நிகழ்நிலை காப்பு சட்டமூலம் – கருத்துரிமைக்கு சாவுமணி

 


பொருளாதார ரீதியாக மீள எழ முடியாமல் தவிக்கும் இலங்கை அரசு இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களின் பேச்சு சுதந்திரத்தை முடக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் 24.01.2024 புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் நாடாளுமன்றில் சமர்ப்பித்த அச்சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அச்சட்டமூலம் ஊடாக அரசாங்கத்தை விமர்சிக்கும் அறிக்கைகள், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் இடுகைகள் உள்ளிட்டவற்றை வெளியிடும் நபர்கள் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடர வழிவகை செய்யும். அவற்றை அகற்ற இணைய சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிடுவது உட்பட, பரந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்ட ஒரு ஆணையத்தை அரசாங்கத்தினால் அமைக்க முடியும்.

அச்சட்டமூலம் இணைய வழித்துன்புறுத்தல், துர்நடத்தை மற்றும் மோசடி ஆகியவற்றுக்கு எதிராகப் பாதுகாப்பை வழங்குகிறது என்று சொல்லப்படுகிறது. அரச தலைவரால் நியமிக்கப்படும் குழுவே போலிச்செய்திகள், தகவல்கள் எவை என்பதைத் தீர்மானிக்கும். ஆணைக்குழு நியமித்த நிபுணர்களுக்கு சந்தேக நபர்களின் வளாகத்துக்குள் நுழைந்து சோதனையிட அதிகாரம் அளிக்கப்படும். சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு அதிக அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த 23.01.2024 செவ்வாயன்று இந்த சட்ட மூலத்தை விவாதத்திற்கு சமர்ப்பித்தது. அதன் பிறகு  225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

குறித்த சட்டமூலமானது  கருத்து சுதந்திரத்தை அடக்குகின்றது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்தனர். ஊடகவியலாளர்கள், மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இதனை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பிரதிப்பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இந்த ஆண்டு இறுதியில் இலங்கை நாடாளுமன்றம் மற்றும் அரசதலைவர் தேர்தல்களுக்கு தயாராகி வரும் நிலையில், இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையைக் கடுமையாக அச்சுறுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம், இந்தச் சட்டம் கிட்டத்தட்ட அனைத்து வகையான சட்டபூர்வமான வெளிப்பாட்டையும் குற்றமாக்கக் கூடும். இது கருத்துச் சுதந்திரத்தின் மீது பெரும் விளைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது என்று கூறியுள்ளது.

அப்பிள், அமேசான், கூகுள் மற்றும் யாஹூவை உறுப்பினர்களாகக் கொண்ட ஆசிய இணையக் கூட்டமைப்பு, இந்த சட்ட மூலம் இலங்கையின் எண்ணியல் (digital) பொருளாதாரத்தில் சாத்தியமான வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று கூறியுள்ளது.

இலங்கை நிபுணத்துவ இணைய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் (Sri Lanka Professional Web Journalists Association) செயலாளர் கலும் ஷிவாந்த, இந்தச் சட்டமூலம் அவர்கள் எவ்வாறு தமது பணியை மேற்கொள்வதைப் பெரிதும் பாதிக்கும் எனத் தெரிவித்தார்.

இணையவழி ஊடகத்தை நடாத்தும் அல்லது பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சுய தணிக்கையை நாடலாம் அல்லது அவர்களின் செய்தி வலைத்தளங்கள் கூட மூடப்படலாம், என்று அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலான இணையவழி மோசடி, துஷ்பிரயோகம் மற்றும் தவறான அறிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு இது தீர்வு காணும் என்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கூறினார். பாலியல் துஷ்பிரயோகம், நிதி மோசடிகள், இணையத் துன்புறுத்தல் மற்றும் தரவு திருட்டு உள்ளிட்ட இணையக்  குற்றங்கள் தொடர்பாக கடந்த ஆண்டு 8,000 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டைத் தாக்கிய மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னமும் மீளவில்லை. உணவு, எரிபொருள், மருந்துப்பொருள்கள் நெருக்கடி மற்றும் பிற தேவைகளுக்கு கடுமையான பற்றாக்குறையை அந்த பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பொதுமக்களின்கடுமையான எதிர்ப்புகள் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்ற வழிவகுத்தது.

