இன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளில் இளைஞர்கள் பெரும்பங்கு வகித்து வந்தார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் சமூக மற்றும் அரசியல் வெளியில் இளைஞர்களின் வகிபங்கானது பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. சமூகத்தை ஒழுங்கமைத்து சரியான நிகழ்ச்சிநிரலில் செயற்படுத்தியவர்கள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் இருந்து சடுதியாக விலகிவிட்டனர் என்றே கூறவேண்டும்.  இதற்கான முக்கிய காரணங்களாக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டோர் கொலை செய்யப்பட்டமை, காணாமல் போகச் செய்யப்பட்டமை, மிரட்டல்களுக்கு பயந்து புலம்பெயர் தேசங்களுக்கு செல்ல நேரிட்டமை என்பவற்றைக் கூறலாம். சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டில் இருந்து இளைஞர்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.  இச்செயற்பாட்டின் மைய நாடியாக செயற்பட்ட யாழ்பல்கலைக்கழகம் கூட அண்மைய காலங்களில் இந்த செயற்பாடுகளில் இருந்து வெளியேறிச் செல்கின்றமையை கண்கூடாகவே பார்க்கக்கூடியதாக உள்ளது.

இந்த நிலைக்கு பல காரணங்களை மாணவர்கள் மீது குற்றம் சுமத்தும் வகையில் வைக்கப்பட்டாலும் உண்மையாக அவர்கள்மீது திணிக்கப்பட்ட தேவையில்லாத அழுத்தங்களே காரணங்களாகும்.  பெரும்பாலும் இச்செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் பல்கலை மாணவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்தே வருகின்றனர்.  இவர்களில் பலர் தமது குடும்பப் பொறுப்பை தாங்களே தாங்கிக் கொண்டு உள்ளனர்.  இந்நிலையில் இவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நேரடிமற்றும், மறைமுக மிரட்டல்கள், அழுத்தங்கள் காரணமாகவே விலகிச் செல்ல வேண்டிய நிலைக்கு பல்கலை சமூகம் நிர்பந்திக்கப்படுகின்றது.  இவ்வாறு தொடர்ந்தால் பல்கலைக்கழகங்கள் ஊடாக செயற்பாடற்ற நலிந்த தலைமைகளே வெளிக்கொண்டு வரப்படும். 

அடக்குமுறை மிகவும் உச்ச கட்டமாக தமிழ் மக்கள்மீது மிகவும் சூழ்ச்சிகரமாக நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் இந்த அடக்கு முறைகளை எதிர்க்கவல்ல இளைஞர்களை சமுதாயத்திடம் இருந்து பிரிக்க வேண்டிய தேவை அடக்கு முறையாளருக்கு கட்டாயமாகவே உள்ளது.  அதன் அங்கங்களாகவே பாடசாலை மாணவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல், போதைப்பொருள் கடத்தல்களை தமிழ் இளைஞர்களே மேற்கொள்கின்றனர் என்ற தோற்றப்பாட்டை மக்களுக்கு ஏற்படுத்துதல், வாள்வெட்டு கலாசாரம் ஒன்று உருவாகி இருப்பதை போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி அதனை எதிர்காலத்தில் தலைமையை ஏற்று செயற்படவல்ல இளைஞர்கள் மீது திட்டமிட்டு பழிசுமத்தல் என்பன நடத்தப்படுகின்றன. இதன் மூலம் அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்குவதற்கும் திறமையான மாணவர்களை உருவாக்கவல்ல பாடசாலைகளைத்  தேர்ந்தெடுத்து அந்தப் பாடசாலைகள் மீது சேறு பூசி அவர்களையும் பாடசாலைகளையும் அவமானப்படுத்துவதற்கும் முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. இது மட்டுமல்லாது எமது காலாச்சாரத்தையும் விழுமியங்களையும் சீர்குலைக்கும் வகையில் இளைஞர்களைத் தூண்டும் விதமாக முறைதவறிய பாலியல் செயற்பாட்டை அதிகரிக்கும் வகையில் சிறுமியர், யுவதிகள் மீது வேண்டுமென்றே பாலியல் துஸ்பிரயோகங்களை கட்டவிழ்த்து விட்டு அவர்களை பாலியல் அடிமைகளாக மாற்றும் செயற்பாடுகள் அரங்கேறி 
வருவதையும் பார்க்கக் கூடியதாக உள்ளது.  இவ்வாறான சிக்கலுக்குள் ஆட்படும் இளைஞர்கள் யுவதிகள் ஒரு குழப்பமான விரக்தியுற்ற நிலைக்கு வேண்டுமென்றே தள்ளப்படுகிறார்கள். உளவியல் ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தி அவர்கள் தனிமனித ஆளுமைகளை மழுங்கடிக்கும் கருத்துக்கள் அவர்கள் மத்தியில் திணிக்கப்படுகின்றன. 

