ஆக்கிரமிக்கும் அரிசிமலை பிக்கு - பறி போகும் தென்னவன் மரவடி கிராமம்


மிகவும் தொன்மையான தென்னவன் மரபு வழி வந்த மக்கள் வாழ்ந்த கிராமமே தென்னவன் மரவடி கிராமம். இந்த கிராமம் வடக்கு கிழக்கை பொறுத்தவரையிலும் திருகோணமலையை பொறுத்த வரையிலும் மிக முக்கியமானதாகும். இது திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கிராமமாகும். 

இன வன்முறையின் காரணமாக  முதலில் இடம்பெயர்ந்த கிராமம் தென்னவன் மரவடி  என்றும் அறிய முடிகிறது. முன்னர் தென்னவன் மரவடி, கொல்லைவெளி, துவாரமுறிப்பு என்று மூன்று குளங்கள் அடங்கப்பெற்ற கிராமத்தில் சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு இருந்ததாகவும் சுமார் 450 குடும்பங்கள் வாழ்ந்ததாகவும்  சொல்லப்படுகிறது. 

பிரச்சனை காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் மீள குடியமர்த்தப்பட்ட போதிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினாலும், தமக்குரிய வயல், காணிகள், பூர்வீக நிலங்கள்    கிடைக்கப் பெறாமையாலும் அங்கிருந்த பெரும்பாலான மக்கள் வெளியேறி  வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். 

இந்த கிராமத்தில்  தற்போது குறைந்தளவிலான  குடும்பங்களே இருக்கின்றன. தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய இக்கிராமத்தில், கந்தசுவாமி மலை என்ற ஓரிடம் உள்ளது. புவியியல் அமைப்பின்படியும், நிர்வாக அமைப்பின் படியும், வடமாகாணத்தின் இறுதிக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாயையும், கிழக்கு மாகாணத்தின் முதற்கிராமமான தென்னவன் மரவடியையும் பிரித்திருக்கிறது. 

இன்றைய தென்னவன் மரவடிக் கிராம மக்களில் ஒரு தொகுதியினர், இந்த மலைச் சூழலிலேயே வாழ்ந்திருக்கின்றனர். அங்கு, பூர்வீகமாக காணி உறுதி பெற்று வாழ்ந்தமைக்குக் கூட அவர்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன.

முன்னர் இந்த மலையின் உச்சியில், முருகன் ஆலயமொன்று இருந்திருக்கிறது. ஆனால், தற்போது அந்த  ஆலயம் இல்லை. இடம்பெயர்ந்த போது ஆலயம் இருந்ததாகவும் பின்னர் மீள வந்த பொழுது எல்லாம் அழித்தொழிக்கப்பட்டு சிதைவடைந்து இருந்ததாகவும் தாங்கள் மீண்டும் சிலை, வேல் என்பன வைத்த போது அவையும் காணாமல் போனதாகவும்  கூறுகின்றனர். 

அதன் பின்பு  இந்த பகுதி தொல்லியல் திணைக்களத்திற்கு உரியது என்று எங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. எனினும் நாங்கள் மறைமுகமாக மலையில் கொண்டு சென்று பிரசாதம் படைப்பதும் உண்டு என்றனர் மன வருத்தத்துடன். இக் கிராமத்தினருடைய வயல் காணிகள் பெரும்பாலும் சிங்களவர்கள் எடுத்து விட்டார்கள் மிகுதியாக எஞ்சியிருக்கும் வயல், காணிகளையாவது பாதுகாக்க வேண்டும் என்று அங்கிருப்பவர்கள் போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில்  புல்மோட்டை அரிசிமலை விகாரையின் பௌத்த பிக்கு 160 ஏக்கர் அளவிலான காணிகளை பூஜா பூமி எனும் பெயரில் விகாரைக்கு சொந்தமான காணி என்று மரங்களை வெட்டி துப்பரவு செய்து கொண்டு வருகிறார். 

