ஆசிரியர் பார்வை
யானையைக் காப்பாற்றிய வீடு
அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதே வேகத்தை தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் நலன்களின் மேல் காட்டியிருந்தால் அரசியல் ரீதியாக தமிழ்மக்கள் ஒரு மைல் கல்லையாவது எட்டியிருப்பார்கள்.
முள்ளிவாய்க்காலின் பின் கடந்த பத்து வருடங்களாக நடந்த தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டங்கள் எதற்கும் செவி சாய்க்காத கூட்டமைப்பு ரணிலை காப்பாற்றி இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றி விட்டதாக மார்தட்டுகிறது.
அரசியல் கைதிகள் விடுதலையில் தொடர்ந்து தாமதம் நிலவுகின்றதுஇ காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் வருடக்கணக்காக தொடர்ந்து நடக்கிறதுஇ காணி விடுவிப்பு போராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இவையெல்லாவற்றையும் தாண்டி போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அன்றாட வாழ்வே பெரும் நிர்க்கதிக்குள் தள்ளப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் சிதைவடைந்து எப்படி மேலெழுவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலைமையில் தான் கொழும்பு அரசியல் குழப்பத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களின் அத்தனை அஸ்திரங்களையும் பிரயோகித்துள்ளது. இந்த நேரத்தில் மன்னாரில் மிகப்பெரும் இனப்படுகொலை நடந்ததற்கான தடயங்கள் தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் கொடூர சித்திரவதைகள் நடந்திருப்பதற்கான தடயங்களும் இருக்கின்றன. சிறுவர்களும் எலும்புக் கூடுகளாக மீட்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இந்த நிமிடம் வரை சட்ட ரீதியாக ஒரு வழக்கையேனும் தாக்கல் செய்யவோ அல்லது நாடாளுமன்றில் குரல்கொடுக்கவோ இல்லை. தொடர் மௌனம் காக்கின்றனர்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் இருந்து அரசியல் பிரச்சினைகள் வரை எதுவுமே இதுவரை தீர்க்கப்படவில்லை. தீர்ப்பதாக போக்கு காட்டி காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றது சிங்கள அரசு. அப்படியான சிங்கள அரசுக்கு தமது முழுப்பலத்தையும் செலவழித்து முண்டு கொடுக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. வருங்காலத் தேர்தலில் இவர்கள் யானையுடன் கூட்டு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
செ.கிரிசாந்-
நிமிர்வு மார்கழி 2018 இதழ்
Post a Comment