உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைப்பயிற்சியே சிறந்த வழி - வழிகாட்டுகிறது புதிய வெளிச்சம்

 


கனடாவை தளமாக கொண்டியங்கும் புதிய வெளிச்சம் அமைப்பு வருடாந்தம் நடாத்தி வரும் ஆரோக்கிய நடை பயணம் (ekuruvi steps 2023) இம்முறை மதிப்புக் கூட்டல் என்கிற தொனிப்பொருளில் இடம்பெற்று வருகின்றது.

இன்று இலங்கையிலும் சரி கனடாவிலும் சரி எம்மவர்கள் மத்தியில் ஆரோக்கிய உணவுப்பழக்கம், போதிய தேகாப்பியாச பயிற்சிகள் இன்மையால் நீரிழிவு, உயர்குருதியமுக்கம் போன்ற தொற்றா நோய்களுக்கு ஆளாகி வருகின்றார்கள். அடிப்படையில் தினமும் நடைப்பயிற்சி பழக்கம் உள்ளவர்கள் மேற்படி நோய்களை தவிர்த்துக் கொள்ள கூடிய வாய்ப்புகள் உள்ளன. எந்த ஒரு செயலையும் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் அது பழக்கத்திற்கு வந்துவிடும் என்பது பொதுவான உண்மையாகும்.

இரண்டு மாதங்கள் தினமும் 10000 காலடிகள் நடந்து உலகெங்கும் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற கருதுகோளில் இடம்பெறும் இந்நிகழ்வை புதியவெளிச்சம் அமைப்பின் நிறுவனர் அனந்தராஜ் நவஜீவன் அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்து வருகிறார்.

நவஜீவன் நடைப்பயிற்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

தினமும் நடைப்பயிற்சி என்பது மனித இயற்கை வாழ்வுக்கு மிகவும் அத்தியாவசியமானது. எங்களுடன் உலகம் முழுவதுமிருந்து சுமார் 300 தமிழர்கள் தினமும் 10000 காலடிகள் நடக்கின்றார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நண்பர்களையும் உறவுகளையும் இந்த நடை பயிற்சியில் இணைந்து கொள்ள அழையுங்கள். எம்முடன் இணைந்து நடை பயணத்தில் பயணிக்க விரும்புபவர்கள் தாராளமாக இணைந்து பயணிக்கலாம் என்றார்.

தமிழ்நாட்டின் பிரபல சித்த மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன் அண்மையில் கனடாவுக்கு விஜயம் செய்து ஆரோக்கிய நடையின் அவசியம் குறித்து பேசியிருந்தார். அதிலிருந்து சில பகுதிகள் வருமாறு,

நம்முடைய உணவு, வாழ்வியல், அறிவியல் என்று அத்தனையிலும் மதிப்புக் கூட்ட வேண்டி உள்ளது.  

நடை என்பது வெறுமனே நடந்தால் உடல் எடை குறையும், நீரிழிவு நோய் கட்டுப்படும் என்பதற்காக மட்டுமல்ல, நடக்கும் போது ஏற்படும் மாற்றங்களை நாம் அறிவியல் ரீதியாக யோசித்துப் பார்த்தால் கழிவுகளை நீக்கக் கூடிய பயிற்சியில் முதல் இடம் நடை தான். எங்கள் உடலிலும் பல கழிவுகள் உள்ளன. மனதிலும் தான். நம் உடலில் நோயை எதிர்க்கும் ஆற்றலுள்ள பொறிமுறை இருக்கிறது. உளவியல் ரீதியாக தன்னையறிதலை நடை கொடுக்கிறது. எப்படி நடக்க வேண்டும் என்பதில் முதலில் நீங்கள் உங்களுடன் உரையாட வேண்டும். சிக்கலான விடயங்களில் எப்படி நகர்வது என்பதனை எனக்கு நடை கற்றுக் கொடுத்துள்ளது. என்றார்.

ஈழவன்-

நிமிர்வு ஆடி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.