இந்த காணிகள் சிங்கள மற்றும்  தமிழ் மக்களிற்கு சொந்தமானவை.  ஜனாதிபதி இந்த விடயத்தில் கூடிய கவனம் எடுத்து எங்களது காணிகளை மீள பெற்று தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். ஏற்கனவே விவசாய காணி, வயல் காணி  அபகரிப்பு, அடிப்படை வசதியின்மை,  பாடசாலை ஒழுங்காக இயங்குவதில்லை, என்று பல இன்னல்களுக்கு மத்தியில்  வாழ்ந்து வருகின்ற கிராமத்தவர்களுக்கு அரிசிமலை பிக்குவின் ஆக்கிரமிப்பு மேலும் நெருக்கடியை கொடுத்து இருக்கிறது.  இது தொடர்பாக தென்னவன் மரவடி கிராமத்தவர்கள் மேலும் தெரிவித்தவற்றை தருகிறோம்.

1) சண்முகநாதன் - கிராமவாசி 

எங்களது கிராமம் 300,400வருடங்களுக்கு முற்பட்ட கிராமம். நாங்கள் 84 இல் இடம்பெயர்ந்து 2010இல் குடியேறியும் நாங்கள் இந்த கிராமத்தை பூர்வீகமாக வைத்திருக்க வேண்டும் என்று தான் எவ்வளவோ முயற்சி எடுக்கிறோம். ஆனாலும் எங்களுடைய மக்களின் ஆதரவும் போதாமல் இருப்பதனாலும் ஒத்துழைப்பின்மையாலும் இந்த கிராமத்தை பறிகொடுக்கக் கூடிய நிலைமையில் இருக்கிறது. சர்வதேச நாடுகளில் இருக்கின்ற புலம்பெயர் மக்கள் எங்களது கிராமத்தை கண் திறந்து பார்க்க வேண்டும். அத்தோடு எங்களது கிராமத்திலே பிறந்து வளர்ந்த மக்களும் ஒன்றிணைய வேண்டும். 

மக்களின் வரவின்மையால் எங்களுடைய வயல் காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிக்கப்பட்டு முடிந்தது எனினும் இன்னும் எஞ்சிய சில பகுதிகளுக்கு நாங்கள் வழக்கு போட்டு போராடி கொண்டிருக்கிறோம். இவ்வாறாக வாழ்ந்து கொண்டு வருகின்ற காலப்பகுதியில் தற்போது அரிசிமலை பிக்குவினால் பணிக்கவயல் சந்தியில் அமைந்துள்ள காணிகள் ஆக்கிரமிக்கப்படுகிறது. நாங்கள் அறிந்த காலங்களில் இராணுவம் இருந்தது தற்காலிகமாக இறை வணக்கம் செலுத்துவதற்கென சிறிய புத்தர் சிலை வைத்திருந்தார்கள். பின்னர் யுத்தம் முடிந்து எல்லாம் மூடுப்பட்டதற்கு பின்னர் அதிலே அடையாளமோ சிலையோ இருக்கவில்லை. கடந்த 4,5வருடங்களுக்கு முதல் அரிசிமலை பிக்கு இங்கு வருகை தந்து எங்களுடைய மக்களுக்கு இந்த காணி கொடுக்கப்பட்டுள்ளது என்று அளந்தவர். எங்களால் ஒன்றுமே செய்ய இயலாத நிலைமையில் இருந்தோம். 

இப்போது மக்களுக்கு தெரியாத நிலையில் மிகுதி காணியும் அரிசிமலை பிக்குவினால் இயந்திரங்கள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. நாங்கள் அறிவிக்க வேண்டிய விதத்தில் சம்பந்தன் ஐயாவிற்கும்,சுமந்திரனிற்கும், சாணக்கியணிற்கும், ஆளுநர் செந்தில் தொண்டமானிற்கும் மேலதிகமாக வன வள திணைக்களம், சிங்கள மக்கள் என்போருக்கும் அறிவித்திருக்கிறோம். சிங்கள மக்களும் எங்களோடு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறார்கள். இருந்தும் நாங்கள் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம். 

எங்களின் கிராமத்தின் பூர்வீகம் அநேகமானோருக்கு தெரியும். எந்த தொழிலும், வேளாண்மையோ, விவசாயமோ எதனையும் செய்ய கூடிய வளமுடைய கிராமம். தண்ணீர் வசதிகளும் ஒழுங்கமைப்பான இடம். ஆனால் ஒரு பகுதி மக்கள் தான் எமது பாரம்பரிய கிராமத்தை விட கூடாது, இது எங்களின் எல்லையில் இருக்கின்ற கிராமம், இதனை விட்டுக்கொடுத்தால் தமிழ் மக்களாகிய எங்களது பாரம்பரியமே அடையாளமே பறி போய்விடும் என்று விடாப்பிடியாக இருக்கிறோம். எங்களுக்கு எங்கள் மக்களினது ஒத்துழைப்பு போதாமல் இருக்கிறது. 


