புஸ்வானமாகும் புதிய அரசியலமைப்பு
புதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படுமென  2015  இல் பதவியேற்ற நல்லாட்சி அரசால் உறுதிமொழி வழங்கப்பட்டது.

ஒரு சரியான அரசியல் அமைப்பு இன்றி ஒரு நாட்டினை குழப்பமில்லாமல் ஆட்சி செய்ய முடியாது. அந்த வகையில் இலங்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மை கருத்தியலை விதைக்கும் அரசியலமைப்பு என்றுமே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. தமிழ் மக்களுக்கும் இறைமை சமமாக பகிரப்பட வேண்டும்.

ஆனால், புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் சாத்தியம் இன்று இல்லாமல் போயுள்ளது. புதிய அரசியலமைப்பு வந்தால் தமிழருக்கு ஏதோ தனிநாடு கிடைத்துவிடும் என்கிற ரீதியிலான கடும் இனவாதக் கருத்துக்கள் சிங்கள இனவாதக் கட்சிகளினால் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன.

வழமையாக சிங்கள அரசாங்கங்களில் ஒரு கட்சி தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வைக் கொண்டுவருவேன் எனக் கிளம்ப, இன்னொரு கட்சி வந்து தடுக்கிற நிலையே இருக்கிறது. அந்த விடயத்தில் சிங்கள தலைவர்கள் எல்லோருமே இணக்கமாக செயற்பட்டிருக்கிறார்கள். எதிர்ப்பதிலும் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது.

சந்திரிக்கா கொண்டு வந்த தீர்வுத்திட்டத்தை ரணில் தரப்பு கொளுத்தியது. இன்று ரணில் தரப்பு கொண்டு வரும் தீர்வுத் திட்டத்தை மஹிந்த தரப்பு கடுமையாக எதிர்க்கிறது. இது தமிழ் மக்களுக்கு சமஷ்டியை பெற்றுக் கொடுக்கும் முயற்சி என மஹிந்த ராஜபக்ச கடுமையாகவே சாடியிருக்கிறார்.  ஆனால் சர்வதேசத்தின் நெருக்கடி காரணமாக புதிய அரசியல் அமைப்பு வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஓர் ஆட்சிமாற்றக் குழப்பத்தை ஏற்படுத்தி புதிய அரசியல் அமைப்பு மீதான கவனத்தை சாதுரியமாக திசை திருப்பி விட்டார்கள்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளதால், புதிய அரசியலமைப்பு இந்த ஆட்சியில் வராது என்றும் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகரான சிரால் லக்திலக்க  அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இதனூடாக சிங்கள அரசியல்வாதிகள் நல்லாட்சி அரசாங்கம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி சர்வதேசத்தையும் தமிழ் தலைமைகளையும் மீண்டும் ஏமாற்றியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை தருவோம் என கூறிய சிங்கள தலைவர்களை நம்பி ஏமாந்தது தமிழ் தலைமைகளின் வரலாறாக உள்ளது. இருக்கிற இடைவெளியில் உண்மை நிலையை உணர்ந்து தமிழ் மக்களுக்கு என்னென்ன செய்யலாம், அடிப்படை பிரச்சினைகளில் இருந்து அரசியல் பிரச்சினைகள் வரை எவ்வாறு தீர்க்கலாம் என தமிழ்த் தலைமைகள் ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோன நிலையில் எதிர்க்கட்சியில் மஹிந்த அமர்ந்திருக்கும் நிலையில் புதிய அரசியலமைப்பை சிந்தித்தும் பார்க்க முடியாது. 

மேலும் வரும் தீபாவளிக்குள் தீர்வு, தைப்பொங்கலுக்குள் தீர்வு என்று சொல்லி தமிழ் மக்களின் காதுகளில் பூச்சுற்ற இனியும்  முடியாது.

நிமிர்வு மார்கழி 2018 இதழ்

 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.