மக்கள் கலையை நோக்கி பயணிப்போம் - கலாநிதி க.சிதம்பரநாதன்

 


அண்மையில் யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய நடிகர்கள் வந்து நிகழ்த்திய ஒரு இசை நிகழ்ச்சி சம்பந்தமாக பலத்த விவாதங்கள் எங்கள் மத்தியில் முக்கியமாக சமூக ஊடகங்கள் மத்தியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விவாதங்கள் வருவது நல்ல விடயம். ஒரு புறத்தில், இந்த நிகழ்ச்சி குழப்பப்பட்டிருக்கின்றது, இளைஞர்கள் ஒரு பண்பாட்டு சீரழிவோடு நடந்திருக்கின்றார்கள் என்று இளைஞர்களை குற்றம் சாட்டுகிறார்கள். மறுபுறம் இது ஏற்பாடு செய்யப்பட்ட விதத்திலுள்ள தவறின் காரணமாக தான் இந்த நிகழ்ச்சி குழப்பப்பட்டிருக்கிறது போன்ற விவாதங்கள் வெளிவருகின்றன. உண்மையில் இவை இரண்டுமே முழுமையான விளக்கங்கள் அல்ல. அரைகுறையான திரிவுபட்ட விளக்கங்களாகத் தான் கொள்ளலாம்.

நான் இன்னொன்றை கூட பார்த்தேன். சில இளைஞர்கள் ஏன் எங்களை குறை கூறுகிறீர்கள் என்று உணர்வுபூர்வமாக கேட்கின்றனர். அந்த குரலையும் நாங்கள் கேட்க தான் வேண்டும். முக்கியம் என்னவென்றால் கலை பற்றிய விளக்கம், கலை நிகழ்ச்சி பற்றிய அறிவு எங்கள் மத்தியில் போதியளவு இல்லாதது தான் இதற்குரிய ஒரு அடிப்படை காரணம். ஏனென்றால் இன்று கலையை ஒரு பண்டமாக வியாபார பொருளாக மட்டும் தான் நாங்கள் கருதுகிறோம்.

திரிவுபட்ட விளக்கத்தின் காரணமாக தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே நாங்கள் கலை பற்றி விளங்கி கொள்வது மிகவும் முக்கியமானது. உண்மையில் இந்த கலை நிகழ்ச்சி குழம்பி இருக்கின்றது. 

ஆனால் இதைவிட நாங்கள் பொங்கு தமிழ் நடத்தினோம். 2000 களில் நடந்த பொங்கு தமிழில் 60000 பேர் கலந்து கொண்டார்கள், 70000 பேர் கலந்து கொண்டார்கள் என்று எல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் 2003 களில் நடந்த பொங்கு தமிழில் மூன்று இலட்சம் பேர் கலந்து கொண்டதாக பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டது. அதிலே இவ்வாறான குழப்பம் ஏற்படவில்லை. அதிலே பெருமளவு இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். அண்மையில் நடந்த கலைநிகழ்ச்சியில் இரும்புக் கம்பிகள் பூட்டப்பட்டு உயரத்திலே இளைஞர்கள் ஏறி நின்றதைப் பார்த்தேன். இதைவிட பெரிய உயரத்திலே அன்று இளைஞர்கள் ஏறினார்கள். ஆனால் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. 

ஆகவே என்ன வித்தியாசம் இந்த இரண்டுக்கும் என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். தென்னிந்திய நடிகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி யாப்னா என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணம் என்று கூட இல்லை. இந்த யாப்னாவிற்கு உங்களுடைய கனவு கன்னி வருகிறார். இது கவனிக்கப்பட வேண்டிய விடயம். 

அதாவது இந்த கலை நிகழ்ச்சி என்பது கனவு கன்னியை காண்பதற்கான ஒரு நிகழ்ச்சி என்பது தான் அடிப்படை. ஆனால் பொங்கு தமிழ் அப்படி அல்ல. 2003 அந்த காலங்களில் நடந்த பொங்குதமிழில் நாங்கள் பொங்கு தமிழுக்கு முதலில் மக்கள் மத்தியில் அவர்களை தயார்படுத்துவதற்கான சின்ன சின்ன தெருவெளி அரங்குகளை நடத்தி இருந்தோம். 

