போரில் தோற்ற மக்களை நாங்கள் நிமிர்த்தி இருத்த வேண்டியிருக்கின்றது




ஐந்து வகையான நிலங்கள் இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் நன்கு பரிச்சயப்பட்ட ஆட்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். நான் ஆறாவது நிலத்திலிருந்து வருகின்றேன்.  தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அறியப்பட்ட ஐந்துநிலங்கள் இருக்கின்ற பொழுது நவீன காலத்தில் நான் ஆறாவது நிலமான போர் நிலத்திலிருந்து வருகின்றேன். ஐந்து வகை நிலங்களை அறிந்த இந்த தமிழ் உலகத்திற்கு நவீன இலக்கியமாக ஆறாவது நிலத்தை அறிமுகம் செய்கின்ற ஒரு எழுத்தாளனாக இருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.  ஆறாவது நிலமான போர் நிலத்துக்கென்று ஒரு தனியான குணம் இருக்கின்றது. அதற்கென்று தனியான இயல்பிருக்கின்றது. அதற்கென்று தனியான வாழ்க்கை இருக்கின்றது. அது ஐந்து நிலத்தையும் விட மாறுபட்டிருக்கின்றது. அந்த மாறுபாடு என்ன என்பதைப் பதிவு செய்தால் தமிழ் இலக்கியத்திற்கு அது ஒரு செழுமை.

முன்னாள் போராளியும் எழுத்தாளருமான குணா கவியழகன் தனது "போருழல்காதை" எனும் நூலின் அறிமுக விழாவில் இவ்வாறு தெரிவித்தார்.  22-12-2019, ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள உலக மனிதாபிமானக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதை கீழே தொகுத்துள்ளோம்.

மொழி வாழுவது இலக்கியத்தில் தான். மொழியை வழிப்படுத்துவது இலக்கணமாக இருந்தாலும் மொழி வாழ்வது இலக்கியத்தில் தான். உலகத்திலே எங்களுடைய மொழி செழுமையான மொழி என்றால் எங்களிடம் நீண்டகால செழுமையான இலக்கியம் ஒன்று இருக்கின்றது. ஆனால் உலகத்திலே பல மொழிகளில் போர் இலக்கியம் வந்துவிட்டது. ஆனால் நவீன தமிழுக்கு போர் இலக்கியத்தை ஈழத்திலிருந்து நாங்கள் கொடுத்திருக்கின்றோம் என்பதில் எங்களுக்கு ஒரு பெருமை இருக்கின்றது. அதற்காக நாங்கள் கொடுத்த விலை பெரிது. போர் என்பது அவலம், அழிவு. அடிப்படையில் போர் என்பது ஒரு அறமற்ற செயல். மனிதர்கள் மனிதர்களைக் கொல்வது அறமாகாது. அதை அறம் என்று யாரும் நியாயப்படுத்தவும் முடியாது. அதை வாதிக்கவும் இயலாது. ஆனால் போருக்கு தர்மம் இருக்கின்றது. அறம் இல்லாத போருக்கு தர்மம் இருக்கின்றது. அந்தப் போரை எதற்காக நடத்துகின்றீர்கள் என்பதில் தான் அதில் தர்மம் இருக்கின்றதா இல்லையா என்பது தங்கியிருக்கின்றது.

அறம் என்பது வேறு தர்மம் என்பது வேறு. அந்தப் போரை நீங்கள் யாரின் பக்கம் நின்று நடத்துகின்றீர்கள்?ஒடுக்கப்படுபவர்கள் நடத்துகின்ற போரா, ஒடுக்குகின்றவர்கள் நடத்துகின்ற போரா என்பதைப் பொறுத்து அதற்கு தர்மம் இருக்கின்றது. கத்தியினுடைய தர்மம் வெட்டுவது தான். அது வெட்டவில்லை என்றால் அது தன்னுடைய தர்மத்தை மீறிவிட்டது. ஒடுக்கப்படுபவர்கள் போராடினால் அது தர்மம். அந்த அரசியலுக்கு அறம் இருக்கின்றது. போருக்கு அறம் கிடையாது.

