பனை வளமும் தமிழர்களின் பொருளாதாரமும் - பகுதி 02




ஆதிகாலத்தில் பனையின் பயனை உணர்ந்த மன்னர்களும் மக்களும் ஈகையின் இருப்பிடமான இது உயர்ந்து வளர்ந்து ஊர்களைக் காத்திடும் என்று நம்பினர். இப்பனைதனை கடவுளை மதிப்பதுபோல் மதித்து பேணிப்பாதுகாத்ததாக நாம் அறிகின்றோம்.

தமிழர் வாழ்வில் பனை

பனையின் உறுதித் தன்மையை கருத்திற்கொண்டு திருமணத்திற்குத் தெரிந்தெடுக்கும் தலைவன் பனையினை ஒத்தவனாகக் கருதப்பெற்றான். அவன் பனையைப் போல நீண்ட ஆயுளுடனும் உறுதியுடனும் பிறருக்கு இடையூறு செய்யாமல் வாழ வேண்டும் என்று பெரியோர் கூறுவர். அத்துடன் பிறருதவியின்றி தன் முயற்சியால் வாழ்வதோடு பிறரை பெருந்தன்மையாக உபசரிப்பவனை பனைக்கு நிகரானவன் எனக்கருதினர்.

எனவேதான் அன்று பனையின் ஓலையினை மணப்பெண்ணிற்கு தாலியாக்கிக் கழுத்தில் கட்டி என்றென்றும் தழைத்து வாழ்வாயாக என வாழ்த்தினர். தாலியே கணவன். கணவன் இல்லையேல் தாலியை அணியமாட்டாள். இக்காலத்தில் தாலியும் அதன் கொடியும் பொன்னால் செய்யப்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் தாலியில் பனை, சூலம், அம்மன் முதலிய குறிகள் இடப்படும் வழக்கம் தற்போதும் நிலவி வருவதை காணலாம்.

பனையின் தொன்மை

தேம்படு பனையின் திரள் பழத்தொரு விதை என பனம் பழத்தை ஒளவையார் வர்ணித்துள்ளார். கம்பராமாயணத்தின் பால காண்டப்பகுதியில் பனை உற்பத்தியின் பெருமை பற்றி பாடப்படுகிறது. அத்துடன் இராமருடைய கலியாண விருந்திற்கு வரும் வழியில் அரசர்களும் அரசிகளும் தாம் வைத்திருந்த வெள்ளிக் கிண்ணங்களில் மாலைப்பதநீர் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர் எனக் கூறப்பட்டுள்ளது.

வள்ளுவர் அறத்துப்பாலில் செய்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்திலும், பொருட்பாலில் குற்றங்கடிதல் அதிகாரத்திலும், காமத்துப்பாலில் புணர்ச்சி விரும்பல் என்னும் அதிகாரத்திலும் பனையை பண்பட்ட உள்ளத்திற்கு உவமானமாகக் கொண்டுள்ளார். சான்றோர்க்கும் பயிலன் 97வது செய்யுளில் பதநீர் இறக்கும் செயலைப் பாண்டிய மன்னர்கள் கும்மிப்பாட்டாகப் பாடிக்களித்துள்ளனர். திருமுறையாசிரியர் திருமூலர் பத்தாம் திருமுறையில் பனையின் பெருமையைப் பாடியுள்ளார். இத் திருக்குறள்களுக்கு கபிலர் கருத்துத் தெரிவிக்கையில் சிறிய நீர்த்துளியிலே பெரிய பனையின் பிரதி பிம்பம் அடக்குவதாக தோன்றுவதுபோல என்று கூறியுள்ளார்.


கந்தபுராணத்தில் கூட சூரன் பனைக்கொடியை தாங்கியே போர் செய்தான் எனக் கூறப்படுகிறது. சூரனைச் சிறப்பித்துக்கூறும் ஆன்றோர்கள் சூரன் பனைக்கொடியுடையோன் என்றழைக்கின்றனர். மேலும் பனைத்தொழிலின் வரலாற்றினை ஆராய்ந்த உயிரியல் சுவட்டு ஆய்வாளர்கள், மனித நாகரீகம் தோன்றிய கி.மு.10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பனைத்தொழில் புரிந்ததற்கான சான்றுகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

