பேராசிரியர் சிறிஸ்கந்தராஜாவின் அனுபவ பகிர்வு - பகுதி 02




அன்றாடம் சாப்பிடுகின்ற உணவில் நாம் அக்கறை கொள்வதன் மூலம் இயற்கை வழியை நோக்கிய அந்த கருதுகோள் நிலைத்து நிற்கும். இந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு நகரமயமாக்ல் பற்றியோ திடக் கழிவைக் கையாள்வது பற்றியோ அல்லது குடிநீரைப் பற்றியோ அல்லது சமூக ஏற்றத் தாழ்வுகள் பற்றியோ விடயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் அடிப்படையாக தேவைப்படுவது ஒரு குடிமை உரையாடல்வெளி (civic space) ஆகும். குடிமை உரையாடல்வெளி பற்றிய கருத்து இன்று இவ்வளவு மேம்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் கூட புதிய தலைப்பு தான்.


நானும் என் நண்பர்களும் சேர்ந்து சில நூல்கள் வெளியிட்டோம்.  அதில் ஒன்று "இயற்கை பேணலும் ஜனநாயகமும்" (sustainability and democracy). அதிலிருந்து சில விடயங்களை சொல்லலாம். வளப்பேணல் (sustainability என்பது) ஒரு கூட்டல் கழித்தல் கணக்கல்ல.  வாழ்க்கைமுறை சார்ந்தது. மக்கள் மனநிலை சார்ந்தது. ஆகவே ஒரு இழுபறி பிணக்கை உள்ளடக்கியது. நீங்கள் நல்லது என்று சொல்வதை நான் நல்லதில்லை என்று சொல்கிறேன் என்றால் எங்களுக்கிடையில் பிணக்கு வருகின்றது. உதாரணமாக காட்டு விலங்குகள் காப்பாற்றப்பட வேண்டுமா இல்லையாஎன்பதில் இரண்டு மூன்று கருத்துநிலைகள் இருக்கும். அது sustainability இன் அடிப்படையான விடயம்.


இந்த பூமிப்பந்தில் மனிதனுக்குள்ள உரிமை விலங்குகளுக்கும் உண்டா இல்லையாயானைகள் வாழ்கின்ற இடத்தில் நாங்கள் விவசாயம் செய்ய தொடங்கும் போது அங்கே மோதல் வருகின்றது. யானை காலம் காலமாக வாழ்ந்து வருகிற இயற்கை சூழலான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பகுதியை வெட்டி குறிப்பாக தென்னிலங்கையில் சேனைப் பயிரிடுகை (chena cultivation) என்று சொல்கிற விவசாயம் செய்கிறார்கள். இதனால் வாரம் ஒரு யானை இறக்கிறது என்கிற புள்ளிவிபரம் கூட இருக்கிறது. மனிதனால் அனாதைகளாக்கப்பட்ட  யானைகளை காட்சிப்பொருளாக சுற்றுலா கவர்ச்சிப் பொருளாக வைத்து   வியாபாரம் செய்கின்ற ஒரு நாடு உலகத்தில் இருக்கென்றால் அது இலங்கை தான். பின்னவெல யானைகள் சரணாலயம் தான் அது. யானைகள் ஏன் அனாதைகளாக்கப்பட்டு உள்ளன?  என்பது தொடர்பில் சம்பந்தப் பட்டவர்கள் யோசித்துப் பார்க்கிறார்களா?  யானைகள் காலம் காலமாக வாழ்ந்த காடுகளை அழித்து அதற்குள் குடியேற்றங்களையும்விவசாயங்களையும் செய்தால் யானை தன்னுடைய பழைய வழித்தடத்தில் உள்ளவைகளை அழிக்கத் தானே பார்க்கும்.


எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்குவதனை தான் ஜனநாயகம் என்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட முடிவுகள் பெரும்பாலும் தீர்க்கமான முடிவுகளாகவும்எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகளாகவும் நிலையான முடிவுகளாகவும் இருக்கும். அந்த முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் இயற்கையை பேணுவது சுலபமாக இருக்கும். ஜனநாயகம் பற்றாக்குறையாக உள்ள நாடுகளில் கட்டுப்பாடுகள் தான் கூடுதலாக இருக்கும். கட்டுப்பாடுகள் மூலம் முழு மனித சமூகத்தையும் காப்பாற்றி விட முடியாது. கட்டுப்பாட்டை மீறுபவர்களும் இருப்பார்கள்.  ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு குடிமகன். ஒரு மருத்துவராக இருக்கலாம்ஆசிரியராக இருக்கலாம்விவசாயியாக இருக்கலாம். இவர்கள் மூவரும் ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள். ஒரு தேசத்தின் குடிமக்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு கருத்துநிலைகளிலும் இயங்குகின்ற வெவ்வேறு தொழில் சார்ந்த சிறப்புக் கருத்துக் கொண்டவர்களும் குடிமக்கள் தான். உலகத்தின் வளர்ச்சியில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வகிபாகம் இருக்கிறது.


தாயகத்தில் இயற்கை வழி இயக்கம் ஏன் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால்இந்த விடயத்தில் எல்லோரும் இயற்கையை நேசிக்கிறவர்களாக இருப்பதும் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் வந்திருப்பதும் தான் காரணம். ஆனால் உத்தியோகப்பூர்வமாக வரும் போது இந்த கோட்பாடுகளும் அவர்களுடைய தனித்தனி  வகிபாகமும் சிறைப்படுகின்றது. நாங்கள் ஒவ்வொருவரும் எந்த வேலை அல்லது அந்தஸ்தில் இருந்தாலும் இயற்கை வழியில் இணையும் போது இந்த தேசத்தின் குடிமக்களாக பேசுவோம். நாங்கள் இந்த நிலத்துக்கு உரியவர்கள். நஞ்சற்ற உணவை எங்கள் மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக சிந்திக்கும் போது எங்களுக்குள்ளும் நிலையான மாற்றம் வரும். இவை உரையாடலின் போது தான் வரும்.