ஆனால் போரை  உண்டானக்கிய அரசியலுக்கு அறம் இருக்கின்றது. அப்படி என்றால் போரும் மனிதனுடைய ஒரு மேம்பாடான பண்பாடு தான் என்று நாங்கள் கொள்ளலாம். அந்த துணிவில் தான் ஈழப் போரும் நடந்தது. 30 ஆண்டுப் போரில் நாங்கள் பெரிய வாழ்வு அனுபவத்தை பெற்றிருக்கின்றோம். இந்த தென்னாசிய பிராந்தியத்தில் மிகவும் சின்னஞ்சிறிய இனம் ஈழத்தமிழ்த் தேசிய இனம். ஆனால் பென்னம் பெரிய வாழ்வு அனுபவத்தை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.
அந்த அனுபவத்தை எப்படி அடுத்தவனுக்கு கொடுப்பது? எங்களுடைய அடுத்த சந்ததிக்கு எப்படி கொடுப்பது? தமிழுக்கு எப்படிக் கொடுப்பது?இந்த அனுபவத்தை எப்படி உலகளாவிய அனுபவமாக மாற்றுவது என்ற என்னுடைய கரிசனை தான் என்னை ஒரு எழுத்தாளனாக மாற்றியது. அடிப்படையில் நான் ஒரு இலக்கிய எழுத்தாளனே கிடையாது. 5 வருடங்களில் 5 நாவல் எழுதினேன் என்பது உண்மை தான். ஆனால் நான் 5 வருடமாகத் தான் எழுதுகின்றேன். இந்த கரிசனை தான் என்னை இந்த எழுத்திற்குள் கொண்டு வந்தது.

போர் எதனால் நடக்கின்றது. இந்தப் போர் நடப்பதற்கான அடிப்படை என்ன? என்பதை என்னுடைய பார்வையில் அதைத் தேடி அதை முன் வைக்க உகந்த வடிவமாக எடுத்துக் கொண்டது தான் இலக்கியம். ஒரு கட்டுரையாளன் எப்பொழுது இலக்கியம் எழுத வேண்டி வருகின்றது என்றால் எப்பொழுது தன்னால் கட்டுரையாக எழுத முடியாத நிலைமை வருக்கின்றதோ அப்பொழுது அவன் அதை புனைவு என்ற பெயரில் எழுத வேண்டி வரும். நான் இலக்கியத்தை தெரிவு செய்ததற்கு அதுவும் ஒரு காரணம். போர் உலகம் முழுவதுமே நடக்கின்றது. அது மனித வரலாறு முழுவதும் நடக்கின்றது. இனியும் நடக்கும்.

போர் வடிவங்கள் மாறுமே தவிர போர் என்ற அடிப்படைக் கருத்தாக்கம் இந்த உலகத்தில் மாறாது. போரின் வடிவங்கள் தான் மாறும். போர் உலகம் முழுவதும் நடைபெறுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன? எங்களுடைய போர் நடந்ததற்கான அடிப்படைக் காரணம் என்ன?இதை எழுத வேண்டிய தேவை என்ன? ஒருபோரில் தோற்றுப் போன மக்களாக (போராட்டத்தில் அல்ல)  இருக்கின்ற எங்கள் மத்தியிலிருந்து வரக் கூடிய படைப்பு அடிப்படையில் என்னவாக இருக்கலாம்?

போரில் தோற்ற மக்களை போராட்டத்தில் தோற்கவில்லை என்ற ஒரு மனப்பதிவை கொடுத்து அவர்களை முதுகு கூனவிடாமல் முள்ளதண்டை வளைய விடாமல் நிமிர்த்தி வைத்திருப்பது போரிலிருந்து வரக்கூடிய ஒரு படைப்பாளனுடைய பொறுப்பு. அதே வேளை  போரில் வென்றவர்களை குற்றஉணர்விற்கு ஆளாக்க வேண்டியதும் ஒரு படைப்பாளனுடைய பொறுப்புஎன என்னுடைய அறிவுக்கேற்ப எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு விடயம் போரில் தோற்றவர்களை நாங்கள் நிமிர்த்தி இருத்த வேண்டியிருக்கின்றது. அதேநேரம் போரில் வென்றவர்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்க வேண்டியிருக்கிறது. அப்படி இரண்டையும் சமாந்தரமாக செய்தால் தான் மனிதம் வாழும். மானுடம் வாழும். இந்தப் புரிதல் தான் என்னுடைய இந்த கர்ப்பநிலம் நூலாகும். இந்த கர்ப்பநிலத்தில் முதலாவது வனமேகு காதை. இரண்டாவது போருழல்காதை.

