ஈழத்தமிழர்களைப் போல் ரோஹிங்யாக்களையும் கைவிட்ட சர்வதேசம்


மியான்மாரின் ரக்கைன் மாகாணத்தில் கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் ரோஹிங்யா முஸ்லீம்கள் பிரிவினைகோரி போராடினார்கள் என்ற காரணத்திற்காக அந்த நாட்டு இராணுவத்தால் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.  ரோஹிங்யா முஸ்லீம் போராளிகள் ரக்கைன் மாகாணம் தளுவிய ரீதியில் காவல் நிலையங்களை தாக்கியதுடன் இராணுவ காவலரன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடியாக மியான்மார் அரசு பாரிய அழிப்பு வேலைக்கு உத்தரவிட்டதுடன் இனசுத்திகரிப்பிலும் இராணுவத்தினை ஈடுபடுத்திவருவதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

வன்முறை வெடித்ததிலிருந்து மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட ரோஹிங்யாக்கள் வங்காளதேசத்தை நோக்கி அகதிகளாக படையெடுத்து வந்துள்ளனர்.  அவர்களது கிராமங்கள் எரியூட்டப்படுவதும், இளைஞர்கள், ஆண்கள் தேர்தெடுத்து கொல்லப்படுவதும், ஆண் குழந்தைகள் நெருப்பில் வீசப்படுவதும் எதிர்கொள்ள முடியாத இனப்படுகொலையாகவுள்ளது.  இதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்கள் வங்காளதேச எல்லையை நோக்கி இடம்பெயர்ந்து  வருகின்றனர்.  இதே நேரம் ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது.  அவர்கள் மீதான தாக்குதலை செயற்கைக் கோள் படங்கள் வழியாகப் பார்க்கும் போது அதிர்ச்சியளிப்பதாகவும் உலகநாடுகள் அனைத்தும் வேறுபாடுகளைக் கடந்து ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு உதவ வேண்டுமென கோரியுள்ளது.


ரோஹிங்யா முஸ்லீம்கள் மீதான தாக்குதல் 1978ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.  இந்தியா, வங்களாதேசம், சவுதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகளில் வாழும் ரோஹிங்யர்கள் தனித்துவம் மிக்க முஸ்லீம்களாக விளங்குகின்றர்.  இவர்களுக்குரிய குடியுரிமை அந்தஸ்தினைக் கூட மியான்மார் அரசு 1982ஆம் ஆண்டு பறித்துக் கொண்டது.

உலக நாடுகள் இஸ்லாமியர் மீது கொண்டுள்ள எதிர்ப்பின் விளைவுகளை ரோஹிங்யாக்களும் எதிர்கொள்கின்றனர்.  அவர்களை ஒரு தேசிய இனமாகவோ, சிறுபான்மை தேசிய இனமாகவோ, பார்ப்பதற்கு பதிலாக இஸ்லாமியரின் தொடர்ச்சிகள் என்றே உலகம் பார்க்க முயலுகின்றது. 

 மேற்குலகத்திற்கு மட்டுமல்ல உலகின் அனைத்து தரப்பினருக்கும் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் பிரிவினர் ஆபத்தானவராகவே தெரிகின்றனர்.   இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அனைத்து நாடுகளும் மௌனம் சாதிக்கின்றன.  துருக்கிய நாட்டு ஜனாதிபதி எர்ட்வான் மட்டுமே உடனடியாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.  இலங்கையிலும் சிவில் அமைப்புகள் அத்தகைய இன அழிப்புக்கு எதிராக போராடினர். 

மேற்குலகத்தைப் பொறுத்தவரை ஆங்-சாங்-சுகியையும் அவரது அரசாங்கத்தினையும் பகைப்பது நல்லதல்ல என கருதுகின்றனர்.   சுகியின் வெளிப்பாடும், முஸ்லீம்கள் மீதான நடவடிக்கையை தடுக்காமையும் மனித உரிமை ஆர்வலர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளன.  ஏனைய ஆசிய, ஆபிரிக்க இஸ்லாமியர்கள் கூட திரண்டு எழுந்து போராடவில்லை என்பது அவர்களின் மனோநிலையைக் காட்டுகின்றது.  ஒரு தேசிய இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதனை ஒத்த தேசிய இனங்கள் ஒருமைப்பாட்டுடன் குரல்கொடுக்க வேண்டும் என்பது தவிர்க்கமுடியாதது.  அத்தகைய கூட்டுத் தன்மையே இருபத்தியோராம் நூற்றாண்டு முழுவதும் சிறுபான்மை தேசிய இனங்களை பாதுகாக்க உதவக்கூடியது.  இனமத பேதங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைவிட அரசியல் பொருளாதார நெருக்கடியாலும் போட்டியாலும் உலகம் அதிக அலட்சியப் போக்கினை சிறுபான்மை தேசிய இனங்கள் மீது காட்டுகிறது.



சிறுபான்மை தேசிய இனங்களின் ஆயுதப் போராட்டம் அனைத்தும் பயங்கரவாதமாக மாற்றப்படும் ஓர் அரசியல் மேலெழுந்துவிட்டது.  ஆளும் வர்க்கத்திற்கு விரோதமான எந்த நடவடிக்கையும் பயங்கரவாதமாகும். அதிலும் இஸ்லாத்தின் எச்சமாக அது அராபியராக இருக்கலாம்,  முஸ்லீம்களாக இருக்கலாம் எவர் எதிர்த்து உரிமையை கோரி, நியாயத்திற்காக போராடினாலும் அது பயங்கரவாதமாகும்.  மனிதஉரிமைவாதியாகிய சுகியே ரோஹிங்யாக்களின் போராட்டத்தை நிராகரித்துவிட்டார்.  இது அவரது சுயமுகத்தைக் காட்டுகிறது.  மியான்மார் யாருக்குரிய தேசம் என்பதை உணர்த்துகின்றது.

ஈழத்தமிழரை கைவிட்டது போல் ரோஹிங்யாக்களை சர்வதேசம் கைவிட்டுவிட்டது.  அவர்கள் கொல்லப்பட்டு அழிவுக்குள்ளாக்கப்பட்ட பின்பு அவர்களை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு அழிவுகளை பதிவு செய்வதனால் பயனேதுமில்லை.  ஐ.நா.சபையின் இறுதிக்கட்ட நடவடிக்கை அதுவாகவே அமைந்துள்ளது.   இத்தகைய பதிவுகள் மேற்குலகத்திற்கு அரசியல்.  அந்த தேசிய இனத்தின் சிதைவிலே மேற்குலக  அல்லது உலக அரசியல் இயங்குகிறது.



எனவே இருபத்தியோராம் நூற்றாண்டு அரசியல் சிறுபான்மை தேசிய இனங்களின் அழிவுக்காலம்.  உலகமும் ஐ.நா.சபையும் அத்தகைய அழிவுகளை படம் பிடித்துக்காட்டி உலக அரசியலை நிகழ்த்திக் கொள்ளும்.

அதனைக் கடந்து உலக வரலாற்றை திசைதிருப்ப சிறுபான்மை தேசிய இனங்கள் மேற்குப்பாணியில் பதிலளிக்க உத்திகளை வகுத்தே போராட வேண்டும்.  ஆயுதப் போராட்டங்களுக்கு பதில் மக்கள் அரசியல் போராட்டங்கள் எழுச்சி பெறுதல் வேண்டும்.  அவை அறிவுபூர்வமாக அமைய வேண்டும்.

கலாநிதி.கே.ரி.கணேசலிங்கம்-
நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.