வகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்
பல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தேவையற்ற நடத்தைகளைக் கட்டுப் படுத்தும் வகையிலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அணுகுமுறையே வகுப்பறை முகாமைத்துவமாகும். வகுப்பறையானது நன்கு கட்டமைக்கப்பட்ட கற்றல் கவிநிலையை ஏற்படுத்து வதாகவும், தீய நடத்தைகளைக் கட்டுப்படுத்தி, கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக் கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இவற்றை அடைவதற்கேற்ற தெளிவாக வரையறை செய்யப்பட்ட சட்ட விதிகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.
வகுப்பறைகளை மேம்படுத்துவதில் கவனிக்கவேண்டிய விடயங்கள்:
1. வகுப்பறைகளின் பௌதிக நிலை :
பின்வரும் பௌதிகவளங்கள் தொடர்பாக வகுப்பு ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டும்:
• தளபாடங்கள் :
இவை பயன்படுத்தமுடியாத வகையில் உடைந்திருக்கின்றனவா அல்லது மாணவர்களின் தொகைக்கு பற்றாக்குறையாக உள்ளனவா அல்லது மாணவர்களின் வயது, உயரம் என்பவற்றிகேற்ப பொருத்தமற்றவையாக உள்ளனவா என்பதில் கவனத்தைச் செலுத்தி இவற்றை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை வகுப்பு ஆசிரியரே மேற்கொள்ளுதல் வேண்டும்.
• போதிய வெளிச்சம், காற்றோட்ட வசதிகள், மழைநேரங்களில் ஏற்படும் நீர்க்கசிவுகள் அல்லது தூறல், மற்றும் வகுப்பறைச் சூழலை மாசுபடுத்தும் புற ஒலிகளின் தலையீடுகள் என்பன இருக்குமாயின் அவற்றைக் கவனித்து, இது தொடர்பாக அதிபர், மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுத்தல்.
• மாணவர்களின் சித்திரவேலைப்பாடு கொண்ட ஓவியங்களைச் சுவர்களில் காட்சிப்படுத்தி அழகுபடுத்துவது ஒவ்வொரு மாணவரையும் அங்கீகரிப் பதுடன் அவர்களை ஊக்குவிப்ப தாகவும் அமையும். இவற்றின் ஊடாக ஒரு வகுப்பின் தரத்தைக் கண்காணிக்கமுடியும்.
2. மாணவர் நடத்தைகளில் கவனம் செலுத்துதல்:
• தனிநபர்களை இனங்காணல் : மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் செயற்படும் பொழுதோ அல்லது தனியாக இருக்கும் பொழுதோ அவர்களுடைய நடத்தைகளை அவதானிக்க வேண்டும்.
• குழுவை இனங்காணல்: மாணவர்கள் குழுக்களாக இயங்கும் பொழுது அவர்களுடைய நடத்தைகள், மற்றவர்களுடன் பழகும் தன்மை பயன்படுத்தப்படும் பேச்சு மொழிகள் என்பவற்றை அவதானித்து வரவேண்டும். அதேவேளை ஒவ்வொருவரினதும் நண்பர்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு அதற்கேற்ப உரிய வழிகாட்டல்களைச் செய்ய வேண்டும்.
• பெற்றோருடன் உரையாடல்:
வகுப்பு ஆசிரியருக்கும், வகுப்பறையில் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் இடையில் நல்லுறவு பேணப்படுதல் வேண்டும். பிள்ளைகள் தொடர்பான முன்னேற்றம், அவர்களது நடத்தைகள், பழக்கவழக்கங்கள், பேசும் மொழி தொடர்பான கலந்துரையாடல்களை பெற்றோர்களுடன் மேற்கொள்ளவேண்டும். மேலும் சிறப்பான உறவு முறையை வளர்க்க வேண்டு மானால் வகுப்பு ஆசிரியர் தனது மாணவர்களின் வீட்டிற்குச் சென்று பெற்றோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், வீட்டுச் சூழலையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான நல்லுறவைப் பேணுவதன் மூலம் பின்வரும் அனுகூலங்களை ஆசிரியர் அடைந்து கொள்வர்.
1. ஆசிரியர் மீது பிள்ளைகள் அதிக அன்பும்இ மரியாதையையும் கொண்டிருப்பர்
2. ஆசிரியர் மீது அதீதமான பற்று ஏற்படுவதால், அவர் கற்பிக்கும் பாடத்தின் மீதும் விருப்பம் ஏற்படுவதால் குறித்த பாடத்தின் மீது சிறந்த அடைவு மட்டத்தை அடைந்து கொள்வர்.