போருக்குண்டான மொத்த அரசியலையும் அந்த அரசியலால் விளைந்த போரையும் அந்த போரினால் விளைந்த வாழ்வையும் ஒருஆய்வுக்குட்படுத்தி இலக்கியமாக ஒரு கலை வடிவமாக மாற்றுவது தான் என்னுடைய முயற்சி. இது இரண்டாவது காதை.

என்னுடைய திட்டமிடலின்படி இன்னும் மூன்று காதை இருக்கின்றது. வனமேகுகாதை, போருழல்காதை, நிலம் மீள்காதை, வஞ்சகக்காதை, ஊழிக்காதை இந்த ஐந்து காதைகளிலும் ஈழத்தமிழர்களுடைய வரலாற்றையும் அந்த வரலாற்றுக்குப் பின்னாலே இருக்கின்ற தகவல்களையும் இந்தப்போருக்கு உண்டான அரசியலையும் அந்தப் போரால் ஏற்பட்ட வாழ்க்கையையும் எழுதிக்காட்டுவது எனது நோக்கம்.

நான் கர்ப்ப நிலத்தில் கனவுக்காட்சி ஒன்றை எழுதியிருப்பேன். சில பேருக்கு அதைப் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. ஏன் அது அங்கு வந்தது என்று கேட்டார்கள். சில பேருக்கு அதனுடைய பகுதி புரிந்து கொண்டது. வன்னியிலிருந்து யுத்தம் துரத்த மணிநாகன் என்பவன் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் என்ற நீரே இல்லாத நிலத்திற்கு வருகின்றான்.  அதை நாகமணி என்பவர் கனவு காண்கின்றார். 

மணிநாகன் என்பவர் முதலாவது ஆளாக போர் துரத்துகின்ற பொழுது தன்னுடைய குழுமத்தை கூட்டிக் கொண்டு வருகிறான். ஐயாயிரம் வருடங்களின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து நாகமணி கர்ப்பநிலத்தில் இடம்பெயர்ந்து மீண்டும் வன்னிக்கு வருகிறார்.

மணிநாகன் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் போனவன். நாகமணி ஐயாயிரம் வருடத்திற்கு பின்னர் தன் தாய்நிலத்திற்கு வருகின்ற மாதிரித் தான் இந்த நாவலுடைய கட்டமைப்பு இருக்கும். போருழல்காதை முடிந்த காலப்பகுதியில் அவர் மாதவனோடு வவுனிக்குளம் நதிக்கரையில் போய்பார்ப்பார். ஒரு ஆதிசிவன் கோவில் இருக்கும்.

அதில் எழுதியிருக்கும் கல்வெட்டை மாதவன் வாசித்துக் காட்டுவார். மணிநாகன் மகன் வேல்கண்ணன் என்று அதில் எழுதியிருக்கும். அவன்தான் வவுனிக்குளம் குளக்கட்டை கட்டியது. அது உண்மை.

இன்று அது காபன் சோதனையின்படி கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே அந்த ஆதிசிவன் கோவிலும் அந்த குளம் கட்டியதற்கான பொறிமுறையும் அதைகட்டியவன் யார் என்பதையும் அது பொறித்து வைத்திருந்தது. 

அந்த தகவல்களை வைத்து தான் இந்த நாவல் வருகின்றது. பெயரைக் கூட சும்மா தெரியவில்லை.  வைக்கப்பட்ட எல்லா பெயருக்கும் ஒரு காரணம் இருக்கின்றது. நாகமணி திரும்ப போய் வாசிக்கின்ற பொழுது அந்த வரலாறு வந்து அவருக்கு ஞாபகம் வருகின்ற மாதிரி. ஈழத்தில் பொப்பரிப்பு என்ற இடத்தில் செய்யப்பட்ட ஆய்விலே கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிடைத்த மட்பாண்டங்களில் அபியின்குடம் உதியின்குடம் என்று எழுதப்பட்டிருக்கின்றது. சாதாரண வீடுகளிலேயே குடத்திற்கு பெயர் எழுதிப் பாவித்திருக்கின்றார்கள். வரலாற்று ஆசியர்களுக்கு இது தெரியும்.அந்த வரலாற்று விடயங்களை வைத்து எப்படி நான் இந்த நாவலை ஆக்குவது, போர் நிலத்து படைப்பாளன் செய்ய வேண்டிய கடமை என்ன என்ற புரிதலிற்கு வர வேண்டி இருந்தது.