அதிலே சங்கானையை சேர்ந்த 80 அல்லது 85 வயதுடைய பூதன் என்கின்ற ஒரு முதியவர் கூறுகின்றார், ‘நாங்கள் கட்டாயம் அங்கு வருவோம். தேசத்தை கனவு காண அங்கு வருவோம்’ என்று கூறுகிறார். ஆகவே பொங்கு தமிழ் என்பது உணர்வுகள் பொங்கி தேசத்தை கனவு காண்கின்ற ஒரு நிகழ்ச்சி. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இன்று நடந்தது கன்னியை கனவு காண்கின்ற நிகழ்ச்சி. அன்று நடந்தது தேசத்தை கனவு காண்கின்ற நிகழ்ச்சி. தேசத்தை கனவு காண்கின்ற போது கூட்டாக சேர்ந்து கனவு காணுதல், கூட்டாக சேர்ந்து தேசத்தை அமைத்தல் என்பது தான் அங்கே கொண்டாட்டமாக அமைகிறது.

அந்தமுறை பொங்கு தமிழில் இராணுவம் குடி கொண்டிருந்த வீடுகளை மீட்டல் அல்லது பாம்பு குடி கொண்டிருந்த வீடுகளை மீட்டல் என்பது தான் தொனிப்பொருளாக இருந்தது.

அந்த மக்களிடம் கேட்கிறோம் ‘இந்த வீட்டை மீட்பதற்கு நீங்கள் ஆதரவளிக்க தயாரா’ என்று. அந்த வீட்டை பாம்புகள் சுற்றி இருக்கின்றன. அதிலே எங்கள் நிலம் எமக்கு வேண்டும் என்று பாடுகின்ற கோசமிடுகின்ற அந்த நேரத்திலே பெருவாரியான இளைஞர்கள் அந்த வீட்டிலே ஏறினார்கள். அந்த பாம்புகளை கழற்றி எறிந்தார்கள். அந்த வீட்டிலிருந்த பல விடயங்களை கழற்றி எறிந்தார்கள்.

பெருமளவு பெண்களும், ஆண்களும், இளைஞர்களும் கூடி ஆடி பாடுகின்ற ஒரு நிகழ்ச்சியாக தான் அந்த நிகழ்ச்சி இருந்தது. அதில் ஒரு கூட்டு மனப்பான்மை, நாங்கள் அனைவரும் இந்த தேசத்து மக்கள் என்பதாக தான் அந்த நிகழ்ச்சி இருந்தது. இலட்சக் கணக்கான மக்கள் பங்குபற்றினார்கள். எந்த அசம்பாவிதமும் வரவில்லை. அங்கே அறிவிப்பாளரின் சொல்லுக்கு இளைஞர்கள் பொங்கி எழுந்தார்கள் அதே நேரத்தில் அறிவிப்பாளரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதியாகவும் இருந்தார்கள். அவ்வாறு தான் அந்த நிகழ்ச்சி நடந்தது.

இது கலை பற்றிய புரிந்து கொள்ளலில் ஏற்படுகின்ற வேறுபாடு. தென்னிந்திய நடிகர்கள் இங்கே வந்து நடத்திய கலை ஒரு வகை. அது வெகுசன கலை என்று நாங்கள் சொல்லலாம். பொங்கு தமிழ் ஒரு மக்கள் கலை. இந்த இரண்டு கலைக்கும் உள்ள வித்தியாசத்தில் தான் இந்த பிரச்சனை வருகின்றது.

இன்று 2009 இன் பிறகு மக்கள் மத்தியில் இந்த வெகுசன கலைதான் பரப்பப் படுகிறது. மக்களின் சிறிய சிறிய ஆசைகளை தூண்டுகின்ற விதத்தில் நிகழ்ச்சியை நடத்துதல் தான் வெகுசன கலை. ஆங்கிலத்தில் இதனை Populist art என்று சொல்வார்கள். Populist என்றால் வெகுசன விருப்புக்களை அதாவது போதைவஸ்து தேவையென்றால் போதைவஸ்து கொடுப்பது, அவனுக்கு பாலியல் தேவையென்றால் பாலியலை கொடுப்பது. ஆகவே அவர்களுடைய சிற்றின்ப உணர்வுகளை தூண்டுகின்ற ஒரு கலை தான் வெகுசன கலை. இது இன்றைய நவீன ஊடகங்களுக்குள் பெரும்பாலும் வருகின்றது. முக்கியமாக சினிமா,

