குருந்தி: 1956 இற்கான ஓர் ஓடுபாதை



குருந்தூர் மலையில் நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி, இராணுவத்தின் பாதுகாப்புடன் தொல்லியல் திணைக்களத்தால் கட்டப்பட்ட விகாரை தமிழ் தேசத்தின் மீதான அடக்குமுறைகளின் ஒரு சின்னமாக இருக்கின்றது. இதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அப்பகுதி மக்களும் அரசியற் கட்சிகளும் தொடர்ச்சியாக செய்து வருகின்றன. இந்தப் பின்னணியில் குருந்தூர் விகாரைக்கு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையில் புத்த பிக்குகளும் இனவாதிகளும் கடந்த 21ஆம் திகதி வருகை தந்துள்ளனர். இந்த வருகையின் நோக்கம் அரகலய காலத்தில் சிறிது பின்தள்ளப்பட்டிருந்த சிங்கள-பௌத்த இனவாதத்தை மீண்டும் ஒரு பலம் மிக்க அரசியல் சக்தியாக நிறுவிக் கொள்வதே என்று கட்டுரையாளர் திசரானி குணசேகர Kurundi: A Runway to ’56 என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இனவாதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் நல்ல நடவடிக்கைகளை சீர்குலைக்க முற்படுகின்றனர் என்றும் தெரிவிக்கின்றார்.

இந்தக் கட்டுரையாளரின் சிங்கள-பௌத்த இனவாதிகள் தொடர்பான கணிப்பு ஏற்புடையதே என்றாலும் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அவருக்கு இருக்கும் கருத்து ஏற்புடையதல்ல. இன்றைய பொருளாதார நெருக்கடிகளினால் இருக்கும் சர்வதேச அழுத்தங்களே ஜனாதிபதியை இவ்வாறு பேச வைக்கிறது. இதே ரணில் விக்கிரமசிங்க சிங்கள-பௌத்த தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளை ஒருவரும் மறக்க முடியாது. அந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதியின் இன்றைய கூற்றுகளை பார்க்க வேண்டும். மேலும் சிங்கள-பௌத்த இனவாதத்துக்கு எதிராக கதைத்த சிங்கள முற்போக்குவாதிகளை சிறையில் அடைத்ததும், பயங்கரவாத தடைச் சட்டத்திலும் விட மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வர நினைப்பதும் இந்த ஜனாதிபதிதான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் இந்த ஓரிரண்டு வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு கட்டுரையாளர் ஏமாந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும் பாரம்பரியமாக குருந்தூர்மலை என்று அறியப்பட்ட இப்பிரதேசத்தை ‘குருந்தி’ என்று சிங்களப் பெயர் கொண்டு அழைப்பதன் மூலம் அந்தப் பெயரை வழக்கப் படுத்த (normalize) நினைக்கும் சிங்கள இனவாதிகளின் செயலுக்கு கட்டுரையாளரும் துணைபோய் விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ‘குருந்தி’ என்று குருந்தூர்மலையை அழைப்பது வடக்கு கிழக்கில் இன்று நடக்கும் சிங்கள மயமாக்கலின் ஒரு அங்கமாகத்தான் பார்க்கப்பட வேண்டும். திசரானி குணசேகரவில் Kurundi: A Runway to ’56 என்ற கட்டுரையின் தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.

கட்டுரை

கிரேக்க புராணக்கதையில் வீரன் ஹெராக்கிள்ஸ் (Heracles) இற்கு விதிக்கப் பட்ட 12 கடமைகளில் ஐந்தாவது கடமை ஆஜியஸ் (Augeas) மன்னனின் புனிதமான கால்நடைகள் இருந்த அசுத்தமான லாயத்தை சுத்தம் செய்வது. அல்ஃபியஸ் (Alpheus) மற்றும் பெனியஸ் (Peneus) நதிகளை திருப்பி அந்த லாயத்தினூடாக பாயச் செய்வதன் மூலம் அதனை அவர் சுத்தப்படுத்தினார். அதேபோன்றே அரகலயவும் அதன் இலட்சியவாத நீரைக் கொண்டு இலங்கை சமூகத்தில் ஆழப்பதிந்து இருந்த தீவிரவாத அழுக்குகளை கழுவிவிடும் என்று பலர் நம்பினார்கள்.