இந்த அரிசிமலை பிக்கு துப்பரவு செய்கின்ற பகுதி முக்கியமாக இரண்டு பக்கங்களினாலும் முல்லைத்தீவு - திருகோணமலைக்கு சென்று வருகின்ற பாதையோடு இருக்கிறது. இந்த 160 ஏக்கரையும் முன்னர் புத்தர் சிலை இருந்த இடம் அது எங்களுக்குரிய புனித பூமி என்ற அடிப்படையில் முழுமையாக துப்பரவு செய்து எடுப்பதற்கு திட்டம் போட்டிருக்கிறார். இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தான் நாங்கள் ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம். 

இந்த அரிசிமலை பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற 160 ஏக்கர் காணியில் பெரும்பான்மை இனத்தவர்களின் காணியும் உள்ளடங்குகிறது. அதனால் அவர்களும் எங்களோடு சேர்ந்து அரிசிமலை பிக்குவின் அடாவடி தனத்தினை தடுத்து நிறுத்த வேண்டும் என்று செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள். 

நாங்கள் அவை எங்களது காணிகள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறோம். ஆதாரம் இருந்ததோ இல்லையோ எங்களுடைய கிராம மக்கள் இங்கு வராமல் இருப்பது தான் பிரதான காரணம். நான் எனது 15 ஏக்கர் காணியை ஆதாரத்தை வைத்துக்கொண்டு சிங்கள மக்களுடன் நேரடியாக வாதாடி தான் எடுத்தேன். இப்போதும் கூட எனது ஒரு காணிக்கு ஆதாரத்தை வைத்து மூன்று வருடங்களாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. எனது முயற்சிக்கு எங்கள் மக்கள் இல்லை. 

காணி பறி போனாலும் நாங்கள் கதைப்பதற்கு காணிக்குரிய சொந்தக்காரர் இல்லை. சொந்தக்காரர்களில் யுத்தத்தில் இறந்தும் இருக்கிறார்கள். அவ்வாறு இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு இங்கு வரக்கூடிய தன்மையும் இல்லை. இது அவர்களுக்கு சாதகமாக போய்விட்டது. நாங்கள் ஜனாதிபதி வரையில் இந்த விடயத்தை கொண்டு சென்றுவிட்டோம். எனவே ஜனாதிபதி தான் அரிசிமலை பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்டுத் தர வேண்டும்.

2) கிராமவாசி

தென்னவன் மரவடி கிராமத்திற்கு விழுந்த முதலாவது அடி அரசாங்கத்தினால் சிபாரிசு செய்த எங்களில் 62 பேருக்கு பெர்மிட் வந்தது. அப்பொழுது மாகாண காணி ஆணையாளர் சிங்களவர்களுக்கு 2 ஏக்கர் விகிதம் கொடுக்கும்படி எங்களிடம் கேட்டார். நாங்கள் எங்களுக்கு காணி போதாமல் இருக்கிறது. காணி இல்லை என்று சொல்லவும் கச்சேரிக்கு சென்று எங்கள் 62 பேரினது பெர்மிட்களையும் எடுத்து இரத்து செய்வதற்கு ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார் என்று சொன்னார்கள். 2013ஆம் ஆண்டு நடந்தது. இதுவரையில் எங்களுக்கு பெர்மிட் தரவில்லை.

அடுத்து இரண்டாவது, அடியாக கந்தசுவாமி கோவிலடியில் நான்கு பேரின் பெர்மிட் காணியை ஒரு ஆமதுரு தன்னிச்சையாக கல் போட்டு இது தொல்பொருளுக்கு உரிய இடம் இதற்குள் யாரும் போக கூடாது என்று சொல்லி நான்கு பேரினது பெர்மிட் காணியை கல் போட்டு தன்வசம் வைத்திருக்கிறார்.

மூன்றாவதாக, தென்னவன் மரவடி மக்களினுடைய காணியை கல்போட்டு இப்போது அதை காடுகள் எல்லாம் அழித்து வேறு ஆட்களுக்கு பெரும்பான்மை இன மக்களுக்கு கொடுப்பதற்காக ஆயத்தப்படுத்தி கொண்டிருக்கையில் நாங்கள் வேறு வேறு இடங்களுக்கு அறிவித்து தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது. இப்படியான நிலைமையில் எங்களுக்கு காணி இல்லை. வயல் காணிகள் இன்னும் சிங்கள ஆட்களின் வசம் இருக்கிறது . முழுதாக விடப்படவில்லை. இதனை எடுத்து தருவதற்கு ஒரு அரசாங்க அதிகாரிகளும் முனைவதில்லை. 