தொலைக்காட்சி, YouTube இவைக்குள்ளால் வருகின்றது. உண்மையிலே மக்களுக்கு ஆடுவதிலும் பாடுவதிலும் விருப்பம் இருக்கிறது. கலையில் பங்குபற்றுவதில் விருப்பம் இருக்கிறது. ஆசை இருக்கிறது. இன்றைக்கு மட்டுமல்ல பண்டைத்தமிழர் சமூகத்தில் இருந்ததுவும் இதுதான்.

யாழ்ப்பாணம் என்று சொன்னாலே அது ஒரு இசைக்கருவியின் பெயரோடு தான் வருகிறது. யாழ் இசைக்கருவியுட்ன் பாணன் பாடி தான் யாழ்ப்பாணத்தை பெற்றான் என்ற ஒரு கதை உண்டு. ஆகவே பண்டைய தமிழ் சமூகத்தில் ஆடியும் பாடியும் அவர்கள் தங்கள் தலைவனை கொண்டாடினர்கள். எதிர்காலத்தையும் கட்டியமைத்தார்கள் என்பது பண்டைய வரலாறு.

கலை என்பது மனிதர்களின் ஆற்றலை வெளிக்கொண்டு வருகின்ற ஒரு விடயம். அதற்கொரு முற்போக்கு அம்சம் இருக்கிறது. இன்றும் கூட ஊர்களில் சடங்குகளும் கூத்துகளும் உண்டு.

மட்டக்களப்பு கிராமங்களில் சடங்கு உண்டு. சடங்கு என்பது மக்கள் ஒன்று கூடி ஆடுவதும் பாடுவதும் சமைத்து உண்பதுமான நிகழ்ச்சி தான். கெட்ட பேய்களை விலத்தி நல்ல தெய்வங்களை ஆடுவது என்பது தான் அந்த சடங்கின் சாராம்சமாக இருக்கின்றது. எனவே ஆடல் பண்டைய சமூகத்திலே இருந்தது. மக்கள் அதனை இன்றும் விரும்புகின்றார்கள்.

மறுபுறம் சினிமாவிற்கு வருவோம், நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் சினிமா பார்ப்பதற்கு எங்களை அனுமதிப்பதில்லை. என்னுடைய மாமனார் ஒருவர் இருந்தார் அவர் கோவில்களில் புராணக் கதைகளை படிப்பவர். அதற்கு பயன் சொல்பவர். அவர் எங்களை சினிமா பார்க்க விட மாட்டார். ஆனால் என்னை திருவிளையாடல் படம் பார்ப்பதற்காக கூட்டி சென்றார். இன்னொரு தடவை மகாபாரதம் படம் பார்ப்பதற்கு கூட்டி சென்றார்.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட படங்களை தான் தமது பிள்ளைகளுக்கு காட்டுவார்கள். M.G.R சினிமாவினாலே முதலமைச்சராக வந்தார் என்று சொல்வோம் ஆனால் அவருடைய கலைக்கு ஒரு கொள்கை இருந்தது. முக்கியமாக அவர் படங்களில் மது அருந்த மாட்டார்.

பெண்கள் மீது பாலியல் சேட்டைகள் செய்ய மாட்டார். அவர் அதனை தொடர்ந்தும் சினிமாக்களில் பேணியதால் தான் அவரால் முதலமைச்சராக வர முடிந்தது. சினிமா ஊடாக அவர் பெற்ற பிரபல்யத்தினால் இறக்கும் வரை அவரை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை. அவர் பற்றிய விமர்சனங்கள் பல உண்டு. ஆனால் அவரின் கலையிலே கொள்கை இருந்தது. ஆனால் இன்று கலை வியாபாரம் ஆகி விட்டது. அந்த வியாபாரத்திற்கு கண் இல்லை.

அன்று கோவில்களில் ஆங்காங்கே சின்ன மேளம் இருந்தது. அதற்கு எல்லோரும் போவதில்லை. ஆனால் இந்த நிலைமை தமிழர்களின் சுதந்திர போராட்டத்தோடு மாறியது.

