மதம் தேசிய அடையாளங்களில் ஒன்றாக இருக்க முடியாது



தமிழ் மக்களுடைய தேசிய விடுதலை போராட்டத்தில் மதம் தேசிய அடையாளங்களில் ஒன்றாக இருக்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாக சொல்ல வேண்டும். நாங்கள் மதங்களால் கூறுபடுத்தப் படுகின்றோம். தமிழ் தேசியம் என்பது மதங்களை கடந்தது. எனவே தமிழ் தேசியத்தோடு மதங்களை இணைத்து பேசுவது மதங்களை குறியீடாக பயன்படுத்துவது என்பவை எல்லாம் தவறான அணுகுமுறைகளாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அவற்றை நாங்கள் தூர வைக்க வேண்டும்.

மதங்கள் மதங்களாக இருந்து கொள்ளட்டும். தமிழ் தேசியம் என்பது இன்னுமொன்று. சிங்கள மக்களும் ஒரு தேசியம், இஸ்லாமியர்களும் ஒரு தேசியம், மலையக மக்கள் தாங்களும் ஒரு தேசியம் என்று கோரி இருக்கிறார்கள். கட்டாயம் நாங்கள் அந்த தேசியங்களை ஏற்றுக் கொள்வோம். அந்தவகையில் அவர்களுடைய உரிமைகளை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். எங்களுடைய தேசிய விடுதலைக்கான அல்லது இலங்கையினுடைய தேசிய இனப்பிரச்சனை என்று சொல்லப்படுகின்ற தேசிய பிரச்சனை அது தமிழ் மக்களினுடைய பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்த இலங்கைத் தீவின் பிரச்சனை.

மொழிகளாலும், பொருளாதாரத்தாலும், வாழ்வியலாலும், வாழ் நிலத்தாலும் வேறுபட்ட பல இன குழும மக்கள் தங்களை தேசிய இனங்களாக அடையாளம் காண விரும்புகின்றார்கள். ஏனைய இனங்களின் மேலாதிக்கம், பொருளாதார மேலாதிக்கம், அரசியல் மேலாதிக்கம், பண்பாட்டு மேலாதிக்கம் போன்றவற்றில் இருந்து தங்களை பாதுகாத்து தங்களையும் அவர்களுக்கு சமமாக நிலைநிறுத்த விரும்புகின்றார்கள். அதனை நாங்கள் வெளிப்படையாக பேச வேண்டும். வெறும் தமிழ் தேசியம் என்று எங்களுடையதை மட்டும் தான் பிரச்சனையாக அதனை நாங்கள் குறுக்க கூடாது. இந்த தமிழ் தேசிய விடுதலை போராட்டம் என்கின்ற விடயத்தில் நாங்கள் நீண்ட தூரம் கருத்தியலாக பயணிக்க வேண்டி இருக்கின்றது. மதங்களால் கூறுபடுகின்றோம். சாதிகளால் கூறுபடுகின்றோம். ஊர்களால் கூறுபடுகின்றோம். பிராந்தியங்களால் கூறுபடுகின்றோம். மாகாணங்களால் கூறுபடுகின்றோம். இவ்வாறு பல அடையாளங்களால் பலவிதமான குறியீடுகளால் நாங்கள் கூறுபடுத்தப்பட்டு கொண்டிருக்கும் போது எங்களுடன் தேசியம் வளராது.

