சிறுதானிய விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதே முதன்மையானது

 


சிறுதானிய உணவுகளை ஊக்குவிக்கும் கண்காட்சி ஒன்று கடந்த 15.06.2023 அன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. அங்கே பல்வேறு சிறுதானியங்களில் இருந்து செய்யப்பட்ட ஏராளமான ஆரோக்கிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அதில் முக்கியமாக சிறார்களும் விரும்பும் வகையில் அவர்களுக்கு ஏற்ற மாதிரியான சிறுதானிய உணவுகளையும் சமைத்திருந்தார்கள்.

கம்பு, குரக்கன், சாமை, தினை, வரகு, இறுங்கு போன்ற சிறுதானியங்களின் பயிர்ச் செய்கை தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு பதப்படுத்தி அரிசி மாவாக்குவது என்பது தொடர்பாகவும் அதிலிருந்து எவ்வாறான

உணவு பதார்த்தங்களை உருவாக்கலாம் என்பது தொடர்பாகவும் செய்முறையுடன் கூடிய ஒரு கண்காட்சியாக அது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந்த கண்காட்சியில் 60 இற்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுக்கான செய்முறைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு எமது மக்களின் நோயற்ற வாழ்விற்கு மிகவும் முக்கியமான ஒரு பொருளாக காணப்படுகிறது. பாரம்பரியமாக இவற்றை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.

தற்பொழுது மாறிவரும் இந்த நவீன யுகத்திலே அவற்றை பதப்படுத்துவதில் ஏற்படுகின்ற சிக்கல் மற்றும் உணவு பண்டங்களை தயாரிப்பதற்கான செயல்முறைகளை மக்கள் அறிந்து கொள்ளாமல் இருப்பதன் காரணமாக அவற்றின் பயன்பாடு குறைவடைந்து செல்கிறது.

விவசாயிகளின் சிறுதானிய பயிர்ச்செய்கையும் குறைவடைந்து செல்கின்றது. அந்த வகையிலே எங்களுடைய பாரம்பரிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கின்ற முகமாக இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக, தினை, சாமை போன்ற பயிர்களில் விதைகளில் இருந்து கோது அகற்றுவது மிகவும் கடினமான செயற்பாடாக காணப்பட்டது. ஆரம்ப காலத்தில் குரக்கனிலும் இதே பிரச்சனை இருந்தது. ஆனால் இப்பொழுது அதனை இலகுவாக ஆலையில் கொடுத்தே கோது அகற்ற முடிகிறது. ]

அதே போல இந்த சிறுதானியங்களிலும் கோது அகற்ற கூடிய செயற்பாடானது காணப்படுகிறது. மற்றும் சிறுதானியங்களை பதப்படுத்தியதன் பின்பும் அதிலிருந்து எவ்வாறு உணவு தயாரிப்பது என்பதுவும் கேள்விக்குரிய விடயம் தான். இப்பொழுது இருக்கின்ற இளம் சமுதாயத்தினர் இவற்றை எல்லாம் அறிந்திருக்கிறார்களா என்பது கூட தெரியவில்லை.

பலகார வகைகளையும் சிறுதானியங்களில் இருந்து செய்ய கூடியதாக இருக்கிறது. அதற்கு மேலதிகமாக மிகவும் சுவையான ஏராளமான உணவு பதார்த்தங்களையும் செய்ய கூடியதாக இருக்கிறது. இவ்வாறான நிகழ்வுகளை செய்வதன் ஊடாக இன்றைய சமுதாயத்திற்கு இவற்றை தெரியப்படுத்தலாம்.

எல்லாவிதமான சிறுதானியங்களையும் பயன்படுத்தி செய்யப்பட்ட சிறுதானிய அடை, சிறுதானிய கூழ், சிறுதானிய கலவை பொரி, சிறுதானிய சத்துமா என பலவகையான உணவுகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவை சிறுவர்களுக்கு அதிகளவு சத்து வாய்ந்த உணவாக காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளர்கள், இரத்த கொழுப்பு பிரச்சனை உடையவர்களுக்கு சிறுதானிய உணவு பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது உடலில் இருக்கின்ற பிரச்சனையை நீக்குவதற்கு சிறுதானியம் உதவுகிறது. கொழுப்பினை குறைக்கவும், இதய பிரச்சனை எல்லாவற்றையும் சீராக்கவும் உதவும்.

“சிறுதானியங்களை கொள்வனவு செய்வதற்கு ஆட்கள் இருந்த போதும் அதனை சந்தையில் பெற்றுக் கொள்வது மிகவும் கடினமானதாக இருக்கிறது. ஏனென்றால் எல்லா கடைகளிலும் சிறுதானியங்கள் கிடைப்பதில்லை. உற்பத்தி செய்பவர்களையும் வாங்குபவர்களையும் எளிய முறையில் தொடர்புபடுத்துவதனை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். உற்பத்தியாளர்களிடமிருந்து எடுத்து அவற்றை சரியான முறையில் தூய்மைப்படுத்தி பொதி செய்து சந்தைப்படுத்துகின்ற ஒரு பணியை நாங்கள் கொண்டிருக்கிறோம்.” இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல்லுயிர் தனியார் நிறுவன இளைஞர் இவ்வாறாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“இயற்கையில் திடீரென மழை பெய்வது கடும் வரட்சி என காலநிலை சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறோம். எப்படியும் மனிதனுக்கு உணவு தேவை. அந்த சந்தர்ப்பத்தில் உணவு உற்பத்திக்கு சிறுதானியம் தான் சரியான ஒரு வழி. இன்னுமொரு விடயம்