அதனைத் தொடர்ந்து வந்த ரணில் அரசாங்கம் தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகங்கள் மீது புதிய உயர் வரிகளை விதித்துள்ளது. எரிசக்திக் கட்டணங்களை உயர்த்தி உள்ளது.

இவற்றால் பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது. இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தலை நாடு எதிர்கொள்ளவுள்ள நிலையில் பொதுமக்களின் அதிருப்தி மேலும் அதிகரித்து இரண்டாம் அரகலய போன்ற போராட்ட வடிவங்களுக்கு செல்லும் நிலை வரலாம் என்பதாலேயே ரணில் அரசாங்கம் இணையம் மற்றும் சமூகவலைத்தளங்களில் கருத்து சுதந்திரத்துக்கு கடிவாளமிடும் இப்படியான மோசமான சட்ட மூலங்களை கொண்டு வருவதாக சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.    

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை எதிர்க்கும் பொதுமக்கள்  

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பொதுமக்கள் முற்றாக நிராகரிக்கின்றமை மாற்றுக்கொள்கை நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவான சமூக சுட்டி (social indicator) நடாத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.  நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அறிந்துள்ளதாக 28.4 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை 71.1 வீதமானவர்கள் தாங்கள் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த இந்த சட்டமூலம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நாட்டிலே ஊடக சுதந்திரத்தை, ஒரு பொதுமகனின் கருத்து சுதந்திரத்தை கூட இந்த அரசாங்கம் பறித்தெடுத்து கொண்டு இருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை ஒடுக்க இவ்வாறான சட்டங்களை நடைமுறைபடுத்தி அவர்களை கைது செய்கின்ற தொலைதூர நோக்கோடு இந்த அரசு செயற்பட்டு வருகின்றது. இவர்கள் ஒருபொழுதும் தமிழர்களுடைய அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், வடக்கு கிழக்கில் அத்துமீறி நிகழுகின்ற குடியேற்ற திட்டங்கள், திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் என்பவற்றை நிறுத்தப் போவதில்லை. எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாம் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு ஆகவேண்டும் என்பது வரலாற்று உண்மை.

இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாள் ஒரு கரிநாள் என்பது சிங்கள மக்களுக்கும் பொருத்தமானதே. இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கும் எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணமே உள்ளன. இதனை அனைத்து தரப்புக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதனால் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள் தான் - நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி 

நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம் மூலத்தால் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள் தான். இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் 30, 40 ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனைக்கு எதிராக ஒரு பாரிய கடையடைப்பு போராட்டம் அல்லது ஹர்த்தால் அறிவித்தால் அந்த அறிவித்தலை வழங்குபவர்களை இந்த நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

அதே போல 15 வருடங்களாக காணாமல் போன எமது உறவுகளுக்காக தாய்மார்களும், உறவினர்களும் வீதி வீதியாக, 2000 க்கும் மேற்பட்ட நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களைக்கூட இந்த சட்டமூலத்தினூடாக கைது செய்யக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

அரசாங்கத்தால் வடக்கு, கிழக்கில் காணப்படும் மக்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காக அங்கு பெரும்பான்மை சமூகத்தினரை மேலும் அதிகரிக்க சட்ட விரோத குடியேற்ற வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. அவற்றை எதுர்த்து கரத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இது பாரதூரமான, ஜனநாயகத்தை மறுக்கக் கூடிய சட்டமூலம்  - நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் எம்.பி 

