சர்வதேசத்தை ஏமாற்றவா இடைக்கால அறிக்கை?
புதிய அரசமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை நீண்ட இழுபறிகள், அழுத்தங்களுக்கு மத்தியில் அரசமைப்பு பேரவையாக இருக்கக் கூடிய நாடாளுமன்றில் 21.09.2017 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உருவாக்கப்படவுள்ள மூன்றாவது அரசமைப்பு இதுவாகும். முதல் இரண்டையும் தமிழர் தரப்பு நிராகரித்திருந்தது. சம்பந்தன் தலைமையிலான தமிழ் அரசியல் தலைமைகளின் பங்களிப்புடன் உருவாக்கப்படவுள்ள முதல் அரசமைப்பாகவும் இது உள்ளது.
நியாயமான ஒருங்கிசைவின் அடிப்படையில் சகல தரப்பினரதும் இணக்கத்துடன் ஓர் அரசமைப்பை உருவாக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை அனைவரும் தவறவிடக் கூடாது. இது வெற்றியடையக் கூடிய எல்லா சாதகமான நிலைமைகளும் உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
இடைக்கால அறிக்கையில், சிங்களத்தில் எக்கய ராஜ்ய என்று குறிப்பிட்டு விட்டு அதற்கு விளக்கமும் “பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத ஒருமித்த நாடு” என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. வழமை போல் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, பௌத்தசாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், மத்தி மற்றும் மாகாண நிறுவனங்களின் ஒருமித்தநாடாக இலங்கை இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி ஆட்சிமுறை, மாகாணங்களுக்கான காணி அதிகாரங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பல கட்சியினரும் தமது முன்மொழிவுகளை வைத்துள்ளனர். நாடாளுமன்றுக்கு மேலதிகமாக மாகாணங்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இரண்டாவது சபை அல்லது செனட் அமைக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நாடு தொடர்ந்தும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஆட்சி செய்யும் நாடாகத் தான் தொடர்ந்தும் இருக்கும் என்பதனை தான் மேற்படி சிங்கள கட்சிகளின் முன்மொழிவுகள் கூறி நிற்கின்றன.
ஒற்றையாட்சிக்குள் தீர்வை முடக்க முடியாது. சம~;டி தான் ஒரே வழி என தமிழர் தரப்பு விடாப்பிடியாக உள்ளது. சம~;டியால் நாடு துண்டாடப்பட்டுவிடும் என பதறுகின்றன சிங்கள பேரினவாத அமைப்புக்கள். சமாளிப்புக்களோடு ஒருவாறு வெளிவந்திருக்கிறது இடைக்கால அறிக்கை.
இடைக்கால அறிக்கை வெளியானதை தொடர்ந்து புதிய அரசமைப்பு உருவாக்கல் யோசனையின் அடுத்த நகர்வாக அரசியலமைப்பு தயாரிப்புக்கான வழிகாட்டல் குழு அரசியலமைப்பு நகலை தயாரிக்கும் முக்கிய பணியில் ஈடுபடவுள்ளது. 2015 ஜனவரி பதவிக்கு வந்த இந்த அரசு இந்த இடைக்கால அறிக்கையை தயாரிக்கவே ஏறத்தாழ 2 வருடங்கள் எடுத்துள்ளது. அடுத்து அரசியலமைப்பை தயாரிக்க இன்னும் 3 வருடங்கள் எடுக்கலாம். அதற்கிடையில் ஆட்சிமாற்றம் கூட நிகழலாம். அல்லது இதே அரசாங்கமே மீண்டும் பதவிக்கு வரலாம். வந்தாலும் தொடர்ந்து மகிந்தா பூச்சாண்டியை காட்டி எந்தவித அதிகாரப்பரவலாக்கலும் இல்லாத ஒரு அரசியலமைப்பை நிறைவேற்றலாம்.
எழுபது வருடங்களாக எதைப் புறக்கணித்துப் போராடினோமோ அதை வலியுறுத்துவதாகவே அறிக்கை உள்ளதாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை ஆட்சியாளர்களின் ஜனநாயக மறுப்புக்கு கூட்டமைப்பும் உடந்தையாக உள்ளதாக தமிழ் சிவில் சமூக அமையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வறிக்கை பல்வேறு கட்சிகளின் முன்மொழிவுகளின் ஒருதொகுப்பே என்பது குறிப்பிடப்பட வேண்டியது. மொத்தத்தில் இந்த இடைக்கால அறிக்கை சர்வதேசத்தினரின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களும் சர்வதேச முற்போக்கு சக்திகளும் இலங்கை இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக கேள்வி எழுப்பும் போதெல்லாம் சிங்கள அரசும் அதனைப் பாதுகாக்கும் வெளிநாட்டு அரசுகளும் இவ்வறிக்கையின் பின்னால் ஒளிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதனைவிட இவ்வறிக்கையால் எந்த பயனும் இலங்கைக்கோ சர்வதேசத்துக்கோ கிடைக்கும் என்பது ஐயத்துக்குரியதே.
செ.கிரிசாந்-
நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-
Post a Comment