வீட்டுக்கொரு தோட்டம்




எங்களின் முன்னோர்கள் மரக்கறிகளுக்காக அதிகம் செலவு செய்திருக்க மாட்டார்கள்.   வீடுகளில் உள்ள சிறிய இடங்களிலும், தோட்டங்களிலும் இயற்கையான முறையில் பயிரிட்ட மரக்கறிகளையும், சிறுதானியங்களையுமே அதிகம் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். தங்களிடம் மேலதிகமாக எஞ்சியவற்றை உறவினர்கள், அயலவர்களிடம் கொடுத்து அவர்களிடம் இருந்து தங்களிடம் இல்லாத மரக்கறிகளை பண்டமாற்று அடிப்படையில் வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆரோக்கியமான தலைமுறை வளரக் காரணமானது அந்த தற்சார்பு பொருளாதாரமே ஆகும். ஆனால் இன்று அதிகளவு பணத்தை செலவு செய்து அளவுக்கதிகமான செயற்கை உரங்களையும், கிருமிநாசினிகளையும் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட   மரக்கறிகளை   கண்ணை மூடிக்கொண்டு வாங்கி உட்கொள்கிறோம்.

 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள், ‘வீட்டின் தோட்டத்தில் ஒரு எலுமிச்சை மரம், ஒரு கொய்யாமரம், ஒரு தக்காளிச் செடி, ஒரு கத்தரிச் செடி, ஒரு வாழை மரம் என வளர்த்தால் எந்த மனிதனும் ஒருநாளும் பட்டினியோடு படுக்கமாட்டான்’ என்று சொல்வார். இதனை நாங்கள் நடைமுறை வாழ்வில் கொண்டுவந்தால் எமது சமூகம் ஆரோக்கியமாக வளரும்.


 வீட்டுத் தோட்டம் செய்வதில் முன்னுதாரணமாக விளங்குபவர்களின் அனுபவங்கள் நிச்சயம் எம் எல்லோருக்கும் பயன் கொடுக்கும். யாழ்ப்பாணம் - அச்சுவேலியை சேர்ந்த கமலேஸ்வரன் வெற்றிகரமான முறையில் வீட்டுத்தோட்டம் செய்து வருகிறார். அவருடன் பேசிய பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

கொடிய நச்சு மருந்துகளை மரக்கறிகளுக்கு விசிறி விட்டு அன்று மாலையே அதனை பிடுங்கி அடுத்தநாள் காலை சந்தைப்படுத்துகின்ற நிலை இன்று உள்ளது. இதனை நேரில் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். அப்போது தான் நாங்கள் இதற்கு என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான் இயற்கை வழி இயக்கத்தினரின் தொடர்பு கிடைத்தது. அதன் பின்னர் பல்வேறு விவசாய தோட்டங்கள், களப்பயணங்கள் என சென்றிருந்த போது ஏன் நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கும் நஞ்சூறிய மரக்கறிகளை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக செயற்பட வேண்டும் என எண்ணியதனால் தான் இந்த வீட்டு தோட்டத்தை உருவாக்கினேன். இப்பொழுதும் மிகவும் சந்தோசமாக உணர்கிறேன். என்னுடைய அப்பாவும் ஒரு தலைசிறந்த விவசாயி என்பதில் பெருமை அடைகிறேன். இந்த தோட்டத்தில் இதை நட்டால் எவ்வளவு விளைச்சல் வரும் என சொல்லி செய்வார்கள். இயற்கை முறையில் சேதன விவசாயத்தையே  செய்தார்கள். அவ்வளவு அனுபவம். உண்மையில் அவர்களை நாங்கள் முன்னோடி விவசாயி என்று தான் கூற வேண்டும்.


 வீட்டுத்தோட்டம் செய்தால் எங்கள் பிள்ளைகளாவது நஞ்சில்லாத மரக்கறிகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்கிற நோக்கம் தான் எனக்கு பிரதானமாக இருந்தது. மாற்றங்களை எங்களின் குடும்பங்களிலில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் இந்த சிறிய முயற்சியை ஆரம்பித்தேன்.

