தமிழ்த் தேசியத்தின் குறியீடாக என்னைப் பாருங்கள்




தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஆரம்பகால உறுப்பினரும், மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்து வருபவருமான எம்.கே சிவாஜிலிங்கம் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக மீன் சின்னத்தில் களம் காண்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியமை குறித்து அவரே விளக்குகிறார், 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி பொதுத் தேர்தல் கார்த்திகை மாதம் நிர்ணயிக்கப்படலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே பேச்சுக்கள் அடிபட்டு வந்த சூழ்நிலையிலே புரட்டாதி மாதம் 18 ஆம் திகதியளவில் நியமன பத்திரங்கள் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டன.   கட்டுப்பணம் செலுத்த வேண்டிய இறுதித் திகதி ஐப்பசி மாதம் 6 ஆம் திகதி நண்பகல் வரை என்றும் நியமனப் பத்திரங்களை 7 ஆம்திகதி 9 - 11 மணிவரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இவையெல்லாம் முன்னரே அறிவிக்கப்பட்ட சூழலில் நான் இலங்கையில் இருக்கவில்லை.  நான் இலங்கையில் இருந்து ஐப்பசி மாதம் 8 ஆம் திகதி புறப்பட்டு லண்டனில் நோய்வாய்ப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த எனது சகோதரரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவரைப் பார்த்து விட்டு அமெரிக்காவுக்குசென்றிருந்தேன். அங்கு தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பொது அமைப்புக்கள் சிலவற்றுடன் கலந்துரையாடல் நடாத்தி இருந்தேன்.

16 ஆம் திகதி ஐ. நா சபையின் வெளியே  நியூயோர்க்கில் எழுகதமிழ் நிகழ்வினை நடத்த ஒழங்கு செய்திருந்தார்கள். பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல்வேறு நாடுகளில் இருந்தும் வர இருந்தார்கள். அங்கும் பல அமைப்புகளுடன் பேசும் வாய்ப்பு எனக்கு இருந்ததால் என்னுடைய பயணத்தை நீடித்திருந்தேன். ஐப்பசி 16 ஆம் திகதி நியூயோர்க்கிலே நடந்த எழுகதமிழில் பங்கு பற்றினேன். அங்கு கனடாவில் இருந்தும் பேருந்துகளில் மக்கள் வந்திருந்தார்கள். 17 ஆம்திகதி நியூயோர்க் நகரில் இருந்து புறப்பட்டு 18 ஆம் திகதி ஜெனீவாவின் சூரிச் நகரை வந்ததடைந்து 19 ஆம் திகதி காலையில் இருந்து நான் ஜெனீவாமனித உரிமைகள் கூட்டத் தொடரிலே பங்கு பற்றி இருந்தேன். இம்முறை ஜெனீவாவுக்கு தமிழ் மக்கள் சார்பில் வந்திருந்தவர்கள் மிகக் குறைவு. நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திருமதி அனந்தி சசிதரன், இந்தியாவில் இருந்தும் ஏனைய நாடுகளில் இருந்தும் சிலர் வந்திருந்தார்கள்.

அப்போது “நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஊடகங்கள் சொல்கின்றன” என்று கஜேந்திரகுமார் சொன்னார்.   அதற்கு “ஊடகங்கள் தங்கள் ஊகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன்.

இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக ஐப்பசி மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் நாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  உத்தியோகப்பற்றற்ற முறையில் திருகோணமலை நகர மண்டபத்தில் கூடிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு முடிவெடுத்தது.  இது சம்பந்தமாக விரிவாக விவாதித்து ஜனாதிபதி தேர்தலில் இறங்கும் பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகளுடனும் பேச வேண்டும் எனத்தீர்மானிக்கப்பட்டது.  சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் பிரிந்து செல்லும் உரிமை இருக்கின்றது என தெரிவித்த இலங்கை ஐக்கிய சோஷலிச கட்சியை சேர்ந்த சிறிதுங்க ஜெயசூரியவுடனும் கூட பேச வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.   அவ்வாறு அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்க மறுப்பார்களாக இருந்தால் மாற்று நடவடிக்கையாக தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தலாமா, அல்லது வேறு ஏதும் தெரிவுகள் இருக்கின்றனவா என்கிற ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற பொறுப்பை ரெலோவின் 25 பேர் கொண்ட தலைமைக் குழுவிடம் பொதுக்குழு ஒப்படைத்தது. இதன் பின்னர் தான் 8 ஆம் திகதி அவசரமாக வெளிநாட்டுக்கு பயணமாக வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.  25 ஆம் திகதி காலை கொழும்பை வந்தடைந்தேன்.

இந்த நேரத்தில் தான் தமிழ் மக்கள் பேரவையினர் அரசியல் கட்சிகளை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்கள் எனக் கேள்விப்பட்டேன்.  அதில் ஏதாவது நல்லது நடக்கும் என எதிர்பார்த்தேன். நான் எங்கள் கட்சியின் செயலாளர் நாயகத்துடன் பேசி இருந்தேன். நாங்கள் ஒரு முயற்சி எடுக்கின்ற போது ஜே.வி.பி உட்பட பல கட்சிகளுடன் பேச வேண்டி இருக்கும் எனக் கூறினேன். அதற்கு “தம்பி நீங்கள் பேசுங்கள்” என்றார்.  ஜேவிபி ஐச் சேர்ந்த விஜிதகரத் அவர்களை பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் தலைமைக் காரியாலயத்தில் சந்தித்து ஒன்றரை மணித்தியாலங்கள் பேசினேன். அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளில் இருந்து இறங்கி வரத் தயாரில்லை என்பதனை தெரிந்து கொண்டேன். ஆகக் குறைந்தது அரசியலமைப்பில் இருக்கக் கூடிய காணி பொலிஸ் அதிகாரத்தையாது வழங்கத் தயாராக இல்லை. அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துங்கள் என்று கேட்ட போதும் வாய்ப்புக் குறைவு எனச் சொன்னார்கள்.

எங்களுடைய பொது வேட்பாளர் நிறுத்தப்படும் நிலை வந்தால், இங்குள்ள முக்கிய பிரச்சினையை முன்னிறுத்த வேண்டும். எங்களுடைய மக்களின் பிரச்சனைகளில் முதன்மையானது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை. அவர்கள் இன்று 1000 நாளை நெருங்கி வீதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.   தமிழர் தரப்பில் 20,000 பேருக்கு மேல் காணாமல் போகச் செய்யப்பட்டு இருக்கின்றார்கள். அதில் 6000 கும் மேற்பட்டவர்கள் இராணுவத்திடம் சரணடைந்து இருக்கின்றார்கள்.  இதற்கான ஆதாரங்கள் எங்கள் மக்களிடம் இருக்கின்றன. மீதிப்பேரை இராணுவம் வளைத்துப் பிடித்திருக்கின்றது. எமது வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை கூட 146000 பேர் கணக்கில் வராதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

கட்சியில்லாத காரணத்தினால் தான் பொது வேட்பாளர் விடயம் இழுபடப் போகின்றது என்கிற அடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி  அவர்களை கொழும்பில் உள்ள இல்லத்தில் சந்தித்தேன். நீங்கள் பொது வேட்பாளராக நில்லுங்கள் என கேட்ட போது அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.  உயரம் பாய்தலில் உலக சாதனை படைத்தவரும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய தமிழருமான எதிர்வீரசிங்கம் அவர்களை நிறுத்துமாறு ஆனந்தசங்கரி அவர்களிடம் கோரிய போது அதற்கும் இணக்கம் காட்டவில்லை. கட்சிக்கு அப்பால் காணாமல் போக செய்யப்பட்டவர்களின் பிரதிநிதியாக அனந்தியை நிறுத்துமாறு வற்புறுத்திய போது கடைசி நேரத்தில் வந்திருக்கிறீர்கள் என சங்கரி ஐயா கூறினார். மூன்றாம் திகதி இரவு தான் இந்த சந்திப்பு நடந்தது.