ஆனால், குருந்தி மலையை சுற்றி அடிக்கும் புயலைப் பார்க்கும் பொழுது இன-மத வாதம் அழியவில்லை என்று தெரிகிறது. பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டமும் அதன் விளைவாக ராஜபக்சக்களுக்கு எதிராக ஏற்பட்ட வெறுப்பும் அதனை பின்தள்ளி வைத்திருந்தது. ஆல்பர்ட் காமுஸ் (Albert Camus) சொன்னதைப் போன்று சொல்வதென்றால், பேசிலஸ் (bacillus) கொள்ளை நோய்க் கிருமி மத ஸ்தலங்களிலும், அரசியல் அமைப்புகளின் இருண்ட மூலைகளிலும், கற்பனையாக புனையப்பட்ட வரலாறுகளிலும் மற்றும் கூட்டு நினைவுகளின் இருண்ட மூலைகளிலும் தூங்கிக் கொண்டிருந்தது. எலிகளை எழுப்புவதற்கு சரியான தருணம் வரும் வரை அது காத்திருந்தது. அந்த நேரம் இப்பொழுது வந்து விட்டது போலுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை அரகலய ஓடத் துரத்திய ஒரு வருடத்திற்குள்ளாகவே, அவரது காவிக் கூட்டாளிகள் மீண்டும் வந்து விட்டார்கள். அதிகாரத்தில் ஒரு பங்குக்காகவும் ஒரு துண்டு நிலத்திற்காகவும் இந்த நாட்டுக்கு தீ வைக்கவும் தயாராக உள்ளனர்.  புத்தரின் காலத்தில் ஒரு மன்னருக்கு லஞ்சம் கொடுத்து கோவிலைக் கைப்பற்ற முயன்ற நிகண்டயர்களுடன் இன்றைய தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஏளனமாக ஒப்பிட்ட மெதகொட அபயதிஸ் தேரோவிலிருந்து சிங்கள ராவயவின் அக்மீமன தயாரத்ன தேரர் வரை எல்லோரும் அங்கு இருக்கிறார்கள்.

நகைச்சுவையாளர் நதாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகரா ஆகியோரை வெற்றிகரமாக சிறையில் தள்ளியதன் ஊடாக இந்த பிக்கு தனது அரசியல் மறுபிரவேச முயற்சியைத் தொடங்கினார். விக்கிரமசிங்க அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்கு அடிபணியாமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியிருந்தால், இந்த அரசியல் துறவி இன்னுமொரு சாதகமான நேரத்தை எதிர்பார்த்து பின்வாங்கியிருக்கலாம். ஆனால் நிர்வாகம் செயலிழந்து இருப்பது போல காட்டிக் கொண்டது. ICCPR சட்டத்தை மத நிந்தனை எதிர்ப்புச் சட்டமாக பயன்படுத்துவதற்கு வழி விட்டது. அது மட்டுமல்லாமல், அதனை பாரபட்சமான முறையில், குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக பயன்படுத்தப் படுவதையும் அனுமதித்தது. இதனால் நடாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர பௌத்த மதத்தை இழிவுபடுத்தியதற்காக இன்னும் காவலில் உள்ளனர். அதே நேரத்தில் "சித்தார்த்தா ஒரு தோற்றுப் போனவர்" என்ற படைப்பை உருவாக்கிய திலித் ஜயவீர, கிறிஸ்தவர்கள் மீது சிங்கள-பௌத்தர்களின் கோபத்தை தூண்ட முயன்ற பலாங்கொட கஸ்ஸப தேரோ மற்றும் பௌத்தர்கள் அல்லாதவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத வகையில் ஒரு மத மோதலை உருவாக்க அச்சுறுத்திய அக்மீமன தயாரதன தேரர் ஆகியோர் சுதந்திரமாக அவர்களின் பிரிவினைவாத அரசியலை நடத்திக் கொண்டு இருகின்றனர்.

