பிரம்படி - ஈழத்தில் இந்திய இராணுவத்தின் முதல் படுகொலை



ஈழத்தில் இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழினப் படுகொலைச் சம்பவமாக பதிவாகிய யாழ்ப்பாணம் - கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு 12.10.2022  புதன்கிழமை அன்று பிரம்படி சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது.

 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரு  தினங்களில் இந்திய இராணுவத்தினரால்  “ஒப்பரேசன் பவன்” நடவடிக்கை மூலம் மிகவும் மோசமான முறையில் துப்பாக்கியால் சுட்டும், உயிருடன் வீதியிலும் ரயில் தண்டவாளத்திலும் குப்பறப்படுக்க வைத்துக் கவச வாகனங்களினால் நசித்தும் 50 க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்திய இராணுவத்தின் பிரம்படி படுகொலைகளின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்பிய நேரடி சாட்சியான பிரம்படி வீதி கொக்குவிலை சேர்ந்த எஸ். ஜெகதீஸ்வரி அவர்கள் அன்று நடந்த சம்பவம் தொடர்பில் விபரிக்கையில்,  

“அன்று சம்பவம் நடக்கும் போது எனக்கு 32 வயது. 1987 ஆம் ஆண்டு ஓக்டோபர் 10 ஆம் திகதி இரவு 7 மணிக்கு பிறகு தான் எங்களுக்கு அதன் தாக்கம் தெரிய வந்தது. விமானங்கள் மேலே சுற்றிய வண்ணம் இருந்தன. சூட்டு சத்தங்கள் கேட்டபடியே இருந்தன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற காரணம் கூட எங்களுக்கு தெரியவில்லை. இங்குள்ள சிலர் ஊரை விட்டு வெளிக்கிட்டு வேறிடங்களை நோக்கி போனார்கள். ஆனாலும் சிலர் இந்தியன் ஆமி தானே எங்களை ஒன்றும் செய்யாது என்று நம்பியபடியே எங்கும் போகாமல் இருந்தோம்.”

“அப்படியே அன்று இரவு வழமையாக இப்படி நடக்கிறது தானே கோட்டை சண்டை நேரமும் இப்படித்தானே இருந்தது என்று அப்படியே நித்திரையாகி விட்டோம். மறுநாள் காலை 7 மணி இருக்கும் அயலில் இருக்கும் ஜெனகன் என்கிற சிறுவன் எங்களது அம்மாவை நோக்கி ஓடி வருகிறான். சின்ராசாக்கா ஆமி வந்திட்டான் என்று கத்தி சொல்கிறான்.  சிறிது நேரத்தில் நாங்கள் முன்னுள்ள அயல் வீட்டுக்கு சென்று நிற்கிறோம். எங்களோடு நிறைமாத கர்ப்பிணியொருவரும், சிறார்களும் இருந்தனர். அங்கே கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் கூடி விட்டனர்.  அப்போது ஆயுதச் சண்டையும் தொடங்கி விட்டது.  எல்லோரும் வீட்டுக்கு வெளியில் இருந்த போது இராணுவத்தினர் வீட்டு வளவுக்குள் குதித்து எல்லோரையும் உள்ளே போகும்படி கூறினார்கள். உள்ளே இருக்கும் போது இராணுவத்தினர் உள்ளே வந்தார்கள்.  அப்போது எங்கள் அத்தான் ஆங்கிலத்தில் We are civilians. என்றார். எல்லோரும் இங்கே இருங்கள் என பணயக் கைதிகளாக வைத்திருந்தனர்.  பிரம்படி வாசிகசாலைக்கும் சந்திக்கும் இடைப்பட்ட நான்கைந்து வீடுகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டன.”



“அப்போது பெரிதாக மதில்கள், மரங்கள் இல்லாத காரணத்தினால் எங்கள் வீட்டில் இருந்து பார்த்தால் வாசிகசாலை சந்தி தெரியும். எங்கள் வீட்டடியில்  நிற்கும் இந்தியன் ஆமி அங்கே சந்தியால் வருபவர்களை ஒவ்வொருவராக சுட்டுக் கொண்டிருக்கிறான். என்ன ஏதென்று தெரியாமல் வீதியால் வந்து சூடு வாங்கி பலியானவர்கள் அதிகம் பேராவர். எதிர் வீட்டில் ஒருவர் வீட்டில் புகும் போது அவரையும் சுட்டு விட்டார்கள். எங்களை கண்ணுக்கு முன்னால் சுமார் மூன்றடி தூரத்தில் வைத்துக் கொண்டு ரொக்கெட் லோஞ்சர் மற்றும் துப்பாக்கிகளால் தொடர்ந்தும் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தாக்குதல் நடத்தும் போது ஓடுகள் எங்கள் மேல் விழுகின்றன. அப்போது அந்த கர்ப்பிணியையும் சிறார்களையும் கீழே போட்டு விட்டு அவர்களை சூழ்ந்து நாங்கள் படுத்திருக்கிறோம். அப்படியே அன்று 11 ஆம் திகதி காலையில் இருந்து இரவு அப்படியே இருக்கிறோம். சாப்பாடு தண்ணியில்லாமல் இருந்து பெரும் சோர்வு நிலைக்குள்ளாகி விட்டோம்.”  

“பின் மறுநாள் செயின் பிளக்குகள் வந்தன. அதிலிருந்து வந்தவர்களும் எங்களை வெளியே அழைத்து சுட ஆயத்தமானார்கள்.  ஆனாலும் ஒருவாறு தப்பித்தோம். அங்கிருந்த சூழலை பார்த்தால் எங்கள் குடும்பம் தப்பியதை ஒருவரும் நம்ப மாட்டார்கள்.  எங்களது அப்பாவை சைவம் குடும்பம் என்றே ஊரவர்கள் அழைத்தார்கள். சைவம் குடும்பத்திலும் ஒருவரும் மிஞ்சவில்லை என்றே அப்போது வெளியே கதை பரவியிருந்தது.”