இந்த நச்சுக் கலைகள் இல்லாமல் போய் ஒரு மக்கள் கலை பரிணாமித்தது. அப்படி தான் பொங்கு தமிழ் வந்தது. பெருமளவு மக்கள் கலந்து கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையில் தமிழர் வாழ்கின்ற பிரதேசங்களில் வடகிழக்கில் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் பொங்கு தமிழ் ஒழித்தது. அதிலே ஒரு பாடல் உண்டு. "உயர்ந்தவர்கள் நாம் எல்லோரும் உலகத்தாய் வயிற்று மைந்தர், நசிந்து இனிக் கிடக்க மாட்டோம், நாம் எல்லாம் நிமிர்ந்து நிற்போம்". என்ற பாடல் பெருமளவு ஒலிக்கப்பட்ட பாடல். இது அத்தகைய கலை. ஆடினார்கள் பாடினார்கள். ஆனால் 2009 இன் பின்னர் இந்த நிலை மாற்றப்படுகின்றது.

நச்சுக்கலைக்கான பயிற்சி கொடுக்கப்படுகின்றது. இதை தான் நீங்கள் கவனிக்க வேண்டும். 2009 பெரும் அழிவு ஏற்பட்ட போதும் பொங்கு தமிழ் இருந்தது. இன்றுவரைக்கும் இங்குள்ள கருத்துருவாக்கிகளாலோ ஊடகங்களாலோ இந்த விடயம் பெரிதாக பேசப்படுவதில்லை.

2009 இல் சம்பந்தன் பொங்கு தமிழை இல்லாமல் செய்கிறார். எவருக்கும் தெரியாமல் கரைக்கு ஒதுக்குகிறார். அப்போது ஏன் நீங்கள் அப்படி செய்கிறீர்கள் என்று அவரை சிலர் கேட்கிறார்கள். பொங்கு தமிழில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு ஏன் நீங்கள் கூட்டமைப்பை நடத்துக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில், ‘இரண்டு தரப்புகள் இவர்களை வேண்டாம் என்று சொல்கிறது.’ அதிலே ஒரு தரப்பு தமிழர்களிடையே இருக்கின்ற வர்த்தகம் செய்பவர்கள். ஏனென்றால் வியாபாரிகளுக்கு தங்களுடைய குப்பையை கொட்டுவதற்கு ஒரு இடம் தேவை.

ஒரு மக்கள் கலை இருந்தால் தங்களுடைய குப்பைகளை இங்கே கொட்ட முடியாது. இவ்வாறு தான் மக்கள் கலை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்படுகிறது. அதற்கு அப்பால் இந்த நச்சுக்கலை சினிமாக்கள் கணக்கின்றி வருகின்றன. சினிமாவிலே நல்ல சினிமா இருக்கின்றது, அது வேறு. ஆனால் இன்று பல வியாபார சினிமாக்கள் மக்கள் மத்தியில் வருகின்றன. வெகுசன கலைக்கு இருக்கும் இன்னொரு அம்சம் அது விரைவாக பரவும். 

பல நடன பயிற்றுனர்கள் வருகின்றனர். அவர்கள் இந்த நடனங்களை இளைஞர்களுக்கு பழக்குக்கிறார்கள். இறுதியாக நடந்த நிகழ்ச்சி தொடர்பாக வருட இறுதி மாதங்களில் ஒரு நடன பயிற்றுனர் இங்கே வருகிறார். அவரை ஒரு ஊடகர் கேட்கிறார், உங்களுடைய அருமையான நடனத்தின் சிறிய துண்டை ஆடி காட்டுங்கள் என்று. அவர் இடுப்பை அசைத்து ஆடிக் காட்டி இருக்கிறார். இதுதான் இவர்களால் பரப்பப்படுகின்ற ஆடல்.

