தமிழ் தேசிய அரசியலும் தமிழ் ஊடகங்களின் வகிபாகமும்
மேற்படி தலைப்பில் நோர்வேயின் தமிழ் முரசம் வானொலியில் 27.05.2023 அன்று இணைய (zoom) வழிக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தமிழ் முரசம் வானொலியின் அறிவிப்பாளரான குகன் யோகராஜா, போராட்டக் காலங்களில் வெளிவந்த ஊடகங்கள் ஊடக தர்மத்தை உச்சமாக மதித்தன என்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு இருந்தன.
அடக்கு முறைக்கு எதிரான தெளிவூட்டலை மக்களிற்கு ஏற்படுத்தி, மக்களின் போராட்டத்திற்கான உந்துதல் சக்தியை மக்களிடையே விதைத்து அவர்களை ஒருமுகப்படுத்தும் பணிகளை ஊடகங்கள் செய்தன. துணிவோடும் அறத்தோடும் இருந்தன. ஒரு காலத்திலே சுதந்திரன் என்கின்ற ஒரு பத்திரிகை யாழ்ப்பாணத்திலே வெளிவந்திருக்கின்றது. அது தமிழரசு கட்சியினுடைய உத்தியோகபூர்வ பத்திரிகையாக இருந்த்து.
அதனுடைய ஆசிரியராக கோவை மகேசன் அவர்கள் இருந்திருக்கிறார். எவ்வளவு அடக்குமுறைகள் ஆளும் சிங்கள வர்க்கத்தால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டாலும் கூட அவற்றுக்கு எல்லாம் அஞ்சாமல் தன்னுடைய பத்திரிகைகளிலே முதல் பக்கத்தில் முழுப்பக்கத்திலோ அல்லது அரை பக்கத்திலோ தனியே கறுப்பு நிறத்தினை மாத்திரம் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இவ்வாறான துணிவெல்லாம் அன்றைய காலத்திலே ஊடகங்களில் இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லை என்பது ஒரு கவலைக்குரிய விடயம்.
2009 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் இனவழிப்போடு எங்களுடைய ஆயுத ரீதியிலான போராட்டம் முடக்கப்பட்டிருக்கின்றது. அதனை தொடர்ந்து வந்திருக்கும் 14 வருட காலப்பகுதியிலே தமிழ் ஊடகங்கள் தமிழ் தேசிய அரசியலுக்காக தமிழ் தேசியத்தின் இருப்புக்காக என்ன பங்காற்றி இருக்கின்றன என்ற பெரிய கேள்வி இருக்கின்றது. இதற்கு உதாரணமாக சமீபத்திய மக்கள் போராட்டங்களை நீங்கள் பார்க்கலாம். சமீபத்தில் தையிட்டியிலே சட்டவிரோதமாக மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கும் திஸ்ஸ ரஜமகா விகாரையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று மக்கள் போராடி இருந்தார்கள். அந்த விகாரை அமைக்கப்பட்டிருக்கிற நிலத்திற்கு உரிமையானவரிடம் திரும்ப அந்த நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும் தவிர, அதனை சுற்றியுள்ள மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் மீண்டும் விடுவிக்கப்பட்டு உரிய மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு மக்கள் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றன. ஆனால் இந்த மக்கள் போராட்டங்களுக்கு தமிழ் ஊடகங்கள் கொடுத்த பெறுமானம் என்ன என்கிற கேள்வி எப்பொழுதுமே இருந்து வருகிறது.
தையிட்டியில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது அரச அடக்குமுறைகளை காணொளி ஊடாக பார்த்திருப்பீர்கள். செய்தியாளர்கள் ஊடாக கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அந்த போராட்டத்திலே கலந்து கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய சார்பிலே பேசக்கூடியவர்கள் அதேபோல பொதுமக்கள் சார்பிலே பேசக்கூடியவர்கள் போராட்டத்திலே கலந்து பங்கெடுத்தவர்கள் சார்பிலே பேசக்கூடியவர்கள் எல்லாம் அங்கே நடந்த அடக்குமுறைகளை வெளிக்கொண்டு வந்திருந்தார்கள். ஆனாலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற சில அச்சு ஊடகங்கள் இந்த விடயங்களிற்கு முதன்மை கொடுக்கவில்லை என்ற குறைபாடு இருக்கிறது.