அரசியல் வர்க்கத்தின் கோழைத்தனமும் சந்தர்ப்பவாதமும் அரசியல் துறவிக்கு துணிவை வரவழைத்தன. எனவே குருந்திக்கு அணிவகுப்பு தொடங்கியது. குருந்தியில் வெற்றி பெற்றால், மீண்டும் தடுக்க முடியாதவர்களாகி விடுவார்கள். இந்த நாடு அவர்களின் நாடாக இருக்கும்.

மிஹிந்தலையைச் சேர்ந்த வலவஹங்குனவாவே தம்மரதன தேரரின் கூற்றும் இதுதான். பண்டைய மன்னர்களால் துறவு பீடத்திற்கு (சாசனத்திற்கு) தானமாக வழங்கப்பட்டதால், இந்த நாடு பௌத்த சங்கத்தின் சொத்து என்று அவர் கூறுகிறார். ஏனைய பிக்குகள் வடக்கு/கிழக்கு நிலப் பிரச்சினைகளுக்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு/ விற்பனைக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதன்படி அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு நேர் எதிரானது. மேலும், விக்கிரமசிங்கவின் மற்றுமொரு வாக்குறுதியான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்வது எனபதுடன் குருந்தி பிரச்சினையையும் தொடர்புபடுத்தி உள்ளனர்.

முன்னர் எப்பொழுதும் இலங்கை இருந்திராத வகையில் அதனை மாற்றுவது தான் அவர்களின் திட்டம். ஒரு சிங்கள-பௌத்த மதவாத நாடாக அதனை மாற்றுவதுதான் அத்திட்டம். அதிகாரப்பகிர்விலிருந்து எந்த நாடகங்கள் வானொலியில் அனுமதிக்கப்படும் என்பது வரை சிறிய மற்றும் பெரிய விடயங்களில் எல்லாம் பிக்குகள் இறுதி முடிவெடுக்கும் பூமியாக இலங்கையை மாற்றும் திட்டமே அவர்களுடையது. உதாரணமாக, சக்திக சத்குமார வழக்கின் பிரதான சூத்திரதாரியான அஹுங்கல்லே ஜினாநந்த தேரரின் ICCPR முறைப்பாட்டைத் தொடர்ந்து நாடக ஆசிரியர் மாலக தேவப்பிரிய 2019 அக்டோபரில் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என்பதை இங்கு குறிப்பிடலாம்.

உத்தேச ஒலிபரப்பு ஒழுக்காற்று ஆணைக்குழு சட்டத்தை நியாயப்படுத்தும் முயற்சியில், ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது புத்தகங்கள் எரிக்கப்பட்டதைப் பற்றிக் குறிப்பிட்டார். இது காட்டுமிராண்டித்தனமான செயல். அதைச் செய்த குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதனால் ஜனாதிபதி விக்கிரமசிங்க அரகலய தொடர்பான அனைத்து விடயங்களிலும் வெறுப்பைக் காட்டுகிறார். இந்த வெறுப்பு அபாக்கியவசமாக அந்த காட்டுமிராண்டிச் செயலிலும் விடப் பயங்கரமான இனவாத வலதுசாரித்துவத்தில் இருந்து வெளிப்படும் ஆபத்துகளையிட்டு அவரைக் குருடாக்குகிறது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடன் ஜனாதிபதியின் இரண்டாவது சந்திப்பில் நடந்தவற்றை சித்தரிக்கும் காணொளி ஒன்று அண்மையில் கசிய விடப்பட்டது. அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், சிங்கள ராவயவின் செயலாளர் மதுபாஷண பிரபாத் எதையும் மறைக்கவில்லை. “ராஜீவ் காந்திக்கு என்ன நடந்தது என்பதை ரணில் கவனிக்க வேண்டும். தேசபக்தர்கள் உங்களுக்கு அருகில் கூட இருக்கலாம்.. அதிபருக்கு மிக நெருக்கமான குழுவினரால் தான் இந்த காணொளி கசியவிடப்பட்டது. இது உயர் பாதுகாப்பு உள்ள அலுவலகத்தில் நடந்தது. அப்படிப்பட்ட இடத்தில் இருந்து அதை எளிதில் ஒருவராலும் கசியவிட முடியாது. தம்மைச் சுற்றி சிங்கள பௌத்தர்கள் இருப்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும். அந்த தேசப்பற்றுள்ள பௌத்தர்கள் நாட்டுக்காக எதையும் செய்வார்கள். நாட்டுக்கு தேவையான அனைத்து தலையீடுகளையும் செய்வார்கள்.” என்றார்.

