32 கால கொடும் சிறையும் மரணமும்!- ஈழத்தாய்மார்களின் கண்ணீருக்கு விடிவு இல்லையா?


இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்த பொழுதும் மீண்டும் அதனை விட கொடுமையான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட சாந்தன் கடந்த 28 ஆம் திகதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கல்லீரல் செயலிழப்பால் உயிரிழந்தார்.

இதன் மூலம் மீண்டும் இந்தியா ஈழத்தமிழர்கள் மீதான தன் கோரமுகத்தை வெளிக்காட்டியுள்ளது. இவர்களது விடுதலைக்கு எதிராக நீதிமன்றில் இந்திய மத்திய மாநில அரசுகள் கடுமையாகவே எதிர்வினையாற்றின. இலங்கை அரசும் பாராமுகமாகவே இருந்தது. இறுதியிலும் மரணத்தின் போதும் நீதிமன்றம் தலையிட்டு தான் ஏன் இவ்வளவு தாமதிக்கிறீர்கள் என்று கேட்டு உடலத்தை அனுப்ப விரைவுபடுத்தின.

கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 11 ஆம் திகதி 30 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் சாந்தன் இந்திய உயர் நீதிமன்றால் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர் மீண்டும் சிறையை விடவும் கூடுதல் நெருக்கடியை தரக் கூடிய திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்புமுகாமில் 2022 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 12 ஆம் திகதி அடைக்கப்பட்டார். அவருடன் சேர்த்து ஏற்கனவே விடுதலையான ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகனும் அங்கு அடைத்து வைக்கப்பட்டனர்.

இவர்கள் இலங்கையர்கள் என்பதால் வெளிநாட்டு சட்ட விரோத குடியேற்றம் தொடர்பிலான ஆவணங்கள் தேவையென சுட்டிக்காட்டி சிக்கல்களில் சிக்க வைக்கப்பட்டு மீண்டும் சிறையை விடவும் கொடுமையான உடல், உள நெருக்கடிகளை தரக் கூடிய தடுப்புமுகாமில் அடைக்கப்பட்டனர். தற்காலிக பயண ஆவணங்களை வழங்கி தங்களை விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நால்வராலும் பல தடவைகள் மத்திய மாநில அரசுகளை நோக்கி வைக்கப்பட்ட போதும் அது நிராகரிக்கப்பட்டது. 

தன்னை தடுப்புமுகாமிலிருந்தும் விடுவிக்கக் கோரி 2023ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு சாந்தன் பல கடிதங்களைத் தொடர்ச்சியாக அனுப்பிய போதும் முறையான பதிலளிப்புக்கள் காணப்பட்டிருக்கவில்லை.

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் சிறப்புமுகாமில் அவர்களுக்கு சுதந்திரமாக நடமாடும் அனுமதி மறுக்கப்பட்டது, உரிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை, நடைப்பயிற்சி செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது, சரியான உணவும் வழங்கப்படவில்லை, நண்பர்கள் உறவினர்களை சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு சுவர்களுக்குள் முடக்கப்பட்ட தனிமை வாழ்வு தான் சாந்தனின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட காரணமாகியது.

ஏற்கனவே இலங்கை திரும்புவதற்கு அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றில் சாந்தன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதேவேளை சாந்தனின் தாயாரும் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு பல கடிதங்களையும் எழுதியுள்ளார். இந்த விடயத்தில் இலங்கை இந்திய தரப்புகள் பாராமுகமாகவே இருந்துள்ளன.

ஆனால், கடந்த  23 ஆம் திகதி இந்திய மத்திய அரசின் வெளிநாட்டு விவகாரங்களை கையாளும் பிரிவினரால் பயண அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சாந்தனுக்கு ஏற்பட்ட நோயின் தன்மை தீவிரமடைந்துள்ளது. உரிய மருத்துவக் கவனிப்பின்றி தடுப்பு முகாமில் இருந்த சாந்தன் நடக்க கூட இயலாத நிலை வரும் போது தான் திருச்சியில் உள்ள மாகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அவரது உடல்நிலை மோசமடையவே கடந்த 27 ஆம் திகதி சென்னையில் உள்ள ராஜீவகாந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதி காலை 7.50 மணியளவில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரத்தால் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.

