சட்டரீதியான கட்டமைப்புக்களை உருவாக்குவோம்



மே 18 என்பது ஒரு கூட்டுத் தோல்வியை கூட்டுத் துக்கத்தை கூட்டு அவமானத்தை நினைவு கூரும் நாள். நாங்கள் ஒரு கூட்டுத் துக்கத்தை நினைவேந்தப் போகிறோம் என்று சொன்னால் அதன் அர்த்தம் இன்று நாங்கள் அழப் போகின்றோம் என்பதல்ல.  அழுது முடிஞ்சுது. இந்தக்  கூட்டு துக்கத்தை கூட்டு ஆவேசமாக ஒரு கூட்டு ஆக்க சக்தியாக ஒரு constructive  force - ஆக நாங்கள் மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் தான் நாங்கள் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெற முடியும்.

இனப்படுகொலையை நினைவு கூர்தல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின்  பிரிக்கப்பட முடியாத பகுதி. அந்த  அடிப்படையிற் தான் நாங்கள் இனப்படுகொலையை நினைவு கூர வேண்டும். எனவே நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தில் நாங்கள்  ஐக்கியப்பட வேண்டும். ஆனால் கடந்த 11 ஆண்டுகளையும் நாங்கள் தொகுத்துப் பகுத்துப் பார்ப்போமாக இருந்தால் நாங்கள் ஐக்கியப்பட தவறி விட்டோம்.  தாயகத்தில் ஓர் அரசியலும் புலம்பெயர் தேசங்களில் வேறொரு அரசியலும் காணப்படுகின்றது. தமிழகம் 2009 க்குப் பின் கொந்தளித்த அளவுக்கு இப்போ இல்லை. அங்கே கொந்தளிப்பு உணர்ச்சி சூடு அடங்கிக் கொண்டே போகிறது.

இன்று தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறு நோக்கு நிலைகள் காணப்படுகின்றன. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெவ்வேறு நோக்கு நிலைகள் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் முதலில் ஐக்கியப்பட வேண்டும்.  இந்த ஐக்கியத்தை புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்தும் தொடங்க முடியாது. தமிழகத்தில் இருந்தும் தொடங்க முடியாது. அதனை தாயகத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக தாயகத்தில் இருந்து தொடங்குவதற்கு மக்களாணையைப் பெற்ற ஒரு பலமான கட்டமைப்பு இல்லை.  இதனாலேயே புலம்பெயர்ந்த மக்களே நீதிக்கான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதான ஒரு தோற்றம்   ஏற்படுகின்றது. அது தோற்றம் மட்டும் தான். யதார்த்தமாக இருக்க முடியாது.

கடந்த 11 ஆண்டுகளில்  புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திடம் இருந்து கணிசமான அளவு உதவிகள் குறிப்பாக  நிதி ரீதியிலான உதவிகள் கிடைத்திருக்கின்றன. ஓரளவுக்கு அறிவுப் பரிமாறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அனுபவத் பரிமாறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் இவை யாவும் அவற்றுக்குரிய இலக்கை அடைந்தனவா என்ற கேள்வி முக்கியம்.

இந்த உதவிகளினால் போரினால் முறிக்கப்பட்டிருந்த சமுகத்தை ஓரளவு நிமிர்த்தக் கூடியதாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த கட்டமாக நீதியைப் பெறும் போராட்டத்தில் நாங்கள் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றோம்?   அந்தப் போராட்டத்தில் முன்னேறும் பொருட்டு தாயகத்தில் இருக்கக்கூடிய தரப்புக்களை  எந்தளவுக்கு ஐக்கியப்படுத்தி இருக்கின்றோம்? புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்து தாயகத்தில் இருக்கும் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும்   உதவிகள் வருகின்றன. ஆனால் இந்த உதவிகளினால் இங்குள்ள அமைப்புக்களை, கட்சிகளை  ஐக்கியப்படுத்த முடியவில்லை. இந்த இடைவெளி காரணமாக   தாயகத்தில் மக்களாணையை பெற்ற அமைப்பு அல்லது கட்சி ஐநாவில் நிலைமாறுகால நீதியை ஏற்றுக் கொள்கிறது.  மாறாக புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியையே கேட்கின்றார்கள்.

