உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளிய கட்சிகள்




இலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தல் நடப்பதும் அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதும் ஒரு பெரியவிடயம் அல்ல. ஆனால் இம்முறை நடந்து முடிந்திருக்கின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தல் என்றுமில்லாதவாறு பரபரப்பாகி இன்னமும் ஓயாமல் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது. காலம்காலமாக அரசியல் தளத்தில் இயங்கி இருந்த நிலைமையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தவும் கட்சிகளுக்குள் சூட்சுமமான முறையில் பிளவுகளை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட தேர்தல் முறையே இதுவென பலர் கருத்துக்களை பகிர்கின்றனர். இருப்பினும் பல உலக நாடுகளில் இருக்கும் தேர்தல் முறைமைகளின் முக்கிய வடிவங்களை நடந்து முடிந்த தேர்தல் கொண்டிருந்தது என்பது உண்மையான விடயம். இலங்கை அரசியலுக்குள் பெண்கள் நுழைவது என்பது புதியவிடயம் அல்ல. ஆனால் கூடிய அளவில் அவர்களை பங்குபற்ற செய்ய உருவாக்கப்பட நிலைமை இம்முறை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 25 வீதம் பெண்களை உள்வாங்கப்படவேண்டும் என்று உருவாக்கப்பட்ட சந்தர்ப்பம் பத்துவீதம்கூட பெண்களை உள்வாங்குமா என்ற கேள்விக்குறியோடு விடை இன்றி நிற்கின்றது. காரணம் இம்முறை நடந்த உள்ளுராட்சிசபை தேர்தலில் வட்டார முறையில் போட்டியிட்டவர்களின்  பெரும்பான்மைப்பலம் பெண்களின் தெரிவை தீர்மானிக்கும் சக்தியாக அமைந்துவிட்டது.

இங்கே முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில், பெண்களை தெரிவு செய்யும் போது பெரும்பாலும் எல்லா கட்சிகளும் பெண்களை இரண்டாம் நிலைப் பட்டியலிலேயே உள்வாங்கி இருந்தன.  காரணம் 25 சதவீத ஒதுக்கீடு இருப்பதனால் கண்டிப்பாக பெண்கள் தெரிவு செய்ய வாய்ப்பிருக்கும் என எண்ணினர். அதனால் அவர்களை முதல்நிலை பட்டியலில் உள்ளடக்காது முதல்நிலை வட்டார வேட்பாளர்களாக ஆண்களை நியமித்துவிட்டு, பெண்களை இரண்டாம் நிலை பட்டியலில் உள்வாங்கியிருந்தனர்.  இதனால் வட்டாரத்தில் முக்கிய வேட்ப்பாளராக களமிறக்கப்பட்டவர் கட்சி சின்னத்திற்கு கிடைக்கும் வாக்கில் பெரும்பான்மையை இழந்து போகின்ற பெண்களின் விகிதாசாரம் இல்லாமல்போக பெரும் சந்தர்ப்பத்தை இந்த தேர்தல் ஏற்படுத்தியுள்ளது.

கண்டிப்பாக பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை கூடிய விகிதாசாரத்தில் வென்ற கட்சிகள் மட்டுமே பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இது தேர்தல் முறைப்போட்டித்தன்மைக்கு ஒத்துப்போகும் விடயம். இருப்பினும் போட்டியிட்ட பெண்களின் மத்தியில் மன நம்பிக்கை அற்ற தேர்தல் முறையாக இது பதிவாக காரணமாய் அமைந்துள்ளது. இது ஒரு பின்னடைவு என்றே கூறவேண்டும் .

பெரும்பாலும் பெண்களை இரண்டாம்நிலை களமிறக்கலுக்கு உட்படுத்திய கட்சிகள் கொஞ்சம் சிந்தித்து பெண்களுக்கான இடங்களை முதல்நிலைப் பட்டியலிலும் ஒதுக்கி இருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது .

தற்போது பல பிரதேச சபைகளில் பெண்களின் விகிதாசார இடங்களை ஒதுக்குவதில் பெரும் சிக்கல் நிலமை தோன்றி உள்ளமையை காணமுடிகின்றது. தொங்குநிலையில் இருக்கும் பிரதேச சபைகளில் கூடிய வாக்கு வித்தியாசத்தில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாமல் வென்றிருப்பது விகிதாசார அடிப்படைக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது .

இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் கட்சிகள் முக்கிய வட்டார வேட்பாளர்களாக பெண்களை நியமிக்க ஏன் பின்னடித்தன என்பதே - போட்டியிடும் மனப்பான்மையில் பெண்கள் இல்லை என எண்ணியமையா அல்லது விகிதாசாரத்தில் இவர்கள் உள்வாங்கப்படுவார்கள் தானே என்ற மேம்போக்கான எண்ணமா என்ற கேள்வி முன்வைக்கப்பட வேண்டியதே – சில கட்சிகளின் வட்டார வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்களை பெரிதுபடுத்தாமல் இருந்தனர்.  பெண்வேட்பாளர்கள் இவர்களது அரசியலுக்கு எந்தவகையில் ஒத்துழைப்பர் அல்லது சாத்தியமுடையவர்களாக இருப்பர் என்ற கேள்விகளோடு இருந்தனர். தமது வெற்றி பெண்வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் என்ற அதிமேதாவி சிந்தனையோடு இருந்தனர்.  இதனால் பெண்களை இரண்டாம் நிலைக்கு தள்ளி இருந்தனர் என பல பெண் வேட்பாளர்கள் கருத்து கூறுகின்றனர்.

இந்த நிலைமையை வைத்து பார்க்கும்போது அரசு பெண்களை உள்வாங்க விரும்பியும் அரசியல் கட்சிகள் புரையோடிப்போன பழைய நிலமையை மட்டுமே கடைப்பிடிக்க முனைந்துள்ளனவா? பெண்களுக்கு விகிதாசாரத்தில் மட்டும் ஆசன ஒதுக்கீட்டை வழங்கலாம் என தமிழக் கட்சிகள் எண்ணினவா? பெண்களை ஏன் வட்டார வேட்பாளராக முன்னிறுத்த முன்வரவில்லை? ஏன் அவர்களுக்கு விகிதாசார ஆசனங்களை மட்டும் வழங்கினால் போதும் என எண்ணினார்கள்? இவ்வாறு பல கேள்விகளை இந்த தேர்தல் எழுப்பிவிட்டிருக்கின்றது. குறிப்பிட்டசில சபைகளில் மட்டுமே பெண்களுக்கான ஒருசில விகிதாசார ஆசனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஏனைய சபைகளில் பெரும்பான்மை அடிப்படையில் கட்சிகள் வாக்குகளை பெறாமையால் வாக்கு சிதறல் ஏற்ப்பட்டு பெண்களுக்கான அல்லது விகிதாசார ஆசனங்கள்  இன்றி கட்சிகள் வென்றுள்ளன .

ஒட்டுமொத்தத்தில் பெண் வேட்பாளர்களை உள்வாங்குவதில் அறுதிப்பெரும்பான்மையான வெற்றியை பெண்களுக்கு வழங்கக்கூடிய விதத்தில் கட்சிகள் பெண்களை தெரிவு செய்வதிலும் அவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதிலும் இனிவரும் காலங்களில் முனைப்புக்காட்ட வேண்டும். வட்டார முறையில் பெண்களை களமிறக்கவோ அவர்களின் விகிதாசாரத்தை முன்நிறுத்தவோ கட்சிகள் பின்னடிக்காமல் முயல வேண்டும் - அதேபோல பெண்களும் தமது திறமைகளையும் தமக்கும் சமூகத்துக்கும் இருக்கும் தொடர்பை நன்குணர்ந்து பிரதேசசபைகளையும் மாநகர சபைகளையும் ஆளும் பதவிகளுக்கும் அரசியல் தளத்தில் இருக்கும் அத்தனை பதவிகளுக்கும் போட்டியிட்டு வெற்றியீட்ட முன்வரவேண்டும்.

ப்ரியமதா பயஸ்
நிமிர்வு மாசி  2018 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.