எனது பிள்ளை இங்கே வந்து என்னிடம் சிறிது காலம் வாழ வேண்டும். அவனுக்கு ஒருபிடி சோறாவது ஊட்டி விட வேண்டும் என பல்வேறு கடவுளர்களிடமும் வேண்டுதல்களை செய்த சாந்தனின் தாயாரான மகேஸ்வரி மற்றும் சகோதர சகோதரிகள், உறவுகள், நண்பர்கள் அனைவரும் துடித்துப் போயுள்ளனர்.

சாந்தனின் இறப்புக்கு இந்தியாவின் மத்திய மாநில அரசுகளும் தமிழ் தலைமைகளும் பொறுப்பேற்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் குற்றம் சாட்டியுள்ளார். எல்லை தாண்டி எங்களது கடற்பரப்புக்குள் வந்து சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை ஒரே இரவில் பேச்சுவார்த்தை நடாத்தி விடுவிக்க முடியும் என்றால் ஏன் இவர்களை விடுவிக்க முடியாது என்று அவர் கேட்டுள்ளார்.

நீதிமன்றால் விடுவிக்கப்பட்டாலும் அன்று நடந்தேறியது அப்பட்டமான சிறை மாறுதல் தான், இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என ராபர்ட் பயஸ் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து கடிதம் எழுதியுள்ளார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு.

32 வருட நீண்ட சிறைக் கொட்டடிக்கு பிறகு கடந்த 11-11- 2022 அன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்த ஆறு பேரில் நானும் ஒருவன். அந்த ஆறு பேரில் நான், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைத் தமிழர் எனக் காரணம் கூறி இந்திய வெளியுறத்துறை நாட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரை சிறப்பு முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது. தொலைந்து போன வாழ்க்கையை எதிர்நோக்கி 32 வருட நீண்ட காத்திருப்பு முற்றுப்பெறும் தருவாயில் கூட விடுதலையை ருசிக்க முடியாமல், சிறிது நேரம் கூட விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் புழல் சிறையிலிருந்து நானும் ஜெயக்குமாரும் வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டோம்.

இதோ முடியப்போகுது 32 ஆண்டுக்கால சிறைக் காத்திருப்பு என்று எண்ணிய எங்களுக்கு அப்பொழுது விளங்கவில்லை நாங்கள் சிறை மாற்றப்படுகிறோம் என்று. ஆம், அன்று நடந்தேறியது அப்பட்டமான சிறை மாறுதல் தான் என்பதை எங்களுக்கு காலம் தான் விளக்கியது.

இது சிறையல்ல சிறப்பு முகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பதுவும் எங்களுக்கு போகப்போகத் தான் விளங்கியது. நாட்டைவிட்டு அனுப்பும்வரை எங்களை சிறப்பு முகாமில் வைக்கிறோம் என்றவர்கள் இன்றைய தேதிவரை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு எடுத்த முன்னெடுப்புகள் என்னவென்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தான் மிஞ்சும். "சிறப்பு முகாமா..? அது ஜெயில் மாதிரிலாம் இல்லைங்க சார். எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம்" என்று பேசி சமாளிக்கும் அரசும் நிர்வாகமும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.

கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஒரு வார காலமாக மருந்து மாத்திரை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனார். இப்பொழுது சாந்தன் கல்லீரல் முழுவதும் செயலிழந்து, எழுந்து நிற்கக் கூட முடியாமல் மிக மோசமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் ஏதும் பலனளிக்காத நிலையில் இறந்து போயிருக்கிறார். இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது?

யாரை நாங்கள் நொந்துக்கொள்வது? அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுத்து, உடல்நலன் குன்றி "விடுதலைஆகிவிடுவோம். விடுதலை ஆகிவிடுவோம்." என்று கனவு கண்டு விடுதலை ஆகிவிட்டோம் என்று பூரிப்பு கிடைத்த தருவாயில் மீண்டும் ஏமாற்றப்பட்டு சிறைமாற்றப்பட்டு இதனால் மனநலனும் பாதிக்கப்பட்டு இறந்து போன சாந்தனுக்கு சிறை வாழ்வு முடிந்தது.