அதனாற் தான் நான் என்னுடைய மக்களை நிமிர்ந்து நிற்கவும் இந்தப் போரில் வென்ற மக்களை குற்ற உணர்விற்கு ஆளாக்கவும் அவர்களுடைய இழிவு என்ன, அவர்கள் என்ன வகையான சிக்கலுக்குள் மாட்டி போரைச் செய்தார்கள் என்பதை எழுதினேன். ரத்நாயக்கா என்ற ஒரு சிங்கள குடும்பம் இருக்கும். மணிநாகனின் தந்தை பொன்னுகோணன் என்ற ஒரு குடும்பம் இருக்கும். இரண்டு குடும்பத்திற்கும் இடையில் ஒரு உறவு வருகின்றது. ஒருகாட்டு மனிதனாக இருந்த ரத்நாயக்காவிற்கு பொன்னுகோணன் உதவிசெய்வார். அவர் காட்டிலிருந்து வெளியில் வந்து வர்த்தகம் செய்ய இரண்டு குடும்பத்திற்கும் உறவு வரும். இது ஒரு காலம்.

அரசியல் ரீதியாக அவர்களுடைய அடுத்த தலைமுறை பிரிந்து போகின்றது. நாகமணி தமிழ்தேசிய அரசியல் என்ற சிந்தனையோடு இருப்பார். விஜயதாச என்ற ரத்னாயக்காவின் மகன் சிங்களத் தேசிய அரசியல் என்ற சிந்தனையில் இருப்பார். அவருடைய பிள்ளைகள் அரசியலால் பிளந்து போவார்கள். பொன்னுக்கோணருடைய பேத்தியும் ரத்நாயக்காவின் பேரனும் களத்தில் மோதுவார்கள். அதே நேரம் பொன்னுக்கோணரின் பேரனும் ரத்நாயக்காவின் பேத்தியும் கொழும்பில் காதலிப்பார்கள். இதுதான் அந்த நாவலினுடைய கட்டமைப்பு. இதற்குள் நான் இந்த இரண்டு இனத்திக்குள்ளேயும் இருக்கின்ற அரசியலைப் பேசத்தான் நான் முனைகின்றேன். என்னுடைய இலக்கியப் பார்வையாக நம்புவது இலக்கியம் அல்லது கலை என்கின்றதே மனிதன் தன்னுடைய அனுபவத்தை கடத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஊடகம் என்பது தான். ஆதிமனிதனிடம் தோன்றிய ஆடல் வடிவம் ஒரு கலை வடிவமே. மொழி தொடங்குவதற்கு முன்னர் கலை தோன்றி விட்டது. ஆடிக் காட்டுவது.

வேட்டைக்குப் போய் தான் பட்ட அனுபவத்தை அவன் ஆடிக் காட்டினான். ஆடிக் காட்டும் போது உணர்வுகளை காட்டுவதற்காக ஒலிகளை எழுப்பிக் காட்டினான். மனிதக் கண்டுபிடிப்பில் கலையினுடைய நோக்கமே அனுபவத்தை அடுத்தவனிடம் சொல்லி வைத்துவிட்டு போவது தான். ஆதிமனிதனின் இலட்சம் வருடங்களிற்கு முன்னர் மொழி தோன்றுவதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட அடிப்படையைத் தான் நானும் பின்பற்றுகின்றேன். கலை கலைக்காவே என்று என்னால் எழுத முடியும். அதுவும் மனிதனுக்காக என்றுதான் என்னால் எழுத முடியும்.

