உள்நாட்டு கடன் மறுசீரமைப்பால் பறிக்கப்படும் உடமைகள்


 ஒரு நாட்டின் கடன் மறுசீரமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும் படிமுறைகள் தொடர்பாக நிமிர்வு ஆனி, ஆடி மற்றும் ஆவணி, 2022 இதழ்களில் விரிவாக விளக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிணை முறிக்கடன் மறுசீரமைப்புக்கும் அடிப்படையில் இருப்பது எவ்வாறு அந்த கடன்சுமை கடன் வாங்கியவர்கள் மற்றும் கடன் வழங்குனர்கள் இடையே பகிரப்பட வேண்டும் என்ற முடிவுகளை எடுப்பது தான். கடன் வாங்கிய நாட்டின் நிதி நிலைமையை சரிசெய்வற்காக அதன் குடிமக்கள் மீது எவ்வளவு சுமைகள் சுமத்தப்படலாம்,  அதேவேளை  கடன் வழங்கியவர்கள் எவ்வளவு கடன் நிவாரணத்தை அந்த நாட்டுக்கு வழங்க வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப் பட வேண்டும். இந்த முடிவுகளை எடுப்பதற்கு அங்கீகரிக்கப் பட்ட ஒரு நிறுவனம் வேண்டும். அந்த நிறுவனமாக சர்வதேச நாணய நிதியம் (IMF) இருக்கின்றது. அது இரு தரப்பினரும் பேசுவதற்கான ஒரு ஊடகத்தை அமைத்து தருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம் எவ்வளவு கடனை கடன் வழங்குனர்கள் தள்ளுபடி செய்ய வேண்டும், எவ்வளவு தூரம் வட்டி வீதத்தை குறைக்க வேண்டும், எவ்வளவு தூரம் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை நீடிக்க வேண்டும் போன்ற விடயங்களில் இணக்கப்பாட்டை எட்டுவது தான். அதே வேளை இந்த விடயங்களை எந்த கடன் வழங்குனர்கள் செய்ய வேண்டும் எவர் செய்யத் தேவையில்லை என்ற முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்கு கைமாறாக கடன் வாங்கிய நாட்டு மக்கள் மீது எவ்வளவு சுமை ஏற்றப்பட வேண்டும் போன்ற முடிவுகளும் எடுக்கப் படவேண்டும்.  இதில் முடிவெடுக்கும் சுதந்திரம் கடன் வாங்கிய நாட்டுக்கு இருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கினாலும் உண்மையில் முடிவெடுப்பது கடன் வழங்கிய பன்னாட்டு நிதி நிறுவனங்களே.

அந்த வகையில், ஓர் அரசாங்கம் உள்நாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன்களும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் வற்புறுத்துவார்கள். அதாவது அரசாங்கத்துக்கு கடனை வழங்கிய உள்நாட்டு வங்கிகளும் அந்தக் கடனில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது வட்டி வீதத்தை குறைக்க வேண்டும் அல்லது கடனை திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் வற்புறுத்துவார்கள்.  ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கும் உள்நாட்டு வங்கிகளை இதனைச் செய்யுமாறு கேட்டால் அவை திவாலாகிப் போய்விடும் என்று அரசாங்கம் வாதிடும். உள்நாட்டு வங்கிகளால் அப்படிச்  செய்ய முடியாவிட்டால் அரசுக்கு கடன் வழங்கிய ஏனைய உள்நாட்டு நிதியங்கள் அந்த செயலைச் செய்யுமாறு வற்புறுத்தப் படும். இந்த முடிவுகளெல்லாம் IMF இனாலும் கடன் வழங்கிய நாடுகளாலும், பன்னாட்டு நிதி நிறுவனங்களாலும் ஏற்கனவே எடுக்கப் பட்டிருக்கும்.  கடன் வாங்கிய அரசாங்கம் அவற்றை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.

இந்தப் பின்னணியில் தான் சிறிலங்காவின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் பார்க்க வேண்டும். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு திட்டம் ஒன்றை இலங்கை சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கடந்த ஆனி மாதம் 28 ஆம் திகதி வெளியிட்டது. அது ஆடி மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த திட்ட வெளியீட்டால் மக்கள் பதட்டப்பட்டு வங்கிகளில் இருக்கும் தமது பணத்தை எடுத்து விடுவார்களோ, அதன் மூலம் வங்கிகள் திவாலாகி விடுமோ என்ற பயத்தில் ஆனி 29 முதல் ஆடி 3 வரை வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. வெளியிடப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தில் வங்கிளின் கடன் மறுசீரமைக்கப்படாது என்றும் அரசுக்கு கடன் வழங்கிய ஏனைய நிதியங்களின் கடன்களே மறுசீரமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த நிதியங்களில் முக்கியமானவை ஊழியர் சேமலாப நிதியமும் (EPF), ஊழியர் நம்பிக்கை (ETF) நிதியமும் ஆகும்.  இந்த நிதியங்களில் முதலிட்டு இருப்பவர்கள் பெரும்பாலும் உழைக்கும் வறிய மக்கள் ஆவார்கள். சிறிலங்காவின் பணக்கார வங்கிகளில் கைவைக்காமல் ஏழை மக்களின் ஓய்வூதியத்தில் அரசாங்கம் கைவைத்து இருப்பதாக சமூக செயற்பாட்டாளர்களும் தொழிற்சங்கவாதிகளும் கூறுகின்றனர்.  இது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் ஆடி 3, 2023 டெய்லி மிரர் (Daily Mirror) பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பால் பறிக்கப்படும் உடைமைகள்

