வெறும் கறுப்பு யூலை அல்ல தமிழினப் படுகொலை யூலைஈழத்தமிழர்களை தேடித் தேடி கொத்துக்கொத்தாக கொன்றழித்த 1983 ஆம் ஆண்டு ஆடிக்கலவரம் இடம்பெற்று நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 5000 க்கும் மேற்பட்ட தமிழ்மக்களின் உயிர்களும் அவர்களின் பலகோடி சொத்துக்களும் தீயிட்டு அழிக்கப்பட்டன.

அதுவே பின்னாளில் துயர்தோய்ந்த கறுப்பு யூலை என அழைக்கப்பட்டது. அதன் 40 ஆண்டு நினைவு நிகழ்வுகள் தாயகம் மற்றும் உலகமெங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. 

கறுப்பு யூலை நினைவலைகள் தொடர்பில் ஈழத்தின் மூத்த அரசியல்வாதியான சிவாஜிலிங்கம் அவர்கள் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

ஈழத்தமிழர்கள் மீது 1983 ஆம் ஆண்டிலே இலங்கையிலே மிகக் கொடூரமாக படுகொலைகள் ஆரம்பித்த நாள் யூலை 24 ஆம் திகதி. 23 கறுப்பு யூலை என்பது இரத்த யூலையாக இனப்படுகொலை யூலையாக இருந்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலையின் பின்னணியில் தான் 5000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இங்கு படுகொலை செய்யப்பட்டார்கள். 

கொழும்பு வெலிக்கடை சிறையிலே தலைவர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் மருத்துவர் இராஜ சுந்தரம் போன்றவர்கள் கொல்லப்பட்ட அந்த சூழ்நிலையிலே கொழும்பு நகரிலும் பல இடங்களில் வாக்காளர் இடாப்புகளை வைத்து கொண்டு தேடி தேடி தான் தமிழர்களை கொன்றழித்தார்கள்.

நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன. கட்டடங்கள் நொறுக்கப்பட்டன. தமிழர்கள் தேடி தேடி அழிக்கப்பட்டார்கள். இவ்வாறாக படுகொலைகளை மிக அவலமான நிலைமைகளை சந்தித்த எங்கள் மக்களை விமானம் மூலமும் கப்பல் மூலமும் பேரூந்துகள் மூலமும் புகையிரதங்கள் மூலமும் வடக்குக்கு அனுப்பினார்கள். இவ்வாறு தான் தமிழ்மக்கள் பாதுகாப்பாக உணரும் பிரதேசம் தாயகம் என்பது அங்கே உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே இந்த பின்னணியில் தான் நாங்கள் இதை பார்க்க வேண்டும்.

இந்த படுகொலையை அன்றைய இந்திய பிரதமர் அன்னை இந்திராகாந்தி கூட இனப்படுகொலை என்று கூறியிருந்தார். இன்றைக்கு தமிழ் தரப்புகள் எல்லோருமே இது இனப்படுகொலை என்று வற்புறுத்தி கொண்டு இருக்கிறோம். 

கனடா நாட்டினுடைய பிரதமர் இப்போது இனப்படுகொலை என்று கூறி இருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

நாங்கள் ஒரு தேசிய இனம். நாங்கள் இலங்கைத்தீவிலே யாழ்ப்பாண இராச்சியம் என்று இறைமையோடு தனி நாடாக வாழ்ந்த இனம். 400 ஆண்டுகளுககு முன்னர் எங்களுடைய இறைமை பறிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அன்று இழந்த இறைமையை கோருகின்ற நிலைமையில் நாங்கள் இவ்வாறான இனப்படுகொலையின் பின்னர் நாங்கள் ஒரு ஈடு செய் நீதியை பரிகார நீதியை கோரிக் கொண்டு இருக்கின்றோம். 

இங்கு நடைபெற்ற இனப்படுகொலைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலே இந்த குற்றவாளிகளை நிறுத்த வேண்டிய ஒரு போராட்டத்தை நடத்த வேண்டிய தேவையிலே நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். இதைவிட மீண்டும் இந்த தீவிலே ஒரு இனப்படுகொலை போன்றவிடயங்கள் நிகழாமல் இருப்பதற்காக இந்த விடயங்களை நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டும்.

இப்பொழுது மீள நிகழாமை இருக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று தீவிரமாக சிந்திக்க வேண்டும். தனி நாடாக சுதந்திர தேசமாக இருந்தால் தான் தமிழ்மக்களின் இறைமையை பாதுகாக்க முடியும். இனப்படுகொலை நடைபெற்றதன் பின்னர் நாங்கள் சமஸ்டி என்றோ கூட்டு சமஸ்டி என்றோ அவர்களிடம் போய் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. அவ்வாறான நிலைமையிலே சிங்கள பௌத்த பேரினவாதிகளினுடைய மனநிலை இல்லை. அதை நாங்கள் தெரிந்து கொண்டு நாங்கள் சர்வதேச சமூகத்தை நோக்கி அமெரிக்காவிலும் கனடாவிலும் மற்ற நாடுகளில் இருக்க கூடிய அந்தந்த நாடு அரசாங்கங்களை ஒரு சுதந்திரத்திற்கான பொதுசன வாக்கெடுப்பை நோக்கிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். அது பலன் சேர்க்கும்.

வடக்கு மாகாண சபையிலே 2018 ஆம் ஆண்டு புரட்டாதி 11 ஆம் திகதி அவ்வாறு ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. இனப்படுகொலை தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையிலே தான் இந்த விடயங்களை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும். 

மாகாணசபைகளா அல்லது சுதந்திர தமிழீழமா அல்லது ஒற்றை ஆட்சியா என்ற கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய விதத்திலே ஒரு பொது வாக்கெடுப்பை நடத்துமாறு இன்றைக்கு சர்வதேச சமூகத்தை நோக்கி கோரிக்கைகளை எழுப்ப வேண்டும்.

அண்மையில் கூட இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தேன். இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் அடங்கிய குவாட் நாடுகள் இந்த பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தேன்.

ஐக்கிய நாடுகள் சபையினுடைய பங்களிப்புடன் கண்காணிப்புடன் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் அதிலே பங்குபற்ற வேண்டும்.

பொது வாக்கெடுப்பு தொடர்பான கோரிக்கைகள் 1990 களுக்கு பின்னர் உலகம் முழுவதும் எழுந்துள்ளன. அது கிழக்கு தீமோராக இருக்கட்டும். தென் சூடானாக இருக்கட்டும். கொசோவோவாக இருக்கட்டும் பல இடங்களிலே இந்த விடயங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஏன் பிரித்தானியவிலே கூட ஸ்கொட்லாந்திலே நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பு பிரித்தானியா முழுவதிலும் நடைபெறவில்லை. இதை எங்களுடைய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த கறுப்பு யூலை என்பதை இனப்படுகொலை யூலை என்று சொல்லி, கொல்லப்பட்ட அத்தனை மக்களுக்குமான நீதி கிடைப்பதற்கு பொது வாக்கெடுப்பை நாங்கள் வலியுறுத்த வேண்டும். அதுவே தேச விடுதலை போராட்டத்திலே தங்களுடைய உயிர்களை ஈந்த வீர மறவர்களுக்கும், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கும் நாங்கள் செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலியாகும். 

இனியொரு கறுப்பு யூலை இடம்பெறாமல் இருக்க வேண்டுமானால் நாற்பதாண்டுகளுக்கு முன் நடைபெற்ற இனச் சுத்திகரிப்புக்கு நீதி வேண்டும்.

தொகுப்பு - அமுது 

நிமிர்வு ஆடி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.