EPF ஐ பாதுகாப்போம்: எமது சேமிப்பை அபகரிக்கும் அரசு!


முகவுரை

ஊழியர் சேமலாப நிதி (EPF) என்ற மிகப் பெரிய நிதியத்தை உள்ளடக்கிய நீண்டகால ஓய்வூதிய சேமிப்பு நிதிகள் அவற்றின் மொத்த வருவாயின் 14 சதவிகிதத்தை அரசாங்கத்துக்கு கட்ட வேண்டும் (14% tax on gross earnings). 

1989 வரை நீண்டகால ஓய்வூதிய சேமிப்பு நிதிகளுக்கு வரி விதிக்கப்படவில்லை. அந்த ஆண்டில், தெற்கில் நடந்த JVP கிளர்ச்சி மற்றும் வடக்கில் புலிகளுடன் நடத்திய போர் காரணமாக சிறிலங்கா அரசாங்கம் கடுமையான வருவாய் பற்றாக்குறையை எதிர்கொண்டது. 

அதனை ஈடுகட்ட உழைக்கும் மக்கள் தமது சொற்ப சேமிப்பை போட்டு வைத்திருந்த நீண்டகால ஓய்வூதிய சேமிப்பு நிதிகளின் மொத்த வருமானத்தில் 10 வீதத்தை அரசாங்கம் வரியாக அறவிடத் தொடங்கியது.

இதன் விளைவாக, சிறிலங்காவில் வரி செலுத்தும் கூட்டுத்தாபனங்களில் மிகப்பெரிய வரி செலுத்தும் ஒரே ஒரு கூட்டுத்தாபனமாக EPF மாறியது. அது திறைசேரிக்கு ஆகவும் கூடிய பொன் முட்டையிடும் வாத்தாக மாறிப் போனது. அடுத்தடுத்து வந்த அனைத்து அரசாங்கங்களும் மகிழ்ச்சியாக EPF இன் பொன்முட்டைகளை திருடிக் கொண்டன. 

2017 ஆம் ஆண்டு, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், இந்த அநியாய வரியை ஒழிப்பதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் காலியான திறைசேரியை நிரப்புவதற்காக வரி விகிதத்தை 10% இலிருந்து 14% ஆக உயர்த்தியது.

இந்த வரி விகிதம்தான் இன்று வரை தொடர்கிறது. இவ்வாறான பின்னணியில் தான் இன்றைய உள்நாட்டு கடன்களின் மறுசீரமைப்பிலும் அரசாங்கம் மீண்டும் நீண்டகால ஓய்வூதிய நிதியங்களின் மீது கை வைத்திருக்கிறது.

சிறிலங்கா அரசுக்கு கடன் கொடுத்த வெளிநாட்டு கடன் வழங்குனர்களும் சர்வதேச நாணய நிதியமும் வெளிநாட்டு கடன்கள் மறுசீரமைக்கப்பட முன்னர் உள்நாட்டு கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக வைத்தன. வேறு வழி இல்லாமல் அரசாங்கம் அதற்கு இணங்கி இருக்கிறது. 

ஆனால், உள்நாட்டு கடன்களின் மறுசீரமைப்பு (Domestic Debt Restructure, DDR) செயற்பாட்டில் தனக்கு கடன் கொடுப்பதன் மூலம் இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் வங்கிகளில் கை வைக்காமல் உழைக்கும் மக்களின் சொற்ப சேமிப்புகளின் மீது தான் அரசாங்கம் கை வைத்துள்ளது.

மொத்தத்தில் வெளிநாட்டு பணமுதலைகளையும் உள்நாட்டு பணமுதலைகளையும் திருப்திப்படுத்துவதற்காக உழைக்கும் மக்களின் சேமிப்பை பலிக்கடா ஆக்கியிருக்கிறது ரணில் அரசாங்கம்.

சிறிலங்கா அரசின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் DDR செய்த மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது தனித்தன்மையானது. அதாவது இந்த திட்டம் நீண்டகால சேமிப்பு நிதிகளிடம் இருந்து அரசு வாங்கிய கடன்களை மறுசீரமைப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது. 

இதுவரை 12நாடுகளில் நடந்த DDR நிகழ்வுகளை விபரிக்கும் IMF ஊழியர்களின் அறிக்கைகளின் அடிப்படையில், வேறு எந்த நாடும் இத்தகைய வகையில் தொழிலாளர்களின் நீண்டகால சேமிப்பில் கை வைக்கவில்லை.