இந்த செய்திகளை பத்திரிகையின் முதல் பக்கத்தில் தலையங்கமாக போட்டு அந்த போராட்டங்களினுடைய தாற்பரியத்தை அதனுடைய தேவையை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களை ஒருமுகப்படுத்தி அந்த போராட்ட களங்களிற்கு அவர்களை வரவைக்க வேண்டும் என்கிற தார்மீக கடமையை அந்த ஊடகங்கள் செய்யவில்லை. இரண்டாவது மூன்றாவது பக்கத்திலே பெட்டி செய்தியாக போடுகின்ற நிலைமை தான் இன்று தொடர்கிறது. இவ்வாறான நடவடிக்கைகள் தான் எங்களுடைய ஊடகங்கள் அறம் சார்ந்து எதை செய்ய வேண்டுமோ அதனைச் செய்யவில்லை என்று சிந்திக்க வைக்கின்றன. எதை செய்யக் கூடாதோ எதனை திணிக்க கூடாதோ அந்த விடயங்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன என்று கவலைப்பட வைக்கின்றன.
இதனையடுத்துப் பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி நடராஜன் காண்டீபன் தெரிவித்த கருத்துகள் வருமாறு. ஜனநாயகத்தை தாங்கி நிற்கின்ற வலுவுள்ள ஒரு தூண் தான் ஊடகம். ஆயுத போராட்டத்துக்குப் பின்னரான ஒரு சூழலிலே இந்த ஊடகங்களினுடைய கடப்பாடும் கடமைகளும் வெகு ஆழமாக உணரப்படுகிற ஒரு காலகட்டத்தில் இருந்து கொண்டு தான் நாங்கள் இதனை பேசுகிறோம். தமிழ் தேசிய அரசியல் பரப்பிலே ஜனநாயக அடிப்படையிலே கட்சிகள் உருவாக்கப்பட்ட பொழுது தமிழ் கட்சிகளுக்காக பல பத்திரிகைகள் இருந்தன. சுதந்திரன், தாயகம், தமிழகம், தமிழன் என்கிற பத்திரிகைகள் எல்லாமே 40ஆம் ஆண்டு பிற்பகுதியிலே ஆரம்பிக்கப்பட்டன. இவை அச்சு ஊடகங்கள். அதற்கு பின்பு ஒலி ஊடகம் என்ற வானொலி உள்வாங்கப்படுகிறது. அதற்கு பின்னராக ஒலி, ஒளி ஊடகமாக தொலைக்காட்சிகள் உள்வாங்கப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் பேசு பொருளாகியுள்ளன.
விடுதலைப்புலிகளினுடைய போராட்டக் காலத்தை நாங்கள் எடுத்தால் அதிலே பல பத்திரிகைகள் அச்சு ஊடகங்கள் வழியாக கொண்டு வரப் பட்டன. அதற்கு பிறகு நிதர்சனம் தொலைக்காட்சி, புலிகளின் குரல் வானொலி என்பன வந்தன. விடுதலை புலிகளினுடைய பத்திரிகை அந்த விடுதலை போராட்டத்தினுடைய நேர்த்தியையும் அதனுடைய உண்மைகளையும் வெளிக்கொண்டு வர வேண்டி உருவாக்கப்பட்டிருக்க கூடிய ஒரு பத்திரிகை.
அதேபோல அன்றைய காலகட்டங்களிலே முரசொலி, ஈழமுரசு, ஈழநாதம், உதயன், சுடரொளி என்றவாறாக பிராந்திய பத்திரிகைகளாக அறியப்பட்ட பத்திரிகைகள் இருந்தன. இந்த பிராந்திய பத்திரிகைகள் வடக்கிலே எழும்பிய பத்திரிகைகள். இவை எல்லாம் இன்றைக்கு தொடர்ந்தும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. தேசிய பத்திரிகைகளாக சொல்லப்படுகிற வீரகேசரி,
தினக்குரல் மற்றும் அரசினுடைய பத்திரிகையாக வெளிவருகின்ற தினகரன் என்பவை உள்ளன. அதேவேளை பல பத்திரிகைகள் ஆரம்பித்து வெளிவந்து மறைந்து போகின்ற சூழலையும் நாங்கள் பார்க்கிறோம்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்று சொல்லப்படுகின்ற அந்த கட்டமைப்பிற்கு கீழே பத்திரிகைகள் அல்லது இந்த ஊடக நிறுவனங்கள் பதியப்பட வேண்டும் என்கிற ஒழுங்குமுறை இருக்கிறது. இந்த நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்டஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஆழமான பொறுப்பு இருக்கின்றது.
