ஆக்கிரமிக்கப்படும் குரகல ஜய்லானி மசூதி



இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரிலிருந்து அண்ணளவாக 24 கிலோமீற்றர் தூரத்தில் குரகல பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள முஸ்லிம்களின் மத முக்கியத்துவம் வாய்ந்த ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசம் பௌத்த சிங்கள அரசால் திட்டமிட்டு  ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் இமாம் சலீம் ருவிற்றரில் எழுதியுள்ள பதிவு வருமாறு,

எனது குடும்பத்தினருடன் இரண்டு தடவைகள் நான் குரகலவிலிருக்கும் ஜெய்லானி பள்ளிவாசலுக்கு (Jailani mosque) சென்று இருக்கிறேன். 

2017 இல் ஒரு தடவை, கடந்த வாரம் இரண்டாம் தடவை. இப்பிரதேசம் முஸ்லிம்களின் மத முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக 1953 ஆம் ஆண்டு சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இடமாகும். ஆனால், 2021 ஆம் ஆண்டுதொடங்கிய “பௌத்த மறுமலர்ச்சியால்” அப்பிரதேசம் இன்று தனது அடையாளங்களை இழந்து நிற்கிறது.

இந்த பள்ளிவாசல் ஒரு மலைக்குகையில் அமைந்துள்ளது. சமய மற்றும் சட்ட அறிஞரான அப்துல் காதர் ஐய்லானி (Abdul Qadir Jailani) என்ற துறவியின் பெயரில் இத்தலம் அமைந்துள்ளது.

ஆன்மீகத்தையும் இறைவனை உள்ளுணர்வால் உணர்ந்து கொள்வதனையும் போதிக்கும் சுபி இஸ்லாத்தை (Sufism) சேர்ந்த துறவி அவர். 12ஆம் நூற்றாண்டில் இந்த குகையில் 13 வருடங்களாக அவர் தியானத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

1953 இற்கும் நீண்ட காலத்துக்கு முன்னரேயே இந்த இடம் முஸ்லிம்களின் யாத்திரைத் தலமாக இருந்து வந்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் 3 ஆம் நூற்றாண்டில் இங்கு ஒரு பௌத்த பீடம் இருந்தது என்று சொல்லிக் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கியது. குரகலவை பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கான அழுத்தம் கோத்தாபய ராஐபக்ச சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அதிகரித்தது. 

கோத்தாபயவின் தேர்தல் பிரச்சாரம் அவரது சகோதரனை பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்க உதவிய சிங்கள பௌத்த பேரினவாதத்திலேயே தங்கியிருந்தது. 

2019 இல் அவர் சனாதிபதியாக வந்து 2 ஆண்டுகளின் பின்னர் ‘பௌத்த மறுமலர்ச்சி’ இப்பிரதேசத்தில் தொடங்கியது. அங்கு ஒரு பௌத்த விகாரையும் அமர்ந்த நிலையில் ஒரு சிங்கத்தின் சிலையும் 1.5 பில்லியன் ரூபாய்களில் கட்டப்பட்டுள்ளன. 



13 மாதங்கள் எடுத்து இந்த கட்டிடப் பணிகள் அன்பளிப்பு பணத்திலேயே நடந்ததாக கூறப்படுகிறது. 2022 வைகாசி 15 ஆம் திகதி ஒப்சேவர் (Observer) பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையில் இந்தப் பகுதி வேறு ஒரு தீவிரவாத மதப்பிரிவினரால் அன்று வரை ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததாகவும் இன்று அது விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

2017 இல், மசூதியைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. மசூதியின் பராமரிப்பாளர்கள் உட்பட சுமார் 30 பேர் மட்டுமே அதைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்தனர். 