இங்கு தரப்பட்டுள்ள அட்டவணை (நன்றி: publicfinance.lk) இதனை தெளிவாக விளக்குகிறது.

இதிலுள்ள அனைத்து 12 DDR திட்டங்களும் வங்கித் துறையின் கடன்களை மறுசீரமைப்பு செய்துள்ளன. 75% ஆன திட்டங்கள் தனியார் கடன்களை மறுசீரமைத்துள்ளன. 

ஆனால் அவற்றில் எதுவுமே அவர்களின் ஓய்வூதிய நிதியை மட்டும் குறி வைக்கவில்லை. கிரெனடா மற்றும் கானா மட்டுமே பொது ஓய்வூதிய நிதியை அவற்றின் மறுசீரமைப்பில் சேர்த்தன. ஆனால் அவை இந்த நிதிகளை மட்டும் இலக்கு வைக்கவில்லை. இந்த நிதிகள் அந்த நாடுகளின் பல இலக்குகளில் ஒன்றாக இருந்தன. 

சிறிலங்கா மட்டுமே ஓய்வூதிய நிதியங்களை மட்டும் இலக்கு வைத்துள்ளது. மறுபுறத்தில், சிறிலங்காவின் அணுகுமுறை தனியார் பிணைமுறப் பத்திரதாரர்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களை DDR இல் உள்ளடக்குவதிலிருந்து விலக்கு அளிகிறது. ஆனால், வெளிநாட்டு கடன்களை பொறுத்தவரை அவற்றின் மறுசீரமைப்பில் பொதுவாக வெளிநாட்டு வங்கிகள், தனியார் பிணைமுறிப் பத்திரதார்ரகள் ஆகியோரை உள்ளடக்குகிறது. 

இதனைப் பார்க்கும் பொழுது சிறிலங்காவின் DDR என்பது தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை எடுத்து உள்ளூர் வங்கிகளுக்கும் தனியார் பிணைமுறிப் பத்திரதாரர்களுக்கும் கொடுப்பதற்கு சமனானது.

அரசாங்கம் EPF மீது கைவைப்பதை இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் எல்லோரும் தமது அரசியல் முரண்பாடுகளைத் தாண்டி ஒன்றாக கைகோர்த்து எதிர்க்க வேண்டும்.

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் இங்கிலாந்தின் பிரதமரான கிளெமென்ட் அட்லீ (Clement Attlee) இன் அரசாங்கம் அங்கிருந்த நிறுவனங்களை தொடர்ச்சியாக சுவீகரிப்பதை வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) எவ்வாறு ஆக்கிரோசமாக எதிர்த்தாரோ அவ்வாறு நாங்களும் எதிர்க்க வேண்டும் என்கிறார் பொருளாதார நிபுணர் கலாநிதி நிஷான் டி மெல். 

இவர் வெரிட்டே ஆய்வு (Verité Research) நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனராக பணிபுரிகிறார். கலாநிதி நிஷான் டி மெல் ஆடி மாதம் 6 ஆம் திகதி டெய்லி மிரர் (Daily Mirror) ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.

வின்ஸ்டன் சர்ச்சிலின் உள்ளுணர்வு போல EPF ஐ பாதுகாப்போம்

அரசியல்வாதிகள், தனியார் மற்றும் அதிகாரத்துவத்தினர் ஒன்றிணைந்து சதி செய்வதன் மூலம் EPF இலிருந்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை கண்டு பிடித்துள்ளமை இலங்கை தொழிலாளர்களை பொறுத்தவரை அபாக்கியமானது. 

தமது செயல்களை ஒளித்தும் தரவுகளை மறைப்பதன் மூலமும் இதனை அவர்கள் செய்கிறார்கள்.

சிறிலங்காவின் வீதிகளில் பெண்கள் தொடர்ந்தும் தொல்லைப்படுத்தப்படுவதை நாம் அறிவோம். அந்தப் பெண்களை பாதுகாக்கும் சட்டத்தை இயற்றுவதை விடுத்து அவர்களை மேலும் தொல்லைப்படுத்த ஆண்களுக்கு வெளிப்படையான அனுமதி வழங்கும் சட்டத்தை இயற்றுவது நியாயமாகுமா? 

