கட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மாதிரிகளே தேவை
“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்தோரின் முறைப்பாடு, இந்தக் கட்டிளமைப்பருவத்தினர் (டீனேஜ் பருவம்) ஏன் இவ்வாறு நடக்கிறார்கள். இவ்விடயத்தில் வயது வந்தோரின் பங்கு என்ன என்பதை ஆராய வேண்டியது எமது கடமை.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நியமத்தின் படி 10 வயது முதல் 19 வயது வரையுள்ள காலம் கட்டிளமைப் பருவமாகும். ஏறத்தாள 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தைச் சந்தித்த இனம் என்ற வகையில் எமக்குள்ள இழப்புகளும் வலிகளும் அவர்களுக்கும் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றுக்கு மேலாக ஏற்படுகின்ற உடல், உள மாற்றங்களும் அம்மாற்றங்களை கட்டிப்போடும் சமூக நெருக்கடிகளும் அவர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு அடிக்கடி ஆளாக்குகின்றன. போராட்ட காலங்களிலிருந்த தலைமை அற்றுப் போன நிலையில் ஒருங்கிணைந்த தேசியத் தலைமை இல்லாத ஒரு வெற்றிடத்தில் வழி நடத்தலின்றி தவறிப் போவதற்கான வாய்ப்புகளும் தூண்டுகோல்களும் நிறையவே உள்ளன. ஒரு மாபெரும் அழிவிலிருந்து மீண்டெழ தவித்துக் கொண்டிருக்கும் இனம் என்ற வகையில் எமது கட்டிளமைப் பருவத்தினர் வளர்ச்சி மீது கவனம் செலுத்துவது அத்தியாவசியமானது.
கட்டிளமைப் பருவத்தினரின் அறியாமையையும், உணர்ச்சி சார் நிலைமைகளையும் பலரும் பலவீனமாகப் பயன்படுத்த முயல்கின்றனர். வன்முறைகளாலும் பாலியல் சார் நடத்தைகளாலும் இலகுவாகக் கவரப்படுகின்ற பருவமாகவும் இந்தப் பருவம் காணப்படுகிறது. மன அழுத்தம், மனச் சோர்வு என்பன இந்தப் பருவத்தினரிடையே ஏற்படும் முக்கிய உள நெருக்கடிகளாகும். இந்தப் பருவத்தினர் இன, மொழி, கலாசார எல்லைகளைத் தாண்டி சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் போன்றோரைத் தம் முன்மாதிரியாகக் கொள்வதில் ஆர்வம் செலுத்துபவர்களாகவுள்ளனர். இந்தப் பருவத்தில் ஏற்படும் சவால்களை சரியான வகையில் அடையாளம் கண்டு வாழ்வின் வெற்றிகொள்ளத் தேவைப்படும் திறன்களை அவர்களிடையே வளர்த்தெடுப்பது எமது சமூகத்தின் தேசியக்கடமையாகும். இந்த வகையில் ஒரு சமூகமாக நாம் செய்யக் கூடியவை பற்றி பல்துறைசார் ஆளுமைகளின் கருத்துக்கள் வருமாறு.
வைத்திய கலாநிதி சி.குமாரவேல்
பெரும்பான்மையானோர் கட்டிளமைப் பருவத்திலேயே இந்த உலகத்தைத் தங்கள் பார்வைக்குள் கொண்டு வர ஆரம்பிப்பார்கள். இதனால், உலகத்திலுள்ள பல புதிய விடயங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படும். கட்டிளமைப் பருவத்திலுள்ளவர்களை தமது சுயலாபங்களுக்காக சிலர் போதைவஸ்துப் பாவனை மற்றும் தவறான பழக்கங்களுக்கு ஆட்படுத்துவதற்கு முயல்கிறார்கள். இவ்வாறான நிலையில் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குப் பெற்றோர்கள் அவர்களுடன் நல்ல உறவைத் தொடர்ச்சியாகப் பேண வேண்டும். பத்து வயதிற்கு முன்னரிருந்த நிலை போலன்றி கட்டிளமைப் பருவத்தினருடன் நண்பர்கள் போல் பழகி அவர்களை வழிநடாத்த வேண்டும்.