மக்கள் ஆடலை விரும்புகிறார்கள் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஆடல் ஆற்றலை வளர்க்கும் என்ற கோடபாடு இருக்கிறது. ஆனால் இவர்கள் இளைஞர்களுக்கு பரப்புகின்ற ஆடலின் அம்சங்கள் பாலியல் உணர்வுகளுக்கான ஆடலாக தான் அநேகமாக இருக்கின்றன. ஆகவே இது இளைஞர்களுக்கு பாலியல் உணர்வை தூண்டும். உடலை அவ்வாறு அசைக்கின்ற போது மனதிலும் அவ்வாறு வரும். அந்த உணர்வுகளை தூண்டும். இவ்வாறு தான் இளைஞர்கள் மத்தியில் நீங்கள் படிப்படியாக வளர்த்து விட்டு கனவுக்கன்னியை கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள். கனவுக் கன்னியை அவ்வளவு தூரத்திலிருந்து பார்க்க முடியுமா? பாய்ந்தடித்து அருகில் வருகிறார்கள். அதனால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. கன்னியை கனவு காண்கின்ற நிகழ்ச்சி என்பதால் ஏற்பட்ட குழப்பமே தவிர இளைஞர்கள் பிழையானவர்கள் என்பதோ இங்கு அவ்வாறான ஒரு பண்பு இருக்கின்றது என்பதோ அர்த்தமில்லை.

நாங்கள் இளைஞர்களை சரியான கலையின் பால் வழிப்படுத்த வேண்டும். இந்த நச்சுக்கலைகளுக்கு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும். கலைகள் பற்றிய விவாதம் வருவது நல்ல விடயம். அண்மையில் பண்பாடு பற்றிய விவாதம் கூட வந்தது. முக்கியமாக அறிவுஜீவிகளுக்கு அதில் தெளிவில்லை. அறிவுஜீவிகள் பொருளாதாரத்தை பற்றி கவலைப்படுவார்கள். அரசியலை பற்றி கவலைப்படுவார்கள். ஆனால் பண்பாட்டை பற்றியோ கலையை பற்றியோ கவலைப்படுவதில்லை. அதை யாரும் செய்யலாம் என்று இருப்பார்கள் . எல்லோருக்கும் தெரிந்த விடயமாக எடுப்பார்கள். உண்மையிலேயே அது பற்றிய ஆழமான விவாதங்களுக்கு நாங்கள் செல்ல வேண்டும்.

கலை பற்றிய படிப்பு கூட தேய்ந்த சக்கை படிப்பாக மாறி விட்டது. ஏனென்றால் நிறுவனங்களில் எல்லாம் அதிகார ஆசை ஒரு பக்கம், மிகவும் கேடுகெட்ட சுயநலம் ஒரு பக்கம். இதன் காரணமாக எல்லாம் சீரழிந்து போகின்றன. எனவே இந்த பண்பாடு பற்றியும் கலை பற்றியும் நாங்கள் நல்ல விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். இவற்றுக்கு அப்பால் நாங்கள் சிறுகச்சிறுக படிப்படியாக ஒரு மக்கள் கலையை உருவாக்க வேண்டும். மக்கள் ஒன்று கூடி ஆடுவதும் பாடுவதும் தமது எதிர்காலத்தை கற்பனை காண்பதுவும், பாரதி சொன்னது போல "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று.." அவ்வாறான ஒரு நிலையிலே ஆடுகின்றதும் பாடுகின்றதுமான ஒரு கலையை நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும். அதற்கு சமூக அக்கறை உள்ளவர்கள் செயற்பாட்டாளர்கள் சேர்ந்து வர வேண்டும். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலை பற்றிய மாணவர்களிடமிருந்து தான் இந்த பொங்கு தமிழ் உருவானது. 2004, 2005 காலப்பகுதிகளில் சுனாமிக்கு ஆற்றுப்படுத்தல் கலையை செய்ததும் அந்த மாணவர்கள் தான்.

எனவே கலையை சரியாக புரிந்து கொண்டால் ஆற்றல் உள்ள சாதனமாக வலுவுள்ள கருவியாக நாங்கள் பயன்படுத்தலாம். அதற்கு முக்கியம் இந்த கலை என்றால் என்ன என்ற புரிதல். இன்று இளைஞர்கள் கலை என்றால் அவர்கள் இங்குள்ள கலைகள் சலிப்பை ஏற்படுத்தும் என்று நினைப்பார்கள். அவர்களை பிழை என்று சொல்ல முடியாது.

