பனைத்தொழிலிலேற்பட்ட மாறுதல்
பனையின் பயன்கள் பல என நாம் முன்பு பாரத்தோம். பனைவெல்லம், மற்றும் பனங்கள்ளு என்பனவற்றைப் பெருமளவில் உற்பத்தி செய்து வருமானமீட்டும் முறையினை பனைத்தொழில் வல்லுனர்கள் மேற்கொண்டனர். தென்இலங்கையில் தென்னங்கள்ளு விற்பனவுக்குத் தவறனைகள் ஏற்படுத்தி விற்பனவு செய்தனர். இலங்கையின் வடபகுதியில் பனை செறிந்து காணப்பட்டதினால் வடபகுதித் தவறனைகளில் பனங்கள்ளு பெருமளவாகவும் தென்னங்கள்ளு குறைவாகவும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனவு மேற்கொள்ளப்பட்டது. எமது உணவிற்கு தேங்காய் பிரதானமாகப் பயன்பட்டதும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.
பனையின் பருவகாலத்தில் (தை-ஆவணி வரை) தவறனைகளில் விற்பனவுக்கு மிதமிஞ்சிய கள்ளு நிலத்தில் ஊற்றும் நடவடிக்கைகள் அவ்வப்போது ஏற்படவே செய்தன. அத்தருணத்தில் தொழிலாளர்கள் பதநீர் உற்பத்தியினையும் மேற்கொண்டு பனைவெல்லம் பனம்பாணி என்பன உற்பத்தி செய்து தமது தேவைக்கும் பாவித்ததோடு மேலதிகமானதை விற்பனவு செய்து தமது வருமானத்தையீட்டிக்கொண்டனர்.
உடுப்பிட்டி, பருத்தித்துறை கூவில் பகுதி, தெல்லிப்பளை, காங்கேசன்துறை கூவில் பகுதி, பண்டத்தரிப்பு, சங்கானை, வடமராட்சியில் கொற்றாவத்தை சிங்கைநகர்(வல்லிபுரக்குறிச்சி) போன்ற இடங்களில் பனை வெல்லம், கல்லாக்காரம்(பனைங்கற்கண்டு) என்பன உற்பத்தி செய்து வருமானம் பெற்றனர்.
பனையின் பருவகாலங்களில் பதநீர் உற்பத்தி செய்து அதிலிருந்து பனைவெல்லம் தயாரித்து பனங்குட்டான்களில் ஊற்றி “கிட்டங்கி” எனப்படும் பெரிய தொட்டிகளில் அவற்றை சேமித்து வைத்து விற்பனவு செய்தனர். சிலர் வீட்டுப்பரன்களில் பனைவெல்லம் பழுதுபடாமல் பாதுகாத்து விற்றனர். பெண்பனைக் காலங்களில் (பங்குனி-ஆவணி வரை) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு செய்து பனைவெல்லத்தைவிட கூடிய விலைக்கு விற்றனர். இதனை ஆயர்வேத வைத்தியர்கள் சில மருந்துகளிற்குச் சேர்த்து பயன்படுத்தினர். பனைவெல்லம் வாங்குவதற்கு நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பயனறிந்தவர்கள் வந்து பனைவெல்லம் (பனங்கட்டி) கொள்வனவு செய்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்தனர்.
மேலே குறிப்பிட்ட ஊர்களில் குறிப்பாக உடுப்பிட்டி போன்ற இடங்களில் மற்றும் வடமராட்சியின் ஏனைய இடங்களிலும் பனைவெல்லம், பனங்கற்கண்டு (கல்லாக்காரம்) பனம்பாணி என்பன தாராளமாகக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. பனங்குட்டானில் 1” அளவுடைய குட்டான்களில் பனைவெல்லத்தை ஊற்றி கச்சான் விற்பவர்களுக்கு கொடுப்பர். திருவிழாக்காலங்களில் வடமராட்சியில் உள்ள கோவில்களில் கச்சான் விற்போர்கள் கச்சான் வாங்குபவர்களுக்கு கச்சானுடன் இக்குட்டான் பனங்கட்டியையும் சேர்த்துக் கொடுப்பர். கச்சானுக்கும் பனை வெல்லத்து சுவை நன்றாக இருக்கும். இதன்மூலம் கச்சான், பனைவெல்லம் விற்பனவு கணிசமானளவு மேம்பட்டுக் காணப்பட்டது. 1” குட்டான் பனைவெல்லத்தை தாயைத்தின்னிக் குட்டான் என அழைத்தனர்.
