தமிழ் மக்கள் கோரும் பொது வாக்கெடுப்பு!- பகுதி : 04இலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு மாசி மாதம் நடந்த “வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” பேரணியின் இறுதிப் பிரகடனத்தில் பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த பொது வாக்கெடுப்பு சாத்தியமா என்ற கேள்வியை பலரும்  எழுப்பியிருந்தனர். சிலர் இந்த பொது வாக்கெடுப்பு என்பதே ஒரு மேற்குலக கருத்தியல் என்றும் அதனை இலங்கைக்குப் பொருத்திப் பார்க்க முடியாது என்றும் வாதிட்டனர்.  மேலும் ஒரு சிலர் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு யாரை நோக்கி கோரிக்கை வைப்பது என்ற கேள்வியை முன்வைத்தனர்.

இந்த விடயம் தொடர்பாக மற்றைய நாடுகளில் நடந்த பொது வாக்கெடுப்பு தொடர்பாக முன்னைய இதழ்களில் பார்த்தோம். குறிப்பாக தென் சூடானில் நடந்த அந்த நாட்டின் விடுதலைக்கு வழிவகுத்த பொது வாக்கெடுப்பு பற்றிய சித்திரை மாத இதழில் பாரத்தோம். ஸ்பெயின் நாட்டில் கடலோனிய மக்கள் தமது விடுதலை வேண்டி நடத்திய பொது வாக்கெடுப்பு பற்றி சென்ற இதழில் பார்த்தோம். ஒப்பீட்டளவில் அதிகளவு சுயாட்சி அதிகாரத்தை வைத்திருந்த கடலோனிய அரசாங்கம் தன்னிச்சையாக ஏற்பாடு செய்த பொது வாக்கெடுப்பு எவ்வாறு அதனைச் சூழ இருந்த ஏனைய அரசாங்கங்களின் ஆதரவு இன்றி தோற்கடிக்கப்பட்டது என்று பார்த்தோம். ஸ்பெயினின் மத்திய அரசாங்கம் எவ்வாறு பொது வாக்கெடுப்பை நசுக்கியது என்றும் பார்த்தோம்.

தென் சூடானைப் பொறுத்தவரை பொது வாக்கெடுப்பை சாத்தியமாக்கியது அங்கு நடந்த விடுதலைப் போர். கடலோனியாவைப் பொறுத்தவரை பொது வாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகள் செய்வதை சாத்தியமாக்கியது அங்கிருந்த சுயாட்சி அரசாங்கம்.  தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்த இரண்டுமே இன்று இல்லை. ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது. ஈழத்தமிழ் மக்களின் ஒரு குறைந்தபட்ச சுயாட்சி அலகு என்ற கருதப்பட்டிருக்கக்கூடிய மாகாண சபைகள் கூட எம்மிடம் இல்லை.  இவ்வாறு இருக்கையில் பொது வாக்கெடுப்பு ஒன்று தற்பொழுது சாத்தியமில்லை என்பது உண்மைதான்.

ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ளும் எவரும் அம்மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்த தீர்மானத்தை எடுப்பதற்கு பொது வாக்கெடுப்பு ஒன்றுதான்  அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு ஜனநாயக வழி.  அந்த ஜனநாயக வழியை, அவர்களது உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று எல்லா ஜனநாயக சக்திகளையும் நோக்கி கோரிக்கையாக வைக்க வேண்டும்.  முக்கியமாக இந்தக் கோரிக்கை சிங்கள ஜனநாயக சக்திகளை நோக்கி வைக்கப்பட வேண்டும். கடலோனியாவின் பொதுவாக்கெடுப்பை அதன் சகோதர இனங்கள் ஏற்றுக் கொள்ளாமல் போனதே அதன் தோல்விக்கு முக்கிய காரணமாகியது. அதனை ஒரு பாடமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிங்கள ஜனநாயக சக்திகள் இதனை ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வி எழுவது இயல்பு. சிறிலங்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அதனைத் தொடர்ந்து வந்த அரகலய போராட்டமும் தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக உரிமைகளை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய ஒரு வெளியைத் திறந்து விட்டுள்ளது.  அந்த வெளியை விரைவாக மூடுவதற்காகவே சிங்கள பௌத்த இனவாத அரசு விகாரைகளை கட்டுவது போன்ற இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. அதனை முறியடித்து சிங்கள ஜனநாயக சக்திகளை தமிழ் மக்களுக்கு ஆதரவாக திரட்டும் செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