பனைமரத்தின் ஓலைகளில் “பிழா” என்று அழைக்கப்படும் ஒரு கலம் செய்யப்பட்டு அதில் கூழ், கள்ளு என்பனவற்றை சுத்தமாக அருந்துவதற்கு பயன்படுத்தினர். அத்தோடு சாப்பிடுவதற்கு ‘தட்டுவம்’ என்ற ஒன்றினை இளம் பனை ஓலையிலிருந்து செய்து பயன்படுத்தினர்.  கபிலர் என்னும் புலவர் தமது நற்றினை243 ஆம் பாடல் மூலமாக பிழா பற்றியும், தமிழர்கள் தமது உணவை எப்படி உண்டனர் எனவும் பாடியுள்ளார். ஆவூர்கூலங்கிழார் என்னும் புலவர் தட்டுவம் தூய்மைமிக்கது எனக்குறிப்பிட்டுள்ளார்.

18ஆம் நூற்றாண்டு வரை தமிழர்கள் வாழும் பல இடங்களில் பிழா, தட்டுவம் என்பன பாவனையிலிருந்தது. பின்னர் அது அருகி முற்றாக இல்லாமற் போனது. ஆயினும் தற்போது மேலைநாட்டவர்கள் இதில் கவனஞ்செலுத்தி மீளவும் பாவிக்கின்ற நிலை உள்ளது.

வட இலங்கையில் பனை எவ்வாறு வந்தது என்பதனை யாழ்ப்பாண மன்னர்களிலொருவரான செகராசசேகரின் சபைப்புலவர் வையாபுரிஐயர் தமது 12ஆம் 13ஆம் பாடல்களில் பாடியுள்ளார்.  இராவணன் இறந்தபின் முடிசூடிக் கொண்ட விபூஷனன் முன்னிலையில் கண் இல்லாத யாழ்பாடி தன் திறமையான யாழ் வாசிப்பிற்காக ஒரு மணற்றிடலினை பரிசாக பெற்றான். அதனை திருத்தி வேறு எவற்றுடனும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத கற்பகதருவான பனையினையும் ஏனைய தாவரங்களையும் நடுகை செய்தான் எனக் கூறுகிறது. இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் தமிழரசு இருந்தது எனவும் இக்காலம் கி.மு 101 ஆம் ஆண்டாக இருக்கும் எனவும் யாழ்ப்பாணம் என்ற பெயர் யாழ்பாடியின் தொடர்பாகவே ஏற்பட்டது என்பதையும் பனை வளத்துடனேயே யாழ்ப்பாணக் குடியேற்றம் நடைபெற்றுள்ளது என்பதையும் வரலாற்று ஆவணங்களூடாக அறியக்கூடியதாக உள்ளது.

பனைவளம் பற்றி ஆராயும் போது அதன் தொன்மை மற்றும் தமிழர்களுடன் பனை எவ்வாறு பின்னிப்பிணைந்திருந்தது என்று ஆய்வு செய்யும் போது பின்வரும் சான்றுகள் அதற்கு வலுச்சேர்க்கின்றன. காகிதம் இல்லாத காலத்தில் ஓலைச் சுவடியாக எழுதுவதற்கு பனை ஓலைகள் பயன்பட்டன; பெரும்பாலான சித்தவைத்திய முறைகள், இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம், வேதசாத்திரம், திருமுறைகள், காளிதாசனின் சாகுந்தலம், வள்ளுவரின் திருக்குறள், தமிழ்ச்சங்கம் தந்த தொல்காப்பியம் சகல இலக்கண இலக்கியங்கள் யாவும் இப்பனை ஓலையில் எழுதப்பட்டன. எழுதுவதற்கு பயன்பட்ட ஓலை “ஏடு” என சிறப்பித்துக் கூறப்பட்டது. இதனால் பனையின் மறுபெயர் ஏடகம் எனப்பட்டது.

பனையின் தொன்மை பற்றி மேலும் மேலும் கூறிக்கொண்டு போகலாம். கற்பகதருவான பனை தமிழர் வாழ்வில் எவ்வாறு பயன்பட்டுள்ளது என அறிந்தோம். அதுமட்டுமல்ல தமிழர்கள்  குடியிருப்பு வேலிகளை அடைப்பது முதற்கொண்டு பாவனைப்பொருட்கள் பலவற்றுக்கு பனையை பயன்படுத்தினர்.  வரண் நிலத்திற்கு பொருத்தமான பனையின் வளம் பற்றி ஆராயும் இவ்வேளையில் பனையின் பயன்பாடுகள் பற்றியும் நாம் ஆராய்வது முக்கியம்.