ஐந்தாம் திகதி காலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்து கட்சி சார்பில் இடம்பெற்ற ஞானசார தேரருக்கு எதிரான  போராட்டத்தில் பங்கேற்றேன்.  மாலை 5 மணியளவில் வல்வெட்டித்துறை தீருவிலில்  குமரப்பா புலேந்திரன் உட்பட 12 வீர வேங்கைகளின் தூபியில் அஞ்சலியை செலுத்தி விட்டு 8.30 மணிக்கு வல்வெட்டித்துத்துறை சந்தியில் இருந்து பேரூந்தில் கொழும்புக்கு புறப்பட்டேன்.  அனந்தி சசிதரனும் யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ்ஸில் ஏறினார். அதிகாலை 5.30 மணிக்கு கொழும்பை சென்றடைந்தோம். அங்கிருந்து சென்று கட்டுப்பணமான 75,000 ரூபாயை திருமதி அனந்தி சசிதரன் செலுத்தினார். சுயேட்சையாக போட்டியிடுவதாக இருந்தால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரால் 75,000 ரூபாய் செலுத்தப்படல் வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளராக இருந்தால் 50,000 ரூபாய் செலுத்தப்படல் வேண்டும். 

7 ஆம் திகதி காலை சென்று வேட்புமனுவும் தாக்கல் செய்தோம்.  அதன் பின் வெளியே வந்து சிங்கள ஊடகங்களிடம் "தமிழர்களை நீங்கள் கிள்ளுக் கீரையாக நினைத்து இவ்வாறு நடப்பதை தடுப்பதற்காகவும் தமிழர்களின் நிலைமையை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வதற்காகவும் தான் இந்தப் போட்டியே தவிர நான் ஜனாதிபதியாக வருவதற்கு அல்ல.” என்று தமிழ், சிங்கள மொழிகளில் தெரிவித்தேன். அதனையடுத்து பல்வேறு அனாமதேய தொலைபேசி அழைப்புக்களில் அநாகரிக வார்த்தைப் பிரயோகங்களால் பேசினார்கள். சிங்களவன் தான் இங்கே ஜனாதிபதியாக வர முடியும் நீ ஏன் கேட்கிறாய் போன்ற தொனிப்படவும் கருத்துக்கள் அமைந்து இருந்தன.

இன்னொரு பக்கம் எமக்கு ஆதரவான நூற்றுக்கணக்கானோர் தொடர்பு கொண்டிருந்தனர். எல்லோருடைய தொலைபேசி அழைப்புக்களுக்கும் பதில் கூற முடியாத நிலைமையில் இரு நாட்கள் கைத்தொலைபேசியை அணைத்து வைத்து விட்டேன். நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்யும் இடத்தில் கூட பலரின் முகங்களில் கோபம் கொப்பளித்து இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 6 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் ஒரு பிரகடனத்தை நாங்கள் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்க வேண்டும்.  அந்தப் பிரகடனப் பிரதி எனக்கு வழங்கப்படவில்லை. அது தவறுதலாக நடைபெற்றதா? அல்லது திட்டமிட்ட சதியா என்பது எனக்கு விளங்கவில்லை.   ஆறாவது திருத்த சட்டப் பிரகடனம் இல்லாவிட்டால் நியமனப் பத்திரம் நிராகரிக்கப்படும் நிலை இருந்தது.   அதனையும் ஒருவாறாக கையளித்து விட்டேன்.