 வீட்டில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் போது அதிக வெப்பமான காலநிலையை சமாளிப்பது தான் பெரும் சவாலாக உள்ளது. அடுத்து பைகளில் வைத்து பயிர்செய்யும் பெருமளவு மண், சாண எரு ஆகியவற்றை பெற்று பயிர்ச் செய்கையை ஆரம்பித்தோம். கத்தரி, வெண்டி, சிறகவரை, மிளகாய், பாகல், புடோல், பயிற்றை ஆகிய அடிப்படை  மரக்கறிகளை பைகளில் நட்டு வளர்த்தோம். சிறு சிறு நோய்த்தாக்கங்களுக்கு ஆளாகி இருந்தாலும், அவை ஆரோக்கியமாகவே வளர்ந்தன. அந்த மரக்கறிகளை பிடுங்கி சமைத்த போது தான் அதன் உண்மையான சுவையை, வாசனையை  உணரக் கூடியதாக இருந்தது. ஒரு வீட்டில் காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் உள்ள இடம் இருக்குமாக இருந்தால் அதனை நாங்கள் வீட்டுத் தோட்டத்துக்கு தாராளமாக பயன்படுத்தலாம். வீட்டில் இருந்து வரும் கழிவுகளே வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைக்கு பசளையாக பயன்படுத்தலாம். எவ்வாறு நாம் எங்களின் பிள்ளைகளை வளர்க்கின்றோமோ அவ்வாறு கரிசனையுடன் மரக்கறிப் பயிர்களையும் கவனித்து வந்தால் அவை செழிப்பாக வளரும். பஞ்சகாவ்யா, இயற்கை பூச்சி விரட்டிகளையும் நோய்கள் தாக்க முதலே தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நோய்த்தாக்கமும் குறைவாக இருக்கும்.


 வீட்டில் உள்ள சிறார்களை இந்த வீட்டு தோட்ட செய்கையில் ஈடுபடுத்தும் போது தங்களுக்கு தேவையான மரக்கறிகளை தாங்களே உற்பத்தி செய்கிறோம் என்கிற மனநிறைவும்இ மகிழ்ச்சியும் ஏற்படும். மரக்கறிப் பயிர்களுக்கு இடையிலான வித்தியாசத்தை அறியவும் அவர்களுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்காகவும் இது அமையும். அவர்களின் தன்னம்பிக்கையையும்இ உளவுரணையும் மேம்படுத்தும் என்றார்.

 இவர் சிறிய அளவில் ஊர்க்கோழிப் பண்ணையினையும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றார். அதற்கு இயற்கையான உணவுகளையே கொடுத்தும் வருகின்றார்.வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்வதன் ஊடாக உணவு இறையாண்மை உறுதிசெய்யப்படுகின்றது. நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்யும் எண்ணம் நிறைவேறுகிறது. உணவு இறையாண்மை தொடர்பில் சூழலியல் எழுத்தாளரும், இயற்கை வேளாண் வல்லுநருமாகிய பாமயன் பின்வருமாறு கூறுகிறார்,  “தேசங்களின் இறையாண்மை பற்றிப் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். ஆனால் உணவு இறையாண்மை பற்றி, நாம் யாரும் கவலைப்படுவதில்லை. உணவு உறுதிப்பாடு (Food security) என்பது வேறு, உணவு இறையாண்மை (Food Sovereignty) என்பது வேறு. உணவு உறுதிப்பாட்டைப் பொறுத்த அளவில், ஏதாவது ஓர் உணவைப் பெறுவதற்கான உறுதிப்பாடு என்பதுடன் முடிந்துவிடுகிறது. இதற்கு வெளிநாட்டில் இருந்தும்கூட உணவை இறக்குமதி செய்து கொடுத்துவிட முடியும். ஆனால், உணவு இறையாண்மை என்பது உணவை விளைவிக்கும் நிலத்துக்கான உறுதிப்பாடு, அதற்கான நீருக்கான உறுதிப்பாடு, விதை போன்ற மரபை ஈனும் வளத்துக்கான உறுதிப்பாடு, அத்துடன் உணவுக் கொள்கைகளில் உழவர்களின் பங்கேற்புக்கான உறுதிப்பாடு ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடக் கூடாது.”

“என்ன உணவை நாம் உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நிலை இப்போது இல்லை. யாரோ சிலர் நமக்கான உணவை முடிவு செய்து அனுப்புகின்றனர். நம் ஊருக்கு அருகில் விளையும் ஊட்டம்மிக்க குரக்கனையும், தினை, சாமையையும் நாம் உண்பதைத் தடுக்கும் இந்த மறைமுகச் சூதாட்டத்தை என்னவென்பது? எனது நிலத்தில் எதை விளைவிக்க வேண்டும் என்பதையும் எந்த வகையான உணவை நான் உண்ண வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் ஆற்றல் ஒருவருக்கு இருக்குமேயானால், அதுதான் உணவு இறையாண்மை.”
       
                    "நஞ்சற்ற உணவே எமக்கு வேண்டும். அதனை நம்
                நிலத்தில் ஆக்கிடல் வேண்டும்" 
 
                                                                                                        தொடர்புக்கு- 0770258793       

தொகுப்பு-அமுதீஸ்
நிமிர்வு ஆவணி 2018 இதழ்


                                                                       

1 comment:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.