ஆயுதப்படுத்தப்படும் தொல்லியல்

பௌத்த ஆலோசனை சபைக்கு தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான பணிக்குழு ஒன்றை 2020 ஆனி மாதம் நியமித்தார். பணிக்குழு ஓரினத் தன்மையான குழுவாக இருந்தது. அதன் தலைவராக ஜனாதிபதியின் உதவியாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னா இருந்தார். அதன் உறுப்பினர்களில் தெரண உரிமையாளர் திலித் ஜயவீர மற்றும் இரண்டு பிக்குகள் அடங்குவர். இலங்கையில் பணிபுரியும் பல தமிழ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூட இல்லை. மேலும் நான்கு பிக்குகள் மற்றும் அடையாளத்திற்காக ஒரு தமிழர் மற்றும் ஒரு முஸ்லீம் பின்னர் சேர்க்கப்பட்டனர். பௌத்தத்தைக் காப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷ "ஹிட்லராக கூட இருக்கலாம்" என்று சொல்லிய வெண்டருவே உபாலி தேரோ இந்த பிக்குகளில் ஒருவர்.

பணிக்குழுவின் இரண்டு ஆரம்ப பிக்கு உறுப்பினர்களில் ஒருவர் சிங்கள-பௌத்த தொல்லியல் துறையின் தலைவரும் ஜாதிக ஹெல உறுமயவின் ஸ்தாபகத் தலைவருமான எல்லாவல மேதானந்த தேரர் ஆவார். புத்த மதத்தை ஒழிப்பதற்கான கிறிஸ்தவ அடிப்படைவாதிகள்  சதி செய்வதாகவும், “துறவிகளுக்கு HIV வைரஸ் தொற்றை ஏற்படுத்துவது அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதி” (தி சண்டே டைம்ஸ் 19.8.2007) என்பதாகவும் தான் அவரது யதார்த்தம் இருக்கிறது. அவர் கோணேஸ்வரம் கோவிலாக இருப்பதற்கு முன்பு பௌத்த ஆலயமாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார். இது போன்ற பிக்குகள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், கோட்டாபய ஜனாதிபதி பதவி திடீரென முடிவுக்கு வரவில்லை என்றால், நம் நாட்டிலும் ஒரு அயோத்தியா உருவாகி இருக்கும்.

மற்றைய பிக்கு உறுப்பினர் பாணமுரே திலகவன்ச தேரர் ஆவார். 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்துக்கான தனது சொந்த பார்வையை அவர் பகிரங்கப்படுத்தினார். “இந்தத் தருணத்தில் இந்த நாட்டின் சிங்கள-பௌத்தர்களாகிய நாம் அதிர்ஷ்டசாலிகளாகவும், புத்திசாலிகளாகவம் இருக்கிறோம். ஒரு சகாப்தம் ஆரம்பமாகி இருக்கிறது... அபாக்கியமான காலகட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, புதிய சூழலை, புதிய நிர்வாகத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த ஒரு சகாப்தம் ஆரம்பமாகி இருக்கிறது... ஒரு சிங்கள-பௌத்த தலைவர் என்ற வகையில் அவர் (கோத்தபாய ராஜபக்ஷ) ஒரு பாதுகாப்பான சிங்கள-பௌத்த ஆட்சியை நிறுவ முயல்வதில் மகா சங்கத்தினர் என்ற வகையில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்....1980 தசாப்தத்தில், திரு. சிறில் மேத்யூ, புராதன பௌத்த ஆலய இடிபாடுகளை அடையாளம் கண்டு, அவற்றை அபிவிருத்தி செய்து, சிங்கள விவசாய சமூகங்களை அமைத்தார். இந்த சிங்கள விவசாய சமூகங்கள் வடக்கு - கிழக்கில் தொடர்ந்திருந்தால், இந்த மாகாணங்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்காமல், நெருக்கடிகள் இல்லாமல் பாதுகாப்பாக இருந்திருக்கும்.

