இமாலய பிரகடனம் - அடிப்படைகளே பிழையானது
உலகத் தமிழர் பேரவையும் சிறப்பான சிறிலங்காவுக்கான பௌத்த சங்கமும் 2023 ஆம் ஆண்டு நேபாள நாட்டில் நாகர்கோட் என்ற இடத்திலிருந்து சித்திரை மாதம் 27 ஆம் திகதியிட்ட ஒரு பிரகடனத்தை தயாரித்தார்கள். அதற்கு இமாலய பிரகடனம் என்று பெயரிட்டார்கள். ஆறு மாதங்களுக்கு மேலாக மிகவும் இரகசியமாக இந்த பிரகடனத்தை பாதுகாத்து வந்து மார்கழி மாதம் 7 ஆம் திகதிக்கும் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் இருக்கும் முக்கியமான அரசியல்வாதிகளிடம் அதனை கையளித்துள்ளார்கள்.
இந்த பிரகடனம் எழுதப்பட்ட உடனேயே ஏன் வெளியிடப்படவில்லை, ஆறு மாதங்களின் பின்னர் வெளியிடப்பட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விகள் எழும்பி உள்ளன. தமக்கு அரசியலில் தலையிடும் எண்ணம் இல்லை என்றும் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு ஒரு உரையாடல் வெளியை உருவாக்குவதே தமது நோக்கம் என்று இந்த பிரகடனத்தை வெளியிட்ட இரு தரப்பினரும் தெரிவித்துள்ளார்கள. அது உண்மை என்று எடுத்துக் கொண்டால், இந்த பேச்சுவார்த்தை, இமாலய பிரகடனம் என்பவற்றின் அடிப்படைகளே பிழை என்பதை சுட்டிக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
பொதுவாக ஒரு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப் பட முன்னர் அதில் கலந்து கொள்பவர்கள் சில முன்னிபந்தனைகளை வைப்பார்கள். அந்த முன்னிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். இந்த பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தது மேற்குலகம் என்றால் அந்த மேற்குலகத்திற்கு இதனூடாக ஏதோ ஒரு நன்மை இருக்கின்றது என்பது விளங்கிக் கொள்ளக்கூடிய ஒன்று. அந்த வகையில், அந்த நன்மை மேற்குலகத்துக்கு கிடைக்க வேண்டுமானால் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்கள் மேற்குலகத்திற்கு நிபந்தனைகளை விதித்திருக்க வேண்டும். மேற்குலகம் அவற்றை நிறைவேற்றும் வரை பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கக் கூடாது.
மேற்குலகத்தின் அழுத்தம் இல்லையென்றால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பரஸ்பரம் தமக்கிடையே நிபந்தனைகளை முன் வைத்திருக்க வேண்டும். இங்கு இவை எதுவுமே நடந்ததாக தெரியவில்லை. அப்படி நடந்திருந்தாலும் அது மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இது இந்த பேச்சுவார்த்தைகளின் ஆரம்பமே அடிப்படையில் பிழையான ஒன்று, உலக வழக்கத்துக்கு முரணான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்தப் பிரகடனத்தின் நோக்கம் இலங்கையில் இருக்கும் சமூகங்களுக்கு இடையே ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்துவதே என்று சொல்லப்பட்டது. அதன் முதலாவது கூற்று, இலங்கையில் எந்த சமூகத்தினரும் தமது அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்துக்கு ஆளாகாமல் இருக்கும் வகையில் பல்லினத்தன்மையை பேணி வளர்ப்பது பற்றியதாக இருக்கிறது. இந்தக் கூற்றுக்கு உண்மையாக இந்தப் பிரகடனத்தை எழுதியவர்கள் இருந்திருப்பார்களேயானால் அவர்கள் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களாகிய முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் பிரதிநிதிகளையும் இந்தப் பிரகடனப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த மக்களின் பங்களிப்பு இந்த பிரகடன உருவாக்கத்தில் முற்றாகவே இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் பிரகடனத்தின் முதலாவது கூற்றுக்கும் பிரகடனம் உருவாக்கப்பட்ட விதத்துக்கும் இடையில் மலையளவு இடைவெளி இருப்பதை காட்டுகிறது. அதாவது பிரகடனத்தின் அடிப்படையிலேயே ஏனைய சிறுபான்மை தேசிய இனங்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளன.
