தமிழர்களின் காணிகளைப் பறிக்கும் இரட்டைச் சட்டங்கள்
மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு பற்றிய கருத்தமர்வு 29.08.2018 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அதில் பங்கேற்று  யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவரான குமாரவடிவேல் குருபரன்  வழங்கிய கருத்துரை வருமாறு:

இங்கு அடிப்படைப் பிரச்சனை அரச காணிகள் தொடர்பானது. தனியாரால் காணி உடமை கொள்ளப்பட முடியும் என்ற சித்தாந்தம் தெற்காசியாவிற்குள் காலனி ஆதிக்க சக்திகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுடைய ஆட்சிக்காலத்தில்  தனியார்கள் உடைமையாக கோரப்பட்ட காணிகள் தவிர்ந்த அனைத்துக்காணிகளையும் அரச காணிகள் என்று கருதுகின்ற போக்கு உருவாகியது. அதன் விளைவுதான் இந்த அரச காணி என்ற சித்தாந்தம். ஆரம்பத்திலே தனியாரிடம் காணி இருந்தால் அது தனியார் சொத்து (Private property).  அவை அல்லாதவை முடிக்குரிய காணிகள் என்று அழைக்கப்பட்டன. சமூகங்களால் பொதுவாக உடைமை கொள்ளப்படுகின்ற காணிகள் என்று இல்லாமல் போய் ஒன்று தனியாரின் காணி மற்றையது அரசின் காணி என்ற கருத்து உருவானது.

1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதிக்கு முன்பு இருந்தே இந்த அரச காணி அரச அதிகாரத்தை கைப்பற்றுபவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு போகிறது. இங்கு அரச அதிகாரம் என்பது பேரினத்துவரீதியாக தீர்மானிக்கப்படுகின்ற காரணத்தால் அரச காணி தொடர்பான பிரயோகம் ஓர் இனநாயகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருப்பதை நாங்கள் காணலாம்.

அரச காணி என்ற கருத்துருவாக்கம்; அரச காணி அரச அதிகாரத்தோடு மட்டும் தொடர்புடையது என்ற கருத்துருவாக்கம்; அரச அதிகாரம் மத்தியை மட்டும் குறிக்கும் என்ற கருத்துருவாக்கம் ஆகியவற்றால் சமூகங்கள் காணிகளை கூட்டு உடைமை கொள்ளலாம் என்ற கருத்திற்கு சட்டத்தில் இடமில்லாமல் போனது. அது அரசியலமைப்பு சட்டத்திற்குள் உள்வாங்கப்படாத ஒரு சிந்தனையாக மாறி போனது தான் இந்தப் பிரச்சனைக்குரிய மூலம். இனநாயகத்திற்கு உதாரணமாக இஸ்ரேலையும் இலங்கையையும் குறிப்பிடுவார்கள். இலங்கை அரசினர் இஸ்ரேல் அரசிடம் இருந்து எவ்வாறாக காணி அதிகாரங்களை தாங்கள் விரும்பியவாறு ஒரு இனநாயகத்தை கட்டியமைப்பதற்காக பாவிக்கலாம், உபகரணப்படுத்தலாம் என்பதனை படித்தார்கள் என்பதற்கான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான நிலைமையில் தான் பெரிய அபிவிருத்தி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. காலனியாதிக்கக் காலத்தில் ஆதிக்கவாதிகளால் கவனம் செலுத்தப்படாத விடயங்களில் குறிப்பாக விவசாயம் முக்கியமானது. விவசாயப் புரட்சி அல்லது மீளெழுச்சி இடம்பெற வேண்டும் என்பதற்காக டி.எஸ்.சேனநாயக்க காலத்திலிருந்து மாபெரும் அபிவிருத்தி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும், பெரிய அணைகள் கட்டப்பட வேண்டும், என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தக்கட்டத்தில் உருவானதுதான் மகாவலி அபிவிருத்தி திட்டம். ஒரு பக்கத்தில் நாங்கள் உலர்வலயத்தில் விவசாயத்தை மீளெழுச்சி செய்யப்போகின்றோம் என்று கூறிக் கொண்டு  அதே நேரம் தேர்தல் அரசியலோடும் இனநாயக அரசியலோடும்  பேரினவாத அரசியல் கலக்கின்ற போது உருவாகின்றது தான் இந்த நாட்டினுடைய அரச காணி கொள்கைத்திட்டம் என்பதனை கவனிக்க வேண்டும்.