பின் நியமன பத்திரங்கள் விளம்பர பலகையில் காட்சிப்படுத்தப்படும். அதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.  ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக 2 ஆட்சேபனைகள் கிடைத்தன.   என் மீது பௌத்த பிக்கு ஒருவர் பின்வருமாறு ஆட்சேபனை கொடுத்திருந்தார். "இவர் ஒற்றையாட்சிக்கு எதிரானவர், சிங்கள பௌத்த நாடு என்பதனை ஏற்க மறுக்கிறார், இவர் ஒரு பிரிவினைவாதி. ஆகவே இவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.” அதே போல் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவும் இன்னொரு ஜனாதிபதி வேட்பாளர் ஆட்சேபனை மனுவை கொடுத்திருந்தார்.  அதில் அண்மையில் நடந்த குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தொடர்பிருப்பதால் அவரை நிராகரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இரண்டுமே தேர்தலுடன் தொடர்புபடாதவை என்பதனால் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் ஆணைகுழுவின் தவிசாளர் அறிவித்தார். பின் ஒரு சின்னத்தைத் தெரிவு செய்யச் சொன்னார்கள் அதற்கு நான் மீன், மான், கேடயம் ஆகிய மூன்று சின்னங்களை எழுதி கொடுத்திருந்தேன். அதற்கு தேர்தல் ஆணையாளர் நாங்கள் குறிப்பிட்ட சின்னங்களை பலரும் எழுதி கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார்.

ஒவ்வொரு சின்னத்தையும் ஆய்வு செய்தார்கள். மீன் சின்னத்தை 4 பேர் கேட்டிருந்தார்கள். அதில் பிக்குவும் ஒருவர். இருவர் பிக்குவுக்கு விட்டுக் கொடுத்திருந்தார்கள். ஆனால், எனக்கு மீன் சின்னம் வேண்டுமென்றேன். இறுதியில் குலுக்கலில் மீன் சின்னம் எனக்கு வந்தது. ஒவ்வொன்றையும் போராடியே பெற்றேன்.

சிவாஜிலிங்கம் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைக்க பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்களை வேதனையுடன் பார்க்கிறேன். வெளிநாட்டில் இருந்து நண்பர் ஒருவர் கேட்டார் “சிவாஜிலிங்கம் என்ன பகிடிக்கா போட்டியிடுகிறீர்” என. அதற்கு நான் சொன்னேன், “15 தடவைகளுக்கு மேல் ஜெனீவா சென்று எம் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தது பகிடி என்றால்,  முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை யாரும் அனுட்டிக்க பயந்த காலத்திலும் அனுட்டித்தது பகிடி என்றால் இதுவும் பகிடி தான்” எனக் கூறினேன்.

 நான் போட்டியிடுகின்ற விடயத்தை வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, 26 வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை,   காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கக் கூடிய பிரச்சினைகள், பயங்கரவாத தடைச் சட்டம்    இப்படியான பிரச்சினைகளுக்கு எங்களின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.

கடந்த 3 மாதங்களுக்குள் 5 தடவைகளுக்கும் மேல் முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை வரை கடற்கரை மார்க்கமாக பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு இடங்களிலும் 500 ஏக்கர் வரையான காணிகள் சிங்கள குடியேற்றங்களுக்காக ஒதுக்கப்பட்டு அதில் பௌத்த விகாரைகளுக்காக ஐந்து ஏக்கர் வரை ஒதுக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் இருக்கின்ற பௌத்த பிக்குகள் ஒரு கட்டளைத்தளபதிகள்  போல் செயற்படுகின்றனர். திருகோணமலை திரியாயில் அரிசிமலை புத்த பிக்கு தான் கட்டளைத் தளபதி போல் செயற்படுகிறார்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பை தடுக்க குறைந்தது காணி அதிகாரத்தை ஆவது நாங்கள் பெறாவிட்டால், 2025 க்கு இடையில் பாலஸ்தீனத்தில் காசா மேற்கு கரை போல நாங்கள் துண்டாடப்பட்டு   தமிழ்த் தேசியம் என்று சொல்லக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போவதற்கான அபாயம் இருக்கின்றது. இதனை தடுப்பதற்கான சிந்தனையாக தான் 13 கோரிக்கைகளை கிழக்கு மற்றும் வடக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிக்குமாறு கூறி ஐந்து கட்சித்தலைவர்களிடம் கையளித்தார்கள். 13 கோரிக்கைகளையும் நான் ஏற்றிருக்கிறேன். 7 ஜனாதிபதி தேர்தல்கள் முடிந்து விட்டன. அரசியல் தீர்வை அணில் என்று வைத்தால்,  அணிலை ஏற விட்ட நாய்களாக தமிழ் மக்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