3. குடும்பச் சூழலை அறிந்து கொள்வதால், ஒவ்வொரு பிள்ளையினதும் தேவைகளை ஆசிரியர் இனங்காண்பதால், அந்த மாணவர்களின் தேவைகள் நிறைவு செய்வதற்கும், அவர்கள் மீது சிறப்பான அக்கறையைக் காட்டவும் வாய்ப்புக்கள் ஏற்படும்
4. இவ்வாறான அணுகு முறைகளினால், வகுப்பறையின் அமைதி, நிறைந்த கவிநிலை, மாணவர்களின் ஒழுக்கம் என்பன சிறப்பாகப் பேணப்படும்.
• வகுப்பில் கல்வி கற்பிக்கும் ஏனைய அணி ஆசிரியர்களுடன் கலந்துரையாடுதல்:
இவ்வாறான கலந்துரையாடல் பிள்ளை மையமாக இருப்பதால் பிள்ளைகளின் குறைபாடுகள், நிறைவுகள், அவர்களது தேவைகள் பற்றிய மதிப்பீடுகள் மேற் கொள்ளப்படும். இதனால் குறித்த வகுப்பில் உள்ள எல்லா மாணவர்கள் மீதும் ஆசிரியர்களின் கவனம் ஈரக்கப்படும். இதனால் ஒட்டு மொத்தமாக அனைத்து மாணவர்களும் உயர்ந்த விழுமியங்களைப் பெற்றுக் கொள்வதுடன் கல்வியில் உயர்ந்த அடைவு மட்டத்தையும் அடைந்து கொள்வர். இது பாடசாலைகளில் நடைமுறையில் உள்ள தரவட்டம் போன்று வகுப்புத் தரவட்டமாக இருப்பதால் அந்த வகுப்பின் தரமும் உயரும்.
• நிபுணத்துவ ஆசிரியர் உதவிகள் பெறல்:
தேவை ஏற்படும் இடத்து சில துறை சார்ந்த நிபுணத்துவ ஆற்றல் கொண்ட ஆசிரியர்களையோ அல்லது பாடசாலைக்கு வெளியில் இருந்து வளவாளர் களையோ அதிபரின் உதவியுடன் ஒழுங்கு செய்து வகுப்பில் விசேட செயலமர்வுகளை நடத்துதல். இது ஒரு மாற்றத்திற்கான வழியாகவும் இருக்கும்.
3. கற்றல் மேம்பாடு.
வகுப்பறையின் பிரதானமான குறிக்கோளாக அமைவது மாணவர்களின் கற்றலை மேம்பாடடையச் செய்தலே. அந்த வகையில் மேலே குறிப்பிட்ட விடயங்களுடன் கற்றல் மேம்பாட்டிலான கவனம் ஒவ்வொரு ஆசிரியரினாலும் எடுக்கப்பட வேண்டும். கற்பித்தல் செயற்பாடு திட்டமிடப்பட்ட முறையிலான ஒழுங்கு, இலகுவாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலான எளிமை, புதியவிடயங்களைக் கொண்ட உள்ளடக்கம், மாணவர் மகிழ்ச்சியுடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய தன்மை என்பவற்றைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அதேவேளை மாணவர்களின் வயது மற்றும் வகுப்புக்குப் பொருத்தமானதாகவும் அமையுமானால் வகுப்பறை முகாமைத்துவம் என்பது மகிழ்ச்சிகரமான சூழலில் காணப்படும்.
ஒவ்வொரு மாணவரினதும் கற்றல் அடைவு மட்டத்தை உயர்த்துவதில் பின்வரும் நடைமுறைகள் ஆசிரியர்களினால் பின்பற்றப்படவேண்டும்:
1. கற்றல் இடர்ப்பாடு இனங்காணல்.(Learning Difficulties)
ஒரு பிள்ளை கற்றலின்போது எய்த வேண்டிய தேர்ச்சியை எய்த இயலாமல் தத்தளிக்கும் நிலையே கற்றல் இடர்ப்பாடு ஆகும். இதற்கான காரணங்களாகப் பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன:
• மாணவர் தம் கற்றலில் முழுமையான ஈடுபாடு காட்டாமை
• பிள்ளைகள் சுயமாகவும், சுதந்திரமாகவும் கற்பதற்கான சூழலின்மை
• மாணவரின் உடல், உள நல நிலைமைகள்
• சமூக, குடும்பப் பின்னணி
• ஆசிரியரின் பொருத்தமற்ற கற்பித்தல் முறை
• பொருத்தமற்ற சகபாடிகளின் (Pear Group)சேர்க்கை
2. கற்றல் சூழலை மாற்றுதல்:
மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு ஒரு ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கற்றல் கற்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய இடர்ப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒழுங்கு முறைகளைக் கையாள வேண்டும்.
