ஈரான் போராட்டத்தின் முன்னணியில் பெண்கள்



குர்திஸ் இனத்தைச் சேர்ந்த மாசா அமினி தனது சகோதரனை சந்திப்பதற்காக புரட்டாதி 13, 2022 அன்று ஈரானின் தலைநகரான தெகிரானிற்கு வந்திருந்தார். அவர் அணிந்திருந்த ஹிஜாப் ஈரான் அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக தலைமயிரை முழுதாக மறைக்கவில்லை என்று மத ஒழுக்க நெறிகளை கண்காணிக்கும் அரச காவலர்களால் அவர் தளைப்படுத்தப்பட்டார். 

தளைப்படுத்தப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட வாகனத்திலேயே அவர் மீதான சித்திரவதைகள் ஆரம்பமாகி விட்டன.  அவருடன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஏனைய பெண்கள் அதனை உறுதிப்படுத்தி உள்ளனர். அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலும் அவர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது.

தளை செய்யப்பட்டு 2 மணித்தியாலங்களின் பின்னர் அவர் தெகிரானில் உள்ள கஸ்ரா (Kasra) வைத்தியசாலைக்கு மயங்கிய நிலையில் கொண்டு செல்லப்பட்டார்.  புரட்டாதி 16, 2022 அன்று நினைவு திரும்பாமலே மாசா அமினி இறந்து போனார். 22 வயதேயான மாசா அமினி இஸ்லாமிய சர்வாதிகார அரசினால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு விட்டார்.

புரட்டாதி 17 ஆர்ப்பாட்டக்காரர்கள் அமினிக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலையை முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பொலிஸ் வரவழைக்கப்பட்டது. கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.  மேலும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.  “பெண், வாழ்வு, சுதந்திரம்” (Woman, Life, Freedom) என்ற கோசங்களை முன்வைத்தவாறு ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன.

அரசாங்கத்தின் இரும்புக்கர அடக்குமுறைகளையும் மீறி நாடு முழுவதும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்களின் இந்த துணிச்சலான போராட்டங்களை விட அவற்றைத் தலைமை தாங்குபவர்களே உலகின் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். ஈரானில் மிகமோசமான அடக்குமுறைக்கு முகம் கொடுக்கும் பெண்களே அவர்கள். வடமேற்கு ஈரானில் ஐப்பசி இரண்டாம் வாரம் 15 வயது சிறுமி ஒருவர் தனது பள்ளியில் நடந்த சோதனையின் போது பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மாசா அமினியின் கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகினாலும், ஈரான் முழுவதும் அலை போல எழுந்துள்ள ஆர்ப்பாட்டங்கள், ஊழல் நிறைந்த அடக்குமுறை அரசை மாற்ற வேண்டும் என்ற தேசிய எழுச்சியை சுட்டி நிற்கின்றன.  ஈரான் மக்களை பல வழிகளிலும் துயரங்களுக்கு உள்ளாக்கி கொண்டிருக்கும்  ஆணாதிக்க அரசை மாற்ற வேண்டும் என்ற அபிலாசையை வெளிப்படுத்து நிற்கின்றன.

ஈரான் எங்கிலும் தகவல் தொடர்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அங்கிருந்து கசிந்து வரும் காணொளிகள் பெண்களின் துணிகரமான போராட்டங்களை காண்பிக்கின்றன. மிருகத்தனமான அடக்குமுறைகளைக் கையாளும் படைகளை அவர்கள் பின்தள்ளிக் கொண்டு முன்னேறுவதைக் காட்டுகின்றன. “சர்வாதிகாரிக்கு மரணம் வேண்டும்” (death to dictator) என்று அவர்கள் பகிரங்கமாக கோசமிடுவதை காட்டுகின்றன.

இந்தப் போராட்டம் திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. ஆண்டுக் கணக்காக ஈரானிய பெண்களை அரசு அடக்கியதின் விளைவே இந்த எழுச்சி. அதேவேளை அவர்களை அடக்கி வைப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்பதை இந்த எழுச்சி காட்டுகிறது.