இன்னும் மீதம் மூன்று பேர் இருக்கிறோம். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குகிறோம் இந்த சிறப்பு முகாமில். சிறையில் கூட நிர்வாகத்திற்கு சிறை விதிகள் கையேடு இருக்கிறது. அதன்படி கைதிகளுக்கு இருக்கக்கூடிய மற்றும் இல்லாத உரிமைகள் கடமைகள் வரையறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிறப்பு முகாமோ சிறையை விட கொடுமையானது. இங்கு எந்த சட்டத்திட்டங்களோ வரையறைகளோ கிடையாது. அரசும், மாவட்ட ஆட்சியரும், முகாம் நிர்வாகமும் என்ன நினைக்கிறதோ அவையெல்லாம் விதிமுறைகளாகவும் சட்டதிட்டங்களாகவும் ஆகின்றன. மருத்துவம் கிடையாது என்று இவர்கள் முடிவெடுத்தால் முகாம்வாசிகளுக்கு மருத்துவம் கிடையாது. தனிமைச் சிறை என்று இவர்கள் முடிவெடுத்தால் தனிமைச் சிறை. யாரும் மனு பார்க்கக்கூடாது என்று இவர்கள் முடிவெடுத்தால் யாரும் மனு பார்க்க முடியாது. இப்படியான நிர்வாகம் தான் இங்கு இருக்கிறது. 

நாட்டைவிட்டு வெளியில் அனுப்புவதற்காக என்று காரணம் கூறி சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள் அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படாமல் வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இன்னொரு சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர்.

நாங்கள் சிறு சிறு அடிப்படைத் தேவைகளையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும் கூட போராடி, உயிரைக் கொடுத்து பெறவேண்டிய சூழலே இருக்கிறது. எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியான 32 வருடங்கள் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லியே சிறையில் கடத்தப்பட்டது.

இறுதியில் உச்சநீதிமன்றத்தின் விடுதலை ஆணைக்கு பின்னும் எங்களை எங்கள் குடும்பங்களோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்தி காலங்கடத்தி இறுதியில் சாந்தனை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீதமுள்ள நாங்களும் எங்களுக்கான ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் பெறுவதற்கு இதுவரை எண்ணற்ற மனுக்களையும், வழக்குகளையும், உண்ணாநிலை போராட்டங்களையும் மேற்கொண்டே பெற்று வருகின்றோம். 

அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் காற்றிலே போகும். மீதி, கேட்கப்படாமலே மக்கிப் போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த மாத தொடக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நானும் முருகனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது ஒரு வாரத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டு 20 நாட்களை கடந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

இவ்வாறில்லாமல் உரிய அரசுப் பொறிமுறைகளை கடைப்பிடித்து அவர்கள் கடமையை முறையே செய்திருந்தால் இன்று சாந்தன் உயிருடன் அவருடைய தாயாருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இன்னும் ஓரிரு வருடங்களாவது இருந்திருப்பார்.

33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயதுமுதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிடவேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத்தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். கடைசியாக தனது கையால் தன்மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்த மகனுக்கு கடைசியாகக் வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார். இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான், என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தாயிடம் "உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது"  என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்லியிருக்க முடியும். அத்தகைய கல்நெஞ்சம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன.

33 வருடங்கள் கழித்து தன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாக காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்த செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன.

இதோ கடந்த மாதம் என்னுடன் நடந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்த சாந்தன் இன்று எங்களோடு இல்லை. ஒரு மாதத்தில், எங்களோடு உறவாடி, பேசி உலாவிய சாந்தன் இன்று உயிரோடு இல்லை. மீதமிருக்கிற, ஜெயக்குமாரும் முருகனும் 33 வருடங்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வாடுகிறார்கள். நானோ, மனைவி ஒரு நாட்டில் மகன் ஒரு நாட்டில் தாய்,

சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் என சிதறுண்டுக் சிதைந்துக் கிடக்கும் குடும்பத்தை ஒன்று சேர்த்து ஒரு நாளேனும் வாழ்ந்து விட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

பச்சிளம் பாலகனாக பார்ந்த எனது மகன் எவ்வளவு உயரம் இருப்பான்? அவன் என்னைவிட உயரமா? அல்ல உயரம் குறைவா? அவனுக்கு திருமணம் ஆகி எனக்கு பேரன் பிறந்திருக்கிறானாம்.! நான் எந்த வயதில் என் மகனை பிரிந்தேனோ அந்த வயதில் எனக்கு இப்பொழுது பேரன் இருக்கிறான். அவனதுப் பஞ்சு பாதங்களை அள்ளியெடுத்து ஒருமுறையேனும் என் முத்தங்களை காணிக்கையாக்கிவிட மாட்டேனா?