கடந்த காலத்தில் EPF துஷ்பிரயோகம் செய்யப்பட்டதனால் தற்போதைய உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிலும் அத்துஷ்பிரயோகத்தை செய்ய முடியும் என்று சொல்வது போல் இருக்கிறது இன்றைய DDR திட்டத்தை நியாயப்படுத்துபவர்களின் வாதம்.

இலங்கையின் தனியார் துறை ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் அவர்களது வருமானத்தில் 23% வருமானத்தை ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றிற்கு கட்டாயமாக செலுத்த வேண்டும் என்பது சட்டம். 

EPF ஆனது இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சிறப்புப் பிரிவினால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் CBSL இன் நாணயச் சபையானது நிதியத்தை நடத்துவதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பை ஏற்கும்.

பிணைமுறி பத்திரப் பரிவர்த்தனைகள் மற்றும் EPF நிதிகளின் துஷ்பிரயோகம் குறித்து ஆராய மத்திய வங்கியால் தடயவியல் கணக்காய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த கணக்காய்வுகள் பங்குனி 2015 க்கு முன்னர் நடந்த பரிவர்த்தனைகளை மட்டுமே ஆராய்ந்தன.  அதற்கு பின்னர் நடந்த குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் பிணைமுறி ஊழலுக்கும் (bond scandal) EPF இற்கும் ஒரு வகை தொடர்பு இருந்துள்ளமை பாராளுமன்ற அமர்வுகளின் போது தெரிய வந்தது.

2019 இல் வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கை 3, மத்திய வங்கியின் கூட்டுப் பொறுப்பின்மை மற்றும் ஊழலினால் EPFக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக இன்றுவரை எந்த ஒரு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரியவில்லை.

தரவுகளை ஒளித்து பிணைமுறி ஊழல் மறைக்கப்பட்டுள்ளது.

அந்த "பிணைமுறி ஊழலின்" முழுப் பரிமாணம் மற்றும் EPF இற்கு நடந்து இருக்கக் கூடிய துஷ்பிரயோகம் ஆகியற்றை EPF இன் சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய தகவலைப் பெறுவதன் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். 

ஆனால், மத்திய வங்கி, 2017 ஆம் ஆண்டு முதல் இந்த தரவுகளை பகிர்ந்து கொள்ள பிடிவாதமாக மறுத்துள்ளது.

இலங்கையின் தகவலறியும் உரிமை ஆணைக்குழு (RTI) 2018 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இத்தகவல்களை பகிர்ந்து கொள்ளச் சொல்லி மத்திய வங்கிக்கு எதிராக வலுவான தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும் இதுவரை அது நடைபெறவில்லை.

இன்று EPF இல் 3.4 டிரில்லியன் ரூபாய்கள் உள்ளன. இது இதுவரை இலங்கையில் இருந்த நிதியங்களில் மிகப் பெரிய நிதியமாகும். 

EPF இன் 0.01% போன்ற ஒரு சிறிய சதவீதத்தை கூட பிரித்தெடுப்பதன் ஊடாக கோடிகளின் சொந்தக்காரர் ஆகலாம்.

தனியார்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்துவத்தினர் ஒன்றிணைந்து EPF இலிருந்து இலாபம் ஈட்டக்கூடிய பெரும் சாத்தியக்கூறுகளை கண்டறிந்துள்ளமை இலங்கை தொழிலாளர்களைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானது.


வின்ஸ்டலின் சர்ச்சில் உள்ளுணர்வு EPFஐ காப்பாற்றும்

Business Insider எனும் பத்திரிகையில் வின்ஸ்டன் சர்ச்சில் தொடர்பாக வந்த ஒரு கதை இங்கு பொருத்தமாக இருக்கும். 

இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்னர் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த தொழிற்கட்சியை சேர்ந்த கிளெமென்ட் அட்லீ இலாபம் கொளிக்கும் பெரிய பெரிய தனியார் நிறுவனங்களை அரசுடைமையாக்கிக் கொண்டிருந்தார். 

ஒருநாள் கழிப்பையில் அட்லீ சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த பொழுது சர்ச்சிலும் சிறுநீர் கழிக்க அங்கு வந்தார். அவர் அட்லீ நின்று கொண்டிருந்த கழிப்பிடத்துக்கு வெகுதூரத்தில் இருந்த இடத்துக்கு சென்று சிறுநீர் கழிக்கத் தொடங்கினார். 