அரிசியும் கோதுமையும் பயன்பாட்டிற்கு வருவதற்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் சிறுதானியங்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. மனிதன் நாடோடி வாழ்க்கையை வாழும் போது கையில் சிறுதானியங்கள் தான் இருந்தன. இவை உடல் உழைப்பு பெரிதாக தேவையில்லாமல் உற்பத்தி செய்ந்து கொள்ளக் கூடிய உணவுகளாக உள்ளன. சிறிதளவு சாப்பிட்டாலும் நார்ச்சத்து கூடுதலாக இருக்கின்ற காரணத்தினால் அதிகளவு சக்தியை கொடுக்கும்.

எமது முன்னோர்கள் உடல் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்ததற்கு காரணம் முக்கியமாக சிறுதானியம். அவர்கள் பலமாக வேலையை செய்ய கூடியவர்களாக இருந்ததற்கான காரணம் சிறுதானியம் தான். ஆனால் நாங்கள் அவற்றை விட்டுவிட்டு அரிசிக்கும் கோதுமை மாவிற்கும் அடிமைப்பட்டதால் எங்களுடைய உடலில் ஆரோக்கியம் இல்லாதவர்களாக மாறி விட்டோம். எல்லாவற்றுக்கும் காரணம் எங்களுடைய உணவு பழக்க வழக்கம் தான். 

நீர் பிரச்சனையான இடங்களிலும் செய்வதற்கு ஏற்ற விவசாயமாக சிறுதானியம் இருக்கிறது. நீரை கொஞ்சமாக எடுத்து கொண்டு உற்பத்தியில் விளைச்சலை அதிகளவாக வழங்குவது சிறுதானியங்கள். வரகு, கம்பு, இறுங்கு, சாமை, தினை, கொள்ளு இவ்வாறாக எல்லாமே குறைந்தளவு நீரில் கூடியளவு விளைச்சலை தரக் கூடியவை.”

“இங்கு சிறுதானியத்தை சந்தைப்படுத்துவதற்கான ஒரு காட்சி கூடத்தை செய்திருக்கிறோம். இதனுடைய நோக்கம் விவசாயிகள் உற்பத்தியை பெரியளவில் செய்தாலும் அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெரிய சிரமத்தை எதிர் நோக்குகின்றனர். அதேசமயம் அதற்கான சரியான நியாயமான விலையும் கிடைப்பதில்லை. இவற்றை நிவர்த்தி செய்வதற்காக தான் எங்களுடைய ஒரு அலகாக இந்த செயற்பாட்டை தொடங்கி இருக்கிறோம். 

ஆகவே இது நுகர்வோரையும் விவசாயிகளையும் இணைப்பதற்கான ஒரு முயற்சியாகும். சில விவசாயிகள் அதை பயிரிடுவது என்றால் கூட அவர்களிடம் விதை இல்லை. விதை அழிந்துவிட்டது. ஆகவே விதைகளையும் விவசாயிகளுக்கு கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி அந்த விவசாயிகளிடத்தில் இருந்து நாங்களே முழு தானியத்தையும் நியாயமான விலையில் பெற்று கொள்வதற்கு முதற்கட்ட நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.”

யாழ் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தின் பண்ணை முகாமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

“சிறுதானிய செய்கையை ஊக்குவிக்கும் முகமாக இதனை செய்து கொண்டிருக்கின்றோம். சிறுதானியங்களை எவ்வாறு பயரிடலாம், நோய் தாக்கங்களை எவ்வாறு கையாளலாம், எவ்வாறு அறுவடை செய்யலாம், மற்றும் சிறுதானியங்களில் இருந்து பெறுமதி சேர் உணவுகளை எவ்வாறு உற்பத்தி செய்யலாம் என்பன பற்றியும் விளக்கங்களை அளித்து கொண்டிருக்கின்றோம்.

சிறுதானியங்களை எடுத்து கொண்டால் நோய் தாக்கம் குறைவு. ஆனால் பிரதான பிரச்சனையாக பறவைகளின் தாக்கம் தான் இருந்தது. அதற்கும் பொறிமுறையாக வெவ்வேறு சத்தத்தை எழுப்ப கூடிய ஒரு உபகரணத்தை நாங்கள் பயன்படுத்தி உள்ளோம். இதனையும் பார்வையிடுவதற்கான ஆயத்தங்களை செய்து வைத்திருக்கிறோம். விவசாயிகள் இதனை பார்த்து பயனடைந்து உள்ளார்கள்.” என்று தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவு விவசாய நிறுவனம் 2023 சிறுதானிய ஊக்குவிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தி உள்ளது. விவசாய திணைக்களத்தின் கீழ் இயங்கும் அம்மாச்சி உணவகத்தில் இவ் சிறுதானிய உற்பத்தி பொருட்களை தொடர்ச்சியாக விசேட உணவாக பெற்றுக்கொள்ள முடியும்.

தொகுப்பு - ரஜீந்தினி 

நிமிர்வு ஆடி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.