தை செல்வா டட்லி ஒப்பந்தம், ஏன் இலங்கை இந்திய ஒப்பந்தமும் கிழிக்கப்பட்டது.  இவற்றிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். நாம் ஒரு நடுவர் மூலம் எங்களுடைய பிரச்சனைகளைக் கதைப்பதற்கான சந்தர்ப்பம் இந்த சர்வதேச அரங்கில் கிடைத்தது என்பது மறுக்க முடியாதது.

நீண்ட காலமாக நாங்கள் கோரிவந்த 1949 ஆம் ஆண்டு தொடக்கம் மாறி மாறி வந்த தேர்தல்கள் எல்லாவற்றிலும் மக்களுடைய அங்கீகாரங்களுக்கு விடப்பட்ட எங்களுடைய அரசியல் தீர்வு இதுதான்.   மாநிலத்தில் சுயாட்சியும் மத்தியில் கூட்டாட்சியும் என்ற சமஷ்டி அமைப்பை நாங்கள் வலியுறுத்தும் நிலைக்கு வந்து விட்டோம்.  “இந்த இரண்டு கட்சி அரசாங்கமும் அவர்களுக்குள் அடிபட்டவர்கள். இப்பொழுது ஒன்றாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எங்களுக்கும் தீர்வைத் தருவார்கள்” என்று நம்புவது மடமைத்தனம் என்று தான் நினைக்கின்றேன்.  காரணம் இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி என்னென்ன செயற்பாடுகளை முன்னெடுத்தன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழர் பிரச்சனையிலே தங்களுடைய கட்சி நலன்களுக்காக உடன்படிக்கைகளைக் கிழித்தெறிவதற்கு மட்டுமன்றி இந்த பிரச்சனையை நீடிப்பதற்கும் முக்கிய காரணமாக இவை இருந்துள்ளன.

எனவே நல்லாட்சியிலே இவைகளை நிவர்த்தி செய்யக் கூடிய மாற்று நடவடிக்கை பற்றி நாம் சிந்தித்திருக்க வேண்டும்.  இன்றும் அவர்கள் சொல்கிறார்கள் ஒற்றையாட்சிதான் தீர்வு. அதிகாரப்பகிர்வு கிடையாது.  பௌத்தத்துக்கு முக்கிய இடம். இந்ந நாடு பல்தேசியநாடு என்ற வார்த்தையே உச்சரிக்கிறதில்லை.   ஆகவே இந்தச் சந்தர்ப்பத்திலே சர்வதேசத்தில் எங்களுடைய பலத்தை இரண்டு விதமாக பயன்படுத்த வேண்டும். இங்கு வரும் இந்தியா அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் உள்ளிட்ட சர்வதேசத்தை பிரச்சனைக்கு உதவுபவர்களாக அவர்களை ஆக்கிக்கொள்ள வேண்டும்.  அதற்கு இந்ததுறையில் கைதேர்ந்தவர்கள் எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும். ஓரிருவர் மட்டும் செயற்பட்டு ஒப்பேறாது.  வெளிநாடுகளில் இவ்வாறான பிரச்சனைகள் கூர்மை அடைகின்ற பொழுது வெவ்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் எல்லாம் அதில் கலந்து கொண்டு அதற்கான ஆயத்தங்களையும் பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள்.

நம்மை பொறுத்தவரையிலே இன்று ஐக்கிய நாடுகள் சபையை எங்களுடைய பிரச்சனைகள் அடைந்திருக்கின்றன. வெளிநாடுகளில் நிபுணத்துவம் வாய்ந்த பலர் இருக்கின்றார்கள். அவர்களுடைய அனுசரணையையும் உதவியையும் பெற்றுக் கொள்வதோடு அவர்களோடு இறுக்கமான தொடர்பையும் ஏற்படுத்துவது அவசியம். அதன் மூலம் அந்தந்த நாடுகளுக்குள் அழுத்தங்களை பிரயோகிக்கலாம். அது மட்டுமல்ல அதன் மூலம் எமக்கு தேவையான நிரந்தரமான தீர்வு பற்றி தெளிவாக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. ஆகவே இப்படியான சந்தர்ப்பத்திலே நாங்கள் ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும்.  சமஷ்டிக்கான அந்த தீர்வை வைத்து நாங்கள் அரசியலுக்கு வருகிறோம். அரைகுறை தீர்வுகளை ஏற்றுக்கொள்வதற்காக அல்ல.  இந்த மக்கள் செய்த தியாகத்திற்கு அது பெரும் சாபக்கேடாக இருக்கும். ஏனென்றால் மக்கள் மட்டுமல்ல தலைவர்கள், இளைஞர்கள் இப்படி பல்வேறுபட்டவர்களுடைய ஆவிகள் எம்மைத் திட்டும். ஏனென்றால் அவர்களுடைய தியாகங்களினால்தான் எங்களுடைய பிரச்சனையிலேயே சர்வதேச அரசுகளும் கவனம் செலுத்த வேண்டிய கடப்பாட்டுக்கு வந்திருக்கின்றன.  ஆகவே இந்தப் பிரச்சனையிலே நாம் முனைப்புடன் செயற்படுகின்ற பொழுது தென்னிலங்கை அரசை வலியுறுத்துகின்ற சர்வதேச இந்திய அமெரிக்கா போன்ற நாடுகளும் தெளிவாக எங்களுடைய தீர்வு இதுதான் என்று சொல்ல வேண்டிய கடப்பாடு ஏற்படும்.