1979 ஆம் ஆண்டு மகாவலி அதிகாரசபை உருவாக்கப்பட்ட காலப்பகுதியிலே சோசலிசத்தை ஜனநாயத்தின் ஊடாக கொண்டு செல்வோம் என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன தன்னுடைய வலதுசாரி அரசியலை முன்வைக்கிறார். அந்த வலதுசாரி அரசியலின் மிக முக்கியமான ஆரம்பப் படைப்புக்களில் ஒன்று தான் இந்த மகாவலி அதிகாரசபை.

இந்த அதிகாரசபையைப் பற்றி கதைக்க முதல் சாதாரண அரசகாணிகள் பற்றி கதைப்போம். அரச காணிகள் உரிமை மீட்பு சட்டத்தின் பிரிவு ஐந்தின் கீழ் பொறுப்பான அதிகாரி ஒருவர் குறிப்பிட்ட காணி அரச காணி என்று குறிப்பிட்டு ஒரு படிவத்தின் கீழும் ஒரு சத்தியக்கூற்றின் மூலமாகவும் தனது அறிவுக்கு எட்டிய வரையில் இது அரச காணி என்று சொல்லி ஒரு வழக்கை தாக்கல் செய்யலாம். வழக்கு தாக்கல் செய்ய முதல் அரச காணியில் அடாத்தாக குடியேறியவரை வெளியேறுமாறு அறிவுறுத்த வேண்டும்.  அதற்கு அவர் வெளியேறாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்பது சட்டம்.

சட்டத்தின் பிரகாரம் யாருக்கு எதிராக வழக்கு போடப்படுகிறதோ (பிரதிவாதி) அவர் வந்து சொல்லக்கூடிய ஒரே ஒரு விடயம் என்னவென்றால் தன்னிடம் அனுமதிப் பத்திரம் இருக்கிறது என்பதே. அவ்வாறு அனுமதிப்பத்திரம் இருக்கும் நிலையில் தன்னை வெளியேற்றச் சொல்லி தொடரப்பட்ட வழக்கு பிழை என்று சொல்ல வேண்டும். அதை தவிர வேறு எந்த விடயமும் கதைக்கக் கூடாது என்று சொல்லி சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றது. பிரிவு 9 சொல்லுகின்றது. அனுமதிப்பத்திரம் இருந்தால் காட்டுங்கோ: அது வலுவானது என்றால் காணி உங்களுக்கு: வலுவானது இல்லாவிட்டால் தூக்கி வீசவேண்டியதுதான்.

வழமையாக இந்தமாதிரியான வழக்குகள் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் தான் நடத்த வேண்டும். ஓர் அரசகாணி தொடர்பாக கரைத்துரைப்பற்று பிரதேச செயலகம் 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடர்ந்த வழக்கில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் முழு வரலாறையும் பேச விடுகின்றது. இவ்வழக்கு தொடர்பாக 10, 12 ஆவணங்களையும் கொண்டு வருகின்றார்கள். மீன்பிடி அதிகாரசபை ஆதாரம் கொடுக்கின்றது; பொலிஸ் ஆதாரம் கொடுக்கின்றது. எல்லாம் நடந்தும் ஒரு வருடத்தின் பின்னர் தான் தீர்ப்பு கொடுக்கப்படுகின்றது. ஜனவரி 2018 இல் தான் தீர்ப்பு வருகின்றது.  அரச காணி சட்டத்தின் கீழ் அல்லது அரச காணிகள் தொடர்பான வேறு எந்த சட்டத்தின் கீழும் வரக்கூடிய அனுமதிப்பத்திரத்தை பிரதிவாதி காட்டாதபடியால் அவர் அந்த காணியைவிட்டு வெளியேற வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் கூறுகின்றார்.