தமிழ் தேசிய அரசியலும் தமிழ் ஊடகங்களின் வகிபாகமும் என்பது பற்றிய கலந்துரையாடல் காலத்தின் தேவையாகும். குறிப்பாக இன்றைக்கு ஒரு தொலைபேசி வைத்திருப்பவர் தன்னை ஒரு ஊடகவியலாளராக பதிவு செய்து கொண்டு சுயமாக ஓர் ஊடகத்தை நடத்த முடியும். யூடியூப்பில் தமது ஊடகத்தை உருவாக்கி ஒளி, ஒலி வடிவில் தமக்கு தேவைப்படக்க கூடிய விடயங்களை முன் நகர்த்துகிற ஒரு போக்கு மிகவும் பயங்கரமானதாக உணரப்படுகின்ற நிலைமையையும் நாங்கள் பார்க்கிறோம்.
இன்றைக்கு ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பின்னால் ஓர் ஊடகம் இருக்கிறது. தையிட்டியில் கடந்த நான்காம் திகதி நடத்திய போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் வந்த பொழுது அவர்களுக்குப் பின்னால் ஊடகவியலாளர்கள் ஆறு, ஏழு பேர் ஓடி வருகிறார்கள். நாங்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தும் கூட அவர்கள் நாம் சொல்வதை கவனத்தில் எடுக்கவில்லை.
நடக்கின்ற விடயங்களை உங்கள் பத்திரிகையில் ஆககுறைந்தது ஒரு மூலையிலாவது வெளியில் கொண்டு வாருங்கள் என்று கேட்டோம். வரலாற்றில் இப்படி ஒன்று நடைபெற்றிருக்கிறது என்பதையாவது பதிவு செய்ய வேண்டும். அது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய செய்தியாக கூட இருக்க வேண்டும் என்பது அல்ல, நீங்கள் அரசியலுக்கும் அப்பாலே நின்று இந்த கடமைகளை ஆற்ற வேண்டும் என்று நாங்கள் விநயமாக வேண்டிக் கொண்டோம். அப்படி நாம் வேண்டிக் கொண்ட பத்திரிகைகளிலே கூட வெளிவரும் செய்திகளைப் பார்க்கின்ற பொழுது மிகவும் மனவருத்தமாக இருக்கும். ஏனென்றால் நாங்கள் எங்களுக்கான பிரபலங்களை அதிலே தேட வரவில்லை. சில பத்திரிகைகள் தனித்து அரசியலிற்காகவே கொண்டுவரப்பட்டு அரசியல்வாதிகளின் நிதியுதவியினாலேயே நடத்தப் படுகின்றன. சில பத்திரிகைகள் புலம்பெயர்ந்தவர்களுடைய முகவர் பத்திரிகை அமைப்புகளாக இருக்கின்றன. பரவலாக பாரியளவில் நிதிகளை முதலிட்டு இந்த விடயங்களை செய்கிறார்கள்.
தயவுசெய்து ஊடகத்திலே என்ன கருத்தையும் முன்வையுங்கள். ஆனால் ஒரு கட்சியை அல்லது அமைப்பை முன்னிறுத்தி விமர்சனத்தை முன்வைக்கிற பொழுது அந்த கட்சியினுடைய தலைவரையோ அல்லது ஊடக பேச்சாளரையோ தொடர்பு கொண்டு அவர்களுடைய நிலைப்பாட்டையும் உள்ளடக்கி வெளியிடுங்கள். இதுதான் பத்திரிகையினுடைய தர்மம்.
இன்றைக்கு கோயில் திருவிழாக்களில் களியாட்டங்களில் மக்களை திசை திருப்புகிற பணியிலும் ஊடகங்கள் முன்னிற்கின்றன. இந்த வகையிலே தான், ஒரு ஊடகம் தனது நிலைப்பாட்டை ஆகக்குறைந்தது தமிழ் தேசிய நிலைப்பாடாக வரையறுக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டுக்கு எதிரான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அரசியலை நாங்கள் மாற்றுவதாக இருந்தால் தமிழ் தேசிய பரப்பிலே கடமையாற்றி கொண்டிருக்கின்ற ஊடகங்களுக்கு பாரிய பங்களிப்பு இருக்கிறது.