கடந்த புதன்கிழமை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டு சனிக்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் மிகவும் முக்கியமான உள்நாட்டு நிதி வளம் ஒன்றை மட்டுமே இலக்கு வைத்துள்ளது. மக்களின் ஓய்வூதிய நிதியம் தான் அது. உழைக்கும் மக்களின் எதிர்கால வாழ்வியலை வலுவாக பாதிக்கும் எந்தவொரு திட்டமும் இலகுவாக நிறைவேற்றப்பட முடியாது. அதற்கு எதிர்ப்பு வலுவடையும் போது  அது எந்தளவுக்கு அரசியல் ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பதைப் பொறுத்து அரசாங்கத்தின் திட்டம் பாரிய மாற்றங்களுக்கு உட்படும். அரசாங்கம் ஏன் ஓய்வூதிய நிதியத்தை இலக்கு வைத்தது? உழைக்கும் வர்க்கம் இதற்கு கொடுக்கப் போகும் விலை என்ன? இத்திட்டத்துக்கு மாற்று என்ன?    

உள்நாட்டுக் கடன்

கடந்த ஆண்டு சிறிலங்கா தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் வங்குரோத்து நிலைமையை பிரகடனம் செய்தது.  இப்பொழுது பிணைமுறிக் கடன் பத்திரத்தை வைத்திருக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள், மற்றும் கடன் கொடுத்த சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. தனது உள்நாட்டு நிறுவனங்களில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தவறவில்லை என்றாலும், மூன்று காரணங்களுக்காக உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க அது விரும்புகிறது.

முதலாவதாக, சர்வதேச பிணைமுறிப் பத்திரதாரர்களின் கோரிக்கைகளைத் திருப்திப்படுத்துவதாகும். அதாவது, சிறிலங்கா திருப்பிச் செலுத்த வேண்டிய ஒட்டு மொத்த கடனை குறைப்பதன் ஊடாக தமது கடன் திருப்பிச் செலுத்தப்படுவதில் ஏற்படும் அபாயங்கள் குறைக்கப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை திருப்திப்படுத்த உள்நாட்டுக் கடன்களும் குறைக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, ஒவ்வொரு ஆண்டும் முதல் மற்றும் வட்டிக்காக செலுத்தப்படும் தொகை (Gross Financing Needs, GFN) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இன் 13% ஆகக் குறைக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு சிறிலங்கா அரசு கண்மூடித்தனமாக இணங்கி இருக்கிறது. மூன்றாவதாக, சர்வதேச பிணைமுறிப் பத்திரதாரர்கள் மற்றும் IMF ஆகிய இருதரப்பினரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அரசாங்கம் விரும்புகிறது. ஏனெனில், அப்படிச் செய்தாற் தான், சர்வதேச நாணய நிதியம் வரையறுத்த படி 2027 ஆம் ஆண்டு முதல் மீண்டும் பிணைமுறிப் பத்திரங்களை விற்று சர்வதேச சந்தையில் கடன்களை பெறமுடியும்.

விக்கிரமசிங்க-ராஜபக்ச அரசாங்கம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை பாராளுமன்றத்தில் தனது உளுத்துப் போன பெரும்பான்மையூடாக  வெளிக் கொண்டு வந்துள்ளது. எவ்வாறாயினும், வெளிநாட்டு கடன்களில் ஓர் அற்பமான 30% தள்ளுபடியை (haircut) செய்வதற்கு கூட பிணைமுறிக் கடன் பத்திரங்களை வைத்திருக்கும் சர்வதேச வல்லூறுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான பணியாக இருக்கும். சர்வதேச மூலதனச் சந்தைகளில் மீண்டும் கடன் வாங்குவதற்கான முயற்சிகள் இன்னும் கடினமாக இருக்கும். தற்போதைய கடன் நெருக்கடியின் மையக் காரணங்களில் இதுவும் ஒன்று. இறுதியாக, வெளிநாட்டுக் கடனும் உள்நாட்டுக் கடனும் முற்றிலும் வேறுபட்டவை. அதாவது, வெளிநாட்டுக் கடனானது வெளிநாட்டு ஏற்றுமதி வருமானத்துக்கும் இறக்குமதிச் செலவுக்கும் உள்ள வித்தியாசமான அந்நியச் செலாவணி நாணயத்தில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். ஆனால் உள்நாட்டுக் கடனோ ரூபாய்களில் செலுத்தப் பட முடியும். மேலும், உள்நாட்டுக் கடனை திருப்பி செலுத்துவதற்கு பல வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, உள்நாட்டு குறுங்கால கடன் நீண்டகால கடனாக மாற்றப்படலாம்.