தேசியம் என்பதற்கு பின்னால் உள்ளது ஒரு வெறி அல்ல ஒரு தேசம் பற்றிய கட்டுமானம். அது வெறுமனே வாய்மொழி சொல் அல்ல. ஆனால் நாங்கள் அதனை வெறுமனே வாயிலே உச்சரிக்கின்ற விடயமாக யோசிக்கின்றோம். அதை சொன்னால் சரி என்று நினைக்கின்றோம். தேசத்தை கட்டி எழுப்புவது தான் தேசியம். தேசத்தை கட்டி எழுப்பாமல் தேசியம் பேசுகின்றோம் நாம். அந்த போலித் தேசியத்தை முன்னெடுப்பதற்காக இனக்குழுமங்களை மதக்குழுமங்களோடு சேர்த்துப் பார்க்கிறோம். மத மேலாதிக்க உணர்வுகளை அல்லது மதப் பற்றுக்களை பிரயோகிக்க முயற்சிக்கின்றோம்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் கோவிலின் பழைய வீதியிலுள்ள தலைவாயில் வளைவு கட்டப் பட்டது, சேதப்படுத்தப் பட்டது சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு கூட இருக்கின்றது. திருக்கேதீஸ்வரம், மன்னார், மடு எல்லாம் சைவ மக்களுக்கும் கிறிஸ்தவ கத்தோலிக்க மக்களுக்கும் முதன்மையான பெறுமதி மிக்க தலங்கள். தேவாரத்தில் பாடப் பெற்ற தலம் என்று சொல்லப்படுகின்ற திருக்கேதீஸ்வரம், மடு அன்னை குடி கொண்டிருக்கின்ற மன்னார் மாவட்டம் என்று பல பதிவுகள் இருக்கின்றன. மதங்கள் ஆட்சியாளர்களின் கருவிகளாக இருக்கும்போது அதிகாரத்தின் கருவியாக இருக்கும்போது அங்கு மத நிந்தனையும் பிற மதத்தாருக்கு எதிரான போராட்டங்களும் பிற மதத்தாரை ஒடுக்கவதும் இருந்தே இருக்கின்றன. இவ்வாறு உலகம் முழுக்க சமயத்தின் பெயரால் மாற்று சமயத்தினர் தண்டிக்கப்பட்டதும் கொலை செய்யப்பட்டதும் துன்புறுத்த ப்பட்டதும் வரலாறு. இப்படியான விடயங்களை கடந்து தான் போக வேண்டி இருக்கும். எனவே மன்னாரை பொறுத்தவரை மன்னார் மக்கள் மத்தியில் மிகவும் சூடாக இருக்கும் இந்த விடயம் ஏன் தமிழ் தேசியவாதிகளால் பேசப்பட முடியாமல் இருக்கின்றது? இரண்டு பக்கத்திலும் உள்ள வாக்கு வங்கியினை சார்ந்து இருக்கின்ற தேசியவாதிகளால் அதனை முழு முயற்சியாக பேச முடியாது. அதற்கு வெளியில் புறம்பாக வந்து நின்று தான் இந்த முயற்சியை நாங்கள் பரிசீலிக்க வேண்டும்.

தேசியத்தை கட்டி எழுப்புவது என்றால் மதங்கள், குழுக்கள், பிராந்தியங்கள் கடந்த நிலையில் நின்று தான் பேச வேண்டும். நாங்கள் இதனை பேசுவதற்கு இன்னும் எங்களை தயார்படுத்தி கொள்ளவில்லை. அந்தளவு முதிர்வு நிலையில் நாங்கள் இல்லை. இந்த நிலையில் எவ்வாறு எங்களுக்குள் தமிழ் தேசியம் கட்டமைக்கப்படும்? இதுவே இங்குள்ள பிரச்சனை. ஒரு பக்கத்தில் இலங்கையினுடைய சிங்கள ஆட்சியாளர்கள் தங்களின் சிங்கள மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக இரண்டு கருவிகளை கொண்டிருக்கின்றார்கள். ஒரு பக்கத்தில் பௌத்தம் என்கின்ற ஒரு மதக் கருவி, மறுபக்கத்தில் இராணுவம்  என்கின்ற படைக் கருவி. இந்த இரண்டையும் வைத்து கொண்டு முன் நகர முயற்சிக்கின்றார்கள். சாதாரண பௌத்த மக்கள் மத்தியில் இந்த இலங்கை அரசாங்கம் செய்கின்ற அபத்தமான பிரச்சாரத்தை நாங்கள் முழுமையாக உடைக்கலாம். உடைக்கும் போது அந்த மக்கள் எமது போராட்டத்தின் நியாயங்களை புரிந்து கொள்வார்கள்.