இளைஞர்கள் மீது திணிக்கப்படும் மற்றொரு நடவடிக்கையாக நாகரீக மோகத்தை பார்க்க  முடியும்.  இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வேகமாக நாகரீகமோகத்திற்கு உள்வாங்கப்படுகின்றனர்.  இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள பெருமளவு பணத்தேவை உள்ளதால் இளைஞர்கள் கடனாளிகளாக ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவர்களிற்கு ஏற்படுகின்றது.  இவ்வாறான கடன் சுமையாலும் அவர்கள் சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகிச் செல்வதை காணலாம்.  மேலும் சமூகச்செயற்பாடுகளில் ஈடுபடுவது நாகரீகமற்றது என்பது போலவும் ஒரு தோற்றப்பாடு உருவாகியுள்ளது.  வெளிப்படையான ஆரோக்கியமான பொருளாதாரமும் இராஜதந்திரத்தோடு கூடிய புத்திசாலித்தனமான அரசியலுமே எமது தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தரக்கூடியது. இதுவே தமிழ் மக்களின் நிரந்தர இருப்பை இவ் இலங்கைத்தீவில் உறுதிபெறச் செய்யக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது.  எந்தவொரு இனமாக இருந்தாலும் அவர்களை வீழ்ச்சியுறாமல் தக்கவைக்க தேவையானது அவர்களிடம் உள்ள புத்திசாதுரியமான அரசியல் நகர்வுகளும், பலமான பொருளாதார கொள்கையும் செயற்பாடுகளுமே ஆகும். இந்தத் தீவை பொறுத்தவரை தமிழர் செறிவாக வாழும் வடக்கு கிழக்கில் அவர்களின் பொருளாதார பலத்தை காக்கவல்லது இயற்கை விவசாயமும் மீன்பிடியும் ஆகும்.  இந்த வளமான செயற்பாடுகளில் இருந்து இளைஞர்களை வேண்டுமென்றே அப்புறப்படுத்தி வருகின்றனர்.  இளைஞர்கள் இதுபோன்ற பொருளாதார நலன் மிக்க செயற்பாடுகளில் நவீன தொழில் நுட்பத்தை உட்புகுத்தி திறம்பட செயற்படுவதன் மூலம் எமது பொருளாதாரத்தை அழிவிலிருந்து நிமிர்த்த முடியும்.

அது மட்டுமல்லாது கடன் மற்றும் குத்தகைக்கு அடிமைப்படுவதை தவிர்த்து சேமிப்பு பழக்கத்தை முன்னேற்றும் செயற்பாடு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.  எமது மக்கள் இந்த கொடூரமான யுத்தத்தில் சிதைந்து போன எமது நிலங்களை மீண்டும் கட்டியெழுப்ப பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது கலாசாரத்தோடு ஒன்றித்து போன சேமிப்பு பழக்கத்தை இல்லாதொழித்து அவர்களைக் கடனாளிகளாக்கும் நோக்குடன் இன்று மக்கள் மத்தியில் இலகு கடன்கள் குத்தகை போன்றன பரவலாக ஏற்பட்டுள்ளன.  இந்த சூழலில் இருந்து மக்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு வழங்க வேண்டிய கடமை இந்த இளைஞர்கள் மத்தியில் எழவேண்டும்.  இல்லாதுவிடின் எமது சமுதாயம் எதிர்காலத்தில் கடனுக்காக கையேந்தும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.  இவ்வாறான செயற்பாட்டை ஒரு போதும் அனுமதிக்கமுடியாது.