காணி பிரச்சனையை தீர்க்க வேண்டியது பிரதேச செயலகம் தான். நாங்கள் பல தடவைகள் அறிவித்தும் இதுவரையில் எடுத்து தரவில்லை. தயாபரன் என்று பிரதேச செயலாளர் ஒருவரை நியமித்தார்கள் அவர் கொஞ்ச காணிகளை எடுத்து தந்தார். உடனேயே அவரை இடமாற்றம் செய்து விட்டார்கள். அதற்குப் பிறகு சதீஸ்வரன் என்று ஒரு பிரதேச செயலாளர் வந்தார். அவர் எந்தவொரு காணிகளையும் பெற்று தரவே இல்லை. 

இப்பொழுது புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் நாங்கள் இன்னும் கதைக்கவில்லை. பிரதேச செயலகம் தான் காணி பிரச்சனையை தீர்க்க வேண்டும். நாங்கள் வேறு யாரிடம் போவது? எங்களை பேக்காட்டுகிறார்கள். வெளி மாவட்டங்களில் இருக்கின்ற இந்த ஊரின் மக்கள் இங்கு வருவதற்கு பயப்படுகிறார்கள். காணி பிரச்சனை ஒரு பக்கத்தால் ஆக்கிரமிப்பு மற்றொரு  பக்கத்தால் நடக்கிறது. இந்த பாடசாலையை கூட ஒழுங்காக நடத்த முடியாமல் இருக்கிறது. எங்களுடைய பிள்ளைகளும் வெளி மாவட்டங்களில் தங்கி நின்று படிக்கிறார்கள். அவர்களுக்கான போக்குவரத்து செலவு, உணவிற்கான செலவு, அவர்களின் தனிப்பட்ட செலவு என்று இருக்கிறது. 

இவர்களின் பிரச்சனைகளால் எங்கள் ஊரின் மக்கள் எங்கள் ஊரிற்கு வந்து இருப்பதற்கு பயப்படுகிறார்கள் இதனால் பாடசாலைக்கு பிள்ளைகள் பற்றாக்குறையாக இருக்கின்றது. இதனை காரணம் காட்டி பாடசாலை சரிவர இயங்குவதில்லை. இதனால் இங்கு இருக்கின்ற பிள்ளைகளின் கல்வி பாதிப்படைகிறது. 

எங்களிடம் இருப்பது 66 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பெர்மிட் ஆனாலும் இவர்கள் எங்களது வயல் காணிகளை பெற்று தருகிறார்கள் இல்லை. நாங்கள் பல முறை சென்ற போதும் எங்களை வீணாக அலைய வைக்கிறார்களே தவிர எங்களுக்கான தீர்வை தருவதாக இல்லை. 

2011ஆம் ஆண்டு மீள குடியமர்ந்தோம். அன்றிலிருந்து நாங்களும் கமக்கார அமைப்பின் தலைவரோடு சென்று முறையிட்டு இன்றுவரை ஒரு முடிவும் கிடைக்காமல் இப்போது காணியே கைவிட்டது போல ஆகிவிட்டது. நாங்கள் பிரதேச செயலகம், மாகாண காணி ஆணையாளர், ஜனாதிபதி என்று எல்லா இடங்களிற்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம். ஒருவர் கூட முடிவினை பெற்று தருகிறார்கள் இல்லை. 

காணி பிரச்சனை ஒரு சிறிய பிரச்சனை. எங்களிடம் காணிக்கான பெர்மிட் இருக்கிறது அதை வைத்து எங்களின் காணிகளை இலகுவாக பெற்று தர முடியும். இதனையே தீர்க்க முடியாத அரசாங்கம் பிறகு எப்படி நாட்டின் பிரச்சனையை தீர்க்கப் போகிறது? எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் தீராது. தீர விடவும் மாட்டார்கள். முதலாவது இந்த நாட்டினை குழப்புவதே ஆமதுருக்கள் தான். இவர்கள் தான் இலங்கையில் யாழ்ப்பாணமோ, முல்லைத்தீவோ அல்லது தென் பகுதியோ எல்லா இடங்களிலும் நாட்டினை குழப்புவது இந்த பிக்குமார் தான். தென் பகுதியில் இருக்கின்ற காணிகளை எல்லாம் அப்படியே வைத்து கொண்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை செய்வது தான் அவர்களுடைய திட்டமாக இருக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். 