2022 ஆம் ஆண்டு நிகழ்த்திய பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க நினைவுச் சொற்பொழிவில், புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் ஜகத் வீரசிங்க, தொல்பொருளியல் ஜனரஞ்சகத்திற்கு அடிபணிந்து "தற்போதுள்ள மேலாதிக்கங்களுக்கு" கைக்கூலியாக மாறுவது பற்றிய தனது பயத்தை குறிப்பிட்டு இருந்தார். இந்தப் பயத்தை பேராசிரியர் பண்டாரநாயக்கவுடன் பகிர்ந்து கொண்ட பொழுது, “ஹார்டன் சமவெளியை (Horton Plaine) பாருங்கள். தீவின் மற்றைய பகுதிகள் பெரும் மாற்றங்களுக்கு உட்படும் போதும் ஹார்டன் சமவெளி தன் சூழலை ஓரளவுக்கு மாறாமல் வைத்திருக்கிறது. அது போலவே உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் ஒரு ஹார்டன் சமவெளியை உருவாக்குங்கள்.” (சண்டே ஐலண்ட் 23.3.2022 இல் மறுபதிப்பு செய்யப்பட்டது) என்று அவர் சொன்னதாக வீரசிங்க தெரிவித்தார். பேராசிரியர் வீரசிங்கவின் அச்சங்கள் உண்மையாகின்றன. துறவிகள், அரசியல்வாதிகள் மற்றும் சுயநலவாதிகளுக்கு அடிபணிந்து நடக்கும் தொழில் வல்லுநர்களால் தொல்லியல் ஆயுதமாக்கப்படும் போது, அது மிருகத்தனமான மோதல்கள் மற்றும் நீண்ட போர்களுக்கு ஒரு விதைக் களமாக மாறும். அடுத்தடுத்து வரும் மோதல்களின் பின்னரும் ஹார்டன் சமவெளி உயிர்வாழ முடியுமா என்பது எவராலும் ஊகிக்க முடியாத ஒன்று.

கோட்டாபய ராஜபக்சவின் பணிக்குழுவின் நியமனத்துடன், வரலாற்றை மீண்டும் எழுதவும், அதற்கேற்ப ஆதாரங்களை உருவாக்கவும் தொல்பொருளியல் பயன்படுத்தப்பட்டது. பாணமுரே தேரரின் இந்த "பாரம்பரிய பாதுகாப்பு" செயற்பாடுகள் பணிக்குழுவின் பேரினவாத தலைவர் கூட எதிர்ப்புக் காட்டும் நிலைகளை எட்டியது. 2021 மாசி மாதம் நடந்த ஓய்வுபெற்ற ஜெனரல் குணரத்னவுடனான சந்திப்பில், துறவியால் நடத்தப்பட்ட பெருமளவான காடழிப்பு பற்றி மாவட்டச் செயலாளர்கள் முறையிட்டனர். பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். துறவியோ அவற்றுக்கெல்லாம் கடும் மறுப்பை தெரிவித்துவிட்டு தனது வேலைகளை தொடர்ந்தார்.