அடுத்து இந்த பொதுவாக்கெடுப்பு சட்டபூர்வமானதாக அமைய முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. சிங்கள பௌத்த இனவாத அரசைப் பொறுத்த வரை தமிழ் மக்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் சட்டபூர்வமற்றதாகத் தான் இருக்கும். ஆனால், அவ்வாறான நிலைமையிலும் நாம் இன்றும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட கைது செய்யப்படுகிறார்கள். அதற்காக எமது இனத்துக்கு சரியானதை நாம் செய்யாமல் இருப்பது எமது இனத்தை அழிவுப் பாதைக்குத் தான் இட்டுச் செல்லும்.

ஈழத்தமிழர் கோரும் பொதுவாக்கெடுப்பு தொடர்பாக கடலோனியாவில் நடந்த பொதுவாக்கெடுப்பில் இருந்து பல சாதகமான பாடங்களையும் நாம் பெற்றுக் கொள்ளலாம். முதலாவது, இந்த பொதுவாக்கெடுப்பை நடத்தக் கூடிய உள்ளூராட்சி அலகுகள் எம்மிடம் இன்னமும் இருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான கட்சிகளின் கைகளிலே இருக்கின்றன. அவை சிங்கள பௌத்தத்திற்கு ஆதரவான கட்சிகளின் கைகளுக்குப் போய்விடாமல் பாதுகாப்பது பொதுவாக்கெடுப்பை நோக்கி நாங்கள் எடுக்க வேண்டிய முதலாவது நடவடிக்கை.

இரண்டாவது, பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என்பது. கடலோனியாவைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தேவைப் பட்டது மத்திய அரசாங்கத்தின் தடைகளை மீறி செயற்படத் துணிந்த அரசியற் தலைமை ஒன்று. அவ்வாறான தலைமை ஒன்று ஈழத்தமிழர் மத்தியில் தற்பொழுது இல்லை என்பது யதார்த்தமாக இருந்தாலும் அவ்வாறான தலைமை ஒன்றை உருவாக்க வேண்டியது ஈழத்தமிழரின் கடமையாக தற்பொழுது இருக்கின்றது. தேசத்தின் பக்கம் நிற்கின்ற தலைமையை தெரிவு செய்து அதனைச் சுற்றி வலு சேர்ப்பது உடனடியாக செய்யப்பட வேண்டிய ஒன்று. தேர்தல் அரசியலில் இருந்து கொண்டு கட்சிகளை வளர்க்கும் நோக்கத்தை கொண்ட இன்றைய அரசியற் தலைவர்களை தவிர்த்து விட்டு தேசத்தில் பற்றுறுதி கொண்ட தலைமையை தேட வேண்டும்.

மூன்றாவது, மத்திய அரசாங்கத்தின் கட்டளைகளை மீறி செயற்பட முற்படுபவர்களுக்கு வேண்டிய பாதுகாப்புகளை ஏற்பாடு செய்வது. இந்த பாதுகாப்பு அவர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளை செய்வது, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வேண்டிய பொருளாதாரங்களை உறுதி செய்வது, போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

நான்காவது, கடலோனியாவைப் பொறுத்தவரை அவர்களுக்கு என்று ஓர் அரசாங்கம் இருந்தது. ஈழத்தமிழருக்கோ இருந்த மாகாணசபைகள் கூட இன்று இல்லை. அந்த வகையில் ஒரு பொதுவாக்கெடுப்பை ஒன்றிணைத்து நடத்துவதற்கான ஒரு சாதனம் எம்மிடம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  அதேவேளை கடலோனியா செய்தது போன்று பொதுவாக்கெடுப்புக்கான வேலைகள் மேலிருந்து கீழாகத் தான் வரவேண்டும் என்பதில்லை.  இந்த வேலைகள் கீழிருந்து மேலாகச் செய்யப்படலாம். உதாரணமாக, கடலோனியாவில்கூட அவ்வப்போது நூற்றுக்கணக்கான உள்ளூர் பொதுவாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. அவை சட்டரீதியாக கட்டுப் படுத்தப்படாதவை  (non-binding). அவ்வாறான வாக்கெடுப்புகளை கிராம மட்டங்களில் செய்ய முடியும்.

உண்மையில் அது மக்களின் பங்கு பற்றுதலை அதிகரிக்கும், அதேவேளை ஜனநாயகத்துக்கும் வலு சேர்க்கும். எம் கிராமங்கள் தோறும் சனசமூக நிலையங்கள் இருக்கின்றன, விளையாட்டுக் கழகங்கள் இருக்கின்றன, பல கிராமங்களை ஒன்றிணைக்கும் மாதர் சங்கங்கள் இருக்கின்றன, கூட்டுறவுச் சங்கங்கள் இருக்கின்றன, இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெகுசன அமைப்புகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தொடர்புபடுத்தி ஒன்றிணைத்து கிராமம் கிராமமாக, குறிச்சி குறிச்சியாக, நகர் நகராக ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்தி முடிக்கக் கூடிய பலம் எம்மிடம் இருக்கிறது. இதனை நோக்கி நாம் முயற்சிகளை எடுக்காமல் இருப்பது தான் எம்மிடம் இருக்கும் பலவீனம்.

தென்சூடானில் தனிநாடு ஒன்று உருவாக வழிவகுத்த பொதுவாக்கெடுப்புக்கான சூழல் எமது நாட்டில் எட்டப்படவே இல்லை. கடலோனியாவில் தனிநாடு ஒன்று உருவாக வழிவகுத்திருக்க வேண்டிய பொதுவாக்கெடுப்பு போன்ற ஒன்றை நடத்தக் கூடிய சூழல் மாகாணசபைகள் இருந்த காலத்தில் ஈழத்தில் சாத்தியப்பட்டிருக்கலாம். மாகாணசபைகளை வைத்திருந்த அரசியற் தலைமைகள் அதனைச் செய்திருக்குமா என்பது வேறு விடயம்.  மொத்தத்தில் தென்சூடான் வழியும் கடலோனியாவின் வழியும் எமக்கு இன்றைய காலகட்டத்தில் சாத்தியமற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக வெளிநாடு ஒன்றில் நடந்த அனுபவத்தை எமது நாட்டில் அப்படியே பொருத்திப் பார்க்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு புதிய வழிகளை நாம் தேட முடியும். எமது நாட்டுக்கு பொருந்தக் கூடிய எமது சூழலுக்குப் பொருந்தக் கூடிய வழிகளை தேட வேண்டும்.

அந்த புதிய வழிகளில் ஒன்றாக நாம் மேலே கோடிட்டுக் காட்டியிருக்கும் கீழிருந்து மேல் நோக்கிய வாக்கெடுப்பு முயற்சி அமைய முடியும். அந்த முயற்சி வெற்றி பெறவேண்டுமானால் அந்த முயற்சியில் ஈடுபடுவதற்குரிய அரசியல் மனோபலமும் தேசத்துக்கான அர்ப்பணிப்பும் உள்ள தலைமை அவசியமானது. அதேவேளை அந்தத் தலைமையினதும் பொதுவாக்கெடுப்பில் கடமையாற்ற முற்படுபவர்களினதும் சட்டரீதியான மற்றும் பொருளாதார ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு கட்டமைப்பும் இன்றியமையாதது.

லிங்கம்- 

நிமிர்வு ஆனி 2023 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.