3. கற்றல் குழக்களை உருவாக்கல்:
வகுப்பில் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தவேண்டுமாயின் மாணவர் குழுக்களுக் கிடையே ஒத்த தன்மையை ஏற்படுத்தவேண்டும். வெவ்வேறு சிந்தனை, இலக்கு, மாறுபட்ட குடும்பச் சூழல் போன்றவற்றிலிருந்து வரும் பிள்ளைகளுக்கிடையே ஒருங்கிசைவை ஏற்படுத்தும் வகையில் அவர்களைக் குழுக்களாக்கி கற்பதற்கான குழு ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு வகையான கற்றல் செயற்பாட்டை வழங்கவேண்டும். அவற்றை பின்னர் குழு ரீதியாக முன்னளிக்கைப்படுத்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை குழு உறுப்பினர்களை மாற்றி புதிய ஒரு கற்றல் குழுவை உருவாக்கவேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாகக் கற்றல் குழுக்கள் உருவாக்கப்படும் பொழுது ஒவ்வொருவரிடமும் தாமாகவே கற்க வேண்டும் என்ற உந்து சக்தி உருவாக்கப்படும்.
4. கற்றலை மேம்படுத்தவதற்கான வாசிப்புத் திறன் விருத்தியில் கவனம் செலுத்துதல்:
மாணவர்களிடையே வாசிப்புத் திறன்களை விருத்தி செய்வதற்காகப் பின்வரும் செயல் திட்டங்களை வகுப்பறை மட்டத்தில் நடைமுறைப்படுத்துதல்:
• வகுப்பறை நூலகங்கள் அல்லது புத்தகப் பெட்டி நூலக முறைமைகளை அறிமுகம் செய்து அவற்றில் வாசிப்புத் துணை நூல்களைக் காட்சிப்படுத் துதல். இதனால் நூல்கள் தொடர்பான பரிச்சயத்தையும் இந்நூல்களின் மீதான விருப்பத் தையும் மாணவர்களிடையே ஏற்படுத்தலாம்.
• மாணவர்களிடையே வாசிப்புத் திறன் போட்டிகள் எழுத்தாக்கத்திறன் போட்டிகள்இ கையெழுத்துச் சஞ்சிகை ஆக்கங்கள் என்பவற்றை ஒழுங்கு செய்தல்.
• வகுப்பறை மட்டத்தில் மாணவர்களுக்குப் பொருத்தமான நூல்களைக் கொண்ட கண்காட்சிகளை ஒழுங்கு செய்தல்.
• ஆகக் குறைந்தது இருபத்தைந்து நூல்களையாவது வாசித்து முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் பரிசுகள் வழங்குதல்.
• வாசிப்பு முகாம்களை ஒழுங்கு செய்தல். ஒரே நேரத்தில் பல வகையான செயற்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கேற்ற முறையில் எளிமையான வாசிப்புத் துணை நூல்களையும், அவற்றிற்கான செயற்பாடு களையும், மதிப்பீட்டு வினாக்களையும் தயாரித்து வாசிப்பு முகாமை ஒழுங்கு செய்தல். இவ்வாறான செயற்பாடுகளில் மாணவர்கள் மிகவும் விருப்பத்துடன் ஈடுபடுவார்கள்.
5. மாணவர் செயற்பாடுகளை ஊக்குவித்தல்:
ஒரேவகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் எல்லோரும் ஒரே தரத்தில் உள்ளவர்கள் என்ற எடுகோளுடனேயே வகுப்பு ஆசிரியர் தனது கற்பித்தல் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும். பழைமைமுறையான ஆசிரியர் மையக் கல்வியில் இருந்து மாணவர் மையக் கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இதனால் மாணவர்களுக்கான சமமான வாய்ப்பு, ஊக்குவிப்பு, வினைத் திறன் மிக்க செயற்பாடுகள், தன்னம்பிக்கை வளர்தல், குழுச்செயற்பாட்டில் ஆர்வம் ஏற்படுதல் என்பன வளர்த்தெடுக்கப்படும்.
6. மாதிரி வினாவுக்கான விடை எழுதுவதற்கான பயிற்சிகளை வழங்குதல்:
ஒவ்வொரு பாடத்திலும் குறித்த அலகு அல்லது தேர்ச்சிகள் முடிவடைந்ததும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல். இது மீள் வலியுறுத்தலாகவும் அடையும். இதில் பின்வரும் இலகு முறைகளை ஆசிரியர் கையாளலாம்.
• குறித்த அலகு அல்லது தேர்ச்சி தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக மாதிரி வினாத்தாளை அமைத்தல். இதில் எளிமையான வினாக்களில் இருந்து சிக்கலான அல்லது கடினமான வினாக்களைக் கொண்டதாக அமைத்தல்.