அன்பார்ந்த உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம். நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனைப் போலல்லாமல் எங்களையாவது எங்கள் கடைசி காலத்தில் மிஞ்சியிருக்கிற கொஞ்ச காலம் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்து விட்டுப் போக இந்த அரசுகள் இனியாவது நடவடிக்கை எடுக்குமா? 

எங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்கு வருமா?

சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார் என மே 17 இயக்கத்தின் நிறுவுனர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். சாந்தன் மரணம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எது நடந்துவிடக்கூடாது என அச்சப்பட்டோமோ அது நடந்துவிட்டது. தோழர் சாந்தன் இயற்கையெய்திய செய்தி துயரமான நாளாக்கிவிட்டது. சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலும், தாயை சந்திக்காமலும் விடைபெற்றுள்ளார். வேலூர் சிறையில் அவரைச் சந்தித்துள்ளேன்.

துயரமும், அவநம்பிக்கையும் சூழ்ந்த நிலையில் மிக அமைதி தோய்ந்த அவரது முகம் நினைவில் என்றும் நிற்கும். 2018 ஆவணியில் சந்தித்த சமயத்தில் அன்றைய அதிமுக அரசின் முடிவால் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.  நாங்கள் வெளியே போய்விடுவோம், வெளியே உங்கள் உடல்நலம் பற்றி சொல்கிறோம்  என்றார்.

இது இயற்கை மரணமல்ல கொலை என தெரிவித்துள்ளார் அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம். அவர் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,

விடுதலை செய்யப்பட்ட ஒருவரை இன்னொரு சிறையிலே அடைத்து வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. நீதிக் கோட்பாட்டுக்கு கூட முரணானது. இந்த விடயத்தில் தமிழக அரசு தான் கூடுதலான பாத்திரத்தை வகித்திருக்க வேண்டும். ஏனென்றால் தமிழக அரசினுடைய எல்லைக்குள் தான் இந்த விடயம் நடைபெற்று இருக்கிறது. சிறப்பு முகாமை நிர்வகிக்கின்ற பொறுப்பு தமிழக அரசினுடையதாக இருக்கும். அப்படியென்றால் தமிழக அரசு குறைந்த பட்சம் ஒரு திறந்தவெளி சிறை மாதிரியான ஒரு சூழலையாவது உருவாக்கி இருக்க வேண்டும். 

அந்த சிறப்பு முகாமினுடைய நெருக்கடி நிலை காரணமாகவே அவர் தொடர்ச்சியாகவே அறைக்குள் பூட்டி வைத்திருக்கப்பட்டார் என்றெல்லாம் கூறப்படுகிறது. அந்த தொடர்ச்சியான நிலை தான் அவரின் கல்லீரல் நோய் வரக்கூடிய சூழலை உருவாக்கி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதிலும் கூட தொடர்ச்சியான ஒரு மருத்துவ கவனிப்பு இருந்திருக்குமாக இருந்தால் இந்த மரணத்தை தவிர்த்தத்திருக்கலாம். மொத்தத்தில் இந்த மரணம் ஒரு தவிர்த்திருக்க கூடிய மரணம்.

இந்த மரணத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பலர் இருக்கின்றார்கள். முதலாவது, இந்திய அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டிய ஒரு விடயம். விடுதலை செய்த பின்னர் இலங்கைக்கு அனுப்புவதற்கான ஒழுங்கை இலங்கை அரசாங்கத்துடன் பேசி செய்திருக்கலாம்.

