கிளிநொச்சியில் வெற்றிகரமாக கம்பு பயிரிடும் முன்னோடி விவசாயி

 


2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது. சிறுதானியங்களின் பயன்பாடுகளை மக்கள் மத்தியில் ஊக்குவித்து 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் உணவின்றி பசியால் வாடும் மக்களே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஊட்டச் சத்து மிக்க சிறுதானியங்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதன் மூலமே மேற்படி இலக்கு சாத்தியமாகும்.   

அந்த வகையில், உலகளவில் வறண்ட வலயங்களிலும் அதிகம் பயிரிடப்படும்  சிறுதானியத்தில்  கம்பு   ஆறாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மிக அதிகளவில் பயிரிடப்படும் தானிய வகையாக கம்பு விளங்குகின்றது. ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 50 கோடிக்கும் அதிகமானோரின் பிரதான ஊட்டச் சத்து மூலங்களாக சிறுதானியங்களே காணப்படுகின்றன.  

இங்கே விடுதலைப் புலிகளின் காலத்தில் பொருண்மியம் துறையினரால் வன்னிப் பிராந்தியத்தில் வறட்சியின் போது கம்பு அறிமுகப்படுத்தப்பட்டு பரந்துபட்ட அளவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடிகிறது. இதே போல் குரக்கன், கம்பு உள்ளிட்ட தானியங்களைக் கொண்டு சிற்றுண்டி வகைகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் பத்திரிகை தகவல்கள் உண்டு.   

2009 போர் முடிவுக்கு பின்னர் மீண்டும் விவசாய திணைக்களத்தினரால் கம்பு சிறுதானியம் விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் பெரிதாக பலரும் ஆர்வம் காட்டாத நிலையே தொடர்ந்தது. விவசாய திணைக்களங்களில் மட்டும் காட்சிப்பொருளாக இருந்த கம்பு சிறுதானியத்துக்கு சில விவசாயிகளே உயிர்கொடுத்தார்கள். அதில் முக்கியமானவர் கிளிநொச்சி மாவட்டத்தின் செல்வா நகரை சேர்ந்த மயில்வாகனம் இராஜகோபால் என்கிற முன்னோடி விவசாயி.


அவர் கம்பை பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடையும் செய்துள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்தை முழு நேர தொழிலாக கொண்டுள்ள அவர் கம்பு சிறுதானிய பயிர்ச் செய்கை குறித்து கூறிய விடயங்கள் வருமாறு: 

நாற்பது வருடங்களாக விவசாயத் துறையில் இருந்தாலும் கம்பை பற்றி பெரிதாக கேள்விப்படவில்லை. விவசாய திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தான் 5 கிராம் கம்பு விதையை தந்தார். அதனை நடுகை செய்து பார்ப்போம் என தொடங்கிய போது தான் எனக்கு அதை தொடர்ச்சியாக பயிரிட வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. முதலில் விதையை போட்டு பின் அதிலிருந்து ஒரு கிலோ அளவான விதைகளை பெற்று பின்பு அதனை நாற்று மேடையில் போட்டு பின் அதனை ஒரு ஏக்கரில் நாட்டி ஐநூறு கிலோக்களுக்கு மேல் கம்பு தானியத்தை அறுவடையாக பெற்றிருந்தேன். தற்போது ஒரு கிலோ கம்பு தானியம் 600 ரூபாயிலிருந்து 800 ரூபா வரை போகின்றது.  அதிலிருந்து நல்ல இலாபத்தை பெற்றிருந்தேன். அதற்கும் மேலாக, கம்பு நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு, எங்களின் வாழ்வாதாரத்துக்கு அவசியமானது.

உணவுப்பொருள் உற்பத்தியில் பாரிய உற்பத்தி சவால்களை எதிர்நோக்கியுள்ள நேரத்தில், உணவுப் பாதுகாப்பு தொடர்பில் எல்லோரும் பேசி வரும் நேரத்தில் கம்பு போன்ற சிறுதானியங்கள் எம் மக்களின் வாழ்வுக்கு அத்தியாவசியமானது. இப்படியான சிறுதானிய இனங்களை நாங்கள் தேடித்தேடி பயிரிடுவதன் மூலம் ஏனைய விவசாயிகள் மத்தியிலும் இது தொடர்பில் விழிப்புணர்வை ஊட்ட முடியும்.  கம்பு தானியத்தை பயிர் செய்து அறுவடையை பெற்ற பின்பு தான் கம்பு மாவிலிருந்து என்னென்ன உணவுகள் தயாரிக்கலாம் என்பது தொடர்பில் அறிந்து வருகிறேன். 


எந்த ஒரு பயிரையும் நிலத்தை பண்படுத்தி விளைநிலமாக்கியதன் பின்பு தான் பயிரிட வேண்டும். பயிர்களுக்கான இடைவெளி, களைத்தாக்கம், பசளைகளை பயிர்களுக்கு வழங்குதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். கம்பை பொறுத்தவரை பெரிதாக நோய்த்தாக்கங்கள் எதுவுமற்ற பயிர் என்றே சொல்லலாம். பயிர் செய்யும் போது பெரிதாக செலவும் இல்லாத பயிராக கம்பு உள்ளது. அறுவடையின் போது கம்பை கதிரில் இருந்து பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டால் அறுவடையும் சுலபமாகி விடும். 

குரக்கன் போன்ற சிறுதானியப் பயிர்களுக்கு மக்கள் மத்தியிலும் நல்ல கேள்வி உண்டு. இவற்றின் மூலம் பொருளாதார ரீதியாகவும் அதிகளவு பலன்களை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல குரக்கனையும் நீண்டகாலமாக பயிரிட்டு வருகிறேன். ஒரு கிலோ குரக்கனை நாற்று போட்டு நட்டால் குறைந்தது 1500 கிலோ குரக்கனை அறுவடை செய்யக் கூடியதாக உள்ளது.  

பொதுவாக நிலத்தை பண்படுத்தி சேதனப் பசளைகளை போட்டு பயிரிடுவதை போல சிறுதானியங்களையும் அடிக்கடி செய்து கொண்டு வந்தால் அந்த நிலம் நல்ல விளைநிலமாக மாறும். சாதாரண அரிசியை விடவும் எட்டு மடங்கு இரும்பு சத்து கம்பு தானியத்தில் உள்ளது. இரும்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் காபோவைதரேட்டுகள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இதில் வைட்டமின் பி, கல்சியம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளன. 

கம்பு தோசை, கம்பங் கூழ், கம்பு அடை, கம்பு இட்டலி, கம்பஞ் சோறு, கம்பு கஞ்சி, கம்பு உப்புமா, கம்பு களி, கம்பு லட்டு போன்ற பல உணவுகளை செய்ய முடியும். குறிப்பாக வளரும் குழந்தைகள், பெண்களுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் இந்த கம்பு தானியத்தில் காணப்படுகின்றன. கம்பு தானியத்தை உண்பதன் மூலம் ஏராளம் மருத்துவ நன்மைகளும் உள்ளன. கம்பு போன்ற சிறுதானியங்களை முடிந்தளவு பல விவசாயிகள் பயிரிட முன்வர வேண்டும். அதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். 

தொகுப்பு - அமுது 

நிமிர்வு ஆனி 2023 இதழ் 

 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.