பனையின் பயன்கள்.

1.பனையின் பருவம்

பனம் விதையில் முளை தோன்றுவதும் அது முளைத்து முற்றி கிழங்காகவதும் நாளடைவில் நார்க்கிழங்காவதும் அந்நிலை கடந்து பீலிப்பருவம் அடைவதும் ஈற்றில் வடலியாகி வளர்ந்து முதிர்ந்து பனையாவது என ஒவ்வொன்றும் பனையின் பல பருவவளர்ச்சிப் படிகளாகும்.

வடலி என்பது ஆண் பனைக்கும் பெண்பனைக்கும் பொதுவான பெயராகும். வடலிப்பருவம் கடந்து பனைப்பருவம் வரும்போது ஆண்பனையின் மட்டைகள் திரட்சியுடையவையாகவும் பெண் பனையின் மட்டைகளைவிட பருமனுடையதாகவும் இருக்கும். ஆண்பனை ஓரளவு பருத்து நிற்கும். ஆண் பனையை அலகு என்றும் பெண் பனையை பருவம் என்றும் கூறுவர்.  வடலிப்பருவம் வரையுள்ள பனையின் பருவங்களும் அவற்றின் காலங்களும் பின்வருமாறு:

1.விதைப்பருவம் - விதையிலிருந்து 22 நாள் வரை
2.முறிகிழங்கு – 22 நாளிலிருந்து 3 மாதம் வரை
3.நார்க்கிழங்கு – 3 மாதம் முதல் 4 மாதம் வரை
4.பீலிப்பருவம் - 4 மாதம் முதல் 2 வருடம் வரை
5.வடலிப்பருவம் - 2 வருடம் முதல் 10 வருடம் வரை

வடலியின் முதற்குருத்து பீலி எனப்படும். அது தனக்கு வேண்டிய உணவுடன் பாதுகாப்பான கிழங்கோடு உதயமாகிறது. கிழங்குப் பருவம் கடந்து பீலி சூரிய ஒளியை நோக்கி வந்து விரியும் தன்மையை தாலவிலாசம் என்னும் நூல் "வைத்தவிதை பாவாய்முளை கிழம்பி பாம்பாடிடும் பருவம்” என்று குறிப்பிடுகிறது.

2.பனையின் வளர்ச்சி

பனை 10 வருடம் - 25 வருடம் வரை நன்றாக வளருகிறது. ஆண்டுதோறும் 3 அடி வளர்ச்சிக்கு குறையாமல் இப்பருவத்தில் வளரும் எனக் கூறப்படுகிறது. 25 ஆண்டு முதல் 45 ஆண்டு வரை அதன் வளர்ச்சி வேகம் குறைகிறது. ஆண்டு ஒன்றிற்கு 1 அடி வளர்ச்சி உண்டாகிறது. 45 வருடம் முதல் 60 வருடம் வரை வளர்ச்சி வேகம் குறைந்து வைரம் உண்டாக ஆரம்பிக்கிறது.

3.பனையின் வைர வளர்ச்சி

பனையின் வயதும் அக்காலத்தில் ஏற்படும் வைர வளர்ச்சியும் பின்வருமாறு:
40-45 1”-1 1ஃ2” வரை
45-60 2”-4” வரை
60-90 5”-6” வரை
90-120 6”-7” வரை
பனையின் புறத்தில் வைரம் உள்ளது. புறவைரமுள்ள மரங்களில் பனை மிகவும் உறுதியானது. அதிக பாரத்தை தாங்கக் கூடியது. உட்சோத்தி மிகவும் குறைந்தது. 1 கன அடி பனை வைரம் 50 இறாத்தல் நிறையுடையது எனக் கணிக்கப்பட்டுள்ளது. உட்சோத்தி மிகவும் குறைவான பனை மிகவும் வைரம் கூடியதாக இருக்கும்.