ஆனால், உலக சமூகம் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் வார்த்தைகளைத் தான் கேட்கும். அவர்களோடு தான்  இடையூடாட்டங்களைச் செய்வார்கள். நாம் தொடர்ந்தும்  இப்படியே பிளவுபடுவோமாக இருந்தால் நாங்கள் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெற முடியாது. இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறவேண்டும் என்று விரும்புகின்ற தரப்புக்கள் தாயகத்தில் மக்களாணையைப் பெற வேண்டும். இதுதான் தொடக்கம். இரண்டாவதாக . தாயக்கத்துக்கு, புலம்பெயர்ந்த மக்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே சட்ட ரீதியாக ஏற்றுக்  கொள்ளப்பட்ட கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.

2009 க்கு முன்னர் தாயகத்தில் ஒரு கருநிலை அரசு இருந்தது. அந்தக் கருநிலை அரசு புலம்பெயர்ந்த மக்களோடும் வெளிச் சமூகத்தோடும் தனது உத்தியோகப்பற்றற்ற கடல் வழிகளின் மூலம் ஒரு விநியோக வழியை திறந்து வைத்திருந்தது. அதன் மூலம் காசு வந்தது, ஆயுதம் வந்தது. ஆட்கள் வந்தார்கள். அறிவு வந்தது. தொழிநுட்பமும் வந்தது. இன்று அந்த வழியும்  இல்லை. அந்த சிற்றரசும் இல்லை.

மறுவளமாக  அந்த சிற்றரசு தோற்கடிக்கப்பட்ட பின்  பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் அந்த சிற்றரசின் தொடர்ச்சிகளாகவே சிந்திக்கின்றன. அவர்கள் அவ்வாறு சிந்திப்பதனால்  சட்ட ரீதியாக தாயகத்தில் செயற்பட முடியாதவர்களாகவே உள்ளனர்.  அவர்களுடைய சொந்த நாடுகளில் கூட அவர்கள் செயற்படுவதில் சட்ட வரையறைகள் உண்டு. எனவே இப்போதுள்ள பிரச்சினை என்னவென்று சொன்னால் தாயகமும் புலம்பெயர்ந்த சமூகமும் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கடடமைப்புகளுக்குள் ஒன்றிணைவது.

அப்படியான கட்டமைப்புகள் எங்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே உள்ளன.  அப்படியான கட்டமைப்புக்கள் குறைவாக இருப்பதனாற்தான்  நிதிப் பரிமாற்றமும் சிக்கலில் இருக்கிறது.  அது மட்டுமல்ல ஐநாவை நோக்கிய எங்கள் இராசதந்திர நகர்வுகளும் பலவீனமான நிலையிலேயே உள்ளன.  இதுமட்டுமல்ல தாயகத்தின் மீது புலம்பெயர்ந்த சமூகம் போதிய செல்வாக்கை செலுத்த முடியாமலும் இருக்கிறது.

எனவே தாயகமும், தமிழகமும், புலம்பெயர்ந்த சமூகமும் ஒரு சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும்.   பொருத்தமான சாதுரியமான தீர்க்கதரிசனமாக கட்டமைப்புகளின் மூலம் ஒன்றிணைய வேண்டும்.  அவ்வாறு  ஒன்றிணைந்தால் மட்டும் தான்  முப்பெரும் தமிழ்ச் சக்திகளும் ஒன்று திரண்டு  இனப்படுகொலைக்கான நீதி என்கிற அடுத்த கட்டத்தை நோக்கிப் போகலாம்.   இல்லையென்று சொன்னால் தாயகத்தில் செயற்படுகின்றவர்கள் புலம்பெயர்ந்த சமூகத்துடன் தொடர்புகொள்ள தயங்குவார்கள். புலம்பெயர்ந்த சமூகத்துடன் நாங்கள் தொடர்பு கொண்டால் அது சட்டப் பிரச்சினையாக பாதுகாப்புப் பிரச்சினையாக வரும். 

இந்தச்  சட்டச் சிக்கல்கள் இருக்கும் வரைக்கும் இருதரப்புக்களும் பொருத்தமான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய முடியாது.   எனவே கடந்த 11 ஆண்டுகாலத்தில் கற்றுக் கொண்டவற்றின் அடிப்படையில்  புலம்பெயர்ந்த அமைப்புக்கள் உலகத்தில் சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்புக்களை உருவாக்கி    அதன் மூலம் தாயகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும். தமிழகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழகம் 2009 ஆம் ஆண்டிருந்த அதே உணர்ச்சிக் கொதிப்போடு இன்று இல்லை. புலம்பெயர்ந்த மக்களிலும்  முதலாம் தலைமுறையினரிடம் காணப்படும் அதே கொதிப்பு இரண்டாம் தலைமுறையினரிடம் இருக்காது.