6 மாத குழந்தை முதல் ஏராளமான இளைஞர்கள் பெண்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அப்படியானவர்கள் ஏராளம் பேர் காணாமல் ஆக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் எங்கே? இதற்கு பதில் சொல்ல வேண்டியவர் கோத்தபாய ராஜபக்ச தான். தான் பதவியேற்ற அடுத்த நாள் சிறைகளில் உள்ள இராணுவத்தினரை விடுவிப்பதாக  கோத்தபாய ராஜபக்ச சொல்கிறார். அவ்வாறே தமிழ் அரசியல் கைதிகளை அடுத்தநாள் விடுவிக்கலாம் அல்லவா. ஏன் பகிரங்கமாக சொல்லவில்லை?

71, 88, 89 ஆண்டுகளில் ஜே.வி.பிக்கு பொதுமன்னிப்பு கொடுக்க முடிந்தது. ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஒரேயொரு தடவை தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்  அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.  சுமந்திரன் சம்பந்தமான வழக்கில் இணைக்கப்பட்ட நான்கு பேரோடு 98 அரசியல் கைதிகள் இன்று சிறைகளில் இருக்கின்றார்கள்.

ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி, ஆறு கடந்த பின் நீ யாரோ நான் யாரோ.  இப்படித் தான் காலம் காலமாக தமிழ் தலைமைகள் சிங்களத்திடம் ஏமாந்துள்ளார்கள். இந்த முடிவற்ற சுழற்சியில் இருந்து விடுபட்டு தமிழ்த் தேசிய இனத்தின் மறுமலர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தான்  இந்த பொதுவேட்பாளர் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் என நாடு பூராகவும் எனது பிரச்சார நடவடிக்கைகளை முடிந்தளவு மேற்கொண்டு வருகின்றேன். மிகக் குறைந்தளவு வசதிகள் ஆளணிகளை வைத்துக் கொண்டு தான் இந்தப் பிரச்சார நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றேன்.

இனப்படுகொலை விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் சபை, பாதுகாப்புச் சபை ஊடாக கொண்டு போக வேண்டும். அதே போல் தொடர்ந்து இவர்கள் அரசியல் தீர்வை இழுத்தடிப்பார்களாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையிலே வடக்கு கிழக்கு பிராந்தியத்திலே ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடாத்தி ஈழத்தமிழர்களின் தலைவிதியை நாங்கள் நிர்ணயிக்கக் கூடிய விதத்திலே முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதனை நாங்கள் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட கொல்லப்பட்ட மக்களுக்காகவும் 50000 க்கும் மேற்பட்ட மாவீரர்கள், வீர மறவர்களுக்காகவும், அங்க இழப்புக்கள், கோடானுகோடி சொத்தழிவுகள், போன்றவற்றை சந்தித்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்காகவும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். எதிர்காலத்திலும் இப்படியான பேரழிவு எமது இனத்துக்கு நடப்பதைத் தவிர்ப்பதற்கு எங்களை நாங்களே ஆளக் கூடிய விதத்திலே  ஒரு ஆட்சி முறையை நாங்கள் நிலை நாட்ட வேண்டும்.   இதனை நான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன் என கூறிக் கொள்கிறேன்.