அடுத்து, இந்த பிரகடனத்தின் நோக்கம் சமூகங்களுக்கு இடையே ஒரு தேசிய உரையாடலை ஆரம்பிப்பதே என்று சொல்லப்படுகிறது. இதுவரை காலமும் இனங்களுக்கிடையேயான அரசியல் பிரச்சனையை தீர்ப்பதற்கு முட்டுக்கட்டையாக பௌத்த சங்கத்தினர் இருந்து வந்தமையால் இந்த உரையாடலை அவர்களுடன்தான் தொடங்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை குறிப்பிட்டிருந்தது. அதேவேளை பௌத்த சங்கத்துடன் இணைந்து அவர்கள் மார்கழி 20 ஆம் திகதி லண்டனில் இருந்து வெளியிட்ட அறிக்கையின் படி இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் தாம் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளனர். உரிய நேரத்தில் அவற்றை செய்ய வேண்டிய பொறுப்பு தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளைச் சார்ந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
அப்படி இருக்கையில் இமாலய பிரகடனத்தின் மூன்றாம் கூற்று புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் தனது அபிலாசையை கூறுகிறது. நாலாவது கூற்று பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல் மூலம் சமூகங்களுக்கிடையே பரஸ்பரம் நம்பிக்கை உருவாக வேண்டும் என்றும் சொல்கிறது. இலங்கையில் அதிகாரப் பரவலாக்கல் பலமுறை முயற்சி செய்யப்பட்டு தோல்வியுற்ற ஒரு கருத்தியல் என்பதை இந்நாட்டின் இனப்பிரச்சனையை படித்தவர்கள் எல்லோரும் அறிவார்கள். இந்நாட்டில் ஒரு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இல்லாமல் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுவது சாத்தியமல்ல என்பதையும் அவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
இமாலய பிரகடனத்தின் ஆறாவது கூற்று சர்வதேசத்துடன் ஏற்படுத்திய இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒப்பந்தங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற தனது அபிலாசையையும் வெளிப்படுத்துகிறது. இந்த அபிலாசைகள் எல்லாம் அரசு மற்றும் அரசியல் சம்பந்தப்பட்டவை. ஆக மொத்தத்தில் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு நோக்கிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சியே இது என்பது தெளிவாகிறது.
ஆனால் மார்கழி மாதம் 22 ஆம் திகதி உலகத் தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கை இவற்றை தீர்மானிக்க வேண்டியது அரசியல்வாதிகளே என்று குத்துக்கரணம் அடித்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும் பொழுது இமாலய பிரகடனம் என்பது ஓர் இறந்து பிறந்த குழந்தை என்பது கண்கூடு.
இனங்களுக்கிடையேயான பிரச்சனைக்கு மூலகாரணமாக உள்ளது பௌத்த சிங்கள பேரினவாதம் என்ற கருத்தியல். அந்த கருத்தியலை பாதுகாத்து வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் பௌத்த சங்கத்தினரே. ஆகவே அவர்களுடன் பேசுவதன் மூலம் இந்த கருத்தியலை கைவிட்டு அவர்களை வென்றெடுக்கலாம் என்ற பகற்கனவு உலகத் தமிழர் பேரவைக்கு இருக்கிறது போல தெரிகிறது. உலகத் தமிழர் பேரவைக்கு மட்டுமல்ல காலத்துக்கு காலம் இந்த பகற்கனவு தமிழ் தரப்பு அரசியல்வாதிகளாலும் வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னர் இருந்த காலத்தில் இருந்தே இவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்திருக்கின்றன.
தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டும் பேரினவாதக் கருத்தியலை சிங்கள தலைவர்கள் கைவிடவில்லை. அண்மைக்காலத்தில் நல்லாட்சி அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளை கைவிட்டு அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கலாம் என்று தமிழ் அரசியல்வாதிகள் முயற்சித்து தோல்வி கண்டதையும் நாம் கண்டிருக்கிறோம். இவ்வாறான வரலாற்றுப் பின்னணியில் இருந்தே பேச்சுவார்த்தைக்கான அடிப்படைகள் உருவாக்கப் படவேண்டும். அதனை விடுத்து பௌத்த சங்கத்துடன் புதிதாக ஒரு பேச்சுவார்த்தையை தொடங்குவதன் ஊடாக பௌத்த சிங்கள பேரினவாத கருத்தியலை சிறிலங்காவிலிருந்து அகற்றி விடலாம் என்று நினைப்பது முட்டாள்தனம்.
