எழுச்சியை ஏற்படுத்தக் கூடிய சமூக அரசியல் கட்டமைப்பே தேவை

 


இன்று ஈழத்தமிழர் மத்தியில் தலைமை பற்றிய ஒரு தேடல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது தமக்கு நல்லவரும் வல்லவருமான ஒரு தலைமை தேவை என்ற ஒரு தேடல் ஏற்பட்டிருக்கின்றது. 2009 க்கு பிறகு செயல் முனைப்பற்று இருந்த சமூகம், தங்களுக்கு ஒரு தலைமை தேவை என்று தேடுகின்றது. அந்த வகையில் தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் ஒரு செயல் முனைப்பான நிலைக்கு வந்துள்ள மாதிரியான ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இந்த இனம் சிதைந்து போகின்ற போது, இந்த இனத்தில் பல சீரழிவுகள் ஏற்பட்டு, இளைஞர்கள் போதைவஸ்து பண்பாட்டு சீரழிவுகளில் ஈடுபட்டு ஒரு அழிவின் விளிம்புக்கு வந்துள்ள ஒரு நிலையில் அவர்கள் போராட்ட காலகட்டத்தை நினைத்து பார்க்கிறார்கள்.

“அந்த காலம் ஒரு பொற்காலம்” என்று பல இடங்களில் மக்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். பல கஷ்டங்களை அனுபவித்தாலும் தாங்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் அது என்று அவர்கள் கூறுகின்றார்கள். தங்களை பொறுப்பெடுப்பதற்கு ஒரு தலைமை இருந்தது. நேர்மையான சமூகத்திற்கு தேவையான ஒரு பயனை தரக் கூடிய நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் விளங்கிய வீரர்கள் அந்த சமூகத்தில் இருந்ததை அந்த சமூகம் நினைத்து பார்க்கின்றது. 

அந்தவகையில் தான் இந்த துவாரகா பற்றி வருகின்ற விவாதங்களையும் நாங்கள் நினைத்து பார்க்க வேண்டும். அவர்கள் ஒரு தலைமையை தேடுகின்றார்கள். ஏனென்றால் 2009 க்கு பின்னர் அரசியல் தலைமைகள் என்று வந்தவர்களால் நாங்கள் ஏமாற்றுப்பட்டு விட்டோம்.

அவர்கள் நேர்மையற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்களால் 13,14 வருடத்தில் எதுவும் எங்கள் சமூகத்தில் விளையவில்லை என்ற நிலையில் தான் அவர்கள் இந்த தலைமையை தேடுகின்ற ஒரு நிலைக்கு வந்திருக்கிறார்கள். இதை நாங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

உண்மையில் இந்த தலைமையை தேடுகின்ற போது இரண்டு விடயங்கள் அங்கு முதன்மைப்பட்டு வருகின்றன. ஒன்று நேர்மையான தலைமை, நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் விளங்குகின்ற ஒரு தலைமை. இரண்டாவது செயல்முறையும் வழிமுறையும். ஒரு நேர்மையான தலைமை.

ஆயுதப்போராட்டத்தின் பின்னர் அந்த வழியை மாற்றிக் கொண்டு அற வழியில் போராடி எங்கள் உரிமைகளை பெறும் தலைமை. அந்த ஓர் எண்ணப்பாடு நிறைய தமிழ் மக்கள் மத்தியில் அரும்பு விட தொடங்குகின்றது. இது ஏனென்றால் 2009க்கு பிறகு நடந்தது என்ன என்பதை யோசித்து பார்க்கும் பொழுது புரியும். 2009 இல் ஒரு பெரிய இனப்படுகொலை நடக்கின்றது. தமிழர்களின் பாதுகாப்பு அரண் அடித்து உடைக்கப்படுகின்றது. 

ஆனால் அதற்கு முன்னர் இருந்த ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் ‘பொங்கு தமிழ்’. அந்த வழியிலே நாங்கள் தொடர்ந்து சென்றிருக்க முடியும். தமது பாதுகாப்பு அரண் உடைக்கப்பட்டதனால் அதிர்ச்சிக்குள்ளான மக்களை ஆற்றுப்படுத்தி ஒரு வலுப்பெற வைத்து நாங்கள் தொடர்ச்சியாக முன்னேறி சென்றிருக்க முடியும். அதனை எமது தலைமைகள் செய்யவில்லை. ஆனால் நடந்தது என்னவென்று பார்ப்போம்.