இதுவிடயமாக கதைக்கும் போது வடமராட்சி மக்கள் கூறும் கதை வியக்கக்கூடியதாக உள்ளது. பொலிகண்டிப்பகுதியில் பிரித்தானியர் காலத்தில் பனஞ்சீனித் தொழிற்சாலை ஒன்று இருந்ததாகவும் அதற்கு மூலப்பொருளான பதநீர் உடுப்பிட்டி, கொற்றாவத்தை, பருத்தித்துறை, சிங்கைநகர் போன்ற ஒவ்வொரு இடங்களிலும் பதநீர் கொள்வனவு நிலையங்களை உருவாக்கி அங்கு கொள்வனவு செய்தவற்றை குழாய் மூலம் தொழிற்சாலை அடையும் வண்ணம் ஏற்பாடுகள் செய்து பனம்சீனி உற்பத்தி மேற்கொண்டதாகக் கூறுவர். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு பின் சில விஷமத்தனமான நடவடிக்கைகளால் அது அழிவுற்றதாகவும் கூறுவர். இது தொடர்பான சில எச்சங்கள் தற்போதும் காணப்படுவதாகக் கூறுவர்.
அந்தக்காலப்பகுதியில் புகையிலை வியாபாரம் பிரபல்யமானது. இருவகைப்புகையிலை உற்பத்தி செய்யப்பட்டது. இணுவில், தாவடி, சுன்னாகம் போன்ற பகுதிகளில் குடிபுகையிலை செய்கையும் வடமராட்சி மற்றும் தீவுப்பகுதிகளில் தட்டையன் புகையிலை, கூரன் புகையிலை (பாணிப்புகையிலை) என இருவகைப் புகையிலை உற்பத்தி செய்தனர். கூரன் புகையிலையை பதப்படுத்தி பனம் பாணியில் தோய்த்துப் பானம் செய்து தென்னிலங்கை மற்றும் ஹற்றன், நுவரெலியா, கண்டி போன்ற இடங்களிற்கு கொண்டு போய் விற்பனவு செய்து வருமானம் ஈட்டினர். பனைத்தொழில் புரிந்தோர் இப்புகையிலைச் செய்கையையும் மேற்கொண்டு தமது வருமானத்தைப் பெருக்கிக் கொண்டதாக அறிகின்றோம்.
அந்தக் காலப்பகுதியில் பனை ஓலைப் பொருட்கள் பாவனையில் காணப்பட்டன. பிட்டவிக்க நீற்றுப்பெட்டி, இடியப்பம் அவிக்க இடியப்பத்தட்டு, படுக்கப் பாய், நெல்களஞ்சியப்படுத்த நெற்பெட்டி, சந்தையில் மீன்வாங்க உமல், பொருட்கள் வாங்க ஓலையில் பின்னப்பட்ட பை (இதனைப் ‘பன்’ என அழைத்தனர்) நெல் குரக்கன் காயவிட கதிர்ப்பாய், வீட்டில் செய்யும் பலகாரம் என்பவற்றை பாதுகாத்து வைக்க மூடல் பெட்டி, மாகுழைப்பதற்கு தட்டுப்பெட்டி, நெல்பிடைக்க தூற்ற சுளகு, இதற்கு மேலாக வீடுவேய, வேலியடைக்க பனைஓல, வீடுகட்ட மரம் எல்லாமே பனையிலிருந்து பெறப்பட்டன.