அதற்கும் மேலாக, இந்த கருத்தியல் வெற்றிடத்தில் இருந்து பௌத்த சங்கத்தினரின் மனங்களில் வந்து குடியிருந்த ஒன்று அல்ல. இந்த குருமார்கள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்தே வருகிறார்கள். சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இந்தியா மீதான அச்சத்துக்கும் அதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழர் மீதான அச்சத்துக்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. இலங்கையின் பாடப் புத்தகங்களில் கற்பிக்கப்படும் மகாவம்சத்தில் தொடங்கி இன்றைய அரசியல்வாதிகளால் மேடைகளில் உமிழப்படும் இனவெறுப்புக்கு பௌத்த குருமார்தான் காரணம் என்று சொல்லி விட முடியாது. இலங்கையில் பௌத்த சங்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பல தடவைகள் நடந்துள்ளன. திசரானி குணசேகராவால் எழுதப்பட்டு நிமிர்வு 49 (மார்கழி – தை 2022) இதழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட ‘பௌத்தத்தின் மூன்றாவது அலை நீடிக்குமா?’ என்ற கட்டுரை இதனை விரிவாக விபரிக்கிறது. அண்மையில் நடந்த ‘அரகலய’ போராட்டத்தில் பௌத்த சங்கத்தினரை மக்கள் நிராகரித்ததையும் அவர்கள் பின்னடைந்து இருந்ததையும் நாம் நேரடியாகவே பார்த்தோம்.
சிறிலங்கா அரசியல்வாதிகளே தமது தேவைகளுக்காக பௌத்தசங்கத்தினரைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சங்கத்தினருக்கு நிதியுதவி அளிப்பவர்களும் அவர்களாகவே இருக்கிறார்கள். இந்த இருதரப்பினரும் தமது இருப்புக்காக ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கிறார்கள். இது ஒரு வகை ஒட்டுண்ணி உறவு. ஆனால் இந்த உறவை தீர்மானிக்கின்ற சக்தியாக அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். இனப்பிரச்சனையை தீர்க்க பௌத்த குருமார் தடையாக இருக்கிறார்கள் என்ற ஒரு மாயையை உருவாக்கி சிங்கள அரசியல்வாதிகள் பௌத்த குருமாரின் பின்னால் ஒளிந்து கொள்வார்கள். ஆனால், அவர்கள் நினைத்தால் இந்த பௌத்த குருமாரை ஒரே நாளில் புறம் தள்ளி விட முடியும். அப்படி இருக்க அரசியல் மாற்றத்திற்காக பௌத்த குருமாருடன் பேசுவோம் என்று புறப்பட்டிருப்பவர்கள் சிங்கள மக்கள் பற்றியும் அவர்களை கவரும் அரசியல் பற்றியும் புரிதல் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது.
அதேவேளை, பௌத்த குருமார்கள் சிறிலங்கா அரசியலில் தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தி இனப்பிரச்சனையில் சிங்கள அரசியல்வாதிகளின் பங்கை குறைத்து மதிப்பிடுவதற்கான ஒரு முயற்சியாகவே இதனை பார்க்க வேண்டும். அதன் மறுபுறமாக, சனாதிபதி ரணில் மட்டுமல்ல இனப்படுகொலையை நேரடியாக முன்னின்று நடத்திய முன்னாள் சனாதிபதி மகிந்தா மீது இருக்கும் கெட்ட பெயரை குறைக்கும் முயற்சியாகவும் இதனை பார்க்க வேண்டும். மேலும், அரகலய போராட்டத்தில் செல்வாக்கு இழந்து கொண்டிருந்த பௌத்த குருமாரின் பிம்பத்தை தூக்கி நிறுத்தும் ஒரு முயற்சியாகவும் இதனை பார்க்க வேண்டும்.
இமாலய பிரகடனத்தில் ஈடுபட்ட உலகத் தமிழர் பேரவைக்கு இவை எல்லாம் தெரியாத விடயங்களா, அல்லது தெரிந்து கொண்டே இதில் ஈடுபட்டார்களா என்பது ஆராயப்பட வேண்டும். இவை பற்றிய தெளிவில்லாமல் அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பார்களாகவே இருந்தால் இந்த முயற்சியில் ஈடுபடுவதற்கான எந்தவிதமான தகுதியும் அவர்களிடம் இல்லை என்பது தெளிவாகிறது. தெரிந்து கொண்டும் இதில் ஈடுபட்டிருப்பார்கள் என்றால் அவர்களின் உள்நோக்கம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
அதேவேளை, தமிழர் தரப்பில் இந்த பிரகடனம் தொடர்பாக எழுந்திருக்கும் எதிர்ப்பு நியாயமான ஒன்றாகவே தெரிகிறது. குறித்த பிரகடனத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பிலோ, இன்று வரை தமிழர் தாயகத்தில் தொடரும் காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம், அரசியல் கைதிகள் பிரச்சினை, பயங்கரவாத தடை சட்டத்தின் தொடர் பயன்பாடு, நினைவு கூர்தலில் பங்கேற்றால் கைது தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்த பிரகடனத்தின் நோக்கம் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் அதிலிருந்து மீள்வதற்கு புலம்பெயர் முதலீடுகளை ஊக்குவிப்பதுவும் தற்போதய சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமாதானத்தை ஊக்குவிப்பவர் என்ற பிம்பத்தை உருவாக்குவதுமே என்று தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.