ஒன்றாய் இருந்த இனங்களுக்கிடையில் எப்பொழுது முரண்பாடு வந்தது. எப்படி சர்வதேச அரசியல் இதில் தலையிடுகின்றது? ஒரு இனத்தின் மீது ஒரு மக்கள் சமூகத்தின் மீது மற்றச் சமூகத்திற்கு எப்படி வெறுப்பு வரவைக்கின்றது? அதை அவன் சரியென்று நம்புகிறது எப்படி?  இது தென்னாசியநாடுகள் முழுவதற்கும் பொருந்தும். கொலணிகள் போல இருந்த எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இன்று உலகத்திலேயே அதிகளவில் சிந்தனைக்குழாம்கள் (Think Tank) இருப்பது அமெரிக்காவிற்தான். அதற்கு முன்னர் பிரிட்டனில்தான் அதிகளவு சிந்தனைக் குழாம்கள் இருந்தன. எல்லாமே ஆய்வு தான். அதை வைத்துக் கொண்டு எப்படி அரசியல் அதிகாரத்திற்கு அதனைப்  பாவிப்பது என்பதுதான் அவற்றின்  நோக்கம்.

எங்களுடைய மூளையில் அமிட்டலா என்ற ஒரு பகுதி இருக்கின்றது. அந்தப்பகுதி தான் எங்களுக்குப் பயத்தை உருவாக்குகின்ற பகுதி. வீரம், துணிவு என்பதும் அதே பகுதி தான். என்னுடைய நாவல்களிலே பார்த்திருப்பீர்கள் பயத்திற்கும் வீரத்திற்குமான புள்ளி வந்து மிகவும் சிறியது. “அப்பால்ஒருநிலம்” நாவலில் அந்த மாறுபாட்டை மிகத் தெளிவாக வரையறுத்துக் காட்டியிருப்பேன்.

மூளையில் இன்னொரு பகுதி இருக்கின்றது. இன்சுலர் கோட்டெக்ஸ் என்பது. இதனுடைய வேலை என்ன என்றால் குமட்டுறது, அருவருக்கிறது.  அது எல்லா மிருகங்களுக்கும் இருக்கும். ஒவ்வாத சாப்பாடு ஒன்றை சாப்பிட்டால் பூனை, நாய் சத்தி எடுக்கும். ஒவ்வாத சாப்பாடு போன உடனே  மூளை சொல்லும் இது உன்னுடைய உடம்பிற்கு ஆகாது. உடனை சத்தி எடு என்று. அதைச்செய்வது இந்த இன்சுலர்கோட்டெக்ஸ் என்பது தான்.

ஆனால் மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் மிருகத்தைவிட அது இன்னொன்றையும் அதிகமாக செய்கிறது. அது என்ன என்றால் ஒவ்வாத கருத்தும் குமட்டும். உணவு மட்டும் குமட்டுவதில்லை .ஒவ்வாத மனிதர்களையே குமட்டச் செய்யும். இங்கிருந்து தான் மத ரீதியான, இன ரீதியான அடிப்படைவாதம், சாதிரீதியான அடிப்படைவாதம் வேலை செய்கிறது.

சாதியப் பாகுபாடு பார்ப்பவனுக்கு அது சரி போலவே இருக்கும். இனரீதியாக பாகுபாட்டைக் காட்டுபவன் அந்த வெறுப்பை வைத்தே இருப்பான். மூளையில் அவனுக்கு அதை செயற்பட வைக்கப்பட்டிருக்கின்றது. மத ரீதியானவர்களுக்கும் அப்படித் தான் இருக்கும்.  மத ரீதியானவர்களுக்கு வேறு மதம் ஒவ்வவே ஒவ்வாது.

ஒவ்வாது என்பதற்கு தார்மீகக் குமட்டல் என்ற சொல்லைப் பாவிக்கின்றார்கள் விஞ்ஞானத்தில். ரத்நாயக்கா, பொன்னுக்கோணர், நாகமணி, நாகமணியின் தகப்பன் சடைநாகம் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தவர்கள்.

அடுத்த தலைமுறை இரண்டாகப் பிளக்கின்றது. மூன்றாம் தலைமுறை களத்தில் மோதுகிறது. மோதுவதை சரியென்று நினைத்து மோதுகின்றது. இது ஒரு பொதுப்புத்தியாக வளர்த்தெடுப்பதற்கு அதிகார அரசியல் ஒரு காலப்பகுதியை எடுத்துக் கொள்கிறது. இதனை உலகத்தில் கொலனிநாடாக இருந்த எல்லா நாடுகளிலும் பார்க்கலாம்.

