இயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்




இன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முயற்சிகளுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகின்றார்.  இயற்கை விவசாயம் தொடர்பிலான பல்வேறு தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். யார் கேட்டாலும் ஆர்வத்துடன் அந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். மக்களிடம் இயற்கை விவசாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றார்.  இங்குள்ள இயற்கை ஆர்வலர்களுக்கு நன்றாக தெரிந்த பெயர் தான் கிரிசன்.

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த பாரம்பரியமாக விவசாயத் தொழிலை செய்து மகேஸ்வரநாதன்-தர்மவதனா ஆகியோரின் மகனான இவருக்கு 2 சகோதரிகள் ஒருவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விவசாயப்பட்டக் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர். கிரிசனுக்கு  சிறுவயதில் இருந்தே விவசாயத்தில் அதிக ஈடுபாடு உண்டு. தந்தையாருக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார். க.பொ. த உயர்தரக்கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் 2011 ஆம் ஆண்டு மருதனார்மடத்தில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனத்தில் விவசாயக் கல்வியை பயின்றுள்ளார்.

சமகாலத்தில் வட மாகாண முறைசாரா கல்விப்பிரிவினால் நடத்தப்பட்ட விவசாய விரிவாக்கம் உணவுத்தொழில்நுட்பம் எனும் கற்கைநெறியையும் பூர்த்தி செய்திருக்கிறார். முறைசாராக் கல்விப்பிரிவின் கற்கைநெறி முடிவில் 10.01.2012 இல் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. கண்காட்சியில் எமது மக்களுக்கு இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி விசங்களால்  ஏற்படும் பாதிப்பை உணர்த்தும் நோக்கோடு 16 வகையான இயற்கை பூச்சி விரட்டி, இயற்கை உரங்களை காட்சிப்படுத்தி விழிப்புணர்வு செய்திருக்கிறார். இவரின் விழிப்புணர்வு முயற்சி பெரிதும் பாராட்டப்பட்டதோடு கண்காட்சியில் முதல் பரிசும் இவருக்கு கிடைத்தது. 2015 ஆம் ஆண்டு சுயதொழில் முயற்சிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட 180 மணித்தியால இளைஞர் தலைமைத்துவ பயிற்சியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் யாழ்.பல்கலைகழகம், UNDP நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய சமூக மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தும் பயிற்சி நெறி இது. கற்கை நெறியின் பிற்பாடு கால்நடை வளர்ப்பையும் விவசாயத்தையும் ஒருங்கிணைத்து இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் இலங்கை வங்கி வேலணைக்கிளையில் 2 இலச்சம் ரூபாய் கடன் பெற்று கறவைப்பசுக்களை வாங்கி இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

கால்நடை வளர்ப்பை ஆரம்பிக்கும் போது யாழ்ப்பாண வணிகர் கழகம்  கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் படி யாழ்.மாவட்ட கால்நடை திணைக்களத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையை நன்றியுடன் நினைவு கூருகின்றார்.


அவருடன் பேசியதில் இருந்து, 2016 ஆம் ஆண்டை இலங்கை அரசாங்கம் நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தி ஆண்டாக அறிவித்தது.நாட்டின் ஜனாதிபதி 2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 20 ஆம் திகதி மகாபோதி விகாரைக்கு அண்மையில் நடைபெற்ற புத்தரிசி விழாவில் நாட்டில் உள்ள விவசாயிகள் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்ய  முன்வர வேண்டும் என அழைப்புவிட்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வணிக பீடத்தின் வணிக முயற்சிகளுக்கான உயிரூட்டல்  ஏற்பாட்டில் 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற கண்காட்சியில்  இயற்கை பூச்சி விரட்டி , மண்புழு, இயற்கை உரங்களை காட்சிப்படுத்தி இயற்கை வழி விவசாயத்தின் அவசியம் பற்றி விழிப்புணர்வு செய்தேன். 10 க்கு மேற்பட்ட ஊடகங்கள் எனது விழிப்புணர்வு முயற்சியை  செய்தியாக பிரசுரித்தன. எமது நாட்டுக்கு 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது. ஆனாலும் நாம் இன்னும் அடிமைத்தனத்தில் தான் வாழுகின்றோம். எமக்குத் தேவையான உணவுகளை நாம் உற்பத்தி செய்து கொள்ளமுடியாத ஒரு நிலைமையில் தான் நாம் இருக்கின்றோம். தற்சார்பு பொருளாதார நிலையை இழந்துவிட்டோம். எமது விவசாயத்துக்கு பயன்படுத்தும் இரசாயனங்கள், கிருமிநாசினிகள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றோம். இதனைப் பயன்படுத்துவதன் மூலம் வருகின்ற நோய்களுக்கான மருந்துகளையும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றோம்.  இப்படியான செய்கைகள் மூலமாகவே எமது நாட்டை பலதேசியக் கொம்பனிகளும், வல்லரசுகளும் அடிமைப்படுத்துகின்றனர்.

