கார்த்திகை 27கார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி  விடும். அதே போன்று  தமிழ்த் தேசிய மனங்களில் வீராப்பும் ஓங்கி எழும். இவற்றின் தொடர்ச்சியே இவ்வருடம் கார்த்திகையில்  நடந்தஎழுச்சிகரமான மாவீரர் நாள். யாரும் எதிர்பாராத வகையில் உணர்ச்சிபூர்வமாக மாவீரர் நாளைக் கொண்டாடுவதற்கான  ஏற்பாடுகளை  வடக்கு கிழக்கு எங்கும் மக்கள் செய்திருந்தனர்.
2009 காலப் பகுதிக்கு முன்பு ''மாவீரர் வாரம் ''அனுஷ்ட்டிக்கப்படும் போது ஒவ்வொரு வீட்டின் மூலை முடுக்குகள் எங்கும் மஞ்சள் சிவப்பு அலங்காரமும், அலங்கரிக்கப்பட்ட மாவீரர்களின் படங்கள் தாங்கிய கூடுகளும், வீடுகளும்  என்று  எழுச்சியை எங்கும் காணமுடியும். விடுதலை வேட்கை கொண்ட  தமிழீழ பாடல்களும் எங்கும்  உ ரமூட்டிக் கொண்டு இருக்கும்,  இவ்வாறான ஒரு அனுபவ சூழலினை இவ்வருடம் உணர முடிந்தது.


வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவீரர் இல்லங்களும் துப்பரவு செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டன. மஞ்சள் சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டன.  மாவீரர் துயிலும் இல்லப் பாடல்கள் இசைக்கப்பட்டன. மாவீரர்களின் பெற்றோரால்  பிரதான சுடர்கள் ஏற்றப்பட்டன.  ஏனைய சுடர்கள் மாவீரர்களின் குடும்பங்களினால் ஏற்றப்பட்டன. இச் சுடர் ஏற்றும் நிகழ்வு மாலை 6.05 மணிக்கு இடம்பெற்றது.


குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்   யாழ்.பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்திருந்த மாவீரர்களின் நினைவுத் தூபி புதிதாக மெருகூட்டப்பட்டு சுற்றிவரநிரந்தரமான  பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மஞ்சள் சிவப்பு கொடிகளால் அரங்கரிக்கப்பட்டு காலையும் மாலையும் பல்கலைக் கழக சமூகத்தினால் அஞ்சலி செய்யப்பட்டது. தவிர பல்வேறு இடங்களிலும்  அலுவலகங்களிலும் அரசியல் சார் குழுக்களும் தனிமனிதர்களும் திரளாக அஞ்சலி  செய்தனர்.


இந்நிலையில் கோப்பாய் துயிலும் இல்லம் முன்னால்   பொதுக்  காணி  ஒன்றில் தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் எண்ணற்ற மக்கள் பங்கு கொண்டனர். பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து அங்கு வருகை தந்த மக்கள் தமது பிள்ளைகளின் வித்துடல் விதைக்கப்பட்ட கோப்பாய் மண்ணில் அஞ்சலி செய்தனர். அஞ்சலி நிகழ்வின் முடிவில் அவ்விடத்தை  விட்டு வெளியேற  முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது.


1995 இந்த இடப்பெயர்வைப் போன்று வாகனங்களும் மக்களும்  போவதிலும் வருவதிலும் மிகுந்த நெருக்கடிக்குள்ளானார்கள். அந்த வேளையில் எந்த மாற்றுச்  சிந்தனைகளும் இன்றி  மக்களை ஒழுங்கு படுத்துவதிலும் போக்குவரத்தை சீர்படுத்துவதிலும் போலீசாரின் பணி  உன்னதமானதாக இருந்தது .


 கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவருடன் பேசிய பொழுது, ''இதென்ன பிள்ளை சனம்?  இது சனமே? 1995 க்கு முன்னர் அடியெடுத்து வைக்க ஏலுமே?. நான் தெல்லிப்பளையில் இருக்கிறன். அந்தக்காலம் வந்ததுக்கு பின்னர் இந்த முறை தான் முதல்தரம் வந்தேன். பிள்ளைகளிண்ட  ஆத்மா சாந்தி பெற வேணும்'' என்றவரிடம் உங்களின் பிள்ளையும் மாவீரரா? எங்கே? எப்போது? என்றதும்  கோபம்  கொண்ட அவர் ''நான் பெத்து வளர்த்தால் தான் பிள்ளையா? மற்றவர்கள் பிள்ளைகள் இல்லையா?  ஆனால் இந்த சீர்கெட்ட  சனத்துக்காகவா  எங்கட பிள்ளைகள் 30 வருசத்தை  அநியாயமாக்கி போட்டாங்கள் எண்டதை நினைச்சாலே கவலை வருது. என்ர  மனிசி இப்ப இல்லை. அவாவுக்கு இயக்கப் பிள்ளைகள் எண்டால் சரியான  உயிர்.  எல்லாம் காலம் பிள்ளை'' எனத்  தனது  ஆதங்கத்தைப் பகிர்ந்தார்.  கடந்த கால இழப்புக்கள், தமிழ்த் தேசியவாதிகள் என்று புலம்புவோரின்  புலம்பல்கள், தமிழ் அரசியல்வாதிகளினிடையே ஒற்றுமையின்மை எனப் பலவிடயங்களை அவர் மனக்குமுறலுடன் வெளிப்படுத்தினார்.