1979 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய காலத்தில் இருந்து மத அடிப்படைவாத ஆட்சி பெண்களை குறி வைத்துக் கொண்டே இருக்கிறது.  ஈரானிய பெண்களின் வளர்ச்சி பழமைவாத முல்லாக்களின் அதிகாரத்துக்கு சவாலாக இருந்தது. ஆட்சியைக் கைப்பற்றிய ஓராண்டுக்கு உள்ளேயே பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.  மத ஒழுக்க நெறிகளை கண்காணிக்கிறோம் என்ற போர்வையில் பெண்கள் மீது அமிலம் தெளிப்பது, கத்தியால் குத்துவது என்று அரச காடையர்கள் வெறியாட்டம் ஆடத் தொடங்கினார்கள்.

அன்று ஈரானிலிருந்த முற்போக்கு எதிர்த்தரப்பாக இருந்த மக்கள் போராட்ட அமைப்பு (People’s Mojahedin Organization) இந்தச் சட்டத்தை வன்மையாக கண்டித்தது.  தாமாகவே விருப்பப்பட்டு தலையாடைகளை அணிந்து கொண்டிருந்த இந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அந்தப் போராட்டத்தில் முன்னிற்கு  நின்றார்கள். தமக்கு வேண்டிய ஆடைகளை அணிவதற்கு தமது சகோதரிகளுக்கு இருக்க வேண்டிய உரிமைக்காக அவர்கள் போராடினார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் 1980 களில் அரசாங்கத்தால் கொல்லப்பட்டார்கள்.

கட்டாயமாக தலைமறைப்பு ஆடை அணிய வேண்டும் என்ற சட்டம் பெண்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களில் ஒன்று மட்டுமே. ஈரானின் அரசியல் அமைப்பு பெண்களின் மதிப்பு ஆண்களின் மதிப்பின் பாதி மட்டுமே என்று கருதுகிறது. பலதார மணத்தை அனுமதிக்கிறது. மிலேச்சத்தனமான கௌரவக் கொலையை ஊக்குவிக்கிறது. சமூகத்தில் பெண்களுக்கு சமபங்கு கிடைப்பதை முற்றாக தடை செய்கிறது.

ஈரானின் பொதுமக்கள் சட்டக்கோவையின் 942 ஆவது சரத்து ஆண்கள் பல தாரங்களை மணக்கலாம் என்று சொல்கிறது. இந்த திருமணங்கள் நிரந்தரமானதாக இருக்க வேண்டுமென்பதில்லை, தற்காலிகமானவையாகவும் இருக்கலாம்.  மேலும் இந்த சரத்து ஆண்கள் பெண்களை விட இரண்டு மடங்கு சொத்துரிமை உடையவர்கள் என்று சொல்கிறது.  ஒரு ஆண் பல தாரங்களை மணந்திருந்தால் சொத்தில் பாதி அவருக்கும் எஞ்சியது மட்டுமே பல தாரங்களிற்கிடையே சமமாக பிரிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது.

அந்தச் சட்டக்கோவையின் ஏனைய சரத்துக்கள் பெண்களை ஆண்களின் பாலியல் அடிமைகள் என்பது போன்று காட்டுகின்றன. உதாரணமாக ஒரு 9 வயது பெண்பிள்ளை அவளது தகப்பனால் ஒரு திருமணத்திற்கு உட்படுத்தப் படலாம்.  அவள் கணவனின் அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போவதோ, வேலை செய்வதோ, வேறு இடங்களுக்கு பயணிப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.