இதற்கு பிறகு உச்ச நீதிமன்றத்திற்கு அடிப்படை மீறல் தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அடிப்படை மனிதஉரிமை மீறல் வழக்கில் முதலாவது படி நீதிமன்றத்தை திருப்திபடுத்த வேண்டும். விசாரிக்கப்பட வேண்டிய வழக்கில் முகத்தோற்றம் அளவிலான விடயங்கள் இருக்கின்றன என்று நிரூபிக்க வேண்டும். ஆங்கிலத்தில் நாங்கள்  leave to proceed
 
என்று சொல்லுவோம். இந்த வழக்கு அந்தக்கட்டத்தை கூட தாண்டாமல் போனதால் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகின்றது. இதுவரைக்கும் அரசகாணி சட்டம் சரியாக வேலை செய்தது. நீதியரசர் இந்த வழக்கு இங்கு தொடர்ந்து நடத்த முடியாது நீங்கள் போட்டுவாங்கோ என்று சொன்ன பிறகு வவுனியாவில் மீளாய்வு வழக்கு நடக்கிறது. இதற்கிடையில் மகாவலி அதிகார சபையினுடைய சட்ட ஏற்பாடுகளுக்கு கீழே காணிக்கு அனுமதிப்பத்திரம் கொடுக்கப்படுகின்றது.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் அரச காணிகள் தொடர்பாக குறிப்பாக மகாவலி அதிகாரசபை தொடர்புபட்ட காணிகள் தொடர்பாக இரண்டு சமாந்திரமான சட்டங்கள் கொண்டுவரப்பட்டடுள்ளன. ஒன்று சாதாரண அரசகாணிகள் சட்டத்திற்கு கீழே நடக்கிற அலுவல்கள். அது கரைத்துரைப்பற்று பிரதேச செயலக காணி அதிகாரிகள் எடுத்துக்கொண்டது போன்ற நடவடிக்கை. வழமையாக நாட்டில் எந்த பகுதியாக இருந்தாலும் அமுலில் இருக்கக்கூடிய சட்டம் இது. அதுக்குள்ளாலே முழுமையாக போய் உயர்நீதிமன்றத்திற்கும் அடிப்படை மனிதஉரிமை மீறல் என்று போயும் சரிவராத போது மகாவலி அதிகாரசபை இலகுவாக ஒரு அனுமதிப் பத்திரத்தை போட்டு இந்தாருங்கள் நீங்கள் கேட்ட சட்டஅடிப்படை என்று கொடுக்கிறது. அந்த அனுமதிப்பத்திரம் சட்டபூர்வமானதா என்றால் சட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு பார்க்கும் போது சட்டபூர்வமானதுதான். சட்டங்களின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பதில் தமிழர்களுக்கு நம்பிக்கை இழப்பதற்கு ஏதுவான இன்னொரு உதாரணம் இது.

சாதாரண அரசகாணிகள் தொடர்பான நடைமுறைகள் மூலமாக அந்தக் காணியை எடுப்பதற்கு ஒருவருக்கு அருகதை இல்லை என முடிவு செய்யப்பட மகாவலி அதிகார சபை திடீரென்று வந்து அவருக்கு அனுமதிப் பத்திரத்தை கொடுத்து சட்டபூர்வமற்ற ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக ஆக்கி விடுகின்றது. இது பற்றி ஜனாதிபதி தனக்கு தெரியாது என்று சொல்லுவதும் இப்படி நடக்கிறதா ஆதாரங்களை கொண்டு வாருங்கள் என்று கேட்பது எல்லாம் சாதாரண தமிழில் சொல்வதாக இருந்தால் காதில பூச்சுத்திறதைவிட கேவலமான செயல். மகாவலி அதிகாரசபை மகாவலி அமைச்சிற்கு கீழ் வருகின்றது. யார் மகாவலி அமைச்சர்? மைத்திரிபால சிறிசேன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீண்டகாலமாக இந்த நாட்டினுடைய நீர்ப்பாசன அமைச்சராக இருந்தார். அவருடைய விசேடமே நீர்ப்பாசனம், விவசாயம், மகாவலி தான். மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் மகாவலி அதிகாரசபையின் சில சட்டங்கள் சாதாரண சட்டங்களைவிட உயர்வானவை. மகாவலி அதிகாரசபைக்கு கீழே வருகின்ற பிரதேசங்களில்  Shedule A யில் பார்த்தால் என்ன என்ன திணைக்களங்களின் வேலையை எல்லாம் இவர்கள் செய்யலாம் எனவும்,  Shedule B இல் இந்த இந்த சட்டங்கள் எல்லாம் மகாவலி அதிகார சபைக்கு கீழே வரக்கூடிய சட்டங்களாக வரையறுக்கப்பட்டு இருக்கின்றன. எங்கெல்லாம் மகாவலி பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றதோ அங்கெல்லாம் காணி உரிமை அனுமதிகளை வழங்கக்கூடிய சட்டம் உட்பட கிட்டத்தட்ட 20 சட்டங்கள் மகாவலி அதிகாரசபையின் கீழ் கொண்டு வரப்பட்டன. தமிழர் பிரச்சனை என்ற கோணத்தில் பார்க்காவிட்டாலும் வெறுமனே சட்டரீதியில் நோக்கினாலே இது மிகவும் பிரச்சனைக்குரிய சட்டமாக இருக்கின்றது.

