மாற்று வழியும் சமூக வளர்ச்சியும் மாற்றுவழி பகுதி -3




ஒரு வெகுசன இயக்கமாகிலும் சரி, ஒரு அரசியல் கட்சியாகிலும் சரி சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட எவரும் அம்முன்னேற்றத்துக்கான மாற்று வழிகளைத் தேடுதலை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.  இத்தேடுதலுக்கு அடித்தளமாக அமைவது அந்த சமூகத்தின் உள்ளப்போக்கு. அவ்வாறான உள்ளப்போக்கைக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதும் மாற்று வழியின் ஒரு அங்கமே. 

மாற்றுவழி என்ன என்பது தொடர்பாக அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாம் செய்யக்கூடியது என்ன என்பது பற்றி கடந்த இரு நிமிர்வு இதழ்களிலும் எழுதியிருந்தோம்.  அவை மாற்று வழியில் புறக்காரணிகளை எவ்வாறு கட்டமைத்துக் கொள்வது என்பது பற்றிய விவரணமாக இருந்தன.  புறக்காரணிகளைக் கட்டமைக்கும் அதேவேளை எமது அகக்காரணிகளையும் கட்டமைப்பது அவசியமானது.  இவ்விரண்டு காரணிகளுக்கும் இடையேயான ஒத்திசைவே எமது விடுதலைக்கான வழியை முன் நகர்த்திச் செல்லும்.  அகக்காரணிகளின் கட்டமைப்பில் சமூகமாற்றம் முக்கியமானது.  இந்த சமூகமாற்றம் பற்றிய எமது சிந்தனைகளை இந்த இந்த இதழில் பகிர்ந்து கொள்கிறோம்.

இன்று எமது சமூகம் பல தளைகளால் கட்டுண்டு கிடக்கின்றது.  இந்தத் தளைகளை உடைத்தெறிந்து தனிமனிதனாகவும் கூட்டாகவும் ஒரு சமூகமாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இங்கு தனிநபரில் இருந்து தொடங்கி அவர் சார்ந்த சமூகம் அதிலிருந்து அவர் இருக்கும் நாடு என்ற வகையில் ஒவ்வொரு கட்டமும் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும்.  இவற்றைப் பார்க்கும் போது நாம் நீண்டகாலமாக ஒரு விறைப்பான கட்டமைப்பு ஒன்றுக்குள் முடங்கிப் போயிருப்பதைக் காணலாம்.  ஆயுதப் போராட்டக் காலங்களில் இந்தக் கட்டமைப்புகளில் ஒரு நெகிழ்ச்சி காணப்பட்டது.  ஆயுதப் போராட்டத்தின் தோல்வி மீண்டும் பழைய கட்டமைப்புக்களை நோக்கி ஓடவும் அவற்றை மேலும் திடப்படுத்தும் செயற்பாடுகளுக்கும் வழி விட்டுள்ளது.  மாற்று வழி எனப்படுவது இந்த இறுக்கமான கட்டமைப்புக்களை உடைப்பதற்கான வழிகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

உதாரணமாக அரசியல் தொடர்பாக தனிமனிதர்களினதும் கட்சிகளினதும் கருத்துக்களை எடுத்து நோக்குவோம்.  என்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவனைத் துரோகி என நினைக்கிறோம்.  என்னுடைய கொள்கைகளுக்கு முரணாகச் செயற்படுபவர்களை பழிவாங்க நினைக்கிறோம். ஒருவரை எமக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் செய்வது எல்லாவற்றையுமே குறை கூறுகின்றோம். தனிமனித வசைபாடுகிறோம்.  இவ்வாறான எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?  இவை எமது சமூகத்தில் காலங்காலமாக நிலவிய ஒரே ஊரிலேயே வாழ்ந்த மக்களுக்கிடையேயான முரண்பாடுகள், பால் வேறுபாடுகள், ஊர்களுக்கிடையேயான வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள், சமய வேறுபாடுகள், இன வேறுபாடுகள் என்பவற்றால் நம் மனங்களில் ஆழப்பதிக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஆகவே நாம் ஒருவரை அரசியலிலோ அல்லது வேறு விடயங்களிலோ பழிவாங்க நினைக்கிறோம் என்றால் அந்த நினைப்பு முதலில் எமது உளக்கலாச்சாரத்திலிருந்து எழுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  பழி வாங்கும் அரசியலோ அல்லது பழிவாங்கும் செயற்பாடுகளோ எந்த நன்மையையும் தனிமனிதனுக்கோ சமூகத்துக்கோ தந்து விடப்போவதில்லை.