எங்களுடைய இயற்கை வளத்தையும்மழை வீழ்ச்சியையும் வைத்துப் பார்த்தால் நவீன அரிசி வகைகள் தவறானவை. நாங்கள் இதனை தண்ணீர் வளம் உள்ள ஊரில் இருந்து கதைக்கின்றோம். எங்களின் தாத்தாக்களின் அப்பாக்களின் காலகட்டங்களில் நெல் விவசாயம் பொய்த்து வறுமை ஏற்பட்ட போதுவரகுகம்பு போன்ற சிறுதானியங்களை இட்டு சமைத்த கஞ்சி போன்ற உணவுகளையே உண்டு உயிர்வாழ்ந்துள்ளார்கள்.   நாங்கள் பாரம்பரியமாக விதைத்து வந்த சிவப்பரிசி பருமன் கூடியதுஆனால் விளைச்சல் குறைந்தது. வைக்கோலும் நிறைய இருந்தது. அரிசி அவியவும் நீண்ட நேரமாகும்அதே போல் கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறையும்ருசியும் கூட.  சமிபாடடையவும் நேரமாகும். 

மழைவீழ்ச்சி குறைந்த காலங்களில் நல்ல விளைச்சலை தருகின்ற பயிர்கள் தான் சிறுதானியங்கள். இன்று லேசாக சமிபாடடைய கூடிய உணவுகள் தான் மக்கள் மத்தியில் பெரும்பாலும் விரும்பப்படும் நிலை உள்ளது. வேகமாகவும் இலகுவாகவும் சமைக்கக்கூடிய மாதிரியும் இலகுவாக சாப்பிடக் கூடிய மாதிரியும் உடனே சமிபாடடையக் கூடிய உணவுகள் தான் இன்று அதிகம் விரும்பப்படுகின்றன. இவை எல்லாம் பசுமைப் புரட்சி என்கிற பெயரில்  மேற்குலகமும் விஞ்ஞானமும் தந்த விதைகளிலிருந்து வருபவை. அந்த விதைகளை வளர்க்கிறதுக்கு மேற்குலகம் தந்த உள்ளீடுகளால் வந்த தொல்லைகளை பற்றித் தான் பேசுகின்றோம். அன்றைய காலங்களில் வீடுகளை மேயும் போது பழைய கிடுகுகளை கொண்டு போய் வயலில் தாழ்க்கும் நடைமுறை இருந்தது. அப்போது பயிர்களுக்கு தேவையான இயற்கையான போசணைகள் கிடைத்தன. மழையில் நெல் விளைந்த பிறகு மிச்சமாக இருக்கின்ற ஈரங்களை வைத்து தான் சிறுதானியங்களை உற்பத்தி செய்தார்கள்.


டென்மார்க் நாட்டின் வடக்கு பிரதேச மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட சில சிறு தானியங்களை வளர்த்துள்ளனர்.   அவர்களுக்கு இவற்றை வளர்க்க கிடைக்கின்ற காலம் 3 மாதங்கள். இந்தக் காலப்பகுதியில் தான் மழையும் வெய்யிலும் இருக்கும். அல்லது பனியும்குளிருமே இருக்கும். எங்களிடம் குரக்கன்வரகு இருப்பதைப் போல அவர்களிடம் றை (rye) என்ற சிறுதானியமே இருந்தது. அதில் பாண் செய்வார்கள். பாணை சாப்பிடும் போது உடைந்த தானியம் கடிபடும். அதனை கோதுமை பாண் மாதிரி இலகுவாக கடித்து உண்ண முடியாது. சாதாரண கோதுமை வெள்ளை பாணில உள்ள மென்மைத் தன்மை இருக்கவே இருக்காது. 

இப்பொழுது டென்மார்க் மக்கள் தங்கள் பாரம்பரியத்தை உணர்ந்துள்ளார்கள். நான் 2000 ஆண்டில் அங்கு இருந்த போது அவர்கள் ஊடகங்களில் பேசியவற்றை அவதானித்தேன். அவர்கள்  எங்களது உடம்பையும்எங்களது உயிரையும் காப்பாற்றிய றையைச் சாப்பிடுவது குறைந்து தெற்கில் இருந்து வந்த கோதுமை மேலோங்கி விட்டது.  இது எமது சந்ததிக்கே ஆபத்தானது என்பதை அறிந்து ஊடகங்களில் விசனம் தெரிவித்தார்கள். அங்குள்ள இயற்கை விவசாயிகள் தங்களது பாரம்பரியங்களை தேடி றை போன்ற சிறுதானியங்களை அறிந்து அவற்றை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அவற்றுக்கு இன்று அவர்களின் சந்தையில் நல்ல கிராக்கியும் இருக்கின்றது.


ஒரு சாப்பாடு எவ்வளவு வேகமாக செரிமானமாகி குளுக்கோஸாக மாற்றப்படுகின்றதோ  அந்த வேகத்தினுடைய தன்மை நீரிழிவு நோயை கொண்டு வரும். அதனால் தான் சிறுதானியங்களும்வெள்ளை அரிசியை விட குத்தரிசியும் ஆரோக்கிய உணவுக்கு ஏற்றதாகின்றது. நீரிழிவு நோயுள்ளவர்கள் தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவது உகந்தது. பொதுவாக மெதுவாக சமிபாடடையும் உணவுகள் தான் எம் உடலுக்கு ஏற்றது.

நஞ்சற்ற உணவுகளை உண்போம். எம் உடல்நலம் காப்போம்.

நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.