நினைவேந்தல் ஊர்தியும் ஏற்படுத்தப்பட்ட தடைகளும்


திருகோணமலையில் வைத்து தியாகதீபம் நினைவேந்தல் ஊர்தி தாக்கப்பட்டமை தொடர்பில் நேரடி சாட்சியாக இருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளர்  சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் பல வருடங்களாக இடம்பெற்று வருகிறன. நாங்கள் கடந்த வருடம் நினைவேந்தல் ஊர்தியை பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்திருந்தோம். பூபதி அம்மாவினுடைய நினைவேந்தல் கிழக்கு மாகாணத்திலே இடம்பெற்றதால் அவருடைய ஊர்தியை வடக்கு மாகாணத்தில் இருந்து கொண்டு சென்றிருந்தோம். 

கடந்த வருடம் இந்த ஊர்தியை இதே பொத்துவிலில் அருட்பிதா சக்திவேல் ஆசிகளோடு தொடக்கி வைத்தார். இந்தமுறையும் அவர் தான் அதே போல தொடக்கி வைத்தார்.

நாங்கள் பொத்துவிலிலே 15 ஆம் திகதி 9.45 மணியளவில் ஆரம்பித்து அக்கரைப்பற்று வந்து சேர்கின்ற பொழுது மாலை 3.30மணி இருக்கும். அக்கரைப்பற்றில் இருப்பவர்கள் வீதியை மறித்து சிறிய சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். ஏதோ ஒருவகையில் அதனை தாண்டி இருந்தோம். இதிலே ஒரு விடயம் முக்கியமானது. 

கடந்த காலங்களிலே புலனாய்வு மிக ஆழமாக மக்களுக்குள்ளே ஊடுருவி இருந்தது. பலவீனமாக எங்கள் மக்கள் அச்சத்துக்குள் உறைந்து போய் இருக்கின்ற பொழுது முன்னாள் போராளிகள், அவர்களுடைய குடும்பங்கள், அரசியலிலே ஈடுபடுகின்றவர்கள் மீது ஒடுக்குமுறை மிக மோசமாக இருந்தது. அதனால் அவர்கள் ஊர்தி பவனிக்கு ஆதரவு வழங்க முடியாத நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால், இந்தமுறை இராணுவ முகாம்களை அண்மித்த பகுதிகளிலே சிறிலங்கா அரசின் பொலிஸ் ஒட்டுக்குழுக்கள் இந்த ஊர்தியின் பயண விபரங்களை வழங்கி பல இடங்களிலே ஊர்தியை தடுக்க காடையர்களை தயார்ப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வகையிலே தான் நாங்கள்

அக்கரைப்பற்றில் சுலோக அட்டைகள், சிறிலங்கா அரசினுடைய கொடிகளை ஏந்தி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். புலனாய்வுத்துறையில் இருப்பவர்கள் நன்கு தமிழ் பேச கூடியவர்கள். இந்த பயணத்தை ஆரம்பித்ததுமே எங்களுக்கு அச்சுறுத்தலை தரும்வகையில் முதலாவதாக இந்த முன்னெடுப்பை செய்திருந்தனர்.

நாங்கள் அதனை கடந்து வந்து அன்றைய இரவு மட்டக்களப்பின் எல்லையான மாங்காட்டிலே வாகனத்தை தரித்து, அடுத்த நாள் காலை அங்கிருந்து ஊர்தி பயணத்தை ஆரம்பித்து இருந்தோம். மட்டக்களப்பின் பல பகுதிகளிற்கும் சென்று பின்பு மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊடாக நகர்ந்தோம். அப்பொழுது முறக்கொட்டாஞ்சேனையிலே இராணுவ முகாமிற்கு நேரே முன்னே இருக்கின்ற இடத்தில் கொடிகளை உயர்த்தி நாங்கள் போகின்ற பக்கத்தை முற்றாக தடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தார்கள். புலனாய்வுத் துறையினர் கொடுத்த நேரத்தினை வைத்து தான் குறித்த நேரத்திற்கு வந்து இவ்வாறு நடந்து கொண்டனர்.

பிள்ளையானின் ஒட்டுக்குழுக்கள், கருணாவின் ஒட்டுக்குழுக்கள் அதேபோன்று மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லீம் மக்களை தயார்படுத்தி இந்த தடையை ஏற்படுத்தினார்கள். நாங்கள் அதனையும் கடந்து வருகின்ற பொழுது வாழைச்சேனையிலே மீண்டும் இதே போன்று பாதையை மறித்திருந்தார்கள்.

இவ்வாறான சலசலப்புகளை தாண்டி கிண்ணையடிக்கு சென்று கிண்ணையடியால் திரும்பவும் பிரதான வீதியை அடைந்தோம். பின்னர் ஓட்டமாவடியை தாண்டி நாவலடி சந்தியை அடைந்தோம். அந்த சந்தியிலிருந்து ஒரு வீதி திருகோணமலைக்கு போகும் மற்றையது கொழும்பிற்கு போகும். அங்கும் அவர்கள் மறித்தார்கள். அந்த தடையையும் நாங்கள் ஒருவாறு கடந்து வரும் போது அந்த ஏற்பாட்டை செய்தவர்கள் சட்டென்று இன்னுமொரு வாகனத்தில் ஏறி எங்களுடைய வாகனத்தை கலைத்துக் கொண்டு வந்தார்கள்.