அவர் கூறிய அந்த சீர்  கெட்டநிலைக்கு எமது சமூகம் செல்வது வேதனைக்குரியது.இன்று மக்கள் பெரும்பாலும் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். சமூகவலைத்தளம் தொலைக்காட்சி என்பனவற்றுக்குள்  குடும்பங்கள் சிக்குண்டு கிடக்கின்றன.  இப்படியான நிகழ்வுகளுக்கு வருவதில் அசமந்தமாக இருக்கின்றனர். பிறந்தநாளில் இருந்து பாராட்டு விழாக்கள் வரை  நட்சத்திர விடுதிகளில் கொண்டாடும் பலர் இவ்வாறன நிகழ்வுகளைப் புறக்கணிக்கின்றனர். தென் இந்திய சினிமா நடிகனுக்கு   கட்டவுட் கட்டி  பால் வார்க்கும் நிலைக்கும்  சில தமிழ்  இளைஞர்கள்  சென்று விட்டனர். இந்த சூழலிலும் அர்ப்பணிப்பும் தமிழ்த் தேசிய சிந்தனையும் கொண்ட வணக்கத்துக்குரிய பிதாக்கள் உட்பட பல இளைஞர்களையும் களத்தில் காணமுடிந்தது .


மேலும் கடந்த வருடங்களைப் போலல்லாது உணர்வற்ற நிலையில் சுயபடம் எடுப்போர்   சுய வீடியோ எடுப்போரின் எண்ணிக்கை குறைந்திருந்தது . ஒரு பொது மகனின் காணி துயிலும் இல்லமாக மாற்றம் கொண்டு எழுச்சி கொண்டிருந்தமை தமிழ்த் தேசியத்தின் மீதான விடுதலை வேட்கையை ஏனையவர்களும் உணரும் வகையில் அமைந்திருந்தது.

இவ்வாறான சமூகப் பிரஞ்ஞை உள்ள இளைய சமூகத்தினர் மேலும் உருவாக வேண்டும்.  ஒரு கொடிய யுத்தத்திலிருந்து மீள எழுந்து வரும் ஒரு சமூகம் என்ற வகையில் இந்த வளர்ச்சி மெதுவாகவே நிகழும்.  ஸ்மார்ட் போன்கள், பேஸ்புக், வாட்சப் என பல காரணிகள் இந்த வளர்ச்சியைப் பாதிக்கும்.  ஆனால் அவற்றையம் மீறி எமது இளைஞர்கள் சமூக அக்கறையுள்ளவர்களாக மாறுவது நடரந்தே தீரும்.  அது தான் வரலாற்று நியதி.  பல இனங்களின் விடுதலைப் போராட்டங்களில் நாம் இதனைக் காணலாம்.  இன்று எமது இனத்துக்கு நாம் செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமை மிகவும் நலிந்த நிலையில் எரிந்து கொண்டிருக்கும் எமது தேசிய தீபத்தை அணைந்து விடாமல் காப்பாற்றி அடுத்த சந்ததியினரிடம் கையளிப்பதே.  அவர்கள் அதனை மீள ஒளிர வைப்பார்கள்.  ஏனெனில் அது ஒன்று மட்டுமே இலங்கைத்தீவில் அவர்களின் இருப்பையும் அவர்களின் பிள்ளைகளின் இருப்பையும் உறுதி செய்யும்.


அண்மையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் இதனை எமக்குத் தெளிவாக காட்டுகின்றன.  புதிய அரசியல் அமைப்பு வரப் போகின்றது என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு வழக்கம் போல தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமது உண்மையான முகத்தைக் காட்டியுள்ளார்கள்.  நாட்டின் இனப்பிரச்சனைக்கான தீர்வின் அத்தியாவசியத் தன்மையையும் அதனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தையும் முன்வைத்தாவது ஜனாதிபதியும் பிரதமரும் சமரசமாகப் போகத் தயாராக இருக்கவில்லை.  அதாவது தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு என்பது அவர்களின் முன்னுரிமைப் பட்டியலில் இல்லை என்பதை முகத்திலறைந்து சொல்லியுள்ளனர்.


இவ்வாறான நிலையில் எமது எதிர்கால சந்ததியினர் இந்நாட்டில் உரிமைகளுடன் வாழ வேண்டுமாயின் எமது உரிமைகளுக்கான போராட்டத் தீயை அணையவிடாமல் பாதுகாக்க வேண்டும்.  அதற்கு மாவீரர்தினம் போன்ற நிகழ்வுகள் எண்ணெயாக இருக்கின்றன.

“சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது” என்ற புதுவையின் வரிகள் இன்றும் உயிர்ப்புடனேயே உள்ளன. அது என்றும் உயிர்ப்பாகவே இருக்கும்.


யாழவன்
நிமிர்வு மார்கழி 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.