அந்த 2009 இனப்படுகொலையை சர்வதேச ஆளும் வர்க்கங்களும் சிங்கள ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து நடத்துக்கின்றன. இந்த தமிழ் சமூகம் வேர்கள் நீண்டு நீண்டு செல்கின்ற ஒரு பாரம்பரிய இனம். அந்த இனம் மீண்டும் ஒன்று திரண்டு எழும். எனவே அவர்களது இனம் ஒன்று திரண்டு எழக்  கூடாது என்பது சர்வதேச ஆளும் வர்க்கங்களின் எண்ணமாக இருக்கின்றது. இதில் ஒரு விடயத்தை நாங்கள் நினைத்து பார்க்க வேண்டும். 

சர்வதேச ஆளும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு பிரதிநிதி 2009 க்கு பிறகு எங்களுக்கு கூறியது என்னவென்றால், ‘இனி நீங்கள் தேவையில்லை, சம்பந்தர் போன்ற ஆட்களே எங்களுக்கு தேவை.’ அதாவது பழையதின் தொடர்ச்சி இனி வேண்டாம். இனி ஒரு புதிய முறையிலே நாங்கள் போகப் போகின்றோம். இந்த இனம் மீண்டும் எழாத முறையிலே நாங்கள் போகப்போகின்றோம், அதற்கு சம்பந்தர் எங்களுக்கு தேவை என்று அவர்கள் கூறுகின்றார்கள். சம்பந்தர் வந்த உடனே என்ன செய்கிறார் என்றால் பாராளுமன்றத்திலே மகிந்த ராஜபக்சவிற்கு அந்த இனப்படுகொலையை நிகழ்த்தியதற்கு நன்றி தெரிவிக்கின்றார்.

நன்றி தெரிவிப்பது மட்டுமல்ல விடுதலைப்புலிகள் சர்வாதிகாரமாக இருந்ததால் அவர்களாகவே அழிந்தார்கள் என்று கூறியும் ஒரு சான்றிதழ் கொடுக்கிறார். அந்த தலைமை பற்றிய எண்ணத்தை கைவிடுங்கள் என்று தமிழ் மக்களுக்கு சொல்கிறார். மறுபக்கம் சிறிலங்காவிற்கு உரிய சிங்க கொடியை அவர் உயர்த்தி பிடிக்கின்றார்.

இதில் இரண்டும் வருகின்றது. அதாவது தலைமையும் வருகிறது, வழிமுறையும் வருகிறது. அந்த தலைமை வேண்டாம் இனி தாங்கள் தான் இதை நடத்த போகின்றோம் என்பதை அவர் கூறுகின்றார். இரண்டாவது, வழிமுறை என்னவென்றால், ஒரு சிங்கள பேரினத் தன்மைக்குள் நாங்கள் அடங்க போகின்றோம், அதை தான் நாங்கள் தூக்கி பிடிக்க போகின்றோம்,

தமிழர்கள் இங்கு சிறுபான்மையினமாக வாழ வேண்டும் என்பது. அதற்கு பிறகு பல அலுவல்கள் நடக்கின்றன. அதற்குரியவர்களை கொண்டு வருகின்றார்கள். இந்த இனம் படிப்படியாக சீரழிகின்றது. 10,12 வருடத்தில் எதுவுமே நடக்கவில்லை. இந்த இனம் அழிவின் விளிம்பில் வந்து நிற்கிறது. 

அந்த விளிம்பில் நிற்கும் பொழுது தான் இந்த சிந்தனை வருகின்றது. அதாவது, அந்த முந்திய தலைமையை தேடுதல், தாங்கள் நிமிர்ந்து வாழ்ந்த அந்த காலத்தை தேடுதல். இந்த நிலைகள் இன்று இந்த சமூகத்தில் ஏற்பட்டு இருக்கின்றன. துவாரகா இருக்கிறாரா இல்லையா என்ற இரண்டுக்கும் நாங்கள் போக முடியாது. ஆனால் நாங்கள் இந்த நேரத்தில் தீவிரமாக எடுக்க வேண்டிய ஒரு நிலைப்பாடு என்னவென்றால் இதற்கு பின்னால் உள்ள தேடுதலை நாங்கள் சாதகமாக எடுக்க வேண்டும். கட்டுடைத்து நாங்கள் பார்க்க வேண்டும்.