1041 ஆம் சரத்து ஒரு பெண் பிள்ளையின் பாதுகாவலர் அனுமதிக்கும் பட்சத்தில் அப்பெண் பூப்படைய முதலே மணம் முடிக்க அனுமதிக்கப்படும் என்று சொல்கிறது. 1210 ஆம் சரத்திற்கு எழுதப் பட்டுள்ள குறிப்பு ஒன்றில் ஒரு பெண் முதிர்ச்சியடைந்தவளாக கருதப்படுவதற்கும் சட்டரீதியாக தனது முடிவுகளுக்கு பொறுப்புடையவளாக இருப்பதற்குமான வயது 9 என்று சொல்கிறது.  இது பெண்களை அதிகபட்சமான சமூக மற்றும் சட்ட ரீதியான தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வைக்கிறது.

ஈரானின் அரசியலமைப்பின் 2 ஆம் கோட்பாடு, “கடவுளுக்கு முன்னான பொறுப்புக்கூறலுடன் ஒரு ஆணின் கண்ணியம், உயர்ந்த மதிப்பு மற்றும் சுதந்திரம் என்பன பிணைந்துள்ளன.  இது நீதித்துறையின் தொடர்ச்சியான விளக்கத்தின் மூலம் புதுப்பிக்கப்படுகிறது.” என்பதை வலியுறுத்துகிறது.  இந்த கற்கால அரசியலமைப்பின் 10ஆம் கோட்பாடு “குடும்பம் என்பது இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படை அலகு என்பதால், அனைத்து சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் தொடர்புடைய திட்டமிடல் ஆகியவை குடும்பத்தை உருவாக்குவதற்கும், அதன் புனிதத்தைப் பாதுகாப்பதற்கும், இஸ்லாமிய உரிமைகள் மற்றும் நெறிமுறைகளின் அடிப்படையில் அதன் உறவுகளை உறுதிப்படுத்துவதற்கும் வழிநடத்தப்பட வேண்டும்.” என்கிறது.

இந்த ஆணாதிக்க சட்டங்கள் பயங்கராமான கௌரவக் கொலைகளுக்கு வழிவகுக்கின்றன. கடந்த மாசி மாதம் பட்டப்பகலில் குசஸ்தான் (Khuzestan) மாகாணத்தில் ஒருவன் தனது மனைவியை பொதுவிடத்தில் வைத்து கழுத்தை அறுத்துக் கொன்ற காணொளியை பார்த்து உலகமே அதிர்ந்தது. 17 வயதேயான மோனா ஹேடாரி இந்த கொடூரமான ஆணாதிக்க சட்டங்களுக்கு பலியாகிப் போனாள். ஈரானில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 375 தொடக்கம் 450 வரையான கௌரவக் கொலைகள் நடக்கின்றன. இந்தக் கொடூரக் கொலைகளில் ஈடுபடும் கணவர்களையோ தகப்பன்களையோ தண்டிக்காமல், கொலையாளிகளை தப்ப வைக்க ஈரானின் அரசியலமைப்பு வசதியளிக்கிறது.

ஒரு முஸ்லீம் ஆண் வேண்டுமென்றே ஒரு பெண்ணைக் கொன்றால் பழிக்குப் பழி என்ற கொள்கையின் படி அவர் கொல்லப்பட வேண்டும். ஆனால், இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 382 இன் படி, கொல்லப்பட்டவரின் பெற்றோர்கள் அந்த ஆண் செலவளித்த பணத்தில் பாதியை அவரது பெற்றோருக்குச் செலுத்தாத வரையில், அவர் கொல்லப்படமாட்டார். ஆனால், ஒரு பெண் தற்காப்புக்காக கூட ஒரு ஆணைக் கொன்றால், கொல்லப்பட்டவரின் பெற்றோரின் வேண்டுகோளின் பேரில் அவள் தூக்கிலிடப்படலாம்.