தையிட்டியில் விகாரை கட்டப்படுகின்றது முன்பிருந்த விகாரையின் இடத்தில் விகாரை கட்டப்படுகின்றதா என்றால் இல்லை. முன்பிருந்த விகாரைக்கு உரிய காணி உறுதி நயினாதீவு விகாரையினுடைய பிரதம குருவிடம் இருக்கின்றது. அவர் தான் அதற்கு உரித்தாளராக இருக்கின்றார். அந்த காணியில் அந்த விகாரை கட்டப்படவில்லை. வெளியில் ஒரு தனியார் காணியில் கட்டப்படுகின்றது. 1959 ஆம் ஆண்டு இலங்கை வரைபடத்தில் அந்த இடத்தில் ஒரு விகாரை இருந்ததாக அடையாள குறியீடு இருக்கின்றது என்று அவர்கள் சொல்கின்றார்கள். அடிப்படையில் அவர்கள் இங்கு பௌத்த விகாரைகளை கட்டுவதன் நோக்கம் வழிபாட்டுக்காகவா அல்லது ஆதிக்கத்தின் அடையாளமாகவா என்கின்ற கேள்வி வரும்போது ஆதிக்கத்தின் அடையாளமாகத் தான் என்றே பதில் இருக்க முடியும். இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் சிங்கள மக்களுடன் பேச வேண்டும். இங்கே போராடுவதை விட நாங்கள் சிங்கள மக்களுக்கு போய் சொல்ல வேண்டிய செய்தி பெரிய செய்தி. ‘பிரச்சனை பௌத்தம் அல்ல. அந்த விழுமியங்கள் நாங்களும் பேண விரும்புகின்ற விழுமியங்கள். ஆனால் நீங்கள் பௌத்த விழுமியங்களையும் பெறுமானங்களையும் மீறி புத்தர் கற்பித்த கற்பித்தலையும் மீறி இன்னுமொரு அரசியல் அதிகாரத்தின் குறியீடாக இதை பயன்படுத்துகின்றீர்கள். இதற்கு எதிராக தான் நாங்கள் போராடுகின்றோம்’ என்று முதலில் அவர்களுக்கு உரத்து சொல்ல வேண்டும். எங்களின் போராட்ட களங்களை இங்கு வைக்க கூடாது. அங்கு தான் திறக்க வேண்டும். அங்கு திறந்து அந்த மக்களோடு பரந்த அடிப்படையில் பேசும் போது தான் அவர்களுக்கு புரியும் இந்த தேசத்தில் என்ன நடக்கிறது என்று.

மிக அண்மையில் கூட இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் பேசி இருந்தார். இலங்கை பிரித்தெடுப்பதற்கு புலிகள் போராடினார்கள் எனவே தாங்கள் அதை மீட்டெடுத்தோம் என்று. இலங்கையை ஒரு மக்களுக்கு மட்டுமாக பிரித்தெடுப்பதற்கான முயற்சிகளை முதலில் முன்னெடுத்ததே அவர்கள் தானே. 2500 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த தேசத்தில் இருந்து சொந்த தந்தையாலே தேச பிரதிஷ்டம் செய்யப்பட்டு கடலிலே அலைய விடப்பட்ட விஜயனும் தோழர்களும் தரையை தட்டி தானே இங்கு வந்தார்கள். தரை தட்டி கரைக்கு வந்த போது இங்கு இயக்கர், நாகர் என்று இரண்டு இனங்கள் இருந்ததாக தானே பதிவு இருக்கின்றது. கெளதம புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை தந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. அது உண்மையாக இருந்தால் அதில் ஒருமுறை நாகதீபத்திற்கு தானே வந்தார். அது இரண்டு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்ப்பதற்காக என்று கூறப்படுகின்றது. விஜயன் வருவதற்கு முன்பே கெளதம புத்தர் வந்து இருக்கும் போது இலங்கையில் மனிதர்கள் இருந்தார்கள் தானே. நாங்கள் அவர்களை எல்லாம் தேசத்தின் மக்களாக கருதாமல் நாங்கள் அவர்களின் பரம்பரை என்பதை உணர்ந்து கொள்ளாமல் நாங்கள் என்ன செய்கின்றோம்?