மேற்கூறிய பனை ஓலை உற்பத்திகளை குறிப்பாக வடமராட்சி மக்கள் பெருமளவு மேற்கொண்டு நாட்டின் ஏனைய பகுதிகளில் விற்பனைக்கு விட்டது அறியக்கூடியதாக இருந்தது. மேசன் வேலை செய்வதற்கு மண் அளந்து போடுவதற்கு அளவு பெட்டி என ஓலையில் செய்து மேற்புறத்தில் நாரினால் பின்னப்பட்ட “நார்ப்பெட்டி” விற்பனவு செய்தனர். விவசாய நிலங்களிற்கு மாட்டெரு, கூட்டெரு குப்பை என்பவற்றை கொண்டு சென்று போடுவதற்கு ஓலையினால் பின்னப்பட்ட கடகத்தை விற்பனவு செய்தனர். ஒரு கணிசமான அளவான இதைத் தீவுக்கடகம் என அழைப்பர் அத்துடன் தீவுப்பகுதிகளில் புகையிலையினை சிறுசிறு கட்டுகளாக கட்டி நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு அனுப்புவர். அது “சிற்பம்” என அழைக்கப்படுகின்றது. அச்சிற்பத்தினைக் கட்டுவதற்கு பனையோலையில் செய்யப்பட்ட “சிற்பப்பாய்” உபயோகிக்கப் பட்டது.
பதநீர் உற்பத்தி செய்வதைவிட கள் உற்பத்தி செய்வது இலகு என்ற காரணம் சொல்லப்படுகிறது. இருந்தாலும் கள் உற்பத்தி செய்தால் கலால்வரி உண்டு. இது நாட்டிற்கும் வருமானம். இதனால் கள் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது எனவும் எண்ணலாம். இத்தொழிலைப் பிரதானமாகக் கொண்ட தொழிலாளர்கள் கள் உற்பத்தி செய்து தமது வருமானத்தை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கில் தமது வீடுகளிலும் கள் விற்பனவை மேற்கொண்டனர். இதனால் பெரும்பாலானவர்கள் தல்லாம் காசு, மற்றும் பண்டமாற்று மூலம் தமது விற்பனவை மேற்கொண்ட கதைகள் பல. ஆயினும் கள் விற்பனவு மூலம் அரசவருமானம் அதிகரித்ததால் இவ்வரியை பெற்றுக் கொள்வதில் அரசு கவனம் செலுத்தியது. இதனால் கள் உற்பத்தி அதிகரிக்கும் தேவை காணப்பட்டது.
அக்காலப்பகுதியில் கள் உற்பத்திகள் தவறணை மூலமாக விற்பனவு செய்யப்பட்டதாக அறிந்தோம். தவறணைகளைக் குத்தகைக்கு எடுக்கும் முதலாளிமார்கள் தமக்கென ஒரு கணிசமானளவு தொழிலாளர்களை வைத்திருந்தனர். அவர்களுக்கு சில நிபந்தனைகளையும் விதித்திருந்தனர். மரங்களைக் குத்தகைக்கு பெற்று கொடுத்து அதில் வரும் உற்பத்தி காலை மாலை இருவேளைகளிலும் தமக்கே தரப்படவேண்டும். வேறு யாருக்கும் கொடுக்கப்படக்கூடாது என நிபந்தனையுடன் தொழிலாளர்களை வழிநடத்தினர். தொழிலாளர்களும் தமது நிரந்தர வருமானத்திற்காக இத்தொழிலை முதலாளிகளின் நிபந்தனைக்கமைவாக செய்து வந்தனர். சில முதலாளிமார்கள் இத்தொழிலாளர்களுக்கு தீபாவளி, தைப்பொங்கல் போன்ற விசேட தினங்களிற்கு ஒரு சாரம் மற்றும் சிறுதொகைப்பணம் என்பன கொடுப்பர். பணம் பொதுவாக 50 ரூபா அல்லது 100 ரூபாக்கு உட்படத்தான் இருக்கும். தமது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கா விட்டாலும் முதலாளி தம்மீது அன்பும் கரிசனையும் கொண்டுள்ளார் என தமது மனதைத் தேற்றி வாழ்க்கை நடத்தினர் இத்தொழிலாளர்கள்.