மாற்றத்தின் உந்துசக்தியாக பெண்கள்

அரசின் கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்கத்துக்கு ஈரானிய பெண்கள் பயந்து அடங்கிப் போகவில்லை.  அரசுக்கு எதிரான ஈரான் எதிர்ப்பு தேசிய பேரவை (National Council of Resistance of Iran) இல் பல துணிச்சல் மிக்க பெண்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்.  ஈரானில் அடிப்படை மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அவர்கள் போராடுகிறார்கள்.  இந்தப் பெண்களை அரசு பல வகைகளிலும் தொல்லைகளுக்கு உள்ளாக்கி வருகிறது. 1988 ஆம் ஆண்டு பலர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.  அவர்கள் தமது கரங்களை உயர்த்தியவாறு அரசுக்கு எதிரான கோசங்களை உரத்துச் சொல்லியபடி தூக்கு மேடைக்கு போனார்கள்.

இன்று நடக்கும் போராட்டத்திலும் பெண்கள் தமது பலத்தையும் தலைமையையும் வெளிக்காட்டுகிறார்கள். அரசின் கையாலாகத்தனத்தை வெளிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் ஆணாதிக்க அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒழுங்குபடுத்தி தலைமை தாங்குகிறார்கள்.

1996 ஆனி 21 இல் NCRI இன் தலைவராக தெரிவு செய்யப்பட்ட திருமதி மரியம் ராஜாவி லண்டனில் ஆற்றிய உரையில் ஈரான் பெண்களின் சக்தியைப் பற்றி பேசினார். அரசாங்கம் எதிர்பார்க்காத வகையில் அதற்கு சாவு மணியை பெண்களே அடிப்பார்கள் என்று அவர் சொன்னார்.

“உங்களுக்கு முன் பாலின பாகுபாட்டின் வரலாற்றையும் வலியையும் அனுபவித்த பெண்களும், எதிர்காலத்தைச் சேர்ந்த குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்களும் உங்கள் மீது தங்கள் நம்பிக்கையை வைத்துள்ளனர் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். சமத்துவம், அமைதி, ஜனநாயகம் மற்றும் வளர்ச்சி என்பவற்றை கொண்ட  பொற்காலமாக நமது வரலாற்றைத் திருப்பப் போவது நீங்கள்தான்.” என்று அவர் சொன்னார்.

“வெற்றி உங்களுக்கு முன்னால் உள்ளது. அது உங்களுக்கு சொந்தமானது, உங்களுக்காக காத்திருக்கிறது. ஆம், இன்றைய ஒடுக்கப்பட்ட பெண்கள் நாளைய வெற்றியாளர்கள். அவர்களின் குரல்கள் என்றென்றும் எதிரொலிக்கும்.” எனவே மாசா அமினியின் பெயர் ஈரானிய மக்கள் புரட்சி என்று பலர் நம்பும் ஒன்றின் குறியீடாக மாறுவதில் ஆச்சரியமில்லை. ஈரானிய பெண்கள் தங்கள் எதிர்ப்பை இரத்தத்தால் செலுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் இரத்தத்தால் எதிர்காலத்திற்கு மை தீட்டுகிறார்கள். ஈரானியப் பெண்கள் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் தடம் பதித்தவர்கள். 

பிரபல பிரெஞ்சு கவிஞரான அரகோர்ன் (Aragorn) ஒருமுறை எழுதினார்: “பெண்களே ஆண்களின் எதிர்காலம்.” இந்த ஒரு அற்புதமான தீர்க்கதரிசனத்தின் உண்மையான உருவகமாக ஈரானிய பெண்கள் இருக்கிறார்கள். ஈரானிய பெண்கள் தனிமனித சுதந்திரத்திற்காக மட்டும் போராடவில்லை. அவர்கள் தேசத்தின் அவலத்தையும் ஆளும் மதவாத ஆட்சிக்கு எதிரான அத்தேசத்தின் போராட்டத்தையும் அடையாளப்படுத்துகின்றனர். திருமதி ராஜாவி அவர்கள் கூறியது போல் மாற்றத்திற்கான சக்தி அவர்கள்.

நன்றி: www.ncr-iran.org

தமிழாக்கம் - நிமிர்வு 

கார்த்திகை 2022 நிமிர்வு இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.