ஏற்கனவே சர்வதேச மட்டத்தில் உதவியை கேட்டுக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு, அந்த சர்வதேச அமைப்புக்களினுடைய உதவிகள் வராமல் பண்ணுவதற்கு இந்த சட்டமூலம் வழியேற்படுத்தப் போகின்ற ஆபத்துக்கள் உள்ளன என்ற நிலையிலும், இது பாரதூரமான, ஜனநாயகத்தை மறுக்கக் கூடிய சட்டமூலம் என்று விமர்சனங்கள் இருக்கக் கூடிய நிலையிலும் அவசர அவசரமாக ஏன் அதனை நிறைவேற்றுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு காரணம் - அந்த பாரதூரமான ஜனநாயக விரோத செயல்பாடுகளை செயற்படுத்துகின்ற சட்டத்தை தான் நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதேயாகும்.

அப்படிப்பட்ட சட்டமூலத்தைக் கொண்டு வந்தால் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஜனாதிபதியும், மக்களால் நிராகரிக்கப்பட்ட அமைச்சரும், மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள இந்த சபையும், மக்களின் உண்மையான கருத்துகளை வெளிவராமல் தடுத்து - உண்மையான விவாதங்கள் நடத்துவதற்கு அனுமதிக்காமல் இறுக்கி - அடுத்த தேர்தலுக்கு முகங்கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.

அப்படிப்பட்ட இருண்ட யுகத்தை உருவாக்கி அடுத்த தேர்தலுக்கு முகங்கொடுத்தால் நீங்கள் வெல்லலாம் என்று கருதுகிறீர்கள். ஆனால் - அது நிச்சயமாக நடக்காது. 

ஜனநாயகத்தை சீர்குலைத்து கருத்து முரண்படுவோரை முடக்க முயற்சி  - நாடாளுமன்றில் ரவூப் ஹக்கீம் எம்.பி 

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தை சீர்குலைத்து கருத்து முரண்படுவோரை முடக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது. இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை அரசாங்கம் நெரிக்க எத்தனிக்கிறது. இதை நாங்கள் மிக கவனமாக நோக்க வேண்டும்.

இந்த நாட்டின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தில் எஞ்சியுள்ள சில காப்பீடுகளையும் கூட அப்புறப்படுத்துவதற்கு இந்த சட்டத்தின் ஊடாக அரசாங்கம் எத்தனிக்கின்றது அத்துடன் இந்த நாட்டில் ஜனநாயகத்தை அழித்தொழிக்கப் போகின்றது. மக்களின் விமர்சனத்திற்கு அஞ்சி அரசாங்கம் மக்களை விட்டும் விரண்டோடுகின்றது. அந்த விமர்சனங்களை கட்டுப்படுத்துவதற்காகவே இப்பொழுது இந்த சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளது.

கடுமையான தண்டனைகள் விதிக்கப்படப் போகின்றன மக்களை நசுக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்படப் போகின்றது. நிறைவேற்று அதிகாரம் அதனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெளிவாக்கியுள்ளது.

ஜனநாயக விழுமியங்களை ஆபத்தில் தள்ளும் - எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்

சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களின் கோரிக்கைகளை உள்ளடக்காமல் பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் சாத்தியமான தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.

ஜனநாயக விழுமியங்களை ஆபத்தில் தள்ளுவதுடன் தெளிவற்ற மற்றும் மிகையான கடுமையான சட்டங்கள் முதலீடு மற்றும் எண்ணியல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் என்பதுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறும், எந்தவொரு சட்டமும் மக்களின் குரல்களை நசுக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் இலங்கையை அமெரிக்கா வலியுறுத்துகிறது.