வாகரையை கடந்து நாங்கள் செல்கின்ற பொழுதும் எங்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். வாகரை ஒரு தமிழ்ப் பிரதேசம். அடுத்து வாகரையை கடந்து வெருகலிற்கு வரும் போது ஊர்தி சேருவலைக்கு போனால் அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி எங்களுக்கு கிடைக்கின்றது. இரவு 12 மணியாகியும் நாங்கள் வெருகலை விட்டு நகர முடியாத சூழ்நிலை. ஏனென்றால் இரவில் போனால் சாட்சியமும் இல்லாமல் இந்த விடயங்கள் நடந்து முடியலாம்.

அங்கு இறங்கு துறைமுகம் என்று ஒரு பாதை இருக்கிறது. அதனூடாக போனால் மூதூர் ஊடாக கட்டைபறிச்சானிற்கு போய்ச் சேரலாம். வெருகலில் இருந்து விலகிப் போனால் நேராக சேனையூரிற்கு போகலாம். திருகோணமலை அமைப்பாளர் குகன் மற்றும் இரண்டு செயற்பாட்டாளர்கள் எங்களை அங்கு அழைத்து சென்றார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் நாங்கள் இந்த நிகழ்வை ஆரம்பித்த நாள் தொட்டு நாங்கள் வருகின்ற பிரதேசங்கள் எல்லா இடங்களிலும் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக ஒன்றிணைந்தார்கள். மக்களின் ஆதரவு திலீபன் அண்ணாவிற்கு என்றும் இருந்து கொண்டே இருக்கிறது.

நாங்கள் பாடலிபுரத்திற்குள்ளால் சேனையூர் சென்று அங்கிருந்து 17.09.2023 அன்று நினைவேந்தல் ஊர்தி பவனியை ஆரம்பித்தோம். அங்கிருந்து மூதூர் சென்று சம்பூர் சென்று மீண்டு வந்து கிண்ணியாவின் ஊடாக தம்பலகாமம் வந்து மதிய நேர உணவை திருகோணமலை மாவட்ட செயலாளர் குகன் அவர்களினுடைய வீட்டிலே உட்கொண்டு 2 மணிக்கு அந்த இடத்திலே இருந்து புறப்படுவதற்கு தயாரானோம்.

அப்பொழுது EP -DBK 0884 எனும் இலக்கம் உடைய மோட்டார் சைக்கிளில் இரண்டு புலனாய்வாளர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு திரிவதை பார்த்து ‘நீங்கள் யார்?’ என்று அவர்களிடம் கேட்டேன். அவர்கள் தாங்கள் புலனாய்வுதுறை என்று சொன்னார்கள். “12 நாள் பட்டினியாக இருந்து விடுதலையை நேசித்த ஒரு மகனை நாங்கள் காவி செல்கிறோம். இங்கே உங்களுக்கு என்ன வேலை?” என்று கேட்டேன். அதற்கு “உங்களது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கிறார் அவருக்கான பாதுகாப்பை நாங்கள் கொடுக்க வேண்டும்.” என்று சொன்னார்கள். நாங்கள் இங்கே புறப்படுகின்ற நேரத்தை தொலைபேசியிலே அறிவித்து விடுவதுதான் அவர்களின் நோக்கம்.

நாங்கள் அங்கிருந்து பாலம்போட்டாறு என்ற கிராமத்தின் ஊடாக திருகோணமலை-கொழும்பு பிரதான வீதிக்கு ஏறினோம். அந்த பிரதான வீதியில் முழுக்க இராணுவ முகாம்களும் பொலிசாரின் தகவல் நிலையங்களும் இருக்கின்றன. பாலம்போட்டாறில் இருந்து விலாங்குளம் கடந்து கப்பல்துறைக்கு சென்று கொண்டிருந்த பொழுது கப்பல்துறை இராணுவ முகாமை அடுத்திருக்கின்ற இடத்தில் இருந்த ஒருவர் தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு பாறாங்கல்லை கையில் எடுத்து வீசி எறிந்தார். அதுதான் கப்பல்துறை பகுதியில் நடந்த முதல் தாக்குதல்.

அவர் எறிந்த கல் வாகனத்தின் முன்பக்கத்தில் நானும் சாரதியும் இருக்கின்ற பகுதியில் பட்டு அந்த பகுதி வெடித்து தகரமும் நெளிந்து இருந்தது. நான் சாரதியிடம் சொன்னேன், “கல் எறிந்திருக்கிறார்கள். நாங்கள் கொஞ்சம் அவதானமாக போக வேண்டும்.” என்று.

அப்பகுதியை வேகமாக கடந்திடுவோம் என்று நினைத்து வேகமாக சென்றோம். அதற்கடுத்தது சர்தாபுர கிராமம். அந்த சந்தியிலே நாங்கள் திரும்பி விட்டால் தமிழ் கிராமங்களின் ஊடாக ஹொரவப்பொத்தான வீதியால் