பழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்




“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் மாணிக்கம் நந்தகுமார். எந்த தடை வந்தாலும் அதனை எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். தன்னைப்போல் மற்றவர்களையும் வளர்த்துவிட வேண்டும் என்கிற சமூக அக்கறையும் அவருக்கு இருக்கிறது. தனது கிராமத்துக்கும் தன் தேசத்துக்கும் தான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று இரவுபகல் பாராமல் விடா முயற்சியுடன் உழைத்து வருகிறார்.

இவரது நித்தி பழமர, பூக்கன்றுகள் விற்பனை நிலையம் யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு வீரபத்திரர் கோவிலடியில் அமைத்திருக்கிறது இருபாலை சந்தியில் இருந்து பழம் வீதியால் சென்றால் வீரபத்திரர் கோவிலடி தாண்டி சிறிது தூரத்தில் இந்நிலையம் அமைந்துள்ளது.  நந்தகுமாருடன் உரையாடியதிலிருந்து.


நாங்கள் பாரம்பரியமாக கோப்பாய் பிரதேசத்தில் 90 பரப்புவயல்களுக்கு மேல் செய்து வந்தோம். அதுவும் விதை நெல் உற்பத்திக்காக தான் செய்து வந்தோம். பருவமழையை நம்பி நாம் நெல் செய்யவில்லை. பருவத்தில் மழை இல்லாவிட்டால் கூட முழு வயல்களுக்கும் தூவல் நீர்ப்பாசனம் செய்துவைத்திருந்தபடியால் தண்ணீருக்கு பிரச்சினையில்லை.  1990 ஆம் ஆண்டில் இருந்து நெல் உற்பத்தி சிறந்த முறையில் இருந்தது. வயல் காணிகளை குத்தகைக்கு பெற்றே நெல் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வந்தோம். அந்த நேரத்தில் காணி உரிமையாளர் 30 பரப்பு காணியை தன் கைக்கு எடுத்துவிட்டார். அந்த நேரத்தில் நாங்கள் ஒப்பந்தம் செய்த அளவுக்கு நெல்லை கமக்காரர் அமைப்புக்களுக்கு வழங்க முடியவில்லை. இதனால் பெரும் நெருக்கடியை சந்தித்தோம். 2006 ஆம் ஆண்டு விதைநெல் உற்பத்தியை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாதளவு நெருக்கடி ஏற்பட்டது.   2012 ஆம் ஆண்டுவரை மீதமிருந்த நெல் வயலில் விதைநெல் உற்பத்தியையும் மரக்கறி உற்பத்தியையும் மேற்கொண்டேன். ஆனாலும் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை.



அந்த நேரத்தில் தான் வேறு ஏதாவது செய்து வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.   அப்போது ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியரான யோகநாதன் அவர்கள் “நெருக்கடிகளின் போது சோர்ந்து போக கூடாது. மிச்சமிருக்கிற வயலில் விதைநெல் உற்பத்தியை செய்து கொண்டு மரக்கன்றுகள், பூமரங்கள் விற்கின்ற ஒரு நாற்றங்கால் விற்பனை நிலையத்தை ஆரம்பி.” எனக் கூறி பலவகைகளிலும் உதவி ஒத்துழைப்பாக இருந்தார். அன்று அவர் கொடுத்த ஊக்கம் தான் இன்று மரக்கன்றுகள் உற்பத்தி நிலையம் பெருவிருட்சமாக நிற்பதற்கு காரணமாகும்.


2012 ஆம் ஆண்டில் தான் மரக்கன்றுகள், பூமரங்கள் உற்பத்தியினை சிறியளவில் ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் மாமரக் கன்றுகளை எனது காணியில் நாட்டினேன். தற்போது அவை தாய்மரமாகி விவசாய திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த மரங்களில் இருந்து ஒட்டு மாங்கன்றுகளுக்கு தேவையான துண்டங்களை பெற்று எனது ஒட்டுமாங்கன்று உற்பத்தியை பெருமளவில் மேற்கொண்டு வருகின்றேன்.



ஒரு காலத்தில் கறுத்தக் கொழும்பானுக்கு பெயர் பெற்ற யாழ்ப்பாணத்தில் இன்று அந்த இனமே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கறுத்தக்கொழும்பான் என்றால் என்ன என்று வருங்கால சந்ததிக்கு தெரியாமல் போகும் நிலை உள்ளது.  எங்களது பாரம்பரியமா இனமான கறுத்தக்கொழும்பானை வீட்டில் குறைந்தது ஒரு மரமாவது நாட்டுங்கள் எனக் கூறி கன்றுகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றேன்.


தற்போது அரிதாகவுள்ள சூரியகாந்தி தென்னை மரமும் எமது நிலையத்தில் உள்ளன. தென்னையை பொறுத்தளவில் எமது பாரம்பரிய இனங்கள் தான் வருடக்கணக்காக இருந்து தொடர்ந்து காய்க்கும் தன்மை கொண்டவை. எமது வறட்சி காலநிலையையும் தாங்கி வளரும் தன்மை கொண்டவை.   சாதாரண தென்னை உற்பத்தியாளர்களில் இருந்து ஏக்கர் கணக்கில் தென்னையை நடுகை செய்பவர்கள் வரை எல்லோருக்கும் தென்னை நடுகை தொடர்பிலான பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றோம்.


தற்போது இயற்கைஉரங்கள் (compost organic fertilizer) செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றேன். அதற்கு அரசாங்க தரப்பில் இருந்தும் மானிய உதவிகளை வழங்கியுள்ளார்கள். விவசாய திணைக்களங்களில் இருந்தும் பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகின்றார்கள். எனது நிலையத்தில் இயற்கை உரம் தயாரிப்பதற்கான கட்டிடம் ஒன்றையும் நிறுவியுள்ளேன். அதில் இயற்கை உரங்கள் தயாரிக்கும் இயந்திரத் தொகுதி ஒன்றையும் நிறுவ உள்ளேன். அதிலிருந்து எதிர்வரும் மாதம் முதல் இயற்கை உரங்களை தயாரித்து மரங்கள், பூங்கன்றுகள் வளர்ப்போருக்கு  விநியோகிப்பது தான் எனது இலக்கு. செயற்கை உரங்களை இயன்றளவு தவிர்த்து இயற்கை உரங்கள், இயற்கை உள்ளீடுகளை பயன்படுத்துமாறும் கூறி எனது வாடிக்கையாளர்களை ஊக்குவித்து வருகின்றேன்.



ஆரம்பத்தில் விவசாயக் கண்காட்சிக்கு போகும் போது நான்கைந்து செவ்வரத்தம் பூக்கன்றுகளும், ஐந்தாறு தென்னம் பிள்ளைகளையும் கொண்டு போனேன். அங்கு என்னை பார்த்து சிரித்து கேலி பண்ணியவர்களே அதிகம். ஆனால் இன்று ஏராளமான மரக் கன்றுகளுடன் கண்காட்சிக்கு செல்கின்றேன். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் என்னிடம் மரக்கன்றுகளை வாங்கியவர்கள் இப்போது வந்து அது நன்றாக காய்க்கிறது என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் நம்பிக்கையான வாடிக்கையாளர்களும் தற்போது பெருகிவிட்டார்கள்.   ஒருவர் ஒரு மரத்தை அழித்தால் அவர் பத்து மரங்களை நாட்டி வளர்க்க வேண்டும் என்கிற கொள்கையை சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்டாவது நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

எமது மண்ணின் மரங்கள் ஒவ்வொன்றையும் இங்கு நாட்டி அதன் விஞ்ஞானப் பெயர்களுடன் பெயர்ப்பலகைகளையும் வைத்து மற்றவர்களையும் குறித்த மரங்களை நாட்டுமாறு கூறிவிழிப்புணர்வூட்ட வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசையாகும். எமது நிலையத்தில் மூலிகைத் தாவரங்களும் உள்ளன. செவ்வரத்தை பூங்கன்றில் மாத்திரம் 70 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.


எந்த மரக்கன்றை வாங்குபவர்களுக்கும்  நடுவதில் தொடங்கி நோய்த்தாக்கம் ஏற்பட்டால் என்ன செய்வது வரை எப்போது நேரிலோ தொலைபேசியில் கேட்டாலும் ஆலோசனை வழங்கி வருகின்றோம்.

வருடா வருடம் யாழ்ப்பல்கலைக்கழக விவசாயபீடத்திலிருந்து இறுதியாண்டு மாணவர்கள் விவசாயபயிற்சி, ஆராய்ச்சிக்காக எமது உற்பத்தி நிலையத்துக்கு வருவார்கள். தொடர்ந்து நாட்கணக்கில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு ஒரு சிறந்தபயிற்சிக் களமாகவும் எமது நிலையம் விளங்குகின்றது. அவர்களுக்கு எங்களாலான முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம். 

வீட்டுத்தோட்ட செய்கையை ஊக்குவிக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்டி அதனை ஊக்குவிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றார்கள். என்னுடைய இந்த முயற்சிக்கு அவர்களும் பெரும் உறுதுணையாக இருந்து வருகின்றார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. மரமொன்று புதிதாக பூத்துவிட்டாலே பிள்ளைகள் தங்கள் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி மகிழ்வார்கள். எனது அப்பா அன்று உழுத கலப்பையில் இருந்து மாட்டு வண்டி வரை எல்லாவற்றையும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதனை அடுத்த ஆண்டில் இருந்து எமது நிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்துவேன்.

தோல்விதான் வெற்றியின் முதல்படி என்பார்கள். அன்று நெல் விவசாயத்தில் சந்தித்த நெருக்கடிகள் தான் இன்று இந்த நிலைக்கு என்னை உயர்த்தியுள்ளது. எப்படியாவது சாதிக்க வேண்டும். நன்றாக உழைக்க வேண்டும். முன்னேற வேண்டும் என்கிற வெறிதான் எங்களை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டுள்ளது என்றார்.

                                                                           தொடர்புக்கு- 0779181484
துருவன்
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்

1 comment:

  1. நல்ல முயற்சி. மனத்திருப்தி, வந்து பார்க்க ஆவல். வளர்க உங்கள் பண்ணை.

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.