குடிமக்கள் சமூகத்துக்கு எதிரான நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் - இலங்கை திருச்சபையின் யாழ் குருமுதல்வர் திருவருட்பணி SDP செல்வன்

நிறைவேற்றப் பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் எவ்வளவு தூரம் எங்களுடைய உரிமைகளை தடுக்கின்றது, மனிதத்தோடு வாழ்வதற்கு அச்சுறுத்தலாகின்றது என்பதை நாங்கள் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாக இருக்கின்றது. இது தவறு என்று ஏற்கனவே இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் 27.09.2023 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஏனென்றால் இது நாங்கள் எங்கள் உரிமைகளோடு யதார்த்தத்தில் வாழும் சந்தர்ப்பத்தை இல்லாமலாக்குகின்றது என்பது மிகவும் முக்கியமானது. இங்கே நாங்கள் சில கேள்விகளை கேட்க வேண்டி இருக்கின்றது. சமூக ஊடகங்களின் சுதந்திரமான செயற்பாட்டை முழுமையாக நிராகரிப்பது பொருத்தமானதா? ஊடகவியலாளரின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு நாம் கொடுக்கும் பெறுமதி என்ன? ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட ஒரு ஆணைக்குழு சட்ட அதிகாரம் அனைத்தையும் தங்களுடைய கரங்களிலே எடுத்துக் கொண்டு செயற்படுவது பொருத்தமானதா? இது ஜனநாயகமா? இந்த நிகழ்நிலை ஒழுங்குக்கு அமைய பயனாளர்களுடைய அடையாளங்கள் கூறப்படும். ஆகவே அவ்வாறு அடையாளங்கள் கூறப்பட்டால் அவர்களுடைய தனிமனித உரிமைக்கு என்ன நடக்கும்?

பாதுகாப்பிற்கு என்ன நடக்கும்? இன்று நாட்டிலே வளர்ந்து வருகின்ற எண்ணியல் (digital) ஊடக தொழில்வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம்? எத்தனையோ பேர் இதனை தங்கள் வாழ்வாதாரமாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இது அச்சுறுத்தலாக வந்துள்ளது.

ஆகவே இந்த நேரத்திலே இதற்கு எதிராக 51 வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டன. அப்பொழுது உச்ச நீதிமன்றம் அங்கே சொல்லி இருக்கிறது, சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று. அந்த திருத்தங்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்தார்களோ என்பது தெரியாது. என்னென்ன திருத்தங்கள் என்பது கூட மக்களாகிய எங்களுக்கு தெரியாது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட தெரியுமோ தெரியாது.

இதிலே நாங்கள் ஒரு விடயத்தை ஆழமாக பார்க்க வேண்டும். பாராளுமன்றத்தில் உள்ள ஒரு பிரச்சனையைமு பார்க்க வேண்டி இருக்கிறது. அது என்னவென்றால், ஒரு சட்ட மூலம் வருகின்ற பொழுது அது சட்டமாக்குவதற்கு போதுமான அவகாசம் இருக்கிறதா என்ற பிரச்சனை இருக்கிறது. எல்லா சட்ட மூலங்களும் எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

வெளிப்படைத்தன்மையோடு வருகின்ற பொழுது தான் அது விவாதிக்கப்பட்டு முறையான முன்னெடுப்பிற்கு போகும். ஆகவே இந்த முறையே பிழை. 

இந்த நிகழ்நிலை காப்பு சட்டமூலம் கொண்டு வரப்பட்ட முறையே பிழை. அதனுடைய உள்ளடக்கமும் பிழையே. எல்லோருக்கும் தெரிய வேண்டும். ஜனநாயகத்திற்கு இடம் இல்லை. மனித உரிமைகளுக்கு இடம் இல்லை. அத்தோடு இந்த நிகழ்நிலை காப்பு சட்டத்திலே சில சரத்துகள் சமயங்களை பற்றி சொல்கிறது. சமயங்களின் உரிமைகளை பற்றி சொல்கிறது. ஒரு சமயம் வழிபடுகின்ற பொழுது அல்லது அவர்கள் ஒரு கூட்டத்தை வைக்கின்ற பொழுது இன்னொரு சாரார் அதற்கு எதிராக ஒன்றும் கதைக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. இதை வெளியாக பார்த்தால் எல்லாம் நல்லதாக தெரியலாம் ஆனால் ஆழமாக பார்க்கின்ற பொழுது தான் உள்ள பிரச்சனை தெரியும்.