என்னுடைய நண்பர் ஒருவர் சொல்லுவார், உன்னுடைய சகோதரம் உனக்கு உதவுவதைப் போல  உன்னுடைய சகோதரத்தின் பிள்ளை உன்னுடைய பிள்ளைக்கு உதவுமா என்று? முக்கியமான கேள்வி. புலம்பெயர்ந்த சமூகத்தில் இருந்து  பிரிவேக்கத்தோடு தாயகத்தை பார்த்துக்கொண்டிருக்கும் முதல் தலைமுறை களைத்து சோர்ந்து வயதாகிப் போனால்  அடுத்தடுத்த தலைமுறை அதே பிரிவேக்கத்தோடு தாயகத்தை அணுகாது.  எனவே முதலாம் தலைமுறை வீச்சாக வலுவாக இருக்கின்ற ஒரு காலகட்டத்தில்  தாயகத்தையும் புலம்பெயர்ந்த மக்களையும் இணைக்கும் சட்ட ரீதியான கட்டமைப்புக்களை   உருவாக்க வேண்டும். உதாரணமாக ஒரு தமிழ் வங்கியை உருவாக்கலாம். ஒரு தமிழ் அரச சார்பற்ற (N.G.O) நிறுவனத்தை உருவாக்கலாம். உலகலாவிய இரு மொழி அல்லது பல மொழி  ஊடகத்தை உருவாக்கலாம்.

பி.பி.சி இடம் இருந்து கற்றுக் கொண்டவற்றின் அடிப்படையில் அரபுக்கள் கத்தாரை மையமாகக் கொண்டு அல்ஜெஸீராவை உருவாக்கினார்கள்.  அல்ஜஸீராவின்  முன்னுதாரணத்தைப்  பின்பற்றி லத்தீன் அமெரிக்காவில் டெல் சர்  என்ற ஊடகம் உருவாகியது.  ஆனால் எங்களிடம் அப்படியான லட்சியபூர்வமான  ஓரு  பேரூடகம் உருவாக்கப்படவில்லை. இருக்கின்ற ஊடக முதலாளிகள் கட்சிகளின் பின் போகின்றார்கள்.  எனவே இந்த நிலைமையை மாற்ற வேண்டும்.

புலம்பெயர்ந்த மக்களிடமிருந்து வருகின்ற நிதி பொருத்தமான இடங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும். புலம்பெயர்ந்த சமூகத்தில் இருப்பவர்கள் அங்கே இருந்து கொண்டு எங்களைத் தொலை நோக்கியால் பார்ப்பதனை விடவும் இங்குள்ள  யதார்த்தத்துக்கு ஏற்ற மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும். பலர் புலம்பெயர்ந்த சமூகப் பரப்பில் இருந்து கொண்டு தாயகத்தை பிரிவேக்கத்தோடு பார்க்கின்றார்கள். இல்லை. பிரிவேக்கத்தோடு பார்ப்பதற்குப் பதிலாக  யதார்த்தப்பூர்வமாக அணுக வேண்டும். யதார்த்த பூர்வமாக அணுகுவது என்பது சட்டரீதியான  கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.  புலம்பெயர்ந்த தரப்பில் எதனை முதலில் செய்யலாமோ அதனை முதலில் செய்ய வேண்டும்.

புலம்பெயர்ந்த தேசங்களில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தாயகத்துக்கு திரும்பி வரப் போவதில்லை. அப்படி வந்தாலும் குறிப்பிட்ட கால விடுமுறைக்கு வந்துவிட்டு திரும்பிச் சென்று விடுவார்கள்.  தாயகத்தை பற்றிய பிரிவேக்கத்துக்கும் இரண்டாந் தலைமுறைக்கும் இடையே ஈருலக  வாசிகளாகக் கிழிபடுவோரே அங்கு அதிகம். எனவே இந்த வரையறைகளை ஏற்றுக் கொண்டு தான் எதையும் திட்டமிட வேண்டும். 

எனவே 11 ஆண்டு கால அனுபவத்தின் முடிவில் நாங்கள் எதனை கற்றிருக்கின்றோம் என்று சொன்னால் தாயகம், தமிழகம், புலம்பெயர்ந்த சமூகம் ஆகிய மூன்று தரப்புக்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அரசியல் தரிசனத்தைக் கொண்ட ஒரு தலைமை வரும் போது தான் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவது என்பது சாத்தியமாகும்.