இதனைப் பார்த்த அட்லீ “என்ன இன்றைக்கு மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கப் பார்க்கிறீர்களா?” என்று அவரிடம் கேட்டார். அதற்கு சர்ச்சில் “நீங்கள் பெரிதான எதைக் கண்டாலும் அரசுடைமை ஆக்கப் பார்க்கிறீர்களே. அதனால் தான் நான் தள்ளி நின்று அதனை மறைக்கப் பார்க்கிறேன்.” என்று பதிலளித்தார்.

அந்த சர்ச்சிலின் கிண்டலிலிருந்த நாம் கற்றுக் கொள்ளக் கூடியது ஏதேனும் இருக்கும் என்றால், அது நிச்சயமாக EPF க்கும் பொருந்தும். EPF மிகவும் பெரியதாக இருப்பதால் அதற்கு பாதுகாப்பு இல்லை. EPF ஐப் பாதுகாப்பதற்கு மிக உயர்ந்த அளவிலான முயற்சி தேவைப்படும். 

அதாவது அதிக தரவுகளின் வெளிப்படைத்தன்மை, நேரம் தவறாமல் செய்யப்படும் தடயவியல் கணக்காய்வுகள், மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பான முதலீட்டுக் குழு மற்றும் அதன் ஒட்டுமொத்த செயல்திறன் பற்றிய அளவீடுகளும் அவற்றின் போக்கு தொடர்பான அறிக்கைகளும் முக்கியமானவை.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான தற்போதைய EPF தொடர்பான திட்டம் சர்ச்சிலின் அச்சத்தை கூர்மையான கவனத்திற்கு கொண்டு வருகிறது.

மத்திய வங்கி கடமையிலிருந்து தவறியமை

1958 ஆம் ஆண்டு EPF இன் சட்டத்தை உருவாக்கியவர்கள், அப்பொழுதே அனைத்து தொழிலாளர்களின் ஓய்வூதிய சேமிப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் சேகரிக்கப்படும் போது, அதன் மீது கை வைக்க அரசாங்கத்துக்கு ஏற்படக் கூடிய மனச்சலனங்கள் பற்றி யோசித்திருந்தார்கள். அவர்கள் EPF இல் முழு அளவிலான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று சட்டத்தில் எழுதினார்கள்.

வெளிப்படைத்தன்மை தொடர்பான பல உட்பிரிவுகளில், "EPF செய்யும் ஒவ்வொரு முதலீட்டின் மதிப்பு, கொள்முதல் விலை மற்றும் சந்தை மதிப்பு ஆகியவற்றைக் காட்டும் முதலீட்டு அறிக்கையை" EPF பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

ஆனால் மத்திய வங்கி நீண்ட காலமாக இந்த சட்டத் தேவையை நிறைவு செய்யத் தவறிவிட்டது. 2018 இல் இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் மத்திய வங்கிக்கு எதிரான தீர்ப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போதில் இருந்து, மத்திய வங்கி ஒரு படி மேலே சென்று, அந்த சட்டத் தேவையை அதன் சமீபத்திய நிதிநிலை அறிக்கைகளில் தவறாக சித்தரித்துள்ளது. அதாவது “ஒவ்வொரு முதலீடு” என்ற வார்த்தையை "ஒவ்வொரு வகையான முதலீடு" என்று சித்தரித்து முதலீடுகளின் ஒட்டு மொத்தமான புள்ளி விபரங்களை மட்டும் வெளியிடத் தொடங்கியது. 

அதனூடாக EPF நிதியின் துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய தகவல்களை மறைத்தது. இந்த துஷ்பிரயோகம் 2019 ஆம் ஆண்டின் தடயவியல் கணக்காய்வின் தணிக்கை மூலம் கண்டறியப்பட்டது.

EPF வருடாந்தர அறிக்கைகள் கூட பல வருடங்கள் காலதாமதாகி உள்ளன. 2022 மார்கழியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்கும் வரை, ஆண்டு அறிக்கைகள் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தாமதமாகி இருந்தன. 

2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கைகள் மார்கழி 2022 இலேயே வெளியிடப்பட்டன. 