அவ்வாறெனின் எமக்கு அநீதி இழைக்கப்படுமிடத்து அதற்கு எவ்வாறு பரிகாரம் காண்பது என்ற கேள்வி எழுகிறது.  அதற்காகத்தான் சமூகக்கட்டமைப்புக்களை எம்மத்தியில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறோம்.  எது அநீதி எது நியாயம் என்ற பகுத்தறிவை சிறுவயதில் இருந்தே வளர்த்துக் கொள்ளக்கூடிய கல்விமுறை அவசியமானது.  இன்னொருவருக்கு அநீதி இழைக்காமல் சமூகத்தை நேசிக்க பயிற்றுவிக்கும் கல்விமுறை அவசியமானது.  இன்னொருவருக்கு அநீதி இழைத்தல் கொடுமையானது என்ற மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளக்கூடிய கல்விமுறை அவசியமானது.  அநீதி இழைப்பவர்கள் பெறக்கூடிய தண்டனைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது அவசியமானது.  அநீதி இழைப்பவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடிய சமூக கட்டமைப்புக்கள் முக்கியமானவை.  இன்றுள்ள நீதிமன்றங்கள் அதற்கு உதாரணங்கள் எனலாம்.  ஆனால் நீதிமன்றங்களின் பயன்பாட்டுக்கு முன்னதாக இளையவர்களுக்கு முதலில் வழங்க வேண்டிய பயிற்றுவித்தலை எமது சமூகம் வழங்குவதில்லை. எமது சமூகத்தின் மீள்கட்டமைப்பில் இந்த விடயம் உள்ளடக்கப்படவேண்டும்.  இதுவே குரோத அரசியலிலிருந்து விடுவித்து ஒரு கௌரவமான அரசியல் கலாச்சாரத்திற்கு எமது சமூகத்தை நகர்த்தும்.  அரசியலில் தமிழ் மக்களின் திரட்சிக்குத் தலைமை தாங்க ஒரு வெகுசன இயக்கம் அவசியம் எனக்கூறினோம்.  அதே போலவே எமது சமூகத்தின் உளக்கலாச்சார மாற்றத்துக்கான அமைப்புக்களும் உருவாகுவது அவசியம்.  மாற்று வழி அவற்றை உள்ளடக்க வேண்டும்.

ஒரு சமூகத்தை மீள்கட்டமைக்க முற்படுபவர்களுக்கு சமூகநேசம் இருக்க வேண்டும்.  அந்த சமூகநேசத்தின் காரணமாகவே அவர்கள் அச்சமூகத்தை அடக்குமுறைக்கு உட்படுத்தும் அரச இயந்திரத்தை எதிர்க்க முற்படுகின்றனர்.  முக்கியமாகப் போருக்குப் பின் நடக்கும் சமூகமீள்கட்டமைப்புக்கு இது முக்கியமானது.  இந்தச் சூழலில் அரசுக்கு எதிரான போராட்டமானது அரசும் சர்வதேசமும் அனுமதிக்கும் வழிகளுக்குள்ளே கட்டுப்பட்டிருக்கும் என்பதே யதார்த்தம்.  அந்த வழிகளில் தேர்தல் அரசியலும் அடங்கும்.  ஆனால் தமது மக்களின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பற்றிப் பேசி தேர்தலில் வெல்பவர்கள் தேர்தலின் பின் அந்தப் பிரச்சனைகளை மறந்து போவது ஏன்?  தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் தேர்தலின் பின்னர் எந்த சமூகத்திலிருந்து அவர்கள் வந்தார்களோ அந்த சமூகத்திலிருந்து விலகிப் போவது ஏன்? 
இதற்கு முக்கியமான காரணம் தேர்தலில் வெற்றி பெற்ற அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்த்தும் அதனால் அதிகரிக்கும் அவர்களுக்கான கடமைகளும் பொறுப்புக்களும் ஆகும்.  அதேவேளை அவர்கள் நினைத்ததைச் சாதிப்பதில் உள்ள கட்டுப்பாடுகளும் சேர்ந்து கொள்கின்றன.  இந்த அந்தஸ்த்தும் வேலைப்பழுவும் கட்டுப்பாடுகளும் மெல்ல மெல்ல அவர்களை சமூகத்திலிருந்து விலகப்பண்ணுகிறது.  தேர்தலுக்கு முன்னர் அவர்கள் இதனை உணர்வதில்லை. எனவே மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுவர்.  தேர்தலுக்குப் பின் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை மக்கள் உணர்வதில்லை. எனவே தாமே தெரிவு செய்தவர்கள் மீதே மக்கள் கண்டனங்களை அடுக்குவர்.  இவ்விரு தரப்புகளுக்குள்ளும் ஏற்படும் இடைவெளிக்கு இரு தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும்.

