கறுப்பு யூலையும் 13 ஆவது திருத்த சட்டமும்


1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இலங்கைத் தமிழர் மீது ஜே ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான சிங்கள அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பான ஆடிக்கலவரத்தின் 40 ஆண்டுகள் நிறைவு தினம் இந்தமுறை தமிழ்மக்கள் வாழும் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

சிறிலங்காவின் பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்த இனக்கலவரத்தினால் கடுமையாக பாதிப்புற்ற தமிழ்மக்கள் கப்பல்களிலும், விமானங்களிலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்தார்கள். அதன் மூலம் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பானது வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பது மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. 

ஒரே நாட்டுக்குள் தமிழ்மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ முடியாது என்பதை மீளவும் உறுதிப்படுத்திய நிகழ்வே 1983 ஆடிக்கலவரம்.

இலங்கை தமிழ் மக்கள் நீண்டகாலமாக தேசம் அல்லது தேசிய இனமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு தேசம் அல்லது தேசிய இனமாக வாழ்ந்து வருதல் அழிக்கப்படுவது தான் இனப்பிரச்சினையாகும். ஒரு தேசத்தை அல்லது தேசிய இனத்தைத் தாங்கும் தூண்களாக இருப்பவை நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பனவையே. இவற்றுடன் மக்கள் கூட்டத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இவை அழிக்கப்படுவதுதான் இனப்பிரச்சினையாகும்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் பூர்வீக நிலத்தை அழித்தால், அந்த இனம் பேசும் மொழியை அழித்தால், அந்த இனத்திற்கு வாழ்வாதாரமாக இருக்கின்ற பொருளாதாரத்தை அழித்தால் அந்த இனத்தை ஒன்றிணைக்கின்ற கலாசாரத்தை அழித்தால், அந்த இனம் அடையாளப்படுத்தும் மக்கள் கூட்டத்தை கொத்து கொத்தாக கொலை செய்தால் அந்த இனம் அழியும்.

இலங்கையின் வரலாற்று ரீதியாகவே இந்தத் தூண்கள் அழிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் இதுவரை காலப் போராட்டம் என்பது இத்தூண்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கின்ற தற்காப்புப் போராட்டமே. இப்போராட்டம் அரசியல் வழி, ஆயுதவழி என அறுபது வருடங்களுக்கு மேலாக தொடர்கின்றது.

1983 இவ்வழிப்பை தொடர்ந்து 1987 இல் தமிழ்மக்களின் முழுமையான ஒப்புதலில்லாமல் தமிழ்மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ளக் கூடிய அதிகாரங்களும் இல்லாமல் இலங்கை அரசும் இந்திய அரசும் ஏற்படுத்திக் கொண்ட 13 ஆவது திருத்த சட்டம் இன்றும் பேசு பொருளாக இருக்கிறது.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் சரியான அதிகாரப்பகிர்வில்லாமல் அரைகுறையான தீர்வுடன் உள்ள 13 ஆவது திருத்தமும் அதனை தொடர்ந்து கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமையும் தங்களுக்கு உரிய தீர்வல்ல என்பதை தமிழ்மக்கள் அரசியல் வழிமுறை மூலமும் ஆயுதப் போராட்டம் மூலமும் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

தமிழ்மக்களிடம் வாக்கு கேட்டு செல்லும் போது மட்டும் சமஷ்டி அல்லது அதற்கு கூடிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என கேட்கும் தமிழ்க் கடசிகள் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் மட்டும் 13 பிளஸ் மைனஸ் என கதைத்துக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன?

தமிழ்மக்கள் இந்த நாட்டில் கௌரவமாக வாழ உச்ச பட்ச தீர்வு எது வேண்டுமோ அதனை முன்வைத்து அதில் உறுதியாக நிற்பதனை விட்டுவிட்டு சிங்கள இந்திய அரசுகளின் பொம்மையாக எமது தலைவர்கள் ஏன் இயங்க வேண்டும்? இன்று சிங்கள அரசுக்கு தமிழ்மக்களின் பிரச்சனையை தீர்க்க தாம் முயற்சி எடுக்கிறோம் என்பதைக் காண்பித்து சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைகள் உள்ளன. அதற்கு எம் அரசியல் தலைவர்கள் பலிக்கடாவாகி உள்ளனர் என்பது தான் உண்மை.

இந்திய இலங்கை அரசுகள் தமிழ் மக்களை ஏமாற்ற காலாகாலமாக ஒரு பொறியாக 13 ஐ வைத்துள்ளனர். தமிழ்த் தலைமைகளும் இந்த பொறிக்குள் சிக்கி 13 ஐ வைத்துக் கொண்டு தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றனர். தமிழ்மக்கள் இந்த வாதப் பிரதிவாதங்களுக்குள் அகப்படாமல் தங்கள் இலக்கு நோக்கி உறுதியுடன் பயணிப்பதே நல்லது.

செ, கிரிசாந் -

நிமிர்வு ஆடி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.