அதாவது மக்களுக்கு ஒரு நேர்மையான தலைமை தேவை. ஒரு வல்லமையான தலைமை தேவை. தங்களுக்கு பயன்களை தரக் கூடிய செயல்களை செய்யக் கூடிய ஒரு தலைமை தேவை. இன்றைக்கு இருக்கின்ற ஒரே ஒரு வழி என்னவென்றால், ஆரம்பத்தில் தந்தை செல்வா தலைமையில் நடந்த அறப் போராட்டம். அதன் பின்பு இளைஞர்களின் வழிநடத்தலில் நடந்த ஆயுதப்போராட்டம். இவ்வாறாக 60 வருடங்களுக்கு மேற்பட்ட ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அந்த மரபில் ஊறித் திளைத்த, அதே வேளை வல்லவர்களாகவும், அனுபவம் உள்ளவர்களாகவும் இருப்பவர்களை இனங்கண்டு அவ்வாறானவர்களை கொண்டு நாங்கள் ஒரு சமூக அரசியற் கட்டமைப்பை இன்று உருவாக்க வேண்டும்.

உண்மையில் ஒரு இயங்கு நிலையில் ஒரு உரிமை போராட்ட வழிமுறையில் தான் ஒரு சமூகத்தின் தலைமை உருவாக வேண்டும். இந்த மக்கள் அந்த பொறுப்பை எடுக்க வேண்டும். அந்த போராட்ட பாரம்பரியத்தில் ஊறி வந்தவர்கள் சமூகத்திற்கு சேவை செய்ய அர்ப்பணிப்பு உள்ளவர்கள் அவ்வாறானவர்களை இனங்கண்டு இந்த சமூகத்தில் ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அந்த கட்டமைப்பு இந்த மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துகின்ற வேலையை செய்ய வேண்டும். அதை தான் நாங்கள் பண்பாட்டு வேலை என்று சொல்கிறோம்.

2009 க்கு பிறகு இந்த அரசியல்வாதிகளின் நிலை காரணமாக இந்த சமூகம் சீரழிந்து இருக்கிறது. பண்பாட்டை மாற்றுதல் என்றால் சமூகத்தின் வாழ்க்கை முறையை மாற்றுதல். அவ்வாறாக மாற்றியமைக்கின்ற போது புதிய புதிய தலைவர்கள் புதிய புதிய சமூக செயற்பாட்டாளர்கள் உருவாகுவார்கள். அவர்கள் மக்கள் மத்தியில் செயற்படுகின்ற போது ஒரு புதிய சமூக அரசியல் இயக்கம் உருவாகும். இந்த இடத்திலே நான் இன்னொரு விடயத்திற்கு வருகிறேன். இன்று கட்சிகளாக இருக்கின்றனர். பல கருத்துருவாக்கிகள், பத்திரிகைகள் எல்லாம் இந்த திருப்பி திருப்பி கட்சிகளின் ஒற்றுமை பற்றி சொல்கின்றனர். கட்சிகளின் ஒற்றுமை என்பது நடக்காது. 

இரண்டு எண்ணக்கருக்களை நான் இதில் சொல்கிறேன். ஒன்று கட்சி, மற்றது இயக்கம். கட்சிகள் என்பது பாராளுமன்ற பதவிகளுக்கு தங்களுடைய ஆட்களை அனுப்புவதற்காக போட்டி போடுகின்ற அமைப்புகள். அவர்களுக்கு பாராளுமன்ற பதவி தான் முக்கியம். எனவே அவர்களிடம் ஒற்றுமை வருவது என்பது நடக்க போவதில்லை. 

அடுத்தது இயக்கம் என்பது, மக்களுடைய இன்றைய நிலையை மாற்றியமைப்பதற்கு செயல்படுகின்ற ஒரு அமைப்பை தான் நாங்கள் இயக்கம் என்று சொல்கிறோம். மக்களுடைய கஷ்டமான, ஒடுக்கப்பட்ட நிலைமையை நல்ல விடுதலை நிலைமையாக மாற்றுவது. அதற்கு தொடர்ச்சியாக செயல்படுகின்ற அமைப்பை தான் நாங்கள் இயக்கம் என்று சொல்கின்றோம்.

