காணாமல் ஆக்கப்படுதல் - காணாமல் போதல் என்றால் என்ன?2009 இல் தமிழினப் படுகொலை நடந்து பத்தாண்டுகளின் பின்னரும் எமது ஊடகப் பரப்பிலும், அரசியல், சிவில் சமூக பொது பரப்பிலும் காணாமல் ஆக்கப்பட்டோரை காணாமல் போனோர் என விழிக்கும் நிலை உள்ளது.  இந்நிலையில் இந்த சொல்லாடல்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் சிறிய விளக்கம் கீழே தரப்படுகிறது.

01. காணாமல் ஆக்கப்படுதல் என்றால் என்ன?

குறித்த ஒரு நபரை விரும்பாத ஒரு அரசியல் தலைமை அல்லது ஒரு இராணுவத் தலைமை அல்லது அரசு சார்பு துணை ஆயுத குழுக்கள், அவரை அவரது குடும்பத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து தூக்கிச்சென்று விட்டாலோ, அல்லது கைதுசெய்து காணாமல் போகச்செய்வதாலோ, அதன் பின்னர் அவருடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போய்விடுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட தெரியாமல் போய்விடும். இதையே ‘காணாமல் ஆக்கப்படுதல்’ என்கிற சொல் பதத்தில் அழைக்கிறார்கள்.

02. காணாமல் போதல் என்றால் என்ன?

குடும்பத்தில் எழும் சச்சரவுகளை (பிணக்குகள்) அடுத்து மனஸ்தாபங்களுடன் (தன்னிச்சையாகவோ, துரத்தப்பட்டோ) வீட்டை விட்டு கிளம்பிச் செல்லும் நபர்கள் சிலர், மனம் ஆறுதல் அடைந்து மறுபடியும் வீடு திரும்பும் இஸ்டம் இல்லாமலும், தமது குடும்பத்தினருடன் தொடர்பினை பேணும் மனவிருப்பம் இல்லாமலும் (வைராக்கியம் வளர்த்துக்கொண்டு) தமக்கு பாதுகாப்பு என்று உணரும் ஏதாவது இடம் ஒன்றில் நிரந்தரமாகவே தங்கிவிடுகின்றனர். இவர்கள் தமது நடமாட்டம் (சீவிப்பு) தொடர்பில் குடும்பத்தினருக்கு சிறு தகவலேனும் சென்றடைந்து விடக்கூடாது என்பதில் கூடியளவில் கவனம் எடுத்து நடை, உடை, பாவனை அனைத்திலும் தம்மை உருமறைப்பு செய்துகொண்டோ, அல்லது தம்மை அடையாளப்படுத்தாமல் (தமது சுயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்) நன்கு திட்டமிட்டு ஒளிவுமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பர்.

மேலும் கோவில் திருவிழாக்கள் - கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட சனங்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களிலும் கூட்டநெரிசலில் அகப்பட்டு சிறுவர்கள் - குழந்தைகள் - முதியவர்கள் ஏதேச்சையாக வழிதவறி விடுகின்றனர். இதேபோல தமக்கு முன்னர் அறிமுகம் இல்லாத பிரதேசங்களுக்கு பிரயாணம் செய்யும் நபர்களும் கூட, அப்பிரதேசம் தொடர்பான நிலபுல அறிவும், போக்குவரத்து பரிச்சயமும் இல்லாமல் வழிதவறி விடுவதுண்டு. மண் சரிவு, வெள்ளம், கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களிலும் பலர் சிக்குண்டு அவற்றினால் அள்ளுப்பட்டு கொண்டு செல்லப்படுவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டுமே, உலக வழக்கத்திலும் - பழக்கத்திலும் ‘காணாமல் போதல்’ என்கிற சொற் பதம் பயன்படுத்தப்படுகின்றது.