இன்றைக்கு இங்கு இருக்கின்ற தமிழ் தேசியத்தை சிதைக்கிற ஊடகங்கள் சார்ந்து நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்ய வேண்டிய சூழலிலே இருக்கிறோம். ஏனென்றால் ஜனநாயகத்தினுடைய ஒரு பண்பாக ஊடகத்தினுடைய நிலைப்பாட்டை நிச்சயமாக விமர்சித்தே ஆக வேண்டும். தமிழ் பத்திரிகை தானே என்று விடவும் முடியாது. ஏனென்றால் இது ஒருபோலியான கருத்தை மக்களுக்குள்ளே கொண்டே சேர்க்கிறது. போலியான தமிழ் தேசிய தரப்பில் இயங்குகின்ற பத்திரிகையை நாங்கள் அடையாளங்கண்டு ஊடகங்களை அடையாளங்கண்டு அவற்றுக்கு எதிராக பாரிய பங்காற்ற வேண்டி இருக்கிறது. இந்த ஊடகங்களை தமிழ் தேசியநிலைப்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஒரு அழுத்தத்தை கொடுப்போம் என்றால் இந்த ஊடகவியலாளர்களால் தமிழ் தேசம் காப்பாற்றப்பட்டு தமிழ் தேச விடுதலைக்கான அரசியலை தயார்படுத்த முடியும் என்பது என்னுடைய பாரிய நம்பிக்கை.
பத்திரிகை எழுத்தாளர்களாக அறியப்படுபவர்கள் இன்றைக்கு பெரியளவில் மழுங்கடிப்பை செய்கின்றார்கள்.ஆய்வாளராக அறியப்படுகின்றவர்கள் பூகோள அரசியலை விளங்கி கொண்டவர்களாக சொல்லிக்கொண்டு பூகோள அரசியலை எழுத வருகின்றவர்கள் இந்த விடயங்களை முன்கொண்டு வருவதில்லை. இனப்படுகொலையினுடைய சட்டத் தத்துவத்தை எழுதிய ஒரு பத்திரிகையை நீங்கள் காட்டுங்கள். இவ்வாறு பிராந்திய தேசிய பத்திரிகைகள் முகவர்களுக்கான தரகர்களுக்கான பத்திரிகைகளாகவும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய போசிப்பிலே இருப்பதாலும் அவர்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டிலே இல்லை. துரதிஷ்டவசமாக இந்த பத்திரிகைகள் எழுதுகிற பெரும்பாலானவர்கள், கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த இடத்தை ஆக்கிரமித்து நிற்பவர்கள் கொடுக்கின்ற கூலிக்கு கூவும் ஆட்களாக தான் இருக்கிறார்கள். அவர்கள் ஊடக மாபியாக்களாக இருக்கின்றனர். இந்த கூலி எழுத்தாளர்களை ஒதுக்க வேண்டும் புறந்தள்ள வேண்டும் அதற்கான ஒரு வேலைத்திட்டம் எங்களிடம் இருக்க வேண்டும்.
கனடா CTR வானொலி அறிவிப்பாளரான சிவவதனி பிரபாகரன் கருத்து தெரிவிக்கையில்,
காலத்தின் வழிகாட்டியாக செயற்படுகின்ற பெரும் கடமை ஊடகங்களுக்கும் ஊடகத்துறையில் செயலாற்றுபவர்களுக்கும் உண்டு. 2009க்கு முன்னரான காலப்பகுதியில் அனைத்து தமிழ் தேசிய ஊடகங்களும் ஒரே வழியில் பயணித்தன. ஒரே விடயங்களையே பேசின.
ஆனால் 2009க்கு பின்னர் ஒரு குழப்ப நிலைக்குள் மக்கள் சென்றதை விட ஊடகப் பரப்பு சென்றுவிட்டது. இப்பொழுது ஊடகங்களை மதிப்பிடுவதை விட ஊடகவியலாளர்களைத் தான் மதிப்பிடக் கூடியதாக இருக்கிறது. அதற்கு சற்று விதிவிலக்காக சில ஊடகங்கள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு ஊடகவியலாளனும் தனித்தனிக் கொள்கையோடு தனித்தனிச் சிந்தனையோடு தனித்தனிப் பார்வையுடன் இருக்கிறார்கள். அவர்களை ஆட்டுவிக்கின்றவர்களாக யார் யாரோ இருக்கின்றார்கள். வெவ்வேறு திசையில் அவர்கள் பயணிக்கின்றார்கள்.