“எல்லாம் ஓய்ந்து வெளியே வந்து பார்த்தால் வாசலிலேயே சடலங்கள் இருந்தன. பின் வெளியே வந்து முன் வீட்டை திறந்து பார்த்தால் உள்ளே சடலங்கள் மலை போல்  குவிந்து கிடந்தன. 12 பேருக்கு மேல் சடலங்களாக கிடந்தார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை.  என்னுடைய தங்கச்சிமார் இருவரும் சடலங்களாக கிடந்தனர். அதனைப் பார்த்துவிட்டு கத்திய படி வெளியே வந்தேன்.”



“இன்னொரு வீட்டில் நாயை பிடிக்க வந்தவரும் சுடப்பட்டார். பின் அதைப் பார்த்து கத்திய மனைவியும்  பின் 9 மாதக் குழந்தையையும் நோக்கி கிரைனேட் எறிந்து கொன்று இருக்கிறார்கள்.  எங்கள் பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்து  பல்கலையில் படிக்கும் முஸ்லீம் மாணவன் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். பல்கலையை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரும் மதில் பாய்ந்து ஓடியபோது சுடப்பட்டிருக்கிறார்.”

“வெளியே பாதையில் செயின் பிளக்குகள் கொல்லப்பட்டவர்களை நெரித்து இருந்தன. உயிரோடும் நெரித்ததாக சொல்கிறார்கள். அப்படியே சடலங்கள் நசிந்து துகள்களாகி விட்டன. கால்களே வைக்க முடியாதளவு இரத்தமும் சதையுமாக அந்த இடம் இருந்தது. பிறகு எங்கள் அண்ணையாக்கள் கூட்டி எரித்திருந்தார்கள்.”

“எங்களின் தங்கச்சிமாரையும் அம்மா முதலில் கூப்பிடும் போது அவர்கள் வரவில்லை. பின் பிணமாகவே கண்டோம்.  இந்தியன் ஆமி ஒன்றும் செய்யாது என்றே எல்லோரும் நினைத்தோம். ஒரு மாதத்துக்கு பிறகு தான் வெளிநாட்டில் இருக்கும் எங்கள் உறவுகளுக்கு எங்களின் குடும்பம் தப்பிய கதை தெரியும். எங்கள் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி இருந்தவர்கள் இடம்பெயர்ந்து போய் விட்டார்கள். எங்கள் குடும்பம் தவிர அயலில் உள்ள பெரும்பாலானோர்  கொல்லப்பட்டு விட்டனர்.”  



“எவ்வளவு சந்தோசமாக கூட்டாக அன்பான உறவுகளாகவே நாங்கள் வாழ்ந்து வந்தோம். இடம்பெயர்வதென்றால் கூட எல்லாருமே ஒன்றாக போக வேண்டும். ஒருவரை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காகவே ஒன்றாக இருந்தோம். எங்களது உறவினரின் கார் இருந்தும் ஒரு சிலர் மட்டும் போகக் கூடாது என்பதற்காகவே எங்கும் போகாமல் இருந்தோம்.  அயலவர், உறவினர் என்று எல்லோரும் ஒன்றாகவே வாழ்ந்தோம். நடக்கிறது எல்லோருக்கும் ஒன்றாக நடக்கட்டும் என்று எண்ணியபடியே இருந்தோம்.”

“ஆனால், இப்போது அருகில் உறவென்றே யாருமில்லாத நிலைக்கு போய் விட்டோம். அந்த நேரமே இப்பகுதியில் உள்ள பலர் வெளிநாட்டில் இருந்தனர். குறித்த சம்பவத்துக்கு பிறகு எஞ்சியவர்களில் 95 வீதமானோர் வெளியிடங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர். இன்னொரு குடும்பத்தில் மூன்று சிறுவர்களும் தகப்பனும் கொல்லப்பட்டு விட தாயார் மட்டுமே தப்பியுள்ளார். அவர் இப்போது கொழும்பில் வாழ்ந்து வருவதாக அறிந்துள்ளோம்.”


“தனம் அண்ணை என்ற அம்மாவின் உறவுக்காரர் ஒருவர் இந்தியன் ஆமி வந்தபோது பெரும் வரவேற்பளித்து கொண்டாடியவர், அவரிடம் இப்படி பிரச்சினை வரப் போகிறது என்று முதலில் கேட்டபோது, அவன் எங்களை பாதுகாக்க தானே வருகிறான் என்று கூறியவருக்கே முதலில் வெடி விழுந்து இறந்து போனார்.”

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட சீக்கிய படையினரை புலிகள் கொன்றதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேடியே எமது கிராமத்துக்கு வந்து இந்திய இராணுவம் தமிழ்மக்களை கொன்று கோரத் தாண்டவமாடியதாக பின்னர் கேள்விப்பட்டோம். அமைதிப்படையாக வந்த இந்தியன் இராணுவம் இப்படி கொடூரமான இரத்தக் களரியாக எங்கள் இடத்தை மாற்றிவிடும் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.”


இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட  பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அமைதிப்படை எனும் பேரில் வந்திறங்கிய இந்திய இராணுவத்தினரை தமிழ்மக்கள் தமது மீட்பர்களாக கருதிக்கொண்டிருந்த நேரத்தில் இந்திய இராணுவத்தின் கோர முகத்தை தமிழ்மக்களுக்கு காட்டிய முதல் சம்பவமாகவும் வரலாற்றில் இந்த பிரம்படிப் படுகொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது.  

தொகுப்பு - அமுது 

நிமிர்வு கார்த்திகை 2022 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.