நாங்கள் 2500வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து குடியேறிய ஆரிய பரம்பரை என்கின்றோம். ஆகவே நாங்களே இந்த தீவின் பூர்வீக குடிமக்களாக இதுவரையில் எங்களை பிரகடனப் படுத்தவில்லை. இதுவே எங்களுக்கு இந்த தீவின் மேல் உரிமை கோருவதில் சந்தேகம் இருக்கின்றது என்று சொல்ல வருகின்றது தானே. நாங்கள் யாழ்ப்பாண வைபவமாலையையும் வேறு விடயங்களையும் வைத்து கொண்டு பேசுகின்றோமா? சில நூற்றாண்டுகளுக்கு முன் சோழர் படை எடுப்பு காலத்திலோ வேறு காலத்திலோ இலங்கைக்குள் வந்து குடியேறிய ஒரு பிற்கால தொகுதி மக்களை வைத்து கொண்டு இந்த தேசத்தின் வரலாற்றை கட்டமைக்க போகின்றோமா? 2500 வருடங்களுக்கு முன்பு தரை தட்டி இந்த தேசத்திற்குள் தன்னை கட்டமைத்தவர்கள், அதற்கு பிறகு 400, 500, 1000 ஆம் வருடங்கள் சோழர் படை எடுப்பு காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் , இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன் அன்றைய ஆட்சியாளர்களால் சட்ட முறையாக இந்த தேசத்தின் அபிவிருத்திக்காக அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்ட மக்களை கள்ள தோணிகள் என்று சொன்னால் இது என்ன தர்க்கம்?

தரை தட்டி வந்தவர்கள், படை எடுத்து வந்துவிட்டு திரும்பி போகாமல் இங்கு தங்கியவர்கள், ஆளும் ஆட்சியாளர்களினால் சட்ட முறையாக பதிவு பெற்று வந்து குடியமர்த்தப்பட்டு கடந்த 200 வருடங்களாக இந்த தேசத்திற்காக உழைத்து இருப்பவர்கள். யாருக்கு இந்த தேசம் சொந்தம்? யாருக்கு இந்த பாக்கியதை அதிகமாக உண்டு?

லெமூரியாக் கண்டம் என்று பேசுகின்றார்கள். கடல் கொண்ட தென்னாடு என்று பேசுகின்றார்கள். சிலவேளைகளில் அவர்கள் சொல்கின்ற அந்த கற்பனை வரைபடம் எதிர்காலத்தில் கண்டுபிடிக்க படலாம். அல்லது வெறும் எடுகோளாவே இருந்திட்டு போகலாம். அந்த வரைபடத்தில் தென்னிந்தியாவிற்கு கீழே பெரிய ஒரு நிலப்பரப்பை அவர்கள் கீறும் போது அதனுடைய முனையாக இருப்பது இலங்கை தீவு மட்டும் தானே. அப்படியென்றால் அந்த லெமூறியா கண்டத்தின் அதி உயரமான நிலப்பரப்பு, கடலில் இதுவரையிலும் மூழ்காமல் இருப்பது இலங்கை தீவு தானே. லெமூரியா கண்டத்தினுடைய அந்த தேசம், அதாவது அந்த கண்டத்தில் வாழ்ந்த மக்களில் எஞ்சிய தொகுதியினர் தானே இந்த தீவிற்கு உரியவர்கள்? நாங்கள் எவ்வளவு பெரிய பாரம்பரியத்திற்கு உரியவர்கள். இரத்தினபுரியிலே ஒரு குகையிலே கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூட்டை (அதனை பலாங்கொடை மனிதன் என்று அடையாளமிட்டிருக்கிறார்கள்.) விஞ்ஞான பூர்வமாக பரிசீலித்த போது அந்த எலும்பு கூட்டினது வரலாறு எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு பின்னோக்கி போகும் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியானால் அவன் தானே இந்த மண்ணிற்கு சொந்தக்காரன்?