பாரம்பரிய நெல் இனங்கள் பாரம்பரிய விவசாய முறைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளன. முன்னைய காலங்களில் கால்நடை வளர்ப்பினையும் ஒருங்கிணைத்து விவசாயம் செய்யப்பட்டது. இரசாயன ஆதிக்கம் கொண்டுவரப்பட்டதன் பிற்பாடு எமது நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. எனவே நான் விவசாயிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இயற்கை விவசாயத்தினையும் அதன் நன்மையினையும் ஒவ்வொரு விவசாயிகளும் அறிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். இங்கு படித்தவர்கள் பெரும்பாலும் விவசாயம் செய்ய விரும்புவதில்லை. அதேநேரம் அது ஒரு கௌரவ குறைவான தொழிலாக பார்க்கப்படுகின்றது. எனவே நான் இளைஞர்கள் மத்தியில் இது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், இத் தொழிலிலும் நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதனை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் நம்பிக்கையோடு இயற்கை வழி விவசாயம் செய்கிறேன்.

யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு என நாட்டின் பல பாகங்களில் நடைபெற்ற 30 க்கு மேற்பட்ட கண்காட்சிகளில் பங்குபற்றி இயற்கை வழி விவசாய விழிப்புணர்வு செய்துள்ளேன் . முகநூல் மூலமும், பாடசாலை மாணவர்களிடமும் விழிப்புணர்வுகளை செய்கிறேன். ஆரம்பத்தில் பால் உற்பத்திகளை  யாழ்க்கோ நிறுவனத்துக்கும் மரக்கறிகளை திருநெல்வேலி சந்தையிலும் சந்தைப்படுத்தி வந்தேன். 2017 ஆம் ஆண்டு ஆனி மாதம் யாழ். மணிக்கூட்டு கோபுர வீதியில் அல்லைவிவசாயி இயற்கை விவசாய விற்பனை நிலையம் என்ற பெயரில் விழிப்புணர்வு மற்றும் விற்பனை நிலையத்தை ஆரம்பித்தேன். 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எனது சிறிய வடிரக வாகனத்தின் மூலம் நடமாடும் இயற்கை விவசாய விற்பனையை ஆரம்பித்தேன். பொருட்கள் மிகவும் குறைவாக இருப்பதால் விற்பனை முயற்சியில் சீரான தன்மையுடன் மேற்கொள்ள முடியவில்லை. இயற்கை வழி இயக்கத்தின் இயற்கை அங்காடி, களப்பயணங்களில் சேர்ந்து பயணிக்கிறேன். வீடுகளில் குரோட்டன், ரோசாக்கள் போன்ற அழகுச்செடிகளை அதிகளவு வைப்பதை விட மரக்கறி, கீரை வகைகளை பயிரிட்டு நஞ்சற்ற மரக்கறிகளை உற்பத்தி செய்ய முடியும்.

மரக்கறிகளைத் தெரிவு செய்யும்போது மிகவும் வாளிப்பான - பளபளப்பான - பூச்சித்தாக்கங்கள் அற்ற மரக்கறிகளையே தெரிவு செய்கின்றோம். அவை எப்படி இவ்வாறு காட்சி தருகின்றன என்று நாம் சிறிதும் சிந்திப்பதில்லை.  இடைவிடாத கிருமிநாசினிப்பாவனையும் மிதமிஞ்சிய இரசாயன உரப்பாவனையும் காரணம்  என்பதனையும் அவற்றின் ஊடாகவே நஞ்சை உண்ணுகிறோம் என்பதையும்  பலர் உணருவதில்லை. விவசாயிகளை நஞ்சற்ற உணவு உற்பத்தி செய்யத் தூண்டுவது நுகர்வோரின் கைகளிலேயே தங்கியுள்ளது. நுகர்வோர்  சந்தையில் மரக்கறி வாங்கும்போது வடிவான - பளபளப்பான - கவர்ச்சியான மரக்கறிகளைத் தெரிவுசெய்வதை விடுத்து வடிவு குறைந்த அளவில் சிறிய நஞ்சற்ற மரக்கறிகளைத்  தெரிவு செய்தால் அதற்கான கிராக்கி அதிகரித்து அதை உற்பத்தி செய்ய விவசாயிகளைத் தூண்டும். ஆகையால் நுகர்வோர் சந்தையில் உணவுப்பொருட்களை வாங்கும்போது அதில் எவ்வளவு நஞ்சு கலந்திருக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு இரசாயன விவசாயிகளும்  சமூகத்தும் நாட்டுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புக்களை உணர்ந்து இயற்கை வழி விவசாயத்துக்கு மாற முன்வரவேண்டும். இவை நடக்காது போனால் இயற்கை விவசாயத்தை பெரு வணிகங்கள் தங்கள் கைகளில் எடுத்து பலதேசிய வியாபாரமாக மாற்றும்.

நாம் அனைவரும் பூமித்தாய் எமக்களித்த இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி நிலைபேறான விவசாயத்தை மேற்கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்.

எனது இயற்கை வழி விவசாய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் என்றும் நன்றிகள் உரித்தாகுக என கூறி முடித்தார்.

இளைஞர்கள் இயற்கை வழி விவசாயத்துக்கு வருவதனை நம் சமூகம் ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் நாம் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு காண்போம். இரசாயனங்களால் உருவாகும் நோய்களற்ற ஆரோக்கியமான ஒரு எதிர்கால சந்ததியை உருவாக்குவோம்.

                                                                                 0778516540

நிமிர்வு மார்கழி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.