நான் நான்காம் வகுப்பு தான் படித்தேன். ஆனால் இவர்களுடைய நடைமுறையை பார்க்கும் போது அப்படி தான் விளங்குகிறது. இங்கு குச்சவெளி பிரதேசத்திற்கோ, திரியாய் பிரதேசத்திற்கோ கிடைத்த தமிழ் மக்களுக்கு உரிய வீட்டு திட்டத்தை தென் பகுதியில் இருந்த சிங்கள மக்களுக்கு கொடுத்து இங்கு குடியமர்த்திருக்கிறார்கள். முதல் சிங்கள மக்கள் இங்கு இருக்கவில்லையே அவர்களுக்கு எப்படி வீட்டு திட்டம் கிடைக்கும்?

 இடம்பெயர்ந்த எங்களது தமிழ் மக்களுக்குரிய வீட்டு திட்டத்தினை அவர்களுக்கும் ஒதுக்கி இருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் இவ்வாறு தான் நடக்கிறது. அதுவும் கிழக்கில் கடுமையாக இருக்கிறது. தொல்பொருள் என்று சொல்லி கொஞ்ச காணியை பிடித்து அடைத்து பின்னர் அதில் குடியேற்றம் செய்வது. இப்போது முல்லைத்தீவில் இருந்து வருகின்ற பாதை முழுவதும் புதிதாக சிங்கள குடியேற்றம் செய்திருக்கிறார்கள். அவை எல்லாம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வந்த வீட்டு திட்டத்தில் பெற்று கொடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் யார் செய்வது? இனி ஒரு வகையிலும் நாங்கள் நிம்மதியாக வாழ முடியாது. 

எங்களுக்கு ஒரு நிரந்தர கவலை இருக்கிறது. எங்களுடைய காலம் முடிந்து விட்டது இனி எங்களது பிள்ளைகளின் காலம் எப்படி போக போகிறதோ. காசு வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளிற்கு தங்களது பிள்ளைகளை அனுப்பி தாங்களும் சென்று விடுகிறார்கள். காசு இல்லாத நாங்கள் இப்படியே பெரும்பான்மை இனத்தவரோடு சேர்ந்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையே வந்துவிட்டது.

62 பேருக்கு பெர்மிட் வந்தபோது எனது அப்பாவின் பெயரும் வந்தது. நான் சென்று கேட்டபோது உங்களிடம் தர முடியாது என்று அம்மாவை கூட்டிக்கொண்டு வர சொன்னார்கள். நான் அம்மாவையும் கூட்டி சென்றேன். உடனே அம்மாவினுடைய பெயருக்கு பெர்மிட்டினை மாற்றி கொண்டு செல்லுங்கள் என்று சொன்னார்கள். நானும் அம்மாவின் பெயரில் எல்லாம் மாற்றி அனுப்பினேன். அது மாகாண காணி அதிகாரியின் கையில் அகப்பட்டதோ இல்லையோ அண்மையில் பெர்மிட் வந்திருக்கிறது. 

கிராம சேவையாளர் சொன்னார் உங்களுடைய பெர்மிட் ஒன்று வந்திருக்கிறது என்று நான் அங்கு சென்று கேட்டபோது காணி கிளையில் சொன்னார்கள் ஐயா இப்போது தர முடியாது, நீங்கள் காணியை துப்பரவு செய்திருக்கிறீர்களா அல்லது காடாக இருக்கிறதா என்று கிராம சேவையாளர் அறிக்கை தர வேண்டும் என்று சொன்னார்கள். பின்னர் நான் கிராம சேவையாளரை அழைத்து சென்று காட்டி 80 வீதம் காணி துப்பரவு செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையும் கொண்டு கொடுத்தேன். 