அவர்கள் அதை செய்யவில்லை. இரண்டாவது, தமிழ்நாட்டு அரசாங்கம். இவர்களுக்கு இரண்டு பொறுப்புகள் இருக்கின்றன. ஒன்று சிறப்பு முகாமில் சாந்தன் வைக்கப்பட்டிருக்கும் போது அவரை முழுமையாக பொறுப்பு எடுத்திருக்க வேண்டும். அவருடைய மருத்துவ கவனிப்புகள்,

அவருடைய உணவு கவனிப்புகள் என்பவற்றில் கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை ஒன்றையும் செய்யவில்லை. மத்திய அரசுக்கு மாநில அரசு ஒரு அழுத்தத்தை கொடுத்திருக்க வேண்டும். அவரை இலங்கைக்கு அனுப்புவதற்காக அழுத்தங்கள் ஒன்றும் கொடுக்கப்படவில்லை. ஆகவே இதில் தமிழ்நாட்டு அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது.

மூன்றாவது இலங்கை அரசுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. இலங்கை அரசு தன்னுடைய பிரஜை என்ற வகையில் அவரை இலங்கைக்கு அழைப்பதை துரிதப்படுத்தி இருக்கலாம். ஆனால் இலங்கை அரசும் அதனை செய்யவில்லை.

நான்காவது எங்களுடைய தமிழ் அரசியல் தலைமைகள். தமிழ் அரசியல் தலைமைகள் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அது தொடர்பான அழுத்தங்களை கொடுத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு கூட அழுத்தங்களை கொடுத்திருக்க வேண்டும். இவ்வாறு எதுவுமே கொடுக்கப்படாமல் நடந்திருக்கிறது.

எல்லாவற்றையும் தொகுத்து பார்க்கையில் இதனை ஒரு இயற்கையான மரணம் என்று சொல்வதை விட ஒருவகையான கொலை என்று தான் கூற வேண்டும். ஆகவே இதற்கான பொறுப்புகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் ஏற்றே ஆக வேண்டும்.

சாந்தன் தன்னுடைய சொந்த விவகாரம் தொடர்பாக இந்த நெருக்கடிக்கு உள்ளாகவில்லை. தமிழ் மக்களினுடைய பொது பிரச்சனையான இனப் பிரச்சனையில் பங்குபற்றியதால் தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஆகவே அவர் ஒரு மாவீரராக கருதப்பட வேண்டிய ஒருவர். ஆகவே அவருக்கு உரிய கெளரவத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கிறது.

ஆகவே அவருடைய சடலம் இங்கு வருகின்ற போது அதற்குரிய கெளரவத்தை கொடுப்பதற்கு இங்குள்ள அரசியல் தலைமைகள், சமூக நிறுவனங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.

இது போன்ற நிலைமை ராஜீவ்காந்தி கொலை சந்தேக நபர்களான ஏனையோருக்கும் வராத நிலையில் அவர்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை தமிழ் அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தங்களை கொடுத்து கொண்டு வர வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டு கொள்கிறேன்.

திருச்சியில் உள்ள ஈழத் தமிழர்களுக்கான சிறப்பு முகாம் ஒருவகையில் ஒரு வதை முகாமாக தான் காணப்படுகிறது. போரும் இல்லாத சூழலில் இவ்வாறான ஒரு வதை முகாம் தேவையா என்ற ஒரு கேள்வியும் வருகின்றது. அரசாங்கத்தினுடைய சிறைகளை பொறுத்தவரையில் அவற்றுக்கென்று சில ஒழுங்கு விதிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் இருக்கும். ஆகவே அவர்கள் அந்த ஒழுங்குவிதி கட்டுப்பாட்டுக்குள் செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கும். சட்ட ரீதியாக கேள்வி எழுப்புவதும் இலகுவானது. ஆனால் சிறப்பு முகாமை பொறுத்தவரையில் அப்படி கேள்வி எழுப்புவது கூட பல நெருக்கடிகளை கொண்டு வரக் கூடிய சூழல் இருக்கின்றது. 

ஆகவே இந்த சிறப்பு முகாமை இல்லாமல் செய்வது தொடர்பாக தமிழகத்திலுள்ள தமிழ் ஆர்வலர்கள், அரசியல் சக்திகள் அதற்கான முயற்சிகளை செய்வதும் இங்கே இருக்கின்றவர்கள் அதற்கான அழுத்தங்களை கொடுப்பதும் பொருத்தமானதாக இருக்கும்.

துருவன் 

நிமிர்வு மாசி 2024 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.