இந்தப் பருவத்தைச் சேர்ந்தவர்கள் ஏனையவர்கள் புத்திமதிகள் கூறுவதைப் பெரிதும் விரும்பமாட்டார்கள். ஆனால், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எவ்வாறு செயற்படுகிறார்களோ அதனைப் பின்பற்றிச் செயற்படுவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இந்தப் பருவத்தில் அவர்களுக்குச் சிறந்த முன்மாதிரிகள் தான் தேவை. ஆகவே, சிறந்த முன்மாதிரிகளாக விளங்கிப் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகமும் அவர்களை நேரான பாதையில் வழிநடத்த வேண்டும். சிறந்த முன்மாதிரிகள் கிடைக்காவிடில் அவர்கள் பிழையான முன்மாதிரிகளைப் பின்பற்றும் நிலை உருவாகும்.
பெற்றோர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பருவத்தைச் சேர்ந்த தங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் மற்றும் நண்பிகள் தொடர்பில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களுடன் பெற்றோர்கள் நல்ல உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் நண்பர்கள் அல்லது நண்பிகள் தொடர்பில் பெற்றோர்களுக்கு எதுவுமே தெரியாததொரு நிலைமையே தற்போதைய சூழலில் காணப்படுகிறது. இந்த நிலைமை ஆரோக்கியமானதொன்றல்ல.
ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேல் பிள்ளைகள் பாடசாலைகளில் தான் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பாடப் பரப்புக்களின் அளவு அதிகரித்துள்ளமையால் ஆசிரியர்கள் விழுமியக் கல்வியை மாணவர்களுக்குப் போதிப்பதில்லை. இந்த நிலை மாறி பாடசாலைகள் தோறும் விழுமியக் கல்வியைப் போதிப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும். ஆசிரியர்கள் தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்களாகவும், மாணவர்களுக்கு அதிக தண்டனைகளை வழங்கி அவர்களை உடல், ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
கட்டிளமைப் பருவத்தினர் மத்தியில் நிறைய சக்தி காணப்பட்டாலும் சரியான வழியில் கொண்டு செல்லக் கூடிய மூளை வளர்ச்சி காணப்படாது. எனவே, அவர்களது சக்திக்குரிய வடிகால்களாக விளையாட்டு, இலக்கியங்கள், சமூக சேவைகள் போன்ற செயற்பாடுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்தி அவர்களது சக்திகளைப் பாவிப்பதற்கான சரியான பாதைகளைக் காட்ட வேண்டும். அவ்வாறில்லாதுவிடில் அவர்கள் பிழையான பாதையையே தெரிவு செய்யும் நிலை உருவாகும்.
தீர்மானங்களை எடுக்கின்ற பக்குவம் வரும் வரையும் தகாத உறவுகள், போதை பொருள் பாவனை போன்ற விடயங்களில் புலன்களை ஈடுபடுத்தக் கூடாது என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நட்பு, எது காதல், எது இனக் கவர்ச்சி என்பதை அவர்களுக்குப் புரியும் படியாகச் சொல்ல வேண்டும். பாடசாலைகள் இனப்பெருக்க சுகாதாரத்தைக் கற்பிப்பதில்லை. அத்துடன் பெற்றோர்களும் இது தொடர்பில் சொல்லிக் கொடுப்பதில்லை. இது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பிள்ளைகள் சிறுவயதிலிருந்து வாசிப்பின் மீது கவனம் செலுத்துவதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். இலக்கிய நூல்கள், வாழ்க்கைக்குப் பயனுள்ள நூல்கள் என்பவற்றை வாசிப்பதற்குப் பிள்ளைகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் பிள்ளைகள் நன்றாக வாழ்வதற்காக அவர்கள் நேர்மையற்ற வகையில் செய்யும் காரியங்களையும் ஆதரிக்கும் ஒரு நிலைமையும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலைமையும் மாற வேண்டும்.
பெற்றோர்கள் வெறுமனே உழைத்து மாத்திரம் கொடுத்தால் போதும் என நினைப்பதில் பயனில்லை. கணனியை அவர்கள் கையாளும் போது எமது பார்வையில் அகப்படும் வகையில் அவர்கள் கையாள்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வயது குறைந்த பிள்ளைகளுக்குப் புகைப்படக் வசதிகளுடன் கூடிய தொலைபேசி வாங்கிக் கொடுத்தல், மோட்டார்ச் சைக்கிள் வாங்கிக் கொடுத்தல் போன்ற விடயங்களைத் தவிர்க்க வேண்டும். பேஸ்புக் பாவனையில் பிள்ளைகள் சிறுவயதிலேயே ஈடுபட அனுமதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததொன்று.
