கரையோரத்துக்குள் முற்றாக முடக்கப்பட்டிருக்கும் கடற்றொழில் பொருளாதாரம்



தாயக மீனவர்களின் கடல் வளம் படிப்படியாக அபகரிக்கப்பட்டு வருகின்றது. நாங்கள் இன்னும் கரையோர மீன்பிடிக்குள் முடக்கப்பட்டிருக்கின்றோம். ஒரு கட்டத்திற்கு வெளியில் போக எத்தனித்தாலும் இந்தியாவினுடைய இழுவைப்படகுகளின் ஆக்கிரமிப்பு எங்களை நகர விடுவதில்லை. அதையும் தாண்டி வெளியில் போவதற்கு எங்களுடைய பொருளாதாரத்தின் ஆற்றல்களும் ஆளுமைகளும் போதுமாக இல்லை. அரசாங்கத்தின் சலுகைகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. கடற்தொழில் பொருளாதாரம் முற்றாக கரையோரத்திற்குள் முடக்கப்பட்டிருக்கிறது.

கரையோரத்திலும், இப்போது கடலட்டை பண்ணைகளும் வேறு செயற்கையான நீர் வேளாண்மை முயற்சிகளும் எங்களுடைய பாரம்பரிய கரையோர மீன்பிடி பண்பாட்டை சிதைக்கின்றன. எனவே இன்னுமொரு கருவறுப்பு நடந்து கொண்டிருக்கின்றது. இப்படி எல்லா நிலைகளிலும் கருவறுப்புக்கள் தொடர்ந்து நடக்கின்றன. இது தொடர்பாக நாங்கள் தெளிவான செயற்பாட்டை நோக்கி நகர வேண்டும்.

எங்கள் மக்களை இல்லாதவர்களாக காட்டி ‘நீங்கள் மற்றவர்களை விட வறுமையாக இருக்கின்றீர்கள், எனவே உங்களுக்கு சில சலுகைகள் தருகின்றோம். உங்களுக்கு கூடிய வருமானத்தை ஏற்படுத்தி தருகின்றோம். கடலட்டை பண்ணையை செய்தால் உங்களுக்கு நிரம்ப வருமானம் வரும்’ என்று சொல்லி அவர்களுக்கு ஆசை ஊட்டி சமூகத்தை சீரழிக்கின்ற விடயம் தான் நடக்கின்றது. 

எல்லா இடங்களிலும் இந்த இல்லாமை இயலாமை என்ற இரண்டு தரப்புகள் இருக்கும். சமூகம் வேறுபட்டு இருக்கும். சமூக இடைவெளி கூடி காணப்படும். ஆனால் இங்கு உண்மையில் சாப்பாட்டுக்கு வழி இல்லாத பட்டினி சாவை எதிர்நோக்குகின்ற இல்லாமை இல்லை. இது ஒரு சார்பு வறுமை. என்னுடைய அயலானைப் போல் என்னாலும் ஆடம்பரமாக வெளிக்கிட முடியவில்லை. உடுத்த முடியவில்லை. அனுபவிக்க முடியவில்லை. செலவழிக்க முடியவில்லை. உண்ண முடியவில்லை.

பொழுதுபோக்கு செய்ய முடியவில்லை என்கின்ற ஏக்கம் இருக்கின்றது. இந்த ஏக்கம் தான் ஆபத்தானது. இந்த ஏக்கம் தான் தவறான வழிகளுக்குள் சிக்க வைக்கிறது. நாம் உயிர் வாழ்வதற்காக, பட்டினியை தவிர்ப்பதற்காக, போசாக்கின்மையை குறைப்பதற்காக, வறுமையை தாண்டி நான் வெளியே வர முயற்சிப்பதற்காக என்றால் மிக வரையறையான வாய்ப்புக்கள் இங்கு நிறைய உண்டு. ஆனால் ஆசையின் நிமித்தம் ஏற்படுத்தப்படுகின்ற இந்த அபிவிருத்தி என்கின்ற விடயம் மிக ஆபத்தானது.

சமூகவியலாளர்கள் கூறுவார்கள், சிலவேளைகளில் சில சமூகங்களில் பாலியல் தொழில் விபச்சாரம் என்பவை ஒரு தவிர்க்க முடியாத வாழ்வியல் கலாசாரமாக மாறுகின்றது என்று. அங்கு அடிப்படையான பட்டினியை தவிர்ப்பத்தற்காக போகின்றவர்களையும் விட ஆடம்பர வாழ்க்கையை தேடி போகின்றவர்கள் தான் பல மடங்கு அதிகமானவர்கள். அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கையையும் செலவுகளையும் ஈடு கட்டுவதற்காக அந்த சிக்கல்களுக்குள் போகின்றார்கள். எனவே இது மிக ஆபத்தானது. 