பிறகு பிரதேச செயலாளரிடம் கேட்குமாறு சொன்னார்கள். நான் அவரிடத்தில் கேட்க அவர் காணி கிளையில் இருந்து ஒருவரை வரவழைத்து கேட்டார். அப்போது அங்கு வேலை செய்கின்ற பெண் சொன்னவர் இது மாகாண காணி ஆணையாளர் எடுத்து கொண்டு சென்ற 62 பேரின் பிரதியில் ஒன்று என்று. உடனே" ஐயா இது உங்களுக்கு தர முடியாது இதனை தந்தால் எங்களுக்கு பிரச்சனை" என்று பிரதேச செயலாளர் சொன்னார். என்ன பிரச்சனை என்று எனக்கு விளங்கவில்லை. 

ஒரு பகுதியால் பெரும்பான்மை இன மக்கள் காணியை பிடித்து கொண்டு வருகின்றார்கள். எங்களுக்கு பெர்மிட் தந்தால் தானே நாங்கள் எங்களது காணிகளை பராமரிக்க முடியும். எங்களுக்கு காணி இல்லை. நாங்கள் குத்தகைக்கு எடுத்து தான் வயல் விதைக்கிறோம். இந்த பகுதியில் காணி இல்லை. இனி யாழ்ப்பாணம் போல தென்னவன் மரவடியும் வரப் போகிறது. பெர்மிட் காணியை வெளியாக்கினால் கூட பிடித்து கொண்டு அடைக்கிறார்கள். 

ஆமதுரு துப்பரவு செய்த காணியில்  எனது தம்பி முறையுடைய ஒருவரின் காணியும் இருக்கிறது. அவர் அந்த காணியை துப்பரவு செய்யும் போது சிங்களவர் யாரோ பார்த்து ஆமதுருவிற்கு சொல்லி ஆமதுரு உடனே பொலிஸிற்கு அறிவித்து பொலிஸ் இவரை கொண்டு சென்று  அடைத்து விட்டார்கள். 

ஆனால் பிரதான வீதியில் இருந்து 200 மீற்றர் தூரமே உடைய பிக்கு ஆக்கிரமிக்கின்ற இடத்தில் செயின் டோசர், டோசர், மெசின் எல்லாம் கொண்டு வந்து துப்பரவு செய்கிறார். இரண்டு நாட்கள் அவ்விடத்திலே நின்றும் கூட வனவள திணைக்களத்தினரோ, பொலிஸோ எவரும் அவர்களை பிடிக்கவில்லை. கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறார்கள். தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் காணி பிடிக்க விடாமல் செய்து சிங்கள மக்களை எல்லா இடங்களிலும் காணி பிடிக்க விடுகிறார்கள். இது எங்கள் கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிறது. இதை நாங்கள் யாரிடம் முறையிடுவது? யாரிடம் கதைப்பது?

3) பரமேஸ்வரன்- கிராம வாசி 

நான் திருமணம் முடித்து தான் இங்கு வந்திருக்கிறேன். ஆனால் எங்களுடைய திருகோணமலையில் ஒரு எல்லை பகுதியான கிராமம் தான் தென்னவன் மரவடி கிராமம். இங்கு எங்களுடைய மக்களின் வரவு போதாமையால் நாங்கள் பின் தங்கி சென்று கொண்டிருக்கிறோம். இந்த அரிசிமலை பிக்கு எங்களுக்குரிய பெர்மிட் உடைய காணிகளை பிடித்து கொண்டிருக்கிறார். நாங்கள் ஒரு தடி வெட்ட இயலாது. நாங்கள் கோடாரியுடன் விறகு கொத்துவதற்கு போனால் கூட எங்களை வனவள திணைக்களத்தினர் பிடிக்கிறார்கள். அதேவேளையில் இந்த ஆமதுருவிற்கு இவ்வளவு காணியை துப்பரவு செய்து எடுப்பதற்கு எப்படி கொடுத்திருப்பார்கள்? அதை யாரும் பெரிதுபடுத்தவில்லை. 