இந்த கட்சிக்கும் இயக்கத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை பார்க்க வேண்டும். கட்சி என்பது காலாவதியாகிப் போன ஒன்று. நாங்கள் ஒரு சமூக அரசியல் இயக்கத்தை மக்கள் இயக்கத்தை உருவாக்குகின்ற ஒரு வேலையில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டு அது மக்கள் மத்தியில் செயற்படுகின்ற போது மக்கள் திரளாவது நடக்கும். மக்கள் உண்மையில் திரளாக தான் வாழ்ந்தார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக தான் வாழ்ந்தார்கள். போராட்ட காலகட்டத்திலே கூட மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தார்கள். பதுங்குகுழிகளை வெட்டுவதிலும் கூட்டம் கூட்டமாகத்தான் அவற்றை வெட்டினார்கள்.

ஆனால் அதற்கு பிறகு இந்த நச்சு உலகு இந்த வியாபார உலகு இந்த நுகர்வு உலகு மக்களை பிரிக்கின்றது. எனவே மக்கள் ஆழ்ந்த மனதில் தாங்கள் ஒன்று கூட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. இன்றைக்கு நாங்கள் பார்த்தோமானால் வீரவணக்கத்தில் மக்கள் ஒன்று திரள்கிறார்கள். அது அவர்களுடைய அடி மனதிலே உள்ள விடயம். ஆனால் கட்சிகள் கூப்பிட்டால் போக மாட்டார்கள். இந்த வீரவணக்க நிகழ்வுகளும் கட்சிகள் நடத்தாமல் ஒரு இயக்கம் நடத்தியிருந்தால் அதன் பரிமாணம் இன்னொன்றாக மாறி இருக்கும். இது வெறுமனே அந்த வீரர்களை நினைப்பது மட்டுமல்ல, நாங்கள் எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறோம் எந்த வழியில் செல்ல போகிறோம் என்ற உறுதியை எடுக்கின்ற இடமாகவும் அது மாறி இருக்கும். 

எனவே நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு அர்ப்பணிப்பு மிக்க தலைமையும் சரியான வழிமுறையும் இருக்கும் என்றால் மக்கள் திரளாவது மிக இலகுவாக நடக்க கூடியது.

அதை நாங்கள் கடந்த காலங்களிலும் கண்டோம். பொங்கு தமிழில் கண்டோம். அண்மையில் சொன்னார்கள் இந்தியாவில் இருந்து வந்த இசைக் கச்சேரிக்கு தான் சேர்கிறார்கள் என்று. ஆனால் பார்த்தால் வீரவணக்கத்தில் பெருமளவில் சேர்கின்றார்கள். எனவே மக்களை வழிநடத்துபவர்கள் தான் பிழை விடுகிறார்களே தவிர, மக்கள் தாங்கள் ஒன்று திரள்வதற்கு ஆசையாக தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வழி தெரியவில்லை. ஆனால் இதிலே மக்கள் ஒரு பொறுப்பை எடுக்க வேண்டும். என்னவென்றால் சரியான தலைமையை தேடுகின்ற ஒரு பொறுப்பை அவர்கள் எடுக்க வேண்டிய அவசியம் உண்டு.

எனவே நான் கேட்டு கொள்கின்ற ஒரு விடயம் என்னவென்றால் இந்த கட்சிகளை சேர்ந்தவர்கள், ஊடகங்கள், அதிகாரிகள் பொறுப்பாக செயற்பட வேண்டும். இந்த இனம் அழிந்து போகின்ற கட்டத்திற்கு வந்துவிட்டது. எனவே நாங்கள் பொறுப்பாக செயற்பட்டு தொடர்ந்தும் இந்த வியாபார வழியில் போகாமல் எமது வழிமுறையை மாற்ற வேண்டும்.

இன்று அரசியல் சாக்கடை என்று வந்துவிட்டது. அதனால் தான் மக்கள் அதிலிருந்து விலத்துகின்றார்கள். ஒரு நல்ல அரசியலை உருவாக்குகின்ற நேர்மையான அரசியலை உருவாக்குகின்ற ஒரு முறைமைக்கு நாங்கள் மாற வேண்டும்.

கலாநிதி க. சிதம்பரநாதன்

நிமிர்வு தை 2024 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.