 “ஒன்றுமில்லாது ரோட்டிலை நிற்காதையுங்கோ. வருகிறதை கொஞ்சம் எடுங்கோ. இப்ப கொஞ்சம், அடுத்து கொஞ்சம், அதற்கு அடுத்து கொஞ்சம்”என்று.  அவர்கள் தங்களுடைய நலனுக்காக ஒரு இடைக்கால தீர்வுக்கு போங்கள் என்று சிலவேளை சொல்லுவார்கள்.

தந்தை செல்வா அவர்கள் பண்டாரநாயக்கா அவர்களுடன் ஒப்பந்தம் எழுதுகிற பொழுது சொன்னார் “நாங்கள் சொல்லிற தீர்வு இதுவல்ல.  எமது தீர்வு சம~;டி. ஆனால் இதொரு தற்காலிக ஏற்பாடு.”  பண்டா-செல்வா ஒப்பந்தம் மட்டுமல்ல, டட்லி-செல்வா ஒப்பந்தம் மட்டுமல்ல, பின் வந்த அத்தனையும் ஒரு தற்காலிக ஏற்பாடுகளே.  இன்றைக்கு நாங்கள் எந்தவித தற்காலிக ஏற்பாடுகளுக்கும் போகின்ற சூழல் இல்லை.  ஏனென்றால் இன்று நிலவும் சர்வதேச ரீதியான தலையீட்டுச் சூழலில் நாங்கள் இந்த சந்தர்பத்தை தவறவிட்டோம் என்றால் இன்னொரு சந்தர்ப்பம் வரும் என்பது கனவாகும்.  ஏனென்றால் உலகத்திலே எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன.  தென்கொரியா பிரச்சனை, சீனாப் பிரச்சனை, மத்தியகிழக்குப் பிரச்சனை என்று எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றது.  அவற்றோடு ஒப்பிடும் போது எங்களுடைய பிரச்சனை காத்திரமான இடத்தைவிட்டு தவறிப் போகலாம்.  ஆகவே எப்போதும் எங்களுடைய பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்று நினைப்பது தவறு.  ஆகவே இந்தச் சந்தர்ப்பத்திலே நாங்கள் ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும்.  உறுதியாக இருக்க வேண்டும்.

பெரும்பான்மைக் கட்சிகளைப் பொறுத்த வரையிலே அவர்கள் ஒற்றையாட்சியில் தான் இருக்கின்றார்கள். அதிகாரப்பகிர்வு அவர்களுடைய அகராதியிலே இல்லை.  அந்த அதிகாரப்பகிர்வின் மூலம் ஒரு சம~;டியை தருவதற்கு தயாரான நிலையிலும் அவர்கள் இருக்கவில்லை.  ஒரு சமயம் அந்த சமயோசித புத்தியை பயன்படுத்தி ஒற்றையாட்சியும் வேண்டாம் சம~;டியும் வேண்டாம் என்ற சொற்பிரயோகத்தை பாவித்து ஒரு தீர்வை எங்கள் மீது திணிக்கலாம்.  ஆனால் அது நடைமுறைச் சாத்தியமாக எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வாக அமையுமா என்பது தான் என்னுடைய கேள்வி.   “நீங்களாக வற்புறுத்தாதீர்கள். இப்பொழுது இதை எடுங்கள். இதற்கு பிறகு அப்புறம் பார்ப்போம்”என அந்த சந்தர்ப்பத்திலே இந்தியாவோ, அமெரிக்காவோ மற்றைய நேசநாடுகளோ எங்களுக்கு அறிவுறுத்தலாம்.

ஆகையினாலே எங்களுடைய தீர்ப்பு என்ன தான் என்பதை 1949 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 வரை நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம். மக்களுடைய ஆணையைப்பெற்று மக்களுடைய தியாகத்துக்கு விடிவாக ஏற்றுக்கொண்ட தீர்வு இதுதான் தீர்ப்பு என்று சர்வதேசத்துக்கும் தென்னிலங்கைக்கும் எடுத்துக்கூற வேண்டிய சந்தர்ப்பம் இது. அந்தச் சந்தர்ப்பத்திலே நாங்கள் தென்னிலங்கை அரசின் மனோநிலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரப்பகிர்வுக்கும் சமஷ்டி அரசியலுக்கும் அவர்கள் பங்களிப்புச் செய்ய தயங்குவார்கள். ஆகையினாலே வெளியுலகத்தினுடைய அனுசரணையையும், மத்தியஸ்தித்தையும் பெற்று எங்களுடைய நலநன பாதுகாக்க வேண்டியதுதான் காலத்தினுடைய தேவையும் கட்டாயமும் ஆகும். ஆகவே இந்தச் சாத்வீகப் போராட்டத்திலும் ஆயுதப் போராட்டத்திலும் இதற்காக தங்கள் இன்னுயிரை அழித்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் மரணித்தவர்கள் எல்லோரினுடைய ஆத்மாசாந்தி அடைய நாங்கள் செய்யும் பரிகாரம் இதுதான்.

தொகுப்பு- தேனுகா
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.