இத்தொழில் செய்வோர் மேற்சட்டை அணிவதில்லை. இடுப்பில் கோவனத்துடன் கூடிய ஒரு துண்ட, நெஞ்சில் காலில் முறையே மாதோல், காதோல் என்பன அணிந்திருப்பர். இடைப்பட்டியில் அவர்களின் கத்திவைக்கும் ஏறுபெட்டி மற்றும் தளநார், வடக்கயிறு, காவுதடி என்பன கொண்டு செல்வர். நடந்துதான் தமது தொழிலை மேற்கொண்டனர். இவர்களுக்கெனத் தொழில்காப்புறுதிகளோ மற்றும் வேறு தொழில் பாதுகாப்பு வசதிகளோ இல்லாத நிலையே காணப்பட்டது. இதனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குரிய தொழிலாக இது அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தொழிலாளர்கள் மரமேறிகள், சீவல் தொழிலாளர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களின் பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் தந்தையின் தொழில் மரமேறி எனக் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தமது சிரமங்களை உணர்ந்து தொழிலாளரகள் தமது பிள்ளைகளைக் கல்வி கற்க ஊக்குவித்தனர். இது காலத்தின் தேவையாக அமைந்தது. பிள்ளைகளின் கல்வி கற்கும் நடவடிக்கைகளும் பல சவால்களை எதிர்கொண்டு இருந்ததாகவும் அறியக்கிடக்கிறது. இதனால் மதமாற்றங்கள் கூட ஏற்பட்டதாக அறிய முடிகிறது.
பல சோதனைகளுக்கு மத்தியிலும் தமது கல்வியினைத் தொடர்ந்து தேர்வுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்கல்வியினையும் பெற்றுத் தேறியவர்கள் பனைத் தொழிலாளர் சமூகத்திலும் காணப்பட்டனர். இத்தொழிலாளர்களின் குடும்பங்களிலிருந்து குறைந்தது ஒருவராவது அக்காலத்தில் கல்வி கற்றுத் தேறினர். இது அவர்கள் சமூத்தில் முன்னுக்கு வருவதற்கு உதவியாக அமைந்தது. கல்வி நிலை மேம்பாடடையும் போது ஒரு சமுதாயம் விழிப்படையும் என்பது வரலாற்று உண்மை. இது இத்தொழிலாளர்கள் வாழ்விலும் ஏற்பட்டது. கல்வியில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் ஆசிரியர்களாக, ஆங்கிலம், விஞ்ஞானம், தமிழ் கற்பிப்பவர்களாக பாடசாலைகளில் கல்வி போதித்தனர். வேறுசிலர் வைத்தியசாலையில் தாதியர் சிற்றூழியர் போன்ற தொழிலையும் ஒருசிலர் வைத்தியர்களாகவும் வந்து சேவையாற்றினர். இச்சமூகத்தில் உள்ளவர்கள் சித்தவைத்தியத்திலும் தேர்ந்தவர்களாக இருந்தனர்.
அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் மதுவரி மூலம் தென்னிலங்கையில் பெறும் வருமானம் போல் வடபகுதியிலும் பெறுவதற்கு வழிகளை ஆராய்ந்தனர். அதேவேளை சீவல் தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்காகவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. நீண்ட நாள் முயற்சிகளின் பலனாக 1972 ஆம் ஆண்டு அப்போது நிதியமைச்சராக இருந்த டாக்டர் N. M.பெரேரா அவர்கள் இத்தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டார் எனக் கூறலாம். அவருக்கு ஆதரவாக இலங்கை சமசமாசக் கட்சியின் யாழ்மாவட்டத் தலைவர் விஸ்வநாதன், செனட்டர் ஜி.நல்லையா, ஆங்கில ஆசிரியராகவும் யாழ் கச்சேரியில் பொதுசனத்தொடர்பு அதிகாரியாக இருந்த திரு.க.நடராசா என்போர் இருந்தனர். அவர்கள் நிதியமைச்சருடன் கலந்தாலோசித்து நல்ல திட்டங்களை முன் வைத்தனர். இத்தொழிலாளர்களுடைய முன்னேற்றத்தை தூரநோக்காகக் கொண்டு செயற்பட்டு அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டதால் பனைத்தொழில் வளர்ச்சியடைந்தது எனலாம்.
தியாகராஜா பன்னீர்செல்வம்
பனை அபிவிருத்திச் சபையின் ஓய்வுபெற்ற அதிகாரி
நிமிர்வு மார்கழி 2018 இதழ்
Post a Comment