கோட்டாபய ராஜபக்ச தப்பி ஓடிய பின்னர் பணிக்குழு செயல்படுவதை நிறுத்தியது. ஆனால், சிங்கள-பௌத்தத்தின் பெயரால் கிழக்கைத் தமக்காகக் கைப்பற்றும் அரசியல் பிக்குகளின் முயற்சிகள்  தொடர்ந்தன. 

2022 கார்த்திகையில், மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் அனுசரணையில் தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளின் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இராணுவத்தின் ஈடுபாட்டுடன் இராணுவ முகாம்களுக்கு அருகில் புதிய கோவில்களை அமைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2023 சித்திரையில், புல்மோட்டையில் நடந்த ஒரு மறக்கமுடியாத சம்பவத்தில் ஓர் அரசியல் துறவியின் மெய்க்காப்பாளர், எதிர்ப்புத் தெரிவித்த தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் கொண்ட குழுவை நோக்கி துப்பாக்கியை நீட்டிய காணொளி ஒன்று வெளிவந்தது. துறவிகள் உட்பட அரசியல்வாதிகள் அல்லாதவர்களை பாதுகாக்க 5,400 போலீசார் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.  தம்மத்துடன் வாழ்பவர்கள் தம்மத்தால் பாதுகாக்கப்படுவார்கள் என்று புத்தர் கூறினார். அப்படியானால் மெய்க்காப்பாளரால் தம்மை காக்கும் துறவிகள் புத்தரின் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அல்லது அந்த வார்த்தைகள் தம்மை பாதுகாக்காது என்பதை தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை 2023 ஆம் ஆண்டு மே மாதம் இந்தப் பின்னணியில்தான் சந்தித்தார். வடக்கு  கிழக்கில் திணைக்களத்தின் வழமைக்கு மாறான கூடிய கவனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க இரண்டு விளக்கங்களை வழங்கினார். யுத்த காலத்தில் இந்தப் பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், இப்பிரதேசங்களில் நடக்கும் வேலைகளுக்கு வெளியாட்கள், பெரும்பாலும் துறவிகள் மூலம் நிதியளிக்கப்படுகின்றது என்று சொன்னார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணம் படைத்த பிக்குகள் தொல்பொருள் திணைக்களத்தின் நிகழ்ச்சி நிரலை வழிநடத்த தமது பணத்தைப் பயன்படுத்துகின்றனர்.

தொல்லியல் திணைக்களம் ஒரு தனியார் நிறுவனம் அல்ல, அரசாங்கத்தின் வெளி வளங்கள் திணைக்களத்திடம் இருந்து மட்டுமே அது நிதியை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி சரியாகவே சுட்டிக்காட்டினார். "தொல்லியல் மதிப்புடைய ஏதேனும் ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டால், அங்கு யாரும் வீடு அல்லது புத்த கோவிலை அமைக்க முடியாது. அது நாட்டினுடைய சொத்து." என்று அவர் மேலும் கூறினார். பணிப்பாளர் நாயகம் வேறுவிதமாக நினைத்தார் என்பது தெளிவாகவே தெரிந்தது. இதுவே பிரபலமான அந்த இரண்டாவது சந்திப்பிற்கு வழிவகுத்தது.