உள்நாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பது அல்லது அதனை மறுசீரமைப்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், அது உள்நாட்டு நிதிக் கட்டுமானத்தை அழிவுக்கு கூட இட்டுச் செல்லலாம். இதனாற் தான் ஓய்வூதிய நிதியத்தில் கைவைக்க அரசு முடிவு செய்துள்ளது. அபாக்கியவசமாக, இதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் முழு எதிர்காலமும் அவர்களுடைய ஓய்வூதியச் சேமிப்பில் தங்கியிருக்கிறது. அதனால் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள். அவர்களுக்கு புதிய வருமானத்தைப் பெறுவதற்கும் வேறு வழி இல்லை.

ஓய்வூதிய நிதியம்

மத்திய வங்கியும் திறைசேரியும் நீண்டகால சேமிப்பு நிதிகள் என்று  கருதுபவற்றுள் ஊழியர் வைப்பு நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) மற்றும் சிறிய பொது மற்றும் தனியார் நிதிகள் என்பவை அடங்கும். அவை எல்லாம் சேர்ந்து நாட்டின் நிதித்துறை சொத்துக்களில் 14% ஐ கொண்டிருக்கின்றன. மேலும், இந்த ஓய்வூதிய நிதிகளில் சுமார் 90% ஆனது திறைசேரியின் பிணை முறிப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. EPF ஐப் பொறுத்தவரை, அதன் கடந்த ஆண்டு நிதியில் 97% ஆனது திறைசேரி பிணைமுறிப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பணவீக்கத்துடன் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்ட உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்புக் குறைவால் ஓய்வூதிய நிதிகளின் உண்மையான மதிப்பு 40% க்கும் மேல் சரிந்தது. உதாரணமாக, யாராவது இந்த ஆண்டு ஓய்வுபெற்று, அவர்களது EPF பணத்தை மொத்தமாக எடுத்து ஒரு வீடு கட்ட நினைத்தால், அவர்களால் திட்டமிட்ட வீட்டில் பாதி வீட்டைத்தான் கட்ட முடிந்திருக்கும்.

இதற்கிடையில், திறைசேரி பிணைமுறிப் பத்திரங்களுக்கு வழங்கப்பட்ட வட்டி விகிதங்களும் கடந்த ஆண்டு 31% ஆக உயர்ந்தது. அது இப்பொழுது சராசரியாக 22% ஆக உள்ளது. ஆனால் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், அது 2025 வரை 12% ஆகவும் அதன் பிறகு 9% ஆகவும் குறைக்கப்படும். அதன்படி, பொருளாதார நெருக்கடியின் போது ஏற்பட்ட இழப்பை EPF போன்ற ஓய்வூதிய நிதிகள் திரும்பப் பெறுவது கடினம். அடுத்து, கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக வரிக்குப் பிந்தைய வட்டி 9% முதல் 10% வரை உள்ளது. அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்துடன், ஓய்வூதிய நிதிகளின் திறைசேரி பிணைமுறிப் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 9% ஆகக் குறைக்கப்படும். மேலும் நிதிகளின் செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் வரிகள் வருமானத்தை இன்னும் குறைவாகக் கொண்டுவரும். அந்த வகையில், ஓய்வூதிய நிதிகள் உண்மையான வளர்ச்சி மிகவும் சிறிதாக இருக்கும். பணவீக்கத்தின் அளவைப் பொறுத்து, ஊழியர்களின் ஓய்வூதிய நிதிகள் உண்மையில் அவர்கள் வைப்பில் இட்டதை விட குறைந்து போவதற்கு கூட சாத்தியம் இருக்கிறது.  

அடுத்த 10 ஆண்டுகளுக்கு திறைசேரியின் பிணைமுறிப் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தை குறைப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% சேமிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இதன்மூலம், IMF பரிந்துரைத்த படி, கடன்களை திருப்பிச் செலுத்த அரசாங்கத்துக்கு தேவைப்படக்கூடிய மொத்த நிதியை (GFN) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 13% ஆகக் குறைக்க முடியும் என நம்புகிறது. வழங்கப்படும் வட்டி வீதத்தை GDPஇன் 0.5% ஆல் குறைப்பதன் கூட்டுத் தாக்கத்தை நாம் மதிப்பிட்டால், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வூதிய நிதிகளின் மதிப்பில் 30% இழப்பு ஏற்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து ஓய்வூதிய நிதிகளின் சராசரி மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17.7% ஆக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதன் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% ஆல் குறைக்கப் பட்டால், ஒரு தசாப்தத்தில் ஓய்வூதிய நிதிகளின் மொத்த மதிப்பு 12.5% ஆக குறையும்.