எங்களுடைய போராட்டம் வெறுமனே தமிழ் தேசியம் என்கின்ற குறியீட்டுக்கான போராட்டம் அல்ல. ஒரு இனத்தை மேலாதிக்கம் கொண்டதாக கட்டி எழுப்புவதற்கான போராட்டமும் அல்ல. ஒவ்வொரு சமூகமும் இந்த பூமி பந்தில் தன்னை தான் சுதந்திரமாக கட்டமைக்க வேண்டும். தனது பண்பாட்டை வாழ்வியலை இந்த பூமி பந்தில் தான் சுதந்திரமாக அனுபவிக்கின்ற உரிமையை கொண்டிருக்க வேண்டும். தனது பண்பாட்டை வாழ்வியலை இந்த பூமி பந்தில் தான் சுதந்திரமாக பிரயோகிக்கின்ற உரிமையை கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கை தீவில் வாழ்கின்ற பல பண்பாடுகளை கொண்டவர்கள், பல தாய்மொழிகளை கொண்டவர்கள், பல வாழ்வியல் மரபுகளை கொண்டவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் சளைத்தவராக இல்லாமல் சமூகமாக தங்களை கட்டி எழுப்புவதற்கான உரிமைக்கான போராட்டம் தான் எங்களுடைய போராட்டம்.

இந்த நாட்டில் உள்ள பிரச்சனையே பல தேசிய இனங்கள் வாழ்கின்ற தேசத்தில் எல்லா தேசிய இனங்களையும் சமமாக அனுசரித்து அனுமதித்து அவர்களை கட்டி எழுப்ப அந்த வாய்ப்பினை கொடுக்க முடியாத ஒரு அரசியல் கட்டமைப்பு தான் இங்குள்ள பிரச்சனையாக இருக்கின்றது.  பெரும்பான்மை ஜனநாயகம் என்ற பெயரால், பெரும்பான்மை ஜனநாயகம் என்ற தவறான கணிப்பின் பெயரால், ஜனநாயகத்தின் இருண்ட பக்கங்களின் பெயரால் ஒரு குறிப்பிட்ட தொகுதி பெரும்பான்மை மக்கள் தங்களால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரை தோற்றுப்போனதாக பிரகடனப்படுத்தி அவர்கள் மேல் தங்களுடைய அதிகாரத்தை பிரயோகித்து இருண்ட பக்கங்களை கொண்ட ஜனநாயகத்தின் பெயரால் தேசம் சீரழிக்கப்படுகின்றபடியால் தானே நாங்கள் இதனை ஒரு அரசியல் போராட்டமாக இன்னமும் வைத்திருக்கின்றோம். அவ்வாறு பார்க்கும்போது இந்த நாட்டின் அரசியல் மாதிரி மாற்றப்பட வேண்டுமென்றால் நாங்கள் அதற்கான வாதங்களை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும்.