இந்த பிரகடனத்துக்கு எதிராக வடக்கு கிழக்கை சேர்ந்த 75 இற்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் இணைந்து வெளியிட்ட அறிக்கை முக்கியமானது. அதில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, "தாயகத்தில் வாழும் மக்களின் சார்பில் பேசுவதற்கும் ஒப்பந்தங்களையும் பிரகடனங்களையும் மேற்கொள்வதற்கும் தாயகத்தில் அவர்களால் அமைக்கப்படும் பரந்த ‘கூட்டு முன்னணி’ ஒன்றிற்கே தார்மீக உரிமை உள்ளது என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகமயமாக்கப்பட்டுள்ள முதலாளித்துவ நலன்களுக்கு இசைவாக பூகோள அரசியல் ஒழுங்குகள், தேசிய அரசுகளுக்கு உட்பட்ட அரசியல் சமூக பொருளாதார ஒழுங்குகள் என்பவற்றை முன்னிறுத்தி உள்நாட்டு பிரச்சினைகளின் தன்மைகளையும், கதையாடல்களையும் மீள கட்டமைப்புச் செய்யும் சர்வதேச அரசியல் அட்டவணைக்கு ஏற்பவே இமயமலைப் பிரகடன முயற்சி நிதியீட்டம் செய்யப்பட்டு அரங்கேற்றப்படுகிறது என்பதை நாம் தெளிவாக புரிந்துள்ளோம்.
உலகங்கெணும் வாழும், அரசியல் பொருளாதார அடக்குமுறைக்கு உட்படும், நேரடியான அரச வன்முறைக்கு உட்பட்டுவரும், அரசற்ற தேசிய இனங்கள், விளிம்பு நிலை மக்கள் என பல்வேறுபட்ட தரப்பினரை குரலற்றவர்களாக மாற்றும் பாரிய கருத்தியல் மேலாதிக்கத் திட்டங்கள், குறித்து நாம் விழிப்புடன் இருக்கிறோம்.இப்பூமியின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் ஒரு பொருளாதார அரசியல் முறைமையின் அரூபகரங்கள் எம்மைச் சூழ்ந்திருப்பதை நாம் அறிவோம்.
உலகத் தமிழர் பேரவை – சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியத்தினர் வெளியிட்டுள்ள இமயமலைப் பிரகடனம் இவ்வரூப கரங்கள் பின்னும் மாய வலையின் ஒரு கண்ணிதான் என்பதும் எமக்கு தெரியும்.அவற்றுக்குப் பொருத்தமான வகையில் எதிர்வினையாற்றக்கூடிய பரந்த அரசியல் முன்னணியை தேசிய எல்லைகளுக்கு உட்பட்டும், அதற்கு வெளியேயுள்ள புலம் பெயர் தமிழ் மக்களையும் உள்வாங்கி, தாயகத்தில் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் உருவாக்குவர் என்பதை வெளிப்படுத்தி நிற்கிறோம்." என்றுள்ளது.
2009 க்குப் பிறகு ஈழத்தமிழரது அரசியலில் புலம்பெயர் அரசியல் தான் அதிகம் செல்வாக்கு செலுத்தியது. போரின் பின்னரான பல போராட்டங்களை அணையாமல் பாதுகாத்ததும், போரில் வீழ்ந்த மக்களை ஓரளவுக்காவது தூக்கி நிமிர்த்தியது புலம்பெயர் பொருளாதாரங்கள் தான். இவற்றுக்கும் மேலாக ஐ.நா. சபையில் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு எமது பிரச்சனையை இன்னமும் சர்வதேச ரீதியில் நீர்த்துப் போகாமல் வைத்திருப்பதும் புலம்பெயர் சமூகத்தினர் தான். தாம் வசிக்கும் நாடுகளில் எல்லாம் அரசியல் ரீதியில் செல்வாக்கு செலுத்தி அந்த நாட்டு பாராளுமன்றங்களில் எம் மீது நடத்தப்படும் அநீதிகள் பற்றி ஒலிக்கச் செய்து கொண்டிருப்பதும் இவர்கள் தான். அந்தந்த நாடுகளில் இனப்படுகொலை தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றியும் விழிப்புணர்வை உருவாக்கியும் வருபவர்கள் இவர்கள் தான்.
