75 நாட்களுக்குள் தீர்வு?

 


அடுத்த ஆண்டு மாசி மாதத்துக்குள் அதாவது வரும் சுதந்திர தினத்துக்குள் தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அதாவது 75 ஆண்டுகளுக்கும் மேலாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 நாட்களில் தீர்வு தரப்போவதாக அவர் கூறியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசப் போவதாக ஜனாதிபதி கூறி இருந்தார்.  இதற்கு மறுப்பு தெரிவித்த ரெலோ கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என கூறியிருந்தது. இலங்கையின் அரச தலைமை வடக்கு - கிழக்கு என பிரித்தாள்வது தாயக கோட்பாட்டை சிதைக்கும் ஒரு நடவடிக்கையாகவே இதனை கொள்ள வேண்டும். இது சிங்கள பெருந்தேசியவாதத்தின் இன்னுமொரு சூழ்ச்சி. ஏற்கனவே பிரித்தாளும் சூழ்ச்சியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ரணில் இதிலும் பிரித்தாண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வை தள்ளிப்போடலாம் என எண்ணியிருக்கலாம்.

சமீபத்தில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தப்பட்டுள்ள பின்னணியில் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வரப்போவதாக ரணில் அறிவித்துள்ள நிலையில் அதற்கு பூரண ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது. தற்போது 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பே அமுலில் உள்ளது. அதில் 21 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்  சர்வதேச நாணய நிதியமும் இலங்கையில் அரசியல் ஸ்திரத் தன்மை ஒன்று ஏற்பட வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்  இலங்கைக்கு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகளுடனும் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான பேச்சுக்கள் தொடர்கின்றன. இந்நிலையில் சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம்  அறிவித்துள்ளது.

ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் இலக்கில் ஓரணியில் தமிழ் தலைவர்கள் இருக்கிறார்களா என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது. சிங்கள அரசு தீர்வை முன்வைக்கும் பின்னணியில் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்மக்களின் கோரிக்கைகளை வலுவாக வைக்கும் நிலையில் உள்ளனரா?

70 - 80 வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களால் பல்வேறு ஆணைக்குழுக்களை நிறுவியும் நிரந்தர அரசியல் தீர்வு தமிழ்மக்களுக்கு தரப்போவதாக கூறியும் பேசி பேசி கிழித்தெறியப்பட்ட  ஏராளம் ஒப்பந்தங்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் சிங்கள அரசின் துரோக வரலாற்றை மறந்து அப்படிக் கூறிய அரசாங்கங்களை நம்பி ஏமாந்த தமிழ் அரசியற்தலைமைகள் இம்முறையும் ஏமாறப் போகிறார்களா? அல்லது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்கள் வேண்டும் தீர்வை மக்களின் பக்கம் நின்று உறுதியாக முன்வைக்கப் போகிறார்களா?

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் அழுத்தத்தினால் அரைகுறை தீர்வையாவது முன்வைக்கும் நிலைக்கு சிங்கள அரசியல் தலைமை வந்துள்ளது. இந்நேரம் தான் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் விழிப்பாக இருக்க வேண்டும். கடந்த கால பட்டறிவை கவனத்தில் கொள்ள வேண்டும். பேச்சுக்கு வாருங்கள் என்றவுடன் விழுந்தடித்துக் கொண்டு ஓடாமல், முதலில் பேச்சில் எவ்வாறான  விடயங்களை உள்ளடக்க வேண்டும் என சிங்கள அரசியல் தலைமை வெளிப்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து எப்படியான தீர்வை தரப்போகிறோம் என்று கூட குறைந்த பட்சம் அறிவிக்காத அரசை நோக்கி உங்களின் முயற்சிக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பையும் தருவோம் என தமிழ் அரசியல் தலைமையான கூட்டமைப்பு சொல்வதனை எவ்வாறு நோக்குவது?   

செ. கிரிசாந்-

நிமிர்வு கார்த்திகை 2022 இதழ்- 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.