மேலும் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை 2023 இல் மட்டுமே வெளியிடப்பட்டது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. (ஆனால் அந்த ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன).

2023 இன் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணைகள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டு கடன் மேம்படுத்துகை (Domstinc Debt Optimization, DDO) என்ற பெயரில் இனிப்புத் தடவி நடைமுறைப்படுத்த முனைந்துள்ளது. 

உலகில் வேறு எங்கும் இந்தச் சொற்களை நாம் கண்டதில்லை. இந்த முன்மொழிவின் பகுப்பாய்வு வெரிடே ஆய்வு நிறுவனம் (Verité Research) மூலம் வெளியிடப்படும் கடன் நிலவர அறிக்கையில் வரவிருக்கிறது. அந்த பகுப்பாய்வின் சாராம்சம் இதுதான்: 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் மொத்த சுமையையும் இனிவரும் 16 ஆண்டுகளுக்கு, 2038 ஆம் ஆண்டு வரை, EPF இன் தற்போதைய மற்றும் எதிர்கால ஓய்வூதிய சேமிப்பின் மீது சுமத்துவதற்கு இந்த பிரேரணை முன்மொழிகிறது.

இது மிகவும் வழக்கத்திற்கு மாறான திட்டமாகும். ஏனெனில் இது DDR இன் முழு செலவையும் சமூகத்தின் மீது திணிக்கிறது. மேலும் வங்கிகளின் பங்குதாரர்களுக்கும் தனியார் பிணைமுறிப்பத்திர சொந்தக்காரர்களுக்கும் குறுகிய காலத்தில் விண்ணைத் தொடக்கூடிய இலாபங்களை அடைய அனுமதிக்கிறது - ஏனெனில் அவர்கள் வைத்திருக்கும் அரசாங்கப் பிணைமுறிப் பத்திரங்கள் ஏற்கனவே DDR இற்கான செலவை உள்ளடக்கி இருக்கின்றன. 

DDR இற்கான செலவை அவர்களிடம் இருந்து பெறாமல் EPF இன் தலையில் கட்டுவதன் மூலம் அவர்களின் பிணைமுறிப் பத்திரங்கள் பெருமளவான தனியார் ஆதாயத்தை அவர்களுக்கு கொண்டு வரும்.

அரசாங்க பிணைமுறிப் பத்திரங்களை அதி கூடிய அளவில் வாங்குவது EPF ஆகும். அரசாங்கத்தால் விற்கப்பட்ட மொத்த பிணைமுறிப் பத்திரங்களில் சுமார் 36% EPF ஆல் வாங்கப்பட்டுள்ளது. மேலும் EPF இன் முதலீடுகளில் 90% க்கும் அதிகமானவை அரசாங்க பிணைமுறிப் பத்திரங்களில் முதலிடப் பட்டுள்ளன. 

EPF தொழில்ரீதியாக நிர்வகிக்கப்பட்டால், அதன் ஒட்டுமொத்த முதலீடுளின் சராசரி வருமானம் அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்ட ஒட்டுமொத்த பிணைமுறிப் பத்திரங்களிலிருந்து வரக்கூடிய சராசரி வருவாய்க்கு சமமாக அல்லது அதிகமாக இருக்கும். 

ஏனெனில், பிணைமுறிப் பத்திரங்களின் வருவாய்ப் போக்கு பொதுவாக மேல்நோக்கியதாக இருப்பதுடன் நீண்டகால சேமிப்பு நிதியமான EPF நீண்ட கால முதிர்ச்சியுடைய பிணைமுறிப் பத்திரங்களை தனது முதலீட்டில் அதிக விகிதத்தில் வைத்திருக்க முடியும்.

EPF இன் இன்றைய தொகைக்கு 2038 ஆம் ஆண்டுவரை ஏற்படக்கூடிய இழப்பை கணக்கிடுதல்

2021 ஆம் ஆண்டில், CBSL அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்ட மொத்த பிணை முறிகள் பற்றிய தரவை வெளியிடத் தொடங்கியது. 2023 வைகாசி இறுதியில், அரசாங்கத்தால் விநியோகிக்கப் பட்ட பிணை முறிகளிலிருந்து சந்தையில் கிடைக்கும் சராசரி வருமானம் 13.52% ஆக இருந்தது. அதிக வருவாய் ஈட்டும் பிணைமுறிப்பத்திரங்கள் (20%க்கு மேல்) நீண்ட கால முதிர்ச்சியுடன் பிணைக்கப்பட்டிருந்தன. 