கொள்கை என்று பயணிக்கின்ற ஊடகங்கள் மிக குறைவாக இருக்கின்றன. அன்றைய வழிகாட்டலில் இருந்த தேசிய ஊடகங்கள் பலவும் இன்று மாறி இருப்பதை பார்க்க முடிகிறது.
அத்தகைய ஒரு சூழலில் நாங்கள் இன்று பயணிக்கின்ற இந்த ஊடகவியலாளர்களை பார்க்கின்ற பொழுது குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஊடகவியலாளர்களுக்கு பெரும் கடமை உண்டு.
எப்பொழுதும் மக்களை நாங்கள் குறை சொல்ல கூடாது. ஏனென்றால் மக்கள் ஒரு உன்னதமான போராட்டத்திற்கு துணை நின்றவர்கள்.
இலங்கை தீவுக்குள் ஜனநாயக ரீதியாக ஊடகங்கள் செயற்பட கூடியதாக நிலைமை இல்லை. தமிழ் ஈழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் ஈழ விடுதலை வரலாறுகளை எழுதியவர்கள் எல்லாம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்ற விடயங்களை பார்க்கின்றோம்.
காவல்துறையினர் கட்டாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தூக்கி கொண்டு சென்று பற்றைக்குள் வீசுகின்றார்கள். அதனை சொல்வதற்கான ஊடக வெளிகள் இல்லை. மறுபுறம் ஊடகங்கள் எஜமானர்களுக்காக வேலை செய்கின்றவையாக இருக்கின்ற நிலைமையை பார்க்கின்றோம். உண்மைக்காக போராடுகின்றவர்களை இழுத்து வீழ்த்துகின்றவர்களாகவும் அவர்களை சாடுகின்றவர்களாகவும் ஊடகங்கள் இருப்பதை பார்க்கின்றோம்.
ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக எவர் குரல் கொடுக்கின்றார்களோ எவர் போராடுகின்றார்களோ அவர்களோடு நாங்கள் நிற்கின்றோமே தவிர இங்கே கட்சி அரசியலை ஒரு புலம்பெயர்ந்த ஊடகவியலாளராக நாங்கள் செய்யவில்லை. இன்று தமிழ் தேசிய பரப்பிலே இயங்குகின்ற பெரும்பாலான ஊடகங்கள் தமிழினத்திற்கு உண்மையாக இல்லை. சில ஊடகங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன. தையிட்டியில் தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் போராட்டம் நடந்தது. இதை எத்தனை ஊடகங்கள் வெளியில் கொண்டுவந்தன?
இலத்திரனியல் ஊடகங்கள் செய்த அளவிற்கு கூட அச்சு ஊடகங்கள் செய்யவில்லை. இன்று போராட்டங்களுக்கு ஆதரவாக இருக்கின்ற பொழுது, அதுவும் பெண்களாக இருக்கின்ற பொழுது எங்கள் மீது தனிப்பட்ட வசைப்பாடல்கள் பொய்யான கதைகள் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறாக புலம்பெயர்ந்த தளத்தில் இருக்கும் எங்களுக்கே இப்படி இருக்கின்ற பொழுது அங்கு களத்திலே நின்று போராடுபவர்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும். இவற்றை திட்டமிட்டே இவர்கள் செய்கின்றார்கள். இதன் பின்னால் வல்லரசுகள் இருக்கின்றன.
இவை எல்லாம் தெரியாமல் ஒரு ஊடகவியலாளர் இருக்கப்போவதில்லை. ஆனால் சொல்ல முடியாமல் அல்லது சொல்ல மாட்டாதவர்களாக இருப்பது மிக வெட்க கேடு. அப்படி செய்ய முடியாதவர்கள் ஊடகவியலில் பயணிக்க கூடாது.
கண்ணுக்கு தெரிகின்ற எதிரிகளோடு நின்று போராடுபவன் பலமான போராளி ஆனால் கண்ணுக்கு தெரியாத காலவெளிகளில் பல தூரமுள்ள எதிரிகளோடு போராடுகின்றவன் ஒரு ஊடகவியலாளன். அவன் மக்களை நேசிக்க வேண்டும் மக்களோடு பயணிக்க வேண்டும். மக்கள் உணர்வுகளை வெளிக்கொண்டுவர வேண்டும். மக்களுக்கு எது நன்மையோ அதை செய்வதற்காக தன்னை உருக்கி கொடுக்க வேண்டும். அப்படியொரு பயணத்தை செய்கின்றவர்கள் நிச்சயமாக ஊடகவியலாளராக பயணிக்க வேண்டிய காலம் இது. மக்களுக்காக போராடும் போது ஊடகவியலாளர்கள் அந்த விடயத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மக்களுக்கு எழுச்சிஊட்ட செய்ய வேண்டும்.