• மாணவர்களை ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவினரிடமும், பாடநூலையும் அதில் உள்ள தேர்ச்சிகள் தொடர்பான வேறு நூல்கள் அல்லது இணையத்தில் இருந்து பெறப்பட்ட தகவல் பத்திரங்களையும் வழங்குதல். அவற்றில் இருந்து வினாக்களை மாணவர்கள் மூலமே தெரிந்தெடுக்க வைத்து அவற்றிற்கான விடைகளையும் அவர்களைக் கொண்டே எழுத வைத்தல். இந்தப் பணியில் ஒவ்வொரு குழுவும் ஈடுபடுவதற்கான வழிப் படுத்தல்களை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவையும் தாம் தயாரித்த வினாக்களையும் அவற்றிற்கான விடைகளையும் பல்லூடக எறியியன் (multimedia projector) ஊடாக அளிக்கைப் படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அல்லது டிமை தாளில் (Demy Sheet) எழுதிக் காட்சிப் படுத்தி அளிக்கைப்படுத்த வைக்க வேண்டும்.
4. மதிப்பீடு: (Evaluation)
கற்றலையும் கற்பித்தலையும் முன்னேற்றுவதற்கு உதவும் வகையில் மாணவர்களின் அறிவு மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல். ஒரு வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் மதிப்பீடு அளவு சார் மதிப்பீடாகவோ அல்லது பண்பு சார் மதிப்பீடாகவோ இருக்கலாம். இவ்வாறான மதிப்பீடுகள் ஒரு மாணவனின் அடைவு மட்டத்தை உயர்த்த உதவுதுடன் பாடத் தேர்ச்சி தொடர்பான தெளிவையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். மதிப்பீடு என்பது மாணவர்களை ஊக்குவித்து முன்னேற்றமடைய வைக்கவேண்டுமே ஒழிய அவர்களைப் பலவீனப்படுத்துவதாகவோ அல்லது நம்பிக்கை இழக்கவைப்பதாகவோ இருக்கக்கூடாது.
1. சுய மதிப்பீட்டுத்திறன் (Self Assessment)
ஒவ்வொரு மாணவரும் தமது கற்றல் திறனையும், தான் எங்கே நிற்கின்றேன் என்பதையும் தாமே மதிப்பிட்டுக் கொள்ளுதலே சுயமதிப்பீடாகும். இவ்வாறான சுய மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களையும், ஆலோசனை களையும் வகுப்பு ஆசிரியர் வழங்கவேண்டும். இவ்வாறான சுய மதிப்பீடுகள் அடுத்த கட்டத்தில் தான் என்ன செய்யவேண்டும் என்ற சரியான தீர்மானத்தை எடுப்பதற்கும் உதவும்.
2. உடனடியான பின்னூட்டல் (Immediate Feedback):
கற்றலையும் கற்பித்தலையும் மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு உதவக் கூடிய ஒரு முக்கியமான செயற்பாடாக அமைவது பின்னூட்டலாகும். அதுவும் எப்பொழுதும் பின்னூட்டல்கள் உடனடியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். காலம் தாழ்த்திய பின்னூட்டல்கள் பயனற்றதாகவே போய்விடும். இவ்வாறு பின்னூட்டல் களை மேற்கொள் வதன் மூலம் தமது தவறுகளைத் தாமே திருத்திக் கொள்வதற்கும் சரியானவற்றைச் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்வதற்கும் உதவும். அதேவேளை அடைவு மட்டத்தை உயர்த்திக் கொள்ளவும் முடியும். மிக இலகுவான, வினாக்களை மாணவர் களிடம் வினாவுதல் என்பதும் மிக எளிமையான பின்னூட்ட லாக அமையும்.
எனவே வகுப்பறை மேம்பாடு அல்லது வகுப்பறை முகாமைத்துவம் என்பது வகுப்பறையை சிறந்த கவர்ச்சிகரமான கவிநிலையைக் கொண்டதாகப் பேணிக் கொள்வது மட்டுமல்லாது, பிள்ளைகளின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை முழுமையாக அடைந்துகொள்ளும் வகையில் ஆளுமை விருத்தியில் ஒரு ஆசிரியர் கவனம் எடுத்து பல்வேறு நுட்பங்களைக் கொண்டதாக வகுப்பறை முகாமைத்து வத்தை மேம்படுத்த வேண்டும். அப்பொழுதுதான், வினைத்திறன் மிக்க வகுப்பறை மேம்பாடு என்பது வெளிப்படையாகத் தெரியவரும். இதனூடாகவே பிள்ளைகளின் விளைதிறன் மிக்க ஆளுமை விருத்தியும் வெளித்தோன்றும்.
ந.அனந்தராஜ்
(ஓய்வு நிலை கல்வி அதிகாரி)
நிமிர்வு மார்கழி 2018 இதழ்
Post a Comment