மாற்று வழியைத் தேர்தல் அரசியலில் தேடுபவர்கள் தேர்தல் அரசியலின் எல்லைகளை உணர்ந்தவர்களாகவும் மக்களிடம் உண்மையானவர்களாகவும் இருத்தல் அவசியம். மக்களிடம் உண்மையாக இருப்பது என்பது ஒரு புறக்காரணியல்ல.  அது அகம் சார்ந்தது.  ஆகவே மாற்று வழியை முன்னெடுப்பவர்கள் தமது அக அறத்தில் தெளிவாக இருத்தல் அவசியம்.

நமது சமூகத்தில் புரையேறிப் போயுள்ள சாதியம், பாலியல்வாதம் என்பவை தனிமனிதனின் உளவளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  புதிதாக ஒரு நுகர்வுக்கலாச்சாரமும் தனிமனிதர்களின் நடத்தைகளில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியுள்ளதைக் காணலாம்.  இவ்வாறான சூழலில் எமது சமூகத்தைக் கொண்டு நடத்தக்கூடிய மனிதநேயம் மிக்க தனிமனிதர்களை தலைவர்களை உருவாக்குவது முக்கியமாக அமைகிறது.

தனிமனிதர்களின் வளர்ச்சியில் மாற்று வழியின் பங்கு பற்றிப் பார்த்தோம். அடுத்து சமூகத்தின் வளர்ச்சியில் அதன் பங்களிப்பு எவ்வாறு அமையலாம் எனப் பார்ப்போம்.  இந்தக் கட்டுரையின் முதலாம் பாகத்தை ஆரம்பிக்கும் பொழுது மாற்று வழி இன்று போராடிக் கொண்டிருக்கும் சமூக அலகுகளில் எவ்வாறு தாக்கமளிக்கிறது எனக்கூறினோம். இதற்கு உதாரணமாக காணாமல் போனவர்களைத் தேடும் தாய்மார்களின் போராட்டத்தைக் குறிப்பிட்டிருந்தோம். அவர்களுடையதும் அவர்களுடையதைப் போன்ற ஏனைய சிறிய பெரிய போராட்டங்கள் மாற்று வழியின் முக்கியமான அங்கங்கள். ஒரு சமூகம் பல்வேறு கூறுகளாலானது.  சிறியவர், பெரியவர், முதியவர், ஆண்கள், பெண்கள், படித்தவர், படிக்காதவர், ஏழைகள், பணக்காரர் என சமூகம் பல கூறுகளைக் கொண்டிருக்கும்.  இந்த ஒவ்வொரு கூறும் தமது நலன்களை முன்தள்ள தொடர்ந்து முயன்று கொண்டிருக்கும்.  அந்நடவடிக்கைகளுக்குப் பின்னால் அக்கூறுக்கே உரித்தான நியாயப்பாடுகளும் (justifications) நம்பிக்கைகளும் (beliefs) பொருளாதாரமும் (economy) இருக்கும்.  உதாரணமாக பெண்களைப் பொறுத்தவரை ஆண்களுக்குச் சமமாக உரிமைகளும் கடமைகளும் வேண்டும் என்று அச்சமூகக்கூறு வேண்டி நிற்கும்.  மனிதஉரிமைகள் கோட்பாட்டின் படி அக்கோரிக்கையின் நியாயப்பாடும், ஆண்களுக்கு சமமாக தம்மாலும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையும், அதனூடாக அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய பொருளாதார விடுதலையும் பெண்களின் கோரிக்கையை முன்தள்ளி நிற்கிறது.  ஆனால் காலம் காலமாக நமது சமூகத்தில் இருந்த நியாயப்பாடுகளும், நம்பிக்கைகளும் பொருளாதாரமும் அக்கோரிக்கையை மறுதலித்து நிற்கிறன.  இவ்வாறான இழுபறியைக் கையாள்வதற்கான வழிகளை மாற்று வழி கொண்டிருக்க வேண்டும்.