2027 - 2030 க்கு இடையில் முதிர்ச்சியடையும் பத்திரங்களின் சராசரி வருவாய் 14.52% ஆகும்.

2031 மற்றும் 2034 க்கு இடையில் முதிர்ச்சியடையும் பத்திரங்களின் சராசரி வருவாய் 14.43% ஆகும். 

2026 க்கு முன் முதிர்ச்சியடையும் பத்திரங்கள் தான் 12.65% குறைந்த சராசரி வருவாயை கொண்டுள்ளன.

இந்த 13.52% கூட்டு வருவாய் விகிதத்தில், தற்போதைய EPF இன் பெறுமதி 2038 இல் 25.7 டிரில்லியன் ரூபாய்களாக வளரும். 

ஆனால் இன்று DDR இன் கீழ் பிரேரிக்கப்பட்டிருக்கும் சராசரி வட்டி வீதமான 9.1% இல் தற்போதைய EPF இன் பெறுமதி 13.6 டிரில்லியன் ரூபாய்களாக மட்டுமே வளரும். 

இந்த இரண்டு வளர்ச்சிப் பாதைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 12.1 டிரில்லியன் ரூபாய்கள் ஆகும். 

அந்த 2038 ஆம் ஆண்டு இருக்கக் கூடிய 13.6 டிரில்லியன் ரூபாய்களை 13.52% கூட்டு வட்டி விகிதத்தில் பின்னோக்கி கணக்கிட்டுப் பார்த்தால் அதன் தற்போதைய மதிப்பு 1.6 டிரில்லியன் ரூபாய்கள் ஆகும். 

இது தற்போதைய EPF இன் மதிப்பாகிய 3.4 டிரில்லியன் ரூபாய்களின் 47% மட்டுமே. 

தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் அரசியல் தலைமை EPF இன் தலைவிதியை தீர்மானிக்கும் பட்சத்தில் இதுதான் நடக்கும்.

மேலே உள்ள இழப்பின் கணக்கீடு, அடுத்த 16 ஆண்டுகளில் அரசாங்கத்தின் கடன் பங்குகளுக்கான சராசரி செலவை மதிப்பிடுவதிலிருந்து செய்யப் பட்டது. (அரசாங்கத்தின் இந்த சராசரி செலவு EPF இன் சராசரி வருமானமாக இருக்க வேண்டும், இன்னுமொரு பிணைமுறி ஊழல் நடக்காமல் இருந்தால்). 

ஆனால் இலங்கையில் வட்டி விகிதங்கள் சக்கரம் போல சுழல்கின்றன. அந்த வகையில் 2038 வரையிலான முழு நேர காலத்தைப் பார்க்கும்போது தற்போதைய கணிக்கப்படும் சராசரி வட்டி விகிதம் குறைத்து மதிப்பிடப் பட்டிருக்கலாம். ஏனென்றால், கடன் மறுசீரமைப்பு அத்தியாயத்திற்குப் பிறகு நீண்டகால வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு (கடந்த காலத்தை விட) உயர்த்தப்படும். 

இரண்டு காரணங்களுக்காக உள் மற்றும் வெளிநாட்டு நீண்டகால கடன் வழங்குனர்கள் சிறிலங்காவை அதிக இடர் உள்ள நாடு என்ற வகைக்குள் வைத்திருப்பதற்கு வாய்ப்புள்ளது. 

முதலாவதாக, பொருளாதாரத்தில் ஸதிர நிலையை அடைவதற்கு முன்னர் நாடுகள் சராசரியாக ஒன்றுக்கு மேற்பட்ட முறை கடனை மறுசீரமைக்கின்றன – சிறிலங்காவின் ஆட்சிமுறை அது இன்னொரு முறை கடன் மறுசீரமைப்பு நடக்கும் அபாயம் உள்ள நாடாக காட்டி நிற்கிறது. 

இரண்டாவதாக, தற்போதைய கடன்களை நிர்வகிக்கும் கட்டமைப்பானது 2032 ஆம் ஆண்டை தாண்டி பார்க்கவில்லை. முன்மொழியப்பட்ட தீர்வு பாதையானது, அதிகளவான கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை 2033-2038 இற்கு தள்ளிப் போடுவது போல தெரிகிறது. அதன் மூலம் அக்காலகட்டத்தில் அதிகளவு பொருளாதார அழுத்தம் வரும்.