பனையின் பயன்பாடுகள்

வடலிப்பருவத்தில் பனை ஓலைகள் மயில்தோகை போன்று காணப்படும். இவ் ஓலைகளில் அழகான விசிறிகள் செய்து வருவாய் ஈட்டுவோர் பலர். இவ் ஓலைகள் கால் நடைகளுக்கு உணவாகின்றன.  இப்பருவத்தில் பெறப்படும் கங்கு மட்டைகளில் சிறந்த தும்பு பெறப்படுகிறது. இத்தும்பில் கருந்தும்பு மிகவும் கூடிய சந்தை வாய்ப்பை பெறுகிறது. இக்கங்கு மட்டை தும்பிலிருந்து  துடைப்பம், கயிறு, கால்மிதி என்பன உற்பத்தியாக்கலாம். கருக்கு வடலி தோன்றும் போது பனைக்கு 10 வயது ஆகும். அவ்வேளை வடலியின் உயரம் 6 அடி வளர்ந்து பனைப்பருவத்தை அடைந்து அழகாக இருக்கும்.

1. ஓலை

வளர்ந்த பனையின் குருத்தோலைகளை வெயிலில் காயவிட்டு பத்திரப்படுத்தி வைக்க முடியும். அவை பெட்டி, கடகம், அலங்காரப் பொருட்கள் என்பன செய்வதற்கு பயன்படுகின்றன. குருத்தோலை “சார்வு” என அழைக்கப்படுகிறது. இச்சார்விலிருந்து எடுக்கும் ஈர்க்கிலிருந்து கூடைகள், பூக்கூடை, சந்தைக்கூடைகள் என்பன உற்பத்தி செய்து வருமானம் பெறும் உற்பத்தியாளர்கள் பலர் உள்ளனர். இதைவிட ஓலைக்கு வர்ணச்சாயம் இட்டு அலங்காரப்பூக்கள் மற்றும் பல்வேறு அலங்காரப்பொருட்கள் பல உற்பத்தி செய்து விற்பனை செய்து வருமானம் ஈட்டுபவர் பலர் உள்ளனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெங்காயம் சிறுசிறு அளவாகக் கட்டுவதற்கு சார்வு ஈர்க்கு பயன்படுவது குறிப்பிடத்தக்கது. முற்றிய ஓலையினை தோட்டங்களில் பரப்பிவிட்டு பின்னர் அவற்றை தாழ்ப்பதன் மூலம் மண் வளமாவதுடன் களைகள் கட்டுப்படுவதாக அனுபவம் வாய்ந்த விவசாயிகள் கூறுவர்.

2. மட்டை

முற்றிய ஓலையின் மட்டைகள் பச்சையாக இருக்கும்போது அவற்றிலிருந்து நார் உரித்தெடுக்கப்படுகின்றது. இதை பக்குவமாகக் காயவிட்டு நீண்ட காலத்திற்கு பாவிக்கலாம். இதிலிருந்து நார்க்கடகம் உற்பத்தி செய்யப்படும். மேலும் ஆடு, மாடுகள் கட்டுவதற்காக “கண்ணி” எனப்படும் ஒருதடம் நாரிலிருந்து செய்யப்படுகிறது. அதை மேய்ச்சற் கயிற்றுடன் கட்டுவதன் மூலம் ஆடுஇமாடு என்பன சிக்குப்படாமல் தமது உணவை மேய்ந்து கொள்ளும். இந்நடைமுறை பெரிதும் அருகிவிட்டது. மிகுதிக் கழிவானமட்டைகளை சிறந்த எரிபொருளாக பயன்படுத்தலாம்.

3. மரம்

முதிர்ந்த மரங்களிலிருந்து வீட்டிற்கு தேவையான மரம் சிலாகை என்பன பெறப்படும். மரம் சிலாகை உற்பத்தி செய்யும் போது பெறப்படும் கழிவை “சிராம்பு” எனக்கூறுவர். இதை நல்ல எரிபொருளாகவும் பயன்படுத்தினர். எமது முன்னோர்கள் இவ்வாறாக தமக்கு இலவசமாக கிடைத்த மூலப்பொருட்களை நன்கு பயன்படுத்தினர். அதுமட்டுமல்ல பனையிலிருந்து உணவுப்பொருட்களையு செய்தனர்.பல்வேறு வடிவங்களில் உணவாக, தாகம் தீர்க்கும் பானங்களாக பனையை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை பின்னர் பார்க்கலாம்.

தொடரும்....


தியாகராஜா பன்னீர்செல்வம் 

- பனை அபிவிருத்திச் சபையின் ஓய்வுபெற்ற அதிகாரி 
நிமிர்வு செப்டம்பர் 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.