இந்த விடயங்களில் சமூக இடைவெளியை குறைப்பதற்கு ஆக்கபூர்வமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டி இருக்கின்றது. எங்களது மிகப் பரந்த நிலத்தையும் வளத்தையும், கடலையும் கரையையும் எவ்வாறு கையாள போகின்றோம் என்ற விடயத்திற்கு நாங்கள் ஒரு கொள்கையை வகுத்து செய்ய வேண்டி இருக்கின்றது. இந்த விடயங்களில் சமூக இடைவெளி என்பதுவும் சமூக இடைவெளியை உந்துகின்ற மக்கள் வெளியேற்றம் என்பதுவும் மிகவும் ஆபத்தானவை. 

இந்த சமூக இடைவெளியை சமப்படுத்தும் நோக்கத்தில் தாங்களும் மேலெழ வேண்டும் என்பதற்காக சமூகத்தின் அடிமட்டத்தில் எந்தவித மனித வலு ஆற்றல்களும் இல்லாமல் வெளியேறுகின்றவர்கள் என்ன செய்ய போகின்றார்கள்? வெளிநாடுகளிற்கு சென்று மிக குறைந்த கூலிக்கு தான் வேலை செய்யப் போகின்றார்கள். அவர்களுடைய வாழ்க்கை பிரகாசமானதாக இருக்கப்போவதில்லை. ஆனால் ஒரு  வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் அங்கு சென்று தங்களுடைய தலைமுறை வாழ்க்கையை அர்ப்பணித்த பிறகு அவர்களுடைய பிள்ளைகள் அடுத்த தலைமுறையில் அந்த தேசத்தின் மக்களாக மாறும் போது அவர்கள் கல்விகளில் அபிவிருத்தி அடைந்து சிறப்படைந்து மேல் நிலைக்கு போகலாம். அது இங்கே சமூக இடைவெளியை குறைக்குமா என்பது தொடர்பாக எல்லாம் நாங்கள் பேச வேண்டி இருக்கிறது.

புலம்பெயர்தல் என்பது வெறுமனே ஒரு எதிர்மறை காரணியாகவோ அல்லது சாதகமான காரணியாகவோ அமையலாம் என்று மட்டும் நாங்கள் பார்க்க முடியாது. வெள்ளை அல்லது கறுப்பு என்கிற முடிவுக்கு வர கூடாது. இரண்டிற்கும் இடையிலான ஒரு சாம்பல் நிறம் தான் சரி. அப்படி நிறைய விடயங்கள் எங்களிடம் இருக்கின்றன. எவ்வளவுக்கு நாங்கள் எங்களுடைய மூலதனங்களை பெருக்குவது? நாங்கள் எந்த துறையில் எங்களுடைய கல்வியையும் மனித வளத்தையும் வளர்ப்பது என்பதே மிக முக்கியமான விடயங்கள் தானே.

நாங்கள் எவ்வளவு பிள்ளைகளை கலைத்துறையில் வளர்ப்பது? எவ்வளவு பிள்ளைகளை தொழில்நுட்ப துறையில் வளர்ப்பது? எவ்வளவு பிள்ளைகளை வர்த்தக துறையில் வளர்ப்பது?

எவ்வளவு பிள்ளைகளை விஞ்ஞானம் மருத்துவ துறையில் வளர்ப்பது என்று சமூகத்திற்கு ஒரு கொள்கை இருக்கத்தானே வேண்டும். அந்த கொள்கையை யார் வகுப்பது?

சாதாரணமாக நாங்கள் தோட்டத்திற்குள் விதைகளை போடும் போது உயிர் தப்புவதற்கான விகிதாசரம் என்பதற்கான வாய்ப்பை கண்டறிவார்கள். அதற்கேற்றவாறு தான் அங்கு விதைகள் எறியப்படும். மேலதிக விதைகளை எறிந்தால் தான் கழிவுகள் எல்லாம் போக மிகுதியாக நாங்கள் எதிர்பார்க்கின்ற விளைவு வரும். அதுபோல் தான் மனித வளமும்.

மனிதவளத்தை நாங்கள் அபிவிருத்தி செய்வதாக தீர்மானிக்கும் போது எங்களுக்கு எவ்வளவு விற்பனர்கள் தொழிலாளிகள் தேவை என்பதுவும் நாங்கள் உருவாக்குகின்றவர்களில் எவ்வளவு பேர் வெளியேறுவார்கள் எவ்வளவு பேர் காணாமல் போவார்கள் என்ற விடயங்களை எல்லாம் கணிப்பிடுவது அவசியம். அந்த கணிப்பின் அடிப்படையில் தான் நாங்கள் வேலை செய்ய வேண்டும்.

செல்வின் 

நிமிர்வு தை 2024 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.