எங்களுடைய குருந்தூர் மலை பிரச்சனையை எடுத்துக் கொண்டால் அங்கே ஏற்கனவே சைவ சமயம் தான் இருந்தது. அது அவர்களுடைய புனித இடம். ஆனால் அதற்கு பிறகு பௌத்தர்கள் தங்களுடைய புனித இடமாக்க பார்க்கிறார்கள். அப்படி பார்க்கிற அதனுடைய அவர்களுடைய வழிபாட்டு செயற்பாட்டினை பார்க்கின்ற பொழுது சைவசமயத்தை சேர்ந்தவர்கள் கொஞ்ச பேர் சென்று இது தவறு என்று சொன்னால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். ஏனென்றால் ஒரு சமய நடவடிக்கையை அவர்கள் சீர்க்குலைத்தார்கள் என்ற சரத்து தான் அங்கே வரும். ஆனால் அது அல்ல உண்மை.

அதேபோல இன்னொரு சரத்திலே இந்த மெய்நிகர் வழியாக வருகின்ற ஒரு செய்தி யாருக்கும் காயத்தை ஏற்படுத்தினால் அது பிரச்சனை என்று சொல்லப்படுகின்றது. யாருக்கு காயம் எப்படி வருமென்று எப்படி முடிவெடுப்பது? அதற்கு சட்டமூலங்கள் வருகின்ற பொழுது வரைவிலக்கணங்கள் வேண்டும். இந்த கருத்துடைய வரைவிலக்கணம் இதுதான்.

இதனுடைய விளக்கம் இதுதான் என்று சொல்லப்பட வேண்டும். ஆனால் அது இங்கே சொல்லப்படவில்லை. வரைவிலக்கணங்கள் இல்லாதபடியால் இதிலே என்ன கருத்தோடு எதை வைத்து பார்க்கப்படுவது என்பது பாரிய பிரச்சனையாக இருக்கின்றது.

ஆகவே இந்த நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மீளப்பெற வேண்டும். அதை வைத்துக் கொண்டு நாங்கள் எதுவும் செய்ய முடியாது. பிரதானமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான ஒரு பொறுப்பு இருக்கிறது. அவர்கள் இதைப்பற்றி ஆழமாக விவாதித்து இது அர்த்தமில்லாதது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அல்லது திருத்தங்கள் கொண்டு வருவது என்றால் என்ன என்ன திருத்தம் கொண்டு வரலாம் என்பதை விவாதிக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலே எந்தவொரு திருத்தமும் கொண்டு வந்து இதனை சரிப்படுத்தலாம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றம் திருத்தத்தை கொண்டு வரலாம் என்று சொல்லி இருக்கிறது. எனவே அந்த திருத்தங்கள் என்ன என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்.

இதைப்பற்றி கதைக்கின்ற பொழுது பலரும் சொல்ல பார்ப்பது நிகழ்நிலை ஊடகங்களின் வழியாக பெண்கள், சிறுவர்கள் போன்றாருக்கு எதிராக வன்முறை இழைக்கப்படுகின்றது,

அல்லது காசு மோசடிகள் நடக்கின்றது என்பதை. அவற்றை கையாள்வதற்கு எங்களிடம் வேறு சட்டங்கள் இல்லையா? இருக்கின்ற சட்டங்களை நாங்கள் பாவிக்கலாம் தானே? அவற்றை விட்டுவிட்டு இந்த சட்டத்தினூடாக தான் இதனை பார்க்க வேண்டும் என்று முனைகிறோம். 

ஆகவே இந்த நிகழ்நிலை காப்பு சட்டம் எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல. இங்கே சொல்ல வேண்டிய மிகவும் முக்கியமான ஒன்று, எங்களிடம் இன்று இருப்பதாக சொல்லப்படுகின்ற உரிமைகள் கூட இதனாலே பறி போய்விடும். ஆகவே இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் எங்களுடைய நிகழ்கால அரசியல் அமைப்பின் கடுமையான முரண்பாடுகள் இதிலே இருக்கிறது.