புவிசார் அரசியலில் பார்த்தால் உலகத்தினுடைய விளிம்பு நாடுகளில் பார்க்கலாம். கடல் போக்குவரத்து பாதையில் இருக்கின்ற நாடுகளை விளிம்பு நாடுகள் என்று சொல்வார்கள். அவற்றிலே தான் உலகத்தினுடைய வர்த்தகமே தங்கியிருக்கின்றது. அதிலேயே தான் உலகத்தினுடைய அதிகாரமே தங்கியிருக்கின்றது. அதிகாரத்துக்கு அடிப்படையாக இருப்பது கடல் போக்குவரத்து விளிம்பு நாடுகள். உலகத்திலேயே இருக்கின்ற எல்லா விளிம்பு நாடுகளிலும் அரசியல் நிலையானதாக இருக்காது. அங்கே இன முரண்பாடோ மதமுரண்பாடோ அல்லது வேறுவகையான முரண்பாடோ நிச்சயமாக இருக்கும். அப்படி அல்லாத ஒருநாட்டைக் காட்ட முடியாது. அப்படி என்றால் என்ன அர்த்தம். இந்த முரண்பாட்டிற்குப் பின்னால் ஒருபெரியசக்தி இருக்கின்றது. உலகஅதிகாரம் என்பது எப்படி இந்த முரண்பாட்டை உருவாக்கி விடுகின்றது. உருவாக்கி விடுவதற்குப் பின்னால் எவ்வளவு அறிவு வேலை செய்கிறது. மூளை எப்படி குமட்டுகிறது என்பதனைக் கண்டுபிடித்தால் அதை எப்படி ஒரு அதிகார அரசிலுக்குப் பயன்படுத்தலாம். குமட்டச் செய்யலாம். இரண்டு இனத்தைக் குமட்டச் செய்தால் எப்படி மோத வைக்கலாம்? இது சாதாரணமாக ஏதேச்சையாக நடக்கின்ற விடயமல்ல. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் என்ற பிரிட்டன் சாம்ராஜ்ஜியத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் குமட்டல் இன்றை வரைக்கும் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றது.

அதைத்தான் ஊடகமும் செய்கின்றன. ஊடகம்தான் தீர்மானிக்கின்றது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று. நீங்கள் யாரை விரும்ப வேண்டும், நீங்கள் என்ன உடுப்பு போட வேண்டும், நீங்கள் எந்தக் கடைக்குப் போக வேண்டும். நீங்கள் எப்படிச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் சொல்லித் தந்திருக்கின்றது. ஊடகத்தை வைத்துக் கொண்டுதான் உங்களுடைய மூளை எப்படி செயற்படுகின்றது என்பதை ஆய்வுசெய்து தருகின்றார்கள்.

அரசியலுக்குள்ளே வருகின்ற முரண்பாடும் அவர்களாலே தான் தரப்படுகின்றது. உலகம் ஒருபெரும் சக்தியாக இதைச் செய்கின்றது. இதை எப்படி அறிவாக்கம் செய்வது என்பதுதான் பெரிய சவால். சாதாரண எளியமக்கள் இந்தச் சிக்கலுக்குள் மாட்டாமல் எப்படித் தப்புவது? அதை எப்பொழுது மக்களுடைய பொதுஅறிவாக மாற்றுகின்றோமோ அப்பொழுதுதான் எங்களுடைய குழந்தைகளுடைய வாழ்க்கையை நாங்கள் காப்பாற்றலாம். இல்லாவிட்டால் காப்பாற்ற முடியாது. சாதாரண குடும்பத்தினுடைய வாழ்க்கையிலும் இதை நீங்கள் பார்க்கலாம். அதை நாங்கள் அறிவாக்கம் செய்து பொதுப்புத்தியாக மாற்ற வேண்டும் என்றால் பெரும் சக்தி செய்கின்ற சதிக்கு எதிராக மக்களுக்குள் இருக்கின்ற அறிவார்ந்து சிந்திக்கக் கூடியவர்கள் இதைப்  பொதுப் புத்தியாக மாற்ற வேண்டும். அதில் நான் எடுத்த சின்னஞ் சிறிய முயற்சி தான் இது.

நிமிர்வு ஜனவரி   2020 இதழ்  


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.