03. தடுத்து வைக்கப்படும் காலங்களில் ‘காணாமல் ஆக்கப்படுதலின் அரசியல்’

எதிர்ப்பாளர்களை உடல் ரீதியாக அழித்தொழிப்பது மட்டுமல்ல, சமுகத்தையும் பயமுறுத்துவதே இந்த அரசியலின் நோக்கம் ஆகும். சுரண்டப்பட்ட தொழிலாளர்களும் - பிற உழைக்கும் வர்க்க மக்களும் ஒன்று சேர்வதும், ஒடுக்கப்பட்ட தேசிய இனமக்கள் தமது உரிமைகளுக்காக கிளர்ந்தெழுந்து போராடுவதும், வேறு வகையான சமுக கட்டமைப்புக்காக செயல்படுவதும், இந்த அரசியலின் மூலமாக தடுக்கப்படுகின்றது. இவற்றுக்கு தலைமை தாங்கும் இயக்க மற்றும் தொழில்சங்க தலைவர்களும், இவற்றில் தீவிர ஈடுபாடுடைய செயல்பாட்டாளர்களும் - தொழிலாளர்களும் கடத்தப்பட்டோ, கைதுசெய்யப்பட்டோ, தடுத்து வைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்.

04. ‘காணாமல் ஆக்கப்படுதல்’ ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

(இலங்கை உட்பட) சில நாடுகளில் ஜனநாயக முறைமையை அல்லது விடுதலை சுதந்திரத்தை கோருபவர்களை அடக்கவோ, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ, இவற்றுடன் தொடர்புடையவர்களை ‘கடத்தி காணாமல் ஆக்குவதை’ ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்படியான அனைத்து சம்பவங்களிலும் ‘கட்டாயமாக காணாமல் போகச்செய்யப்படுதல்’ என்பது தடை செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்துகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும், அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது என்றும் ஐ.நா கூறுகிறது. எனினும் இப்படி காணாமல் போகச்செய்யப்படுவோரை இரகசிய சித்திரவதை முகாம்களில் அடைத்தோ அல்லது இரகசியமாக படுகொலை செய்தோ, யாரும் அறியாத இடத்தில் புதைத்து விடும் அபாய நிலைமைகள் இன்னமும் தொடர்கின்றன.

கடத்தப்பட்டவர்கள், ‘காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்’ என்றே பொதுவாக பலருக்கும் தெரிந்திருக்கும். கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்களது உயிரை எண்ணி கவலைப்படுவதுடன், அவர்கள் திரும்பி வருவார்கள் என்று நம்புகின்றனர். அச்சமுற்றுள்ள உறவினர்கள் நம்பிக்கையுடனும், சந்தேகத்துடனும் காலம் கழிக்கின்றனர். இவ்வாறு உலகெங்கும் பல இலட்சம் பேர்கள் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளார்கள். எத்தனை பேர்கள்? என்று குறிப்பிட்டு நிச்சயமாக சொல்ல எந்த அமைப்பும் முயற்சி எடுக்கவில்லை.

ஆள்கடத்தல் மற்றும் கைதுகள் நிகழ்த்தப்பட்ட சந்தர்ப்பங்களும் - இடங்களும்

 அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்தவர்கள். (தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்துக்கு சார்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டோ, கடத்தப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்)

 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பிரயாணம் செய்தவர்கள். (விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்லது முகவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டோ, கடத்தப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்)

 மே 2009ம் வருடம், முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தருணத்தில் ஆயுதங்களை களைந்து விட்டு நிராயுதபாணிகளாகவும், பாரிய விழுப்புண்களுடன் தாமாகவே இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளும், போராளிக்குடும்பங்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

 முல்லைத்தீவு நகரம், வட்டுவாகல், ஓமந்தை சோதனைச்சாவடி பகுதிகளிலும், வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களிலும், இராணுவத்தினர் கேட்டுக்கொண்டதற்கு அமைய, குடும்பத்தினரால் கொண்டு செல்லப்பட்டு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கும் - ஐ.நா பிரகடனங்களுக்கும் முரணான இத்தகைய ‘கட்டாயமாக காணாமல் போகச்செய்யப்படுதல்’ நடவடிக்கைகள், ஆட்சியாளர்களினதும் - அரசுகளினதும் நலன்கள் சார்ந்த ‘அரசியல் நிகழ்ச்சி’ நிரலின் பிரகாரம் நின்று நிதானித்து நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன.

இசைப்பிரியன் -

நிமிர்வு கார்த்திகை 2022 இதழ்- 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.