நாங்கள் அன்று சென்ற அசல் பாதை பின்னர் மூடப்பட்டு விட்டது. அங்கு கட்டப்பட்டுள்ள பௌத்த தலத்துக்கு பேருந்துகளில் பெருவாரியாக மக்கள் வருகிறார்கள். அவர்களையும் கடந்து அந்த பௌத்த தலத்தின் ஊடாகத்தான் இப்போது நடந்து சென்று மசூதியை அடைய முடியும். போகும் வழியெல்லாம் உள்ள மரங்களில் பௌத்த பிக்குகளின் படங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஆயுதம் தாங்கிய பெருமளவான இராணுவத்தினர் காணப்பட்டார்கள். ஒரு சிறிய காவல் நிலையமும் இந்த இடத்துகென பிரத்தியேகமாக கட்டப்பட்டுள்ளது.

நாம் முஸ்லிம் கலாச்சாரப்படி ஆடைகளை அணிந்திருந்ததாலும் சிறிய எண்ணிக்கையில் இருந்ததாலும் அங்கிருந்தவர்கள் எம்மை ஒரு விதமாக பார்த்தார்கள். பௌத்த வளாகத்தை சுற்றி பாதி தூரம் நடந்தால், இடதுபுறத்தில் மசூதிக்கு செல்வதற்காக ஒரு சிறிய பாதை உள்ளது. 

இது புத்தமத தளத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ளது, மற்றும் ஒப்பீட்டளவில் அமைதியாகவும் இருக்கிறது. பௌத்த யாத்ரீகர்கள் சிலர் எப்போதாவது அங்கு வருகிறார்கள். அவ்வாறு மசூதியை பார்க்க வருபவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மசூதிக்கு கிடைக்கும் அன்பளிப்புகள் அதனைஓரளவு பராமரிக்க உதவுகின்றன. ஆனால், அதன் நீண்டகாலப் பேணுகை சந்தேகத்துக்கிடமானது.

கடந்த ஆண்டு பௌத்த வளாகத்துக்கு ராஜபக்சக்கள், சவேந்திர சில்வா, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் வருகை தந்துள்ளனர். இந்த வருகைகள் பௌத்த தலத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. 

இந்த நிகழ்வுகள் பற்றிய செய்திகளில் அங்கு இந்த மசூதி இருப்பதைப் பற்றி எந்த தகவலும் சொல்லப்படவில்லை. மசூதிக்கு அருகில் ஒரு தடைசெய்யப்பட்ட வலயம் இருக்கிறது. அங்கு புராதன பௌத்த பீடம் இருந்ததற்கான ஆதாரத்தை தேடி அகழ்வாய்வு செய்ய அதிகாரிகள் முயற்சித்து இருக்கிறார்கள். 

அங்கு அவர்களால் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் போனதால் முயற்சியை கைவிட்டு இருக்கிறார்கள். இவ்வாறாக மசூதி மீது எடுக்கப்படும்ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க முடியாத கையறு நிலையில் மசூதி நிர்வாகத்தினர் இருக்கின்றனர்.

இந்த ஆண்டு பங்குனி மாதம், பல உள்ளூர் முஸ்லிம் அமைப்புகள், தொல்லியல் துறையால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட போதிலும், மசூதியின் நுழைவாயில் மற்றும் பிரதான கொடிக்கம்பம் இடிக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்து அரசுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டன. 

மசூதியிலிருந்து கீழே இறங்கும் வழியில், ஒரு அலுவலகத்தில் உள்ள பதிவுபுத்தகத்தில் பல ஆண்டுகளாக அங்கு வந்தவர்களின் பதிவுகளை காணலாம். அப்பதிவுகளில் பெரும்பாலானவை அஞ்சலி மற்றும் பக்தியை வெளிப்படுத்துவதை விட மசூதியைப் பார்க்கக் கிடைத்ததனால் ஏற்பட்ட நிம்மதியின் உணர்வை வெளிப்படுத்துகின்றன. 

அதாவது மசூதியின் அழிவுக்கான நேரம் நெருங்கி வருகிறது. அதற்கு முன்னதாக தம்மால் சரியான நேரத்தில் அங்கு வருவதற்கான பாக்கியம் கிடைத்ததாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. 

ட்விட்டரிலிருந்து iman @imansaleeem கார்த்திகை 11, 2022

நிமிர்வு கார்த்திகை 2022 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.