பாரம்பரியம் என்கின்ற நாடகப் பிரதி

போரில் வெற்றி பெற்ற உடனேயே, மகிந்தவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தங்கள் வெற்றியை நினைவுகூரும் வகையில் அனுராதபுரத்தில் ஒரு ஸ்தூபி கட்ட முடிவு செய்தனர். 2021 கார்த்திகையில் இந்த கட்டிடம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எரிவாயுக்காக மக்கள் வரிசைகளில் காத்திருப்பது தொடங்கியிருந்தது. நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமான மக்கள் ராஜபக்சக்களால் "காப்பாற்றப்பட்ட" நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இருந்த போதும் இந்த பிரதிஸ்டை நடந்தது. "இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை போர்வீரர்களின் அழியாத நினைவுகளும் விலைமதிப்பற்ற தியாகங்களும் மீண்டும் நிரந்தரமாக்கப் பட்டன, புனிதப் படுத்தப் பட்டன." என்று டெய்லி நியூஸ் பறைதட்டியது. ஒரு வன்முறைப் போரைக் கொண்டாட ஒரு அகிம்சையைப் போதிக்கும் மதத்தை இழிவுபடுத்தியது. கட்டப்பட்ட சந்த ஹிரு சேயா தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த அந்த இடத்தில் ஒருபோதும் கட்டப்பட்டிருக்கக் கூடாது என முன்னாள் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அந்தக் கட்டிடத்துக்கு அனுமதி வழங்க வேண்டிய கட்டாயம் தனக்கு  ஏற்பட்டது என்று அவர் கூறினார். கிழக்கின் தொல்பொருள் பாரம்பரியத்தை தமது இரத்தத்தாலும் கண்ணீராலும் காப்பாற்ற உறுதிமொழி எடுத்திருக்கும் பெரும்பாலான அரசியல் பிக்குகள் ராஜபக்சக்களின் இந்த இரட்டை அவமதிப்பு குறித்து மௌனம் காத்தனர்.

2010 ஆம் ஆண்டு ஆடி 17 ஆம் திகதி இரவு ஆயுதமேந்திய கும்பல் ஒன்று பனம்-பட்டுவவில் உள்ள பழங்கால சிங்கள கிராமமான ராகம்வெலவிற்கு தீ வைத்த போதும் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ராகம்வெல பிரதேசத்தைச் சேர்ந்த முதியன்சேலாகே பண்டார தெரிவிக்கையில், “அவர்கள் எங்களை வெளியே அழைத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் இரண்டு T56 துப்பாக்கிகள் இருந்தன. நான் எப்படியோ தப்பியோட முடிந்தது. ஆனால் நான் திரும்பி வருவதற்குள் அவர்கள் எல்லா இடங்களிலும் தீயிட்டுக் கொண்டிருந்தனர்” (BBC 18.7.2010).

கிராம மக்கள் சிலர் உதவிக்காக அருகில் உள்ள STF முகாமுக்கு ஓடிச் சென்ற போது, STF வீரர்கள் தலையிட மறுத்துவிட்டனர். எரிந்த கிராமத்திற்குத் மக்கள் திரும்புவதை பொலிஸார் தடுத்தனர். வெல்லஸ்ஸ-திகாமடுல்லவின் பிரதான சங்கநாயகர் கிராமக் கோவிலில் 'வாஸ்' அனுசரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ராகம்வெல சமுத்திரகிரி ஆலயம் என்ற புராதன தொல்பொருள் தளத்தையும் கடற்படை அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் அயலவர்கள் எவ்வாறு  இழந்த காணிகளை மீட்க இன்னமும் போராடி வருகின்றார்களோ அவ்வாறே ராகம்வெல மற்றும் பானமா கிராம மக்களும் இன்னமும் போராடி வருகின்றனர்.