இப்படி ஒரு வலுவான நிலையில் இருந்த புலம்பெயர் தேசத்தை பலவீனமாக்க வேண்டிய தேவை சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது. முக்கியமாக நாட்டின் பொருளாதாரத்தை மீள் கட்டமைக்கவும், பங்குனி மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சிறிலங்கா மீதான கண்டனங்களை குறைத்துக் கொள்ளவும் வேண்டிய அவசிய அவசரத்தில் இருக்கிறது சிறிலங்கா. அந்த நோக்கத்தை நோக்கிய நடவடிக்கைகள் தான் துவாரகா விடயமும், இமயமலை பிரகடனமும். துவாரகா உயிருடன் இருப்பதனால் அவர் போலவே பல்லாயிரக்கணக்கானவர்கள் இறுதி யுத்தத்திலிருந்து தப்பி ஓடி புலம்பெயர் தேசங்களில் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், ஆகவே அங்கு கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்ற பிம்பத்தை சிறிலங்கா அரசு உருவாக்க நினைக்கிறது. இமாலய பிரகடனத்தின் மூலம் ஒரு சமாதான முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே சிறிலங்கா மீதான கண்டனங்களை குறைத்துக் கொள்வோம் என்ற சர்வதேசத்தை சொல்ல வைக்கலாம் என்று கணக்கு போடப்படுகிறது.
உண்மையில் எவ்வகையான ஒப்பந்தங்களோ, பிரகடனங்களோ இந்த மண்ணிலிருந்து சிவில் சமூகங்களை இணைத்த கூட்டாக வெளிவர வேண்டும். அப்போது தான் எம்மக்களின் அடிப்படை கோட்பாடு பிரச்சினைகளோடு அன்றாடம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கவும் உதவும். அதை விடுத்து இப்படி மிகவும் இரகசியமாக மக்களுக்கு தெரியாமல் கருக்கொள்ளும் பிரகடங்களால் எங்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு மக்களிடமிருந்து வரவேண்டும். அத்தீர்வுகள் இறக்குமதி செய்யப்பட முடியாதவை. 13 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் தோல்வி அதனை தெளிவாக காட்டி நிற்கிறது.
அதேவேளை தமது பிரச்சனைகளுக்கான தீர்வுக்காக போராட வேண்டிய கடமை மக்களிடம் இருக்கிறது. அதற்காக அவர்கள் தம்மை கட்டமைத்துக் கொண்டு தமது அரசியல் பலத்தை தொடர்ந்து பறைசாற்றிக் கொண்டு இருக்க வேண்டும். தமக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கை தொடர்பாகவும் அந்த மக்கள் கிளர்ந்து எழுவார்கள் என்ற பயம் அரசியல்வாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் வர வேண்டும். அப்படி இல்லாத சந்தர்ப்பங்களில் தான் அந்நியர்கள் மீட்பர்களாக தீர்வுப் பொதியுடன் வந்து இறங்குவார்கள். மக்களின் அபிலாசைகளை தகர்த்து தமது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற எத்தனிப்பார்கள். அவ்வாறான முயற்சிகள் நடக்கும் வேளைகளில் மட்டும் பல்வேறு குழுக்களாக அறிக்கை விடுவதிலோ அல்லது ஓர் அறிக்கையில் எல்லாரும் சேர்ந்து கையொப்பம் இடுவதிலோ பயனில்லை. அது இது போன்ற முயற்சிகளின் மீள நிகழாமையை தடுக்கப் போவதில்லை.
குறுகிய சிந்தனையுள்ளவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு எமது இனம் பலியாகாமல் இருக்க வேண்டுமாக இருந்தால் ஒரு பலமான மக்கள் அமைப்பு அவசியமாக இருக்கிறது. அது தொடர்ச்சியாக தனது பிரசன்னத்தை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். வெறுமனே நிகழ்வுகளுக்கு எதிர்வினை (reactive) ஆற்றவதுடன் நின்றுவிடாது அரசியல் ரீதியில் முன் நோக்கிய (proactive) செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த இமாலய பிரகடனத்துக்கு எதிர்ப்பு அறிக்கையில் கையொப்பம் இட்டிருக்கும் 75 இற்கும் மேற்பட்ட வெகுசன அமைப்புகள் தம்மை ஒரு கட்டமைப்பாக உருவாக்கிக் கொள்வதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் செயற்பாடுகளை எவ்வாறு முன் நோக்கியவையாக மேற்கொள்ளலாம் என்று சிந்திக்க வேண்டும்.
ரஜீவன்-
நிமிர்வு மார்கழி 2023 இதழ்
Post a Comment