இந்தச் சூழலில், ஒருவர் அடுத்த பத்து ஆண்டுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றால், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு முன்னர்  அவர் EPF இல் இருந்து பெற்றிருக்கக் கூடிய தொகை 3 மில்லியன் ரூபாய்களாகும், ஆனால், மறுசீரமைப்பு திட்ட அமுலாக்கத்துக்கு பின்னர் அவர் பெறும் தொகை 2.1 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே. அதாவது அவர்களுடைய எஞ்சிய வாழ்நாளைக் கழிப்பதற்காக அவர்கள் நம்பியிருந்த ஓய்வூதியம் பெருமளவு குறைந்து போகும். ஓய்வூதியத்தை சேமிப்பதற்காக தமது நாளாந்த தேவைகளை தியாகம் செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆடைத் தொழிலாளர்கள் போன்ற மிகவும் ஒதுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு இது பேரழிவை ஏற்படுத்தும்.

மாற்று திட்டங்கள்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% என்பது வரவு செலவுத் திட்டத்தின் 3.3% ஆகும். அதனை செல்வந்த வரிகளை உயர்த்துவதன் மூலம் அரசாங்கம் பெற்றிருக்கலாம். இதனால் உழைக்கும் மக்களின் ஓய்வூதிய நிதிகள் பாதுகாக்கப்பட்டிருக்கும். மேலும் IMF நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நிதியை செல்வந்தர்களிடம் இருந்து அறவிட்டிருக்க முடியும். அந்த நடவடிக்கைக்கு தேவைப்பட்டிருக்கக் கூடியது செல்வந்த வரியிலிருந்து கிடைக்கும் வருவாயில் 3.3% அதிகரிப்பு மட்டுமே.

மேலும், கடன்களை திருப்பி செலுத்த அரசாங்கத்துக்கு தேவைப்படும் நிதியில் (GFN) தோராயமாக மூன்றில் ஒரு பங்கு, அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5% ஆனது, வெளிநாட்டுக் கடன்களை செலுத்துதலுக்கானது. ஆகவே வெளிநாட்டுக் கடன் வழங்குனர்களிடம் இன்று கோரப்படும் 30% கடன் தள்ளுபடியை விட அதிக கடன் தள்ளுபடியை அரசாங்கம் கோர வேண்டும். அதனை IMF மத்தியஸ்தம் செய்ய வேண்டும். ஆனால் IMF உலகளாவிய நிதி நிறுவனங்களின் நலன்களுக்கு உடந்தையாக இருக்கிறது. அரசாங்கமும் அவர்களின் நிபந்தனைகளை எந்தவிதமான மறுபேச்சும் இன்றி ஏற்றுக்கொள்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மத்தியில், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்பது நாங்களாக தன்னார்வத்துடன் செய்வது என்று மத்திய வங்கி ஆளுநர் கூறுகிறார். ஆனால் ஓய்வூதிய நிதியங்கள் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள விரும்பவில்லை என்றால், அவை மீது அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அச்சுறுத்துகிறார். இது அவற்றின் மீதான வரியை 14% இலிருந்து 30% ஆக உயர்த்தி, வருமானத்தை 9% லிருந்து 7% ஆகக் குறைக்கும். ஆகவே, உழைக்கும் மக்களைப் பொறுத்த வரையில், இப்போது அரசாங்கம் உள்நாட்டு கடனை மேம்படுத்துவது (Domestic Debt Optimization, DDO) என்று அழைப்பது உண்மையில் உள்நாட்டுக் கடன் தள்ளுபடியே (Domestic Debt Dispossession)! உழைக்கும் மக்கள் இத்தகைய உடைமைப் பறிப்பை நிராகரிக்க வேண்டும். முடிந்தால் அவர்களின் ஓய்வூதிய நிதிக்கு வரி விதித்துப் பார் என்று அரசாங்கத்துக்கு சவால் விட வேண்டும். இந்த பாராளுமன்றம் சட்டவிரோதமானது என்ற அடிப்படையில், ‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பு இல்லை!’ என்ற முழக்கத்தை அவர்கள் கையிலெடுக்க வேண்டும்.

Daily Mirror - 03.07.2023

ஆங்கிலத்தில்  - அகிலன் கதிர்காமர் 

தமிழில் - லிங்கம் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.