புலம்பெயர்ந்த மக்களை சரியாக அணி திரட்ட வேண்டிய கடமை ஊடகவியலாளர்களுக்கு இருக்கிறது. அறம் சார்ந்து மறம் சார்ந்து பயணிக்கின்றவர்களாக காலத்தை சரியாக வழிநடத்துகின்றவர்களாக ஊடகவியலாளர்களான நாங்கள் இருக்க வேண்டும். இலத்திரனியல்ஊடகவியலாளர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை ஏனென்றால் சரியானவர்களும் இருக்கின்றார்கள். இன்று குண்டு கட்டாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரணை தூக்கி சென்ற புகைப்படம் தான் இலங்கை அரசை அம்பலப்படுத்தி இருக்கிறது. அங்கு இலத்திரனியல் ஊடகவியலாளர் ஒருவர் இருந்திருக்கிறார். அங்கு ஊடகவியலாளர், பெண்கள், சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனை சொல்வதற்கு எங்களுக்கான ஒரு ஊடகம் இருக்கவில்லை.
தேசிய ஊடகங்களாக செயற்படுகின்றவர்களை மக்கள் இன்னமும் நேசிக்கின்றார்கள். அதற்கு உண்மையாக ஒவ்வொரு ஊடகவியலாளரும் இருக்க வேண்டும். இன்னும் எங்களுடைய ஊடக பரப்பு வலிமை பெற வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தான் சார்ந்த இன மக்களுக்கு உண்மையாக இருப்பது தான் ஓர் ஊடகவியலாளரின் நடுநிலை.
தமிழ் தேசிய செயற்பாட்டாளரான ஸ்ரீஸ்கந்தராஜா யோகராஜா தெரிவித்த கருத்துகள் வருமாறு.
பல இடங்களில் பத்திரிகைகள் அரசியலை, ஆட்சி செய்தவர்களை மாற்றி இருக்கிறன்றன. அதிகார வர்க்கத்தையே மாற்றி இருக்கின்றன. சர்வதேசத்தில் எங்களுக்கு எதிரான ஊடகங்கள்
பல இருக்கின்றமையால் தமிழ் ஊடகங்களுக்கு ஒரு தார்மீக பொறுப்பு இருக்கிறது. எங்களுடைய போராட்டத்தை வெளிக்கொண்டுவர வேண்டிய பொறுப்பு எங்களிடம் தான் இருக்கிறது. தேசிய ஊடகங்கள் நியாயமாகவும் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுத்தால் அதுதான் சரியாக இருக்கும். தேசியத்திற்காக குரல் கொடுக்கின்ற எந்தவொரு ஊடகத்தையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவான ஊடகம் எனக் கருதுவது பிழையானது.
தமிழ் முரசம் வானொலியின் பணிப்பாளரான மனோ நாகலிங்கம் தெரிவித்த கருத்துகள் வருமாறு.
தமிழ் தேசிய ஊடகங்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பது சாதாரணவர்களுக்கே புரியும். இங்கே எந்தவிதமான நடுநிலையும் இல்லை. தமிழ் தேசியம் சார்ந்து தான் இருக்க வேண்டும். தமிழ் தேசிய அரசியலை காப்பாற்றுகின்ற ஊடகமாக இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் அந்த அரசியலை நலிவடைய செய்கின்ற ஊடகமாக இருக்க கூடாது.
இன்று பெரும்பாலான ஊடகங்கள் பிராந்திய நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கியவாறு தமிழ் தேசிய அரசியலை தொடர்ச்சியாக நலிவடைய செய்கின்றன. மிகப்பெரிய ஊடகங்கள் கூட இந்த அரசியலுக்குள் தான் சிக்குண்டு இருக்கின்றார்கள். முன்னர் எத்தனையோ ஊடகவியலாளர்கள்எங்களுடைய அரசியலை விட்டுக்கொடுக்காது அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்றியதன் நிமித்தம் தான் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த மரபிலிருந்து வந்த நாங்கள் சாதாரண சலுகைகளுக்காக விலை போகக் கூடாது.
தொகுப்பு - ரஜீந்தினி
நிமிர்வு ஆனி 2023 இதழ்
Post a Comment