அதைவிட எங்களுக்கு அயலில் உள்ள சிங்கபுர கிராமத்திற்கும் எங்களது கிராமத்திற்கும் இடையில் இந்த பிக்கு வேலியை போட்டார் என்றால் யானைகள் எல்லாம் அவர்களது கிராமத்திற்கு போகும் அல்லது எங்களுடைய கிராமத்திற்கு வரும். ஆமதுரு செய்த வேலையே ஒரு இனவாதத்தை தூண்டி விடுவது தான். யானையை நாங்கள் களைக்கும் போது அவர்களது கிராமத்திற்குள் போகும் அல்லது அவர்கள் களைக்கும் போது எங்களது கிராமத்திற்குள் வரும். சிங்களவர்கள் எங்களது காணிகளை பிடித்து கொண்டிருக்கின்ற போதும் கூட நாங்கள் அவர்களுடன் ஒற்றுமையாக தான் போய்க்கொண்டு இருக்கிறோம். அவர்களுடன் பிரச்சனைகள் தொடர்பாக கதைக்க கூடிய ஒரு நிலையில் இருக்கிறோம். இப்படி இருக்கும் போது இந்த அரிசிமலை பிக்குவின் செயலானது எங்களுக்கும் அவர்களுக்கும் பிரச்சனையை உருவாக்க கூடிய நிலைமையை தான் தோற்றுவிக்கிறது. அதை தடுத்து நிறுத்துவதற்கு தான் நாங்களும் சிங்கபுர மக்களும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். 

எங்களுடைய அரசியல்வாதிகள் இதனை கருத்தில் கொண்டு அரிசிமலை பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை பெற்று தருவார்களாக இருந்தால் எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். 2011ஆம் ஆண்டு நாங்கள் இங்கு வந்துவிட்டோம். அந்த நேரத்தில் போடப்பட்ட இராணுவ முகாம் தான் அது. அதற்கு முதல் இராணுவ முகாம் இருக்கவில்லை. நாங்கள் இடம்பெயர்ந்து போனதற்கு பிறகு போடப்பட்ட இராணுவ முகாம் தான் அது. பெரியளவில் புத்தர் சிலை வைத்ததோ எதுவுமேயில்லை. அவர்கள் தற்காலிகமாக சிறிய சிலையை கும்பிட்டு வந்தார்கள். அவர்களுக்கு அது சொந்தமான இடமும் இல்லை. வேறொரு இராணுவ முகாமில் இருந்து சிலையை பெயர்த்து எடுத்து கொண்டு வந்து வைத்த இடம் தான். அதை அரிசிமலை பிக்கு வந்து தங்களுடைய இடம் என்று சொல்லி தான் ஆதிக்கம் செய்கிறாரே தவிர வேறு ஒன்றும் இல்லை. 

இதற்கு சிங்கள மக்களால் கூடியளவு எதிர்ப்பு காட்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. எங்களுக்கு இந்த இடத்தில் பன்சலை தேவையில்லை. இதில் நீங்கள் வைக்க முடியாது. பக்கத்தில் ஒரு பன்சலை இருக்கிறது அப்படி இருக்கையில் எதற்காக இன்னுமொன்று என்று கேட்டு கொண்டு இருக்கிறார்கள். அரிசிமலை பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்ட காணிகளுக்குள் சிங்களவர்களின் காணியும் அடங்குகிறது. எங்களுடன் கதைத்தார்கள். ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தாலும் எங்களுடன் சேர்ந்து செய்வது என்று தான் இருக்கிறார்கள். சில காலத்திற்கு முதல் அந்த இடத்தில் எல்லைக்கட்டை போட்டிருக்கிறார்கள். அதனை சிங்கள மக்கள் பிடுங்கி எறிந்து இருக்கிறார்கள். இதற்கு அரிசிமலை பிக்கு எல்லைக் கட்டையை பிடுங்கியது என்று சொல்லாமல் பொருளை களவாடியது என்று சொல்லி அவர்கள் மீது வழக்கு போட்டிருக்கிறார். ஒரு மாத காலமாக அவர்களை சிறையில் வைத்திருந்தார்கள். பிறகு உயர் இடங்களில் எல்லாம் கதைத்து தான் அவர்களை வெளியில் கொண்டு வந்தார்கள். 

இப்போதும் சிங்கள மக்களின் பக்கத்தினாலும் எங்களுடைய பக்கத்தினாலும் எதிர்த்து தான் அரிசிமலை பிக்குவினுடைய செயற்பாட்டை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். முக்கியமாக யானை போய் வருகின்ற பாதை அது. அந்த காலத்தில் மிருகங்கள் போய் வருவதற்கு என்றே ஒரு பாதையை விட்டு கொடுத்தது. அதை மறித்து இடையில் பாதையை போட்டார் என்றால் யானை பிரச்சனை அதிகரிக்கும். இதனால் சிங்கள மக்களுக்கும் எங்களுக்கும் இன முறுகல் நிலை ஏற்படும்.

தொகுப்பு - பரத் 

நிமிர்வு ஆவணி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.