குறிப்பாக அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் இறையாண்மை, மக்களின் நீதித்துறை, அதிகாரம் என்பவற்றை இந்த சட்டம் மீறுகிறது. அத்துடன் தெளிவற்ற தன்மை பிரச்சனையாக உள்ளது. முறையான வரைவிலக்கணங்கள் இல்லாததும் இன்னொரு பிரச்சனை. சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மத சுதந்திரம் ஆகியன கூட அடிப்படையிலே உத்தரவாதம் இல்லாமலாக்கப்படுகின்றன. ஆகவே குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பேணப்படுவதற்காகவும் அவர்கள் கருத்துகளை வெளியிடுவதற்கு சுதந்திரம் இருப்பதற்காகவும் பேச்சு சுதந்திரம், வெளிப்படுத்தும் சுதந்திரம் போன்றவற்றிற்காகவும் அவர்கள் விரும்புகின்ற ஒரு தொழிலை சுதந்திரமாக செய்வதற்காகவும் இந்த சட்டம் இல்லாமலாக்கப்பட வேண்டும்.

முழுமையாக இதனை பார்த்தால் இது ஜனநாயகத்திற்கு எதிரானது, வாழ்வாதார முயற்சியுடையோருக்கு எதிரானது. ஆகவே இவற்றை நாங்கள் தவறு என்று சொல்வதும் சமய விழுமியங்களின் படி பொருத்தமற்றது என்பதை சொல்வதும் தான் மிகவும் முக்கியமானது. எங்களுக்கு இருக்கின்ற சுதந்திரத்தை நாங்கள் எந்த அடிப்படையிலும் விட்டுக்கொடுக்க முடியாது. எங்களுக்கு சட்ட ரீதியாக இருப்பதாக சொல்கின்ற சுதந்திரம் கூட உண்மையில் யதார்த்தத்தில் இல்லை. இது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் பொழுது சட்ட ரீதியாகவே எங்களை கட்டி வைப்பதற்காக தான் இந்த நிகழ்நிலை காப்பு சட்டம் வந்துள்ளது. 

அது ஊடகத்துறை உட்பட நீதியை, உண்மையை கதைக்க முடியாமல் செய்ய போகின்றது. இது மிகவும் ஆபத்தானது. எங்களுடைய பேச்சு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் எல்லாம் பறிக்கப்பட்டால் நாங்கள் இயந்திரங்களாகப் போகிறோமா? நிகழ்ச்சி நிரல் செய்து வைக்கப்பட்டதை மட்டும் கதைத்து கொண்டிருக்கின்ற இயந்திரங்கள் ஆக்கப்படப் போகிறோம் என்றால் அது எந்தவிதத்திலும் பொருத்தமற்றது. ஆகவே இப்படிப்பட்ட முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம்.

மக்கள் போராட்டங்களை முடக்குவதற்கு இது கட்டாயம் பாவிக்கப்படும். ஜனநாயக வெளியிலே நாங்கள் சொல்ல வேண்டியவற்றை சொல்ல முடியாமலும் முடக்கப்படுவோம்.

ஆகவே இதனை சட்டத்திற்கு அப்பாலே மக்கள் போராட்டமாக நாங்கள் இதை பார்க்க வேண்டும். வெளிநாட்டு மனித நேய அமைப்புக்கள், உள்நாட்டு அமைப்புகள் பல சமய தலைவர்கள் எல்லோருமே இது தவறு என்று சொல்லி இருக்கிறார்கள். கடந்த புரட்டாசி மாதம் இந்த சட்ட முன்மொழிவு வந்ததிலிருந்து பல தரப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பலதரப்பினரும் சேர்ந்து தவறு என்று சொல்வது தொடர்ந்து நடைபெற்று கொண்டு வந்திருக்கிறது. தற்போது மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த நாட்டில் மக்களின் அபிலாசைகளுக்கு இடமில்லை என்று மீண்டும் ஒரு முறை ஆட்சியாளர்கள் முகத்தில் அறைந்து சொல்லி இருக்கிறார்கள்.

தொகுப்பு - துருவன்

நிமிர்வு தை 2024 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.