ஒரு கட்சி அல்லது இயக்கத்தில் இருப்பதல்ல முக்கியம்.  மக்களுக்கு நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதே முக்கியம். இவ்வளவு அழிவுக்குப் பிறகு எங்கள் மக்களை அதன் பாதிப்புக்களில் இருந்து மீட்க வேண்டும். நாங்கள் தோற்கடிக்கப்பட்ட இனமல்ல. விடுதலை பெற வேண்டிய இனம்.    கட்சிகளுக்கு, இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பொது  மனிதனாக என்னைப் பாருங்கள். இந்த தேர்தலில் சில ஆயிரங்கள் வாக்கு கிடைத்தாலும் அது தனிப்பட்ட சிவாஜிலிங்கத்துக்கு கிடைத்த வெற்றி அல்ல.  இதனை தமிழினத்துக்கு கிடைத்த வெற்றியாகத்தான் நான் கருதுவேன். அதனால் தான் நான் என்னை ஒரு குறியீடாக மட்டும் பாருங்கள் என திரும்ப திரும்ப சொல்கிறேன். ஒரு போதும் எத்தனை ஆயிரம் வாக்குகள் கிடைத்தாலும் சிவாஜிலிங்கத்துக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதனை நேரடியாகவோ மறைமுகமாகவோ உரிமை கோரமாட்டேன் என்பதனை  நான் பகிரங்கமாக எங்கள் மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

எனது முயற்சிக்கு இவ்வளவு ஆதரவு கிளம்பும் என உண்மையில் நானே எதிர்பார்க்கவில்லை. நூற்றுக்கணக்கானோர் உள்ளூரிலிருந்தும் வெளியூரில் இருந்தும் நேரில் சந்திக்கிறார்கள். கைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரெலோ கட்சியில் இருந்தும் ஏராளமானோர் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.  ஏனைய கட்சிகளில் இருந்தும் ஆதரவு வருகிறது. பல பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேரில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தனிப்பட்ட முறையிலும் சந்தித்திருக்கின்றார்கள்.  எந்த அமைப்புக்களுடனும் பேசி எமது இனத்துக்கான உரிமைக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு எல்லோரையும் முடிந்தளவு அணி திரட்டுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்கிற செய்தியை தான் என்னால் சொல்ல முடியும். கூடியளவு தமிழ்க் கட்சிகளிடம் இருந்து ஒரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்குவது தான் எங்கள் நோக்கம். தனிமரம் தோப்பாகாது.

2010 ஆம் ஆண்டு வேட்பு மனு தாக்கல் செய்த போது மஹிந்த தேசப்பிரிய தலையில் கை வைத்தார்.  உங்களை தெற்கில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு காட்ட வேண்டும். இங்கேயெல்லாம் கோடானுகோடியை சொத்து மதிப்பாக காட்டுவார்கள். கணக்கில் வராத பல கோடி இருக்கும்.  நீங்கள் எல்லாம் மக்களுக்கு முன்னுதாரணம் என்றார். எனக்கோ என் மனைவிக்கோ இலங்கையில் காணி வீடு கூட சொந்தமாக இல்லை. நான் சாகும் போதும் கடன்காரனாகத் தான் சாவேன்.

என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் மக்கள் சேவைக்கு வந்தவர்கள். பணம் சம்பாதிப்பது என்றால் அதற்கு வேறு வழி உள்ளது. அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிப்பவர்களை எதிர்க்கிறேன். மக்களில் பலர் இன்று அடுத்தநேர கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கின்றார்கள். எத்தனையோ இழப்புக்களை சந்தித்து மீண்டுள்ள எம் மக்களை பார்த்தாவது அரசியலில் பணம் சம்பாதிப்பதை விட்டு விட வேண்டும்.  எல்லாவற்றையும் விட மக்கள் பிரச்சினை தான் கண்ணுக்கு முன் உள்ளது.  எங்கள் மக்கள் மனமுடைந்து போய் நொந்து போய் இருக்கின்றார்கள். அவர்களை வாழ வைக்க வேண்டியது எம் கடமை.

தொகுப்பு- துருவன் 
நிமிர்வு நவம்பர்   2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.