உலக சமூகம் நடந்தது இனப்படுகொலை என்பதை இனமும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஐ.நா. ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானத்தை அமரர் ஜெயலலிதா நிறைவேற்றினார். வடமாகாண சபையில் அப்படியொரு தீர்மானத்தை முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் நிறைவேற்றினார். கனடாவில் பிரம்டன்- Brampton  - என்ற உள்ளூராட்சி சபையில் அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம் மூன்று தீர்மானங்களும் ஒன்றைக் காட்டுகின்றன. இனப் படுகொலைக்குக் எதிரான நீதியை தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டும் போராடிப் பெற முடியாது. அது ஒரு முக்கூட்டு முயற்சி. ஒரு கூட்டுப் போராட்டம். தாயகத்தில் முதலில் மக்களாணையைப் பெற்ற அமைப்பு வர வேண்டும். இரண்டாவதாக அந்த அமைப்பும்  தமிழகமும் புலம்பெயர்ந்த சமூகமும் ஒன்றிணைந்து  இயங்கக் கூடிய விதத்தில்  கட்டமைப்புக்களை  உருவாக்க வேண்டும்.  

அண்மையில் கோவிட் 19 காலத்தில்  புலம்பெயர்ந்த சமூகத்திடமிருந்து வந்த கோடிக்கணக்கான காசைக் கையாள்வதற்கு ஒரு கட்டமைப்பு  இல்லை என்பது உணரப்பட்டது. அனர்த்த காலங்களில் அவர்கள் அனுப்புகின்ற காசு பொருத்தமான இடங்களை சென்றடைய அப்படியொரு கட்டமைப்பு அவசியம். அதற்குப் பொருத்தமான ஒரு பொறிமுறை வேண்டும். அந்தப் பொறிமுறைக்கூடாக நிதி உதவிகள்  மக்களை சென்றடையுமாக இருந்தால் இன்று தமிழ் மக்களின் பொருளாதாரம் எங்கேயோ போயிருக்கும். தாயகத்தில் எவ்வளவோ முதலீடுகளை செய்திருந்திருக்கலாம்.  ஆனால் அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை. இதற்கு காரணம் பொருத்தமான பொறிமுறை இல்லை.

புலம்பெயர்ந்த சமூகத்தினரிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், அனர்த்தகாலங்களில் நீங்கள் பதற்றமடைந்து  தாயகத்தை நோக்கி ஏக்கத்தோடு காசை அள்ளி வழங்குகின்றீர்கள். ஆனால் அதற்கு பொருத்தமான நம்பகத்தன்மை மிக்க பொறிமுறை தேவை. நீங்கள் உதவி வழங்குகின்றவர்களாயும் நாங்கள் உதவி பெறுகின்றவர்களாகவும் இருக்கின்ற இந்தப் பொறிமுறை தவறு. அதனை முதலீடாக செய்யுங்கள். ஒரு வங்கியாக செய்யுங்கள். ஒரு அரச சார்பற்ற நிறுவனமாக (N.G.O) செய்யுங்கள்.

எனவே உலக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட   சட்ட ரீதியிலான கட்டமைப்புக்களை ஏற்படுத்துங்கள்.   அவசரமாக செய்யுங்கள். ஏனென்றால் தமிழகத்தில் கொதிநிலை அடங்கிக் கொண்டு போகின்றது. உங்கள் மத்தியிலும் கூட ஒரு தலைமுறைக்கு வயதாகிக் கொண்டு போகின்றது. எனவே தாயகம் - தமிழகம்- புலம்பெயர்ந்தவர்கள் ஆகிய மூன்று தரப்புக்களும் இணையத்தக்க சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்க கட்டமைப்புக்களை உருவாக்குங்கள். இப்படியான கட்டமைப்புக்களை உருவாக்குவோம் என்று மூன்று தரப்பினரும் இன்றைய இந்த நினைவு கூரும் நாளில் சபதம் எடுத்துக் கொள்வோமாக.

(புலம் பெயர்ந்த தமிழ்அமைப்புகள் சிலவற்றுக்கு நிகழ்த்திய உரையின் சுருக்க வடிவம்)

நிலாந்தன்- 

நிமிர்வு 

வைகாசி - ஆனி 2020

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.