இன்னும் ஓர் உதாரணத்தைக் கூறப்போனால், ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில் இளையவர்களின் முயற்சிக்கு முதியவர்களிடம் இருந்து, முக்கியமாக அரசியல் தலைவர்களிடமிருந்து, பெரும்பாலும் எதிர்ப்பும் நம்பிக்கையீனமும் இருந்தது. ஆனால் இரு தரப்பினருக்கும் தமக்கேயுரிய நியாயங்களும் நம்பிக்கைகளும் இருந்தன.  இந்த இரு தரப்பினரையும் ஒத்திசைவுக்கு உட்படுத்தக்கூடிய சமூக கட்டமைப்போ அதற்கான கொள்திறனோ (capacity) எம்மிடம் இருக்கவில்லை.  அப்படி ஒன்று இல்லாமல் போனதன் விளைவை நாம் இன்றும் அனுபவிக்கிறோம்.  அதிலிருந்தே ஆயுதப்போராட்டத்தின் தோல்வி என்பது எமது விடுதலைப்போராட்டத்தின் தோல்வி என்பதாக தேர்தல் அரசியல்வாதிள் கருதும் நிலைப்பாட்டுக்கு இட்டுச் செல்கிறது.  அதிலிருந்து கொண்டே தமது நம்பிக்கைகளின் அடிப்படையில் தமது வழி சரி என்றும் மாற்று வழி இல்லை என்றும் கூறும் நிலை ஏற்படுகிறது.

ஆகவே சமூகத்தின் ஒவ்வொரு கூறின் போக்குகளையும் விளங்கிக் கொண்டு அவர்கள் சார்ந்த நியாத்தன்மையையும் நம்பிக்கைகளையும் உள்வாங்கக்கூடிய கொள்திறன் கட்டமைத்தல் (capacity building) பொறிமுறைகளை மாற்று வழி கொண்டிருக்க வேண்டும்.  உதாரணமாக காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக போராடும் மக்கள் கூட்டத்தின் கொள்திறனை எவ்வாறு வளர்த்தெடுக்கலாம் அவர்களின் போராட்டத்தை மேலும் எவ்வாறு வலிமைப்படுத்தலாம் என்பதற்கான திட்டங்களை மாற்று வழி கொண்டிருக்க வேண்டும்.  அதேபோன்றே அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுதலை என்பவற்றுக்காக போராடும் மக்கள் கூட்டத்தின் கொள்திறன் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

சமூகமுன்னேற்றத்திற்கான முயற்சியில் ஒவ்வொரு கூறும் தான் சார்ந்த நலன்களை முன்தள்ளும் என்பது தவிர்க்க முடியாதது. அவ்வாறான முயற்சிகளில் ஒவ்வொரு கூறினதும் கொள்திறனை உயர்த்த வேண்டும். அவற்றுக்கிடையே ஒத்திசைவை ஏற்படுத்தக்கூடிய திட்டமிடல் இருக்க வேண்டும்.  இதன் மூலமே சமூகமுன்னேற்றத்துக்கு எதிரான சக்திகளை முறியடிக்க முடியும். 

ஒரு யுத்தத்தின் அழிவிலிருந்து மீண்டு எழுந்து தன்னுடைய நிரந்தர விடுதலைக்காக தொடர்ந்து போராடும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் அப்போராட்டத்துக்கான மாற்று வழித் திட்டமிடலில் சமூகமாற்றம் இன்றியமையாத ஒன்று.  முதல் இரண்டு பகுதிகளில் நாம் ஆராய்ந்த அரசியல் மற்றும் பொருளாதார மாற்று வழிகள் வெற்றி பெறவேண்டுமானால் இந்தப் பகுதியில் நாம் பார்த்த சமூக மாற்றம் அதற்கு அடிப்படைத் தேவையானது. அதாவது எமது சமூகத்தின் அகக்காரணிகளில் மாற்றம் இல்லாமல் புறக்காரணிகளில் மாற்றம் ஏற்பட முடியாது.


நிமிர்வின் பார்வை
நிமிர்வு மார்கழி 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.