தமிழ்நாட்டில் இருந்து கலைகள் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு அதுவும் ஒரு காரணம். இங்கு நிகழ்ச்சிகள் கோவில் நிகழ்ச்சிகளாக இருக்கலாம், விழாக்களாக இருக்கலாம் அல்லது பண்பாட்டு பெருவிழாக்களாக இருக்கலாம் அவற்றை மக்களுக்கு ஆர்வம் வருகின்ற வகையிலே ஆனந்தப்பட கூடிய வகையிலே சிற்றின்பத்தை விட பேரானந்தம் வர கூடிய வகையிலே அந்த நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

சிலர் பாரம்பரியத்தை கொண்டு வருகிறோம் என்று சொல்வார்கள். அது இளைஞர்களுக்கு புதிதாக தோன்றுவதனால் ஒரு சில நிமிடங்களுக்கு அவர்களை கவருமே தவிர, அவர்களை ஆற்றுப்படுத்தும், கவரும் என்று சொல்ல முடியாது. அதனால் பாரம்பரியத்தில் இருந்து இன்றைக்கு உரியதாக நாங்கள் உருவாக்க வேண்டும். எனவே எங்களுடைய நிகழ்ச்சிகளை மக்களை கவர கூடியவண்ணம் நடத்துகின்ற அளவுக்கு நாங்கள் தெளிவு பெற வேண்டும்.

இங்கே இளைஞர்களை நாங்கள் குறை சொல்ல முடியாது. அவர்கள் வேகமானவர்கள். அழகான கவருகின்ற நிகழ்ச்சிகளை நோக்கி ஓடுகின்றார்கள். அந்தவகையிலே, ஒரு பக்கம் நிறுவனங்களால் சலிப்பேற்றும் நிகழ்ச்சிகள், மறு பக்கம் கலையை கற்பிக்கும் நிறுவனங்கள் செயலிழந்து போன நிலைமை. ஒப்புக்காக சில கலைகளை கற்பித்து கொண்டிருக்கிறார்கள்.

அதனூடாக நல்ல வல்லமையான கலைஞர்கள் வெளி வருவதுமில்லை. இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் கலை பற்றிய புரிந்துணர்வை உருவாக்குவதற்கான நிறுவனங்களை அமைக்க வேண்டும். நாங்கள் ஒரு பண்பாட்டு மையத்தை அமைத்து வைத்திருக்கிறோம். அங்கு இளைஞர், மக்கள் அனைவரும் வருகிறார்கள் அவர்கள் கலை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். 

நாங்கள் தமிழ்நாட்டு நண்பர்களோடும் தொடர்பு கொண்டோம். உண்மையில் அவர்களுக்கு யாழ்ப்பாணம் பற்றிய பெரிய மதிப்பு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசுவது மிக அழகாக உள்ளது இசை போல் உள்ளது என்று சொல்வார்கள். ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் பேசுகின்ற தமிழை கூட மாற்றி வருகின்றார்கள். எனவே அங்குள்ள பல கலைஞர்கள் எங்களோடு ஒத்துழைப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள். நாங்களும் அந்த ஒத்துழைப்பை கோரி நிற்கின்றோம். இது மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழர்களையும் ஈடுபடுத்தி மூன்று பகுதிகளும் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் பெருமளவு மக்களை கவரக் கூடிய ஒரு கலை நிகழ்ச்சியை நாங்கள் உருவாக்க வேண்டும்.

இவ்வருடத்தின் நடுப்பகுதியில் நாங்கள் அவ்வாறான ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். பெருமளவு மக்கள் கூடுவதும் அதிலே அவர்கள் ஆடி பாடி மகிழ்வதும் ஓர் பேரானந்த நிலையை அடைவதும் அதன் மூலம் தங்களுக்குள் ஒற்றுமையை வளர்ப்பதும், தங்கள் எதிர்காலத்தை கனவு காண்பதும், கட்டியமைப்பதும் அதற்கான செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு தீர்மானம் எடுப்பதுமான ஒரு பெரும் கலை நிகழ்வை நாங்கள் உருவாக்க வேண்டும். இப்போதிருந்தே படிப்படியாக நடத்தி கொண்டு சென்று பெருமளவு மக்கள் கூடுகின்ற நிகழ்வாக நடத்த வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அதை நடத்துவோம்.

கலாநிதி க.சிதம்பரநாதன்

நிமிர்வு மாசி 2024 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.