  நாம் மொழி, கலாசாரம், பண்பாடு, நிலம்சார் தேசிய இனத்தவர். எம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையே.  எமது தமிழ் தேசியம் பற்றிய கொள்கையில் ஒரு சில தலைமைகளை தவிர மற்றவர்கள் விலகிச்சென்று விட்டார்கள்.  அல்லது விலை போய் விட்டார்கள் என்பதே உண்மை.  இன்றைய தேவை விலகிச் சென்றவர்களை அடையாளம் கண்டு அவர்களை தவிர்ப்பது மட்டுமல்ல எமது பிரச்சனை தொடர்பில் சர்வதேச சமூகத்தை சரியாக கையாள்வதும் ஆகும். உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் பின் நிறுவனமயப்பட்ட இந்த உலகுக்கு கடின உழைப்பாளிகளை விட புத்திசாலித்தனமான செயற்பாட்டாளர்களே அதிகம் தேவைப்படுகிறார்கள்.  எமது பிரச்சனையை இராஜதந்திர ரீதியில் புத்திசாலித்தனமாக கையாள்வதற்கு தற்போதைய தலைமைகள் ஏற்புடையவர்கள் அல்ல என்று கூறாவிட்டாலும் திறமையற்றவர்கள் என்று கூறலாம்.  இவர்கள் எவ்வளவு தூரம் எமது பிரச்சனையை ஒரு தீர்வு நோக்கி கொண்டு செல்வார்கள் என்பது தெரியாது.  அண்மைய செயற்பாடுகள் அவர்கள்மீது நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன.  இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கவேண்டுமாயின் புத்திசாலித்தனமான தமிழ்தேசியம் பற்றிய முற்போக்கான சிந்தனையுடைய இளைய தலைமுறையின் அரசியல் பங்கேற்பு தேவைப்படுகின்றது. 

  தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் இளைஞர் பங்கேற்பு அரசியலின் அவசியத்தை தெளிவுபடுத்தயுள்ளது  என்றே சொல்லலாம்.  எந்தவொரு அரசியல் பின்புலமில்லாது சமூக பிரச்சனையை இளைஞர் கையில் எடுத்ததனால் தான் தீர்வை பெறமுடிந்தது.  இது தமிழக அரசியல் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மற்றும் உலக அரங்கில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.  இந்த செயற்பாடு எமது போலித்தலைமைகளுக்கு பயத்தை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம்.  தற்போதைய சூழலில் எமது இளைஞர்களும் எமது எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு அரசியலில் பங்கேற்பது அவசியமாகும்.  ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு அரசியல் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ள நிலையில் இளைஞர்கள் அரசியலைப் புறக்கணித்து வந்தால் இதன் விளைவு வரலாற்று தவறை ஏற்படுத்திவிடும்.  இதற்கு இன்றைய இளைஞர்கள் காரணமாகி விடுவார்கள்.  இந்நிலை மாறவேண்டும்.  எதிர்கால சந்ததி சந்தோசமாக வாழவேண்டும் எமது பிரச்சனையை அடுத்த சந்ததியிடம் வழங்க முடியாது. ஆகவே இளைஞர்கள் அரசியல் பங்கேற்பின் அவசியத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்.

அன்ரனி பகீரதன்-யாழ்ப்பாணம்-
நிமிர்வு சித்திரை 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.