எங்கள் கவனம் அனைத்தும் எதிர்காலத்தில் எமது பிள்ளைகளைச் சிறந்த மனிதர்களாக உருவாக்குவதாக இருக்க வேண்டுமே தவிர அவர்கள் தவறான திசையை நோக்கிச் செல்லும் சூழலைத் தோற்றுவிப்பதாக அமையக் கூடாது என்றார்.
சிவத்தமிழ்வித்தகர் சிவமகாலிங்கம்- (பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர்)
உடல், உள மாற்றங்களுக்கு ஏற்ப அகத்திலும், புறத்திலும் வேகமான மாற்றம் ஏற்படும் பருவமாகக் கட்டிளமைப் பருவ வயது காணப்படுகிறது. இந்த வயதில் அகத்தில் சூறாவளி போன்ற சிந்தனை மாற்றங்கள் உருவாகும். தான் நினைத்தது அனைத்தும் சரி எனவும், தான் செய்வதே சரியெனவும் எண்ணுகின்ற பருவமாக இந்தப் பருவம் காணப்படுகிறது. சில வேளைகளில் பெரியவர்கள் கூறுகின்ற புத்திமதிகள் அனைத்தும் தன்னுடைய முயற்சிக்குத் தடையென எண்ணத் தோன்றும்.
இவ்வாறான சிந்தனை மாற்றங்களைக் கொண்டிருக்கும் கட்டிளமைப் பருவத்தினரின் மனம் நோகாமல் அவர்களது சிந்தனையையும் உள்வாங்கிக் கொண்டு அவர்களது ஆற்றலைப் படிப்படியாக வளர்த்து விட வேண்டிய பொறுப்பு எம்மனைவருக்குமுரியது. நாங்கள் இந்தப் பொறுப்பைக் கூட்டாக இணைந்து முன்னெடுக்காவிடில் நெறிதவறியதொரு சமுதாயத்தை உருவாக்கிய அவப்பெயர் எங்களுக்கு ஏற்படும்.
கட்டிளமைப் பருவத்தினரைச் சரியான திசையில் வழிநடாத்துவதற்கு அடிப்படையானதாகக் குடும்பமே காணப்படுகிறது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என எம்மத்தியில் ஓர் முதுமொழியும் காணப்படுகிறது. ஆகவே, குடும்பத்தில் தாய், தந்தை ஆகிய இருவரும் தம் பிள்ளைகளுக்கு ஓர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். வீட்டுச் சூழல் கல்விச் சூழலாக அமைந்தால் தான் பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவதற்கான சாதகமான நிலைமை காணப்படும். எனவே, வீட்டுச் சூழலைக் கல்விச் சூழலாக மாற்றிக் கொடுக்கின்ற பொறுப்பு பெற்றோருக்குண்டு. அத்துடன் கூட்டுக் குடும்ப அமைப்பிலே இருக்கின்ற உறவுகளான மூத்தவர்களும் வீட்டினை அண்டியுள்ள அயலவர்களும் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இளைஞனொருவன் நெறி தவறிப் போவதை ஒருபோதுமே ஊக்குவிக்கக் கூடாது.
நெறி தவறாத இளைஞர் சமுதாயமே நாட்டின் இதயம். இளைஞர்களிடம் காணப்படும் ஆற்றல்களைச் சரியாக இனங்கண்டு அவர்களைச் சமுதாயத்திற்குப் பயனுள்ளவர்களாக உருவாக்க வேண்டும். எங்களுடைய இளைய சமூதாயம் வழிதவறிச் செல்லாமலிருக்குமானால் அதனை நாங்கள் எங்கள் மண்ணிற்குக் கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாகக் கொள்ள முடியும்.
திரு. நடராஜா அனந்தராஜ்- (வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர், எழுத்தாளர்)
கடந்த-2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் கட்டிளமைப் பருவத்திலுள்ள இளைஞர்கள் சரியானதொரு நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்ந்திருந்தார்கள். போதைவஸ்துப் பாவனைகள், மதுசாரப் பாவனைகள் மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்பட்டன. ஆனால், தற்போது அதிகளவிலான மதுப் பாவனை இடம்பெறுகின்ற மாவட்டமாக யாழ். மாவட்டம் காணப்படுவது பெரும் கவலைக்குரிய விடயமாகும்.
வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராக நான் பதவி வகித்த காலப் பகுதியில் வல்வெட்டித்துறையில் இயங்கி வந்த மதுபானச்சாலைகளை முற்றாக இயங்காமல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டோம். உறுப்பினர்களின் பெரும் ஆதரவு இல்லாவிட்டாலும் கூட பொதுமக்களின் ஆதரவுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இந்த நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயற்படுத்தினோம். இதன் காரணமாக வல்வெட்டித்துறை நகராட்சி எல்லை மன்றத்திற்குள் ஒரு மதுபானச் சாலைகள் கூட இல்லை. இதன் காரணமாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் மதுபானம் பாவிப்பவர்களின் தொகை தற்போதும் வெகு குறைவாகவேயுள்ளது.
நாம் முன்னெடுத்த இத்தகைய வெற்றிகரமான நடவடிக்கையை எமது மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச சபைகளும், நகர சபைகளும் முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும். கிராமம் தோறும் முளைத்துக் கொண்டிருக்கின்ற மதுபானச்சாலைகளை இல்லாமல் செய்ய எமது மாகாண சபை ஆக்க பூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். மதுபானப் பாவனைக்கெதிராக அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகம் என்பன ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
மாணவர்கள் ஏனையவர்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்கை உருவாக்குவதற்கும், சிறந்த ஆளுமையை வளர்த்தெடுப்பதற்கும் சாரணர் இயக்கம், சென்ஜோன்ஸ் இயக்கம், கலை இலக்கிய வட்டங்கள், சனசமூக நிலையங்கள் போன்றவற்றில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இத்தகைய செயற்பாடுகள் மூலம் கட்டிளமைப் பருவத்தினர் வழி தவறிச் செல்லும் நிலைமையை நாங்கள் தவிர்க்க முடியும் என்றார்.
கவிமணி க. ஆனந்தராசா (ஓய்வுபெற்ற அதிபர்)
கட்டிளமைப் பருவத்தினரை வீடு, பாடசாலை, சமூகம் என்பன சரியாகக் கையாண்டால் வீடும், நாடும் சிறப்புறும். இந்தப் பருவத்தினரிடையே உணர்வுகள் தூண்டப்பட்டு பிள்ளைகள் திசை மாறும் சந்தர்ப்பங்கள் நிறையவுண்டு. இவ்வாறான சூழலில் பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கிய நிலையறிந்து கையாள வேண்டியது பொறுப்பு வாய்ந்த அனைவரினதும் கடமையாகும். கட்டிளமைப் பருவத்திலுள்ள பிள்ளைகளை நன்மை எது? தீமை எது? என்பன தொடர்பில் விளங்கிக் கொள்ள வழிகாட்ட வேண்டும்.
நவீன உளவியல் கல்வி முறையில் பாலியல் கல்விமுறையின் அவசியம் சொல்லப்பட்டிருக்கிறது. இலத்திரனியல் சாதனங்களைக் கையாள்வதில் மிகமிகக் கவனம் தேவை. எங்கள் விருப்பங்களை இந்தப் பருவத்தினர் மீது திணிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக அவர்களின் வழியில் சென்று அவர்கள் செய்யும் தவறுகள் தொடர்பில் புரிய வைக்க வேண்டியது பெரியவர்களின் தார்மீகக் கடமையாகும்.
அறிவியல், விஞ்ஞான, தொழில்நுட்பத் திறன்களை இந்தப் பருவத்தினருக்கு ஊட்டுவதன் மூலம் ஆர்வத்தை ஊட்டி எதிர்காலத்தில் சிறந்த ஆக்கக் கலைஞர்களாக இவர்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றார்.
மேலே கருத்துத் தெரிவித்தவர்கள் குடும்ப அமைப்புகளினதும், பாடசாலைகளினதும், சமூக அலகுகளினதும் முக்கியத்துவததை எடுத்துக் கூறினர். இவற்றைவிட அரசியல் மற்றும் சட்டம் சார்ந்த காரணிகளும் கட்டிளமைப்பபருவத்தினரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. ஒரு இரக்கமுள்ள மனிதாபிமான சமூகத்தைக் கட்டியெழுப்புதல், தனிமனித சுதந்திரத்தை உறுதி செய்தல், சர்வதேச கட்டிளமைப் பருவத்தினருடன் உறவுகளையும் ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு நம் அரசியல் மற்றும் சட்டத்துறை வழியமைத்துக் கொடுக்க வேண்டும்.
செல்வநாயகம் ரவிசாந்-
நிமிர்வு சித்திரை 2017 இதழ்
Post a Comment