ஊழலும் அநீதியும் பொருளாதார மீட்சிக்கு வழிகள் அல்ல

சர்ச்சில் பயப்பட்டது போல இது தேசியமயமாக்கல் பயம் அல்ல. ஆனால் ஊழல் மற்றும் அநீதியிலிருந்து EPF க்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. 

கடந்த காலங்களில் EPF துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அதனிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைந்து போனது என்ற விடயம் இப்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. 

அரசாங்கத்தின் கடன் பற்றிய கடந்த கால தரவுகள் முற்றாக வெளியிடப்பட்டால் மட்டுமே அந்த குறைவை சரியாக கணக்கிட முடியும். ஆனால் கடந்த காலத்தில் நடந்த துஷ்பிரயோகம் அடுத்த 16 ஆண்டுகளுக்கு நிரந்தரமான முறையில் தொடரலாம் என்று சொல்லி அந்த துஷ்பிரயோகத்தை தொடருவதை நியாயப்படுத்த முடியாது. 

அதனைத்தான் முன்மொழியப்பட்ட DDR செய்ய நினைக்கிறது. எப்படியிருந்தாலும், அந்த கடந்தகால முறைகேட்டையும் அவசரமாக கண்டுபிடித்து சரிசெய்வதற்கான ஒரு வாதமாக அல்லவா அது முன்வைக்கப் படவேண்டும்?

இலங்கையில் வீதிகளில் பெண்கள் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நாம் அறிவோம். அது பெண்களை துஷ்பிரயோகம் செய்ய ஆண்களுக்கு வெளிப்படையான அனுமதி வழங்கும் சட்டத்தை இயற்றுவதை நியாயப்படுத்துமா? 

EPF இன் கடந்தகால துஷ்பிரயோகம் தற்போதைய DDR திட்டத்தை நியாயப்படுத்துகிறது என்று கூறுபவர்களால், EPF தொடர்பாக இப்போது அந்த வகையான வாதத்தை முன்வைப்பது போல் தான் தெரிகிறது.

முக்கியமான முதலீட்டுத் தரவுகளை தொடர்ந்து மறைத்துக் கொண்டு, ஆண்டு அறிக்கைகளை வெளியிடாமல், கணக்கீடு அனுமானங்களைக் காட்டாமல், அதன் DDR திட்டத்தினால் EPF இன் தற்போதைய மதிப்புக்கு ஏற்படும் இழப்பை தெரிவிக்காமல் மத்திய வங்கி EPF ஐ மட்டுமே குறிவைக்கிறது. 

அடுத்த 16 ஆண்டுகளில் மக்களின் ஓய்வூதியச் சேமிப்பின் பெரியதொரு பங்கை விழுங்கி ஏப்பமிட முனைகிறது.

நான் உலகில் பார்த்த உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புளில் மிகவும் வழக்கத்திற்கு மாறான திட்டம் இதுவாகும். 

தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை அரசுப் பத்திரங்களில் ஓய்வூதியச் சேமிப்பாக வைப்பதைத் தவிர வேறு வழியில்லாத உழைக்கும் மக்கள் மீது இது முழுச் சுமையையும் ஏற்றுகிறது. 

அதேவேளை அரசாங்க பிணைமுறிப் பத்திரங்களில் முதலீடு செய்வதில் உள்ள ஆபத்துக்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப அரசாங்கம் கொடுக்க முனைந்த அதிக வட்டி வீதத்தை கொண்ட பிணைமுறிப் பத்திரங்களை வாங்கிய உள்நாட்டு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மலையளவு இலாபத்தை ஈட்டப் போகின்றன.

அட்லீயிடம் இருந்து தள்ளி நிற்பதற்கு சர்ச்சிலுக்கு ஒரு நல்ல காரணம் இருந்தது. அதே காரணத்திற்காக, மத்திய வங்கி மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் தலைமையிலிருந்து EPF பற்றிய முடிவெடுக்கும் அதிகாரத்தை நாம் பறிக்க வேண்டும்.


கலாநிதி நிஷான் டி மெல்

டெய்லி மிரர் 

தமிழில் - லிங்கம் 

நிமிர்வு ஆவணி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.