வெறும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியாக இல்லாமல் பல்வேறு பண்பாடுகள் விழுமியங்களை கொண்ட மக்கள் பரஸ்பரம் புரிதலுடன் இந்த தீவில் வாழ்கின்ற உரிமை கொண்டவர்கள் என்பதனை பௌத்த சிங்கள மக்களுக்கும் பௌத்த துறவிகளுக்கும் சொல்லக் கூடிய அளவிற்கு நாங்கள் எங்களுடைய போராட்டத்தை விரிவாக்க வேண்டும். இது அரசியல் தளங்களுக்கு அப்பால் விரிவாக்கப்பட வேண்டும். வெறுமனே அரசியல் அதிகாரம் என்ற கோசத்தை மட்டும் வைத்துக்கொண்டு இதை செய்வோமாக இருந்தால் நாங்கள் வெல்லப் போவதில்லை. ஏனென்றால் எங்களுடைய அரசியல் அந்தளவுக்கு மிகவும் பலவீனமானது. மிகவும் கூறுபட்டு போயிருக்கின்றது. எந்தவித விழுமியங்கள் நியமங்களும் இல்லாமல் சிதைந்து போயிருக்கின்றது. இந்த நிலையில் இருந்து நாங்கள் மாற வேண்டும்.

எங்களுடைய போராட்டம் இன்னுமொரு திசையில் புதிய வழிமுறைகளை தேட வேண்டும். கால நீட்சி என்பது மிகவும் ஆபத்தானது. கால நீட்சியில் கரைந்து போகின்ற வாய்ப்புகள் மிக அதிகம். இந்த கால நீட்சியில் கரைந்து போவதிலிருந்து நாங்கள் வேகமாக போராட வேண்டுமென்றால் தீர்வுகள் எதுவும் வானத்தில் இருந்து வராது. ஐரோப்பாவிலும் இருந்து வராது. ஐ.நாவிலும் இருந்து வராது. அயல்நாட்டிலும் இருந்தும் வராது. நாங்கள் தான் கண்டறிய வேண்டும். எதனை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதற்கு நாங்கள் அமர்ந்து பேச வேண்டும். நாங்கள் எங்களுடைய கட்சி அடையாளங்கள், குறியீடுகள், பழைய குரோதங்கள், பய பிராந்திகள் எல்லாவற்றுக்கும் அப்பால் வந்திருந்து பேச வேண்டும். அப்படி திறந்த மனதுடன் பேசுகின்ற ஒரு களத்தை நாங்கள் தான் திறக்க வேண்டும்.

யாரோ ஒருவர் கூப்பிட்டு எங்களை எல்லாம் வந்திருந்து கதையுங்கள் என்று புது வழி காட்டுகின்ற தேவையில்லை. அந்த சூழலைக் கூட அனுமதிக்காமல் நாங்களே இருந்த பேச வேண்டும். எங்களுடைய வறட்டு பிடிவாதங்களையும் வறட்டு சித்தார்த்தங்களையும் விட்டுவிட்டு நாங்கள் கூடி இருந்து பேச வேண்டும்.  ஒடுக்கமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதற்கு எதிராக போராடுகின்ற அந்த அறம் சார்ந்த போராட்டமாக தான் எங்களுடைய போராட்டம் கட்டமைக்கப்பட வேண்டும். எல்லா மக்களும் எல்லா சமூகங்களும் தாங்கள் நம்புகின்ற விடயங்களையும் தாங்கள் வாழ்வியலில் பிரயோகிக்கின்ற விடயங்களையும் ஏனைய மக்களும் எந்தவிதத்திலும் இடையூறு இல்லாமல் பிரயோகிக்கின்ற உரிமையை கொண்டவர்கள் என்ற வகையில் அதனை நிலைநிறுத்துவதாக எங்களுடைய போராட்டம் இருக்க வேண்டும். எங்களுடைய தேசத்தின் போராட்டம் அவ்வாறு தான் இருக்க வேண்டும். நான் நினைக்கின்றேன் நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கின்றது. காலம் நீட்சியடைந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் இன்னமும் இருட்டறையினுள் ஒரு கறுப்பு பூனையை தேடிக்கொண்டே இருக்கின்றோம்.

செல்வின்-

நிமிர்வு ஆனி 2023 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.