இறுதியாக இந்த விடயத்தை மட்டும் சொல்லுகின்றேன். புதிய அரசியலமைப்பினூடாக அரசியல் தீர்வு வருகின்றது என்று சொல்கின்றார்கள். அதில் காணி தொடர்பாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பார்த்தால் அரச காணிகள் தொடர்பாக மத்திய காணி அமைச்சர் மாகாண காணி அமைச்சருடன் ‘இப்படி நான் காணி கொடுக்கப்போகின்றேன் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா’ என்று கலந்தாலோசனை செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது. பிரச்சனை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அவர்கள் காணி கொடுக்கலாம்.

அதற்கு மேலாலை பார்த்தால் land and land settlement  என்ற விடயத்தின் கீழை மாகாணங்களுக்கு இடையிலான நீர்பாசனங்களை போட்டு மகாவலியை குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் கீழ் என சொல்லப்டுகிறு. மகாவலியை தொட்டே பார்க்க முடியாத என்றபடியால் வேறு எந்த குடியேற்றத்திட்டத்தையோ வேறு எந்த அதிகார சபையையோ சொல்லாமல் காணி தொடர்பான பட்டியலில் மகாவலியை சிறப்பாக விலக்கி நிச்சயமாக நீங்கள் என்னதான் செய்தாலும் மகாவலிக்குள் கைவைக்க முடியாது என்கிறார்கள். எனது கேள்வி என்னவென்றால் இப்போது எழுதப்படுகின்ற அரசியலமைப்பில் மகாவலியை மத்தியிலிருந்து தூக்கி மாகாணசபைக்குள் உள்ளடக்குவதற்கு சாத்தியக்கூறுகள் அதைப்பற்றி வாயை திறப்பதற்கான சாத்தியக்கூறுகளாவது இருக்கிறதா என்றால் அது இல்லை.

இந்நிலையில் தீர்வு என்ன?  இதற்கான தீர்வை சாதாரணமான சட்ட வரைபுக்குள் பார்க்க முடியாது. சட்டத்திற்குள்ளே நின்று கொண்டே புரட்சிகரமாக யோசிக்காவிட்டால் சாத்தியம் இல்லை. உதாரணமாக இந்த விடயத்தில் நாங்கள் போய் வவுனியா நீதிமன்றத்திலோ உயர்நீதிமன்றத்திலோ வழக்கு தொடரும் போது மகாவலி அதிகாரசபை இந்த அனுமதிப்பத்திரத்தை கொடுக்குமாக இருந்தால் அது பொதுமக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. இது நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு பிழையானது என காட்டுகிறது. ஆகவே இந்த நீதிமன்றமே தவறானது என்கின்ற மாதிரி பேசவேண்டும்.

இவ்வாறு வாதாட தயாராக இருக்கக்கூடிய சட்டத்தரணிகள் குறைவு. வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் வழக்குகளையும் சட்டத்தையும் ஒரு சமூக மாற்றத்திற்கான இயக்கங்களாக ஒரு அரசியல் மாற்றத்திற்கான கருவிகளாக பார்க்கக் கூடிய சட்டத்தரணிகள் மேலும் பலர் வளர வேண்டும்.


தொகுப்பு- விக்னேஸ்வரி
நிமிர்வு செப்டம்பர் 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.