புத்தர் கூறினார், "துறவிகளே, உங்களுக்கு நீங்களே தீவுகளாக இருங்கள், வேறு எவரும் இல்லாமல் நீங்களே உங்கள் சொந்த புகலிடமாக இருங்கள்; வேறு எதுவும் இல்லாமல், தம்மம் உங்களுக்கு ஒரு தீவாகவும் புகலிடமாகவும் இருக்கட்டும்." (அட்டாதிபா சுத்தா) என்று. ஆனால் அரசியல் துறவியோ இந்த குறிப்பிட்ட தீவை தனது சொத்து என்று கூறி வருகிறார். இளவரசர் சித்தார்த்தர் ஞானம் பெறுவதற்காக உலக செல்வத்தைத் துறந்தார். அரசியல் துறவியோ பௌத்தத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெறவும் செல்வத்தை குறிப்பாக நிலத்தைக் குவிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு சிறிய பெரிய அரசியல்வாதிகளும் இந்த பலம் மிக்க, உரத்த குரலில் கர்ச்சிக்கின்ற இந்தக் குழுவை எதிர்க்க பயந்து ஒத்தூதுகிறார்கள். ஜனாதிபதி விக்கிரமசிங்க அரிதான விதிவிலக்கு; அவர் பேச்சில் சொல்வதை செயலில் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது எல்லோராலும் பேசப்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போது,  பாரம்பரியத்தின் பாதுகாப்பு என்ற போர்வையில் பாணாமுரே தேரர் காணிகளை சுவீகரித்து இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் தற்போது இந்த காணிகளில் விவசாயம் செய்யும் மக்களிடம் இருந்து வரி அறவீடு கோருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மெதகொட அபேதிஸ்ஸ தேரர், ஆசிரிமலை புனிதப் பகுதிக்குள் நிலம் குத்தகைக்கு விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை நியாயப்படுத்தினார். பிக்குக்கு அதற்கான உரிமை உண்டு என்று அவர் வாதிட்டார். எல்லாவல மேதநாத தேரர் இன்னும் ஒருபடி மேலே சென்று, குருந்தி கோயிலால் சொந்தம் கொண்டாடப்படும் காணியை மாத்திரமன்றி அதனைச் சூழவுள்ள காணியையும் சிங்கள-பௌத்தர் அல்லாதவர்களுக்கு வழங்கக் கூடாது என்றார்.

எனவே இதுதான் பாரம்பரியப் பாதுகாப்பு என்ற நாடகப் பிரதி. தொல்லியல் ஆர்வமுள்ள ஒரு பகுதியை அடையாளம் காண வேண்டும். அதனை புண்ணிய பூமி என்று உரிமை கொண்டாட வேண்டும். ஒரு துறவியை பாதுகாவலராக நியமிக்க வேண்டும். நிலத்தை குத்தகைக்கு விடுவது உட்பட அவர் விரும்பியதை எல்லாம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவைதான் அந்த நாடகத்தின் காட்சிகள்.

தொல்பொருள் தளங்கள் சிதைக்கப்படுவதைவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டும் பொழுது அதிகாரிகள் காது கேளாதவர்களாகவும், கண்பார்வை அற்றவர்களாகவும், ஊமைகளாகவும், இருப்பார்கள். தாய்லாந்தில் பிறந்த யானை முத்துராஜாவை கண்டே விகாரையில் வைத்து பாதுகாவலர்களும், துறவிகளும் கொடூரமாக நடத்தியதைச் சுட்டிக் காட்டிய பொழுதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றைப் புறக்கணித்தது போல் தான் இதுவும்.

முத்துராஜா இலங்கையில் பிறக்காமல் போனது அது செய்த பாக்கியம். அதன் அவல நிலை தாய்லாந்தில் தெரிந்ததும், அதனை அங்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்று தசாப்தங்களாக இந்த சிங்கள பௌத்த நரகத்தில் வாழ்ந்த முத்துராஜா இறுதியாக விடுதலையானது.

நில வெறி கொண்ட அரசியல் பிக்குகளின் அபகரிப்புகளால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சாதாரண தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அவ்வாறான தப்பிக்கும் வழிகள் இல்லை. இங்கு பிறந்து, ஏழையாக இருந்து, மேலிடங்களுடன் தொடர்பற்று இருப்பவர்களுக்கு செல்ல வேறு இடம் இல்லை. துன்பப்படுவதையும், முறையிடுவதையும், வெறுப்பதையும் தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? இந்த வேறு வழியற்ற நிலை ஒரு ஆபத்தான வாழ்நிலை. தங்களது புவியியல் சிங்களம் மட்டும் வேலைத்திட்டத்தின் மூலம் அரசியல் துறவிகள் அடுத்த மோதலுக்கு வித்திடுகின்றனர். 1956 இல் அவர்களின் முன்னோர்கள் சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலம் செய்ததைப் போல.

திசரானி குணசேகர-

groundviews.org-

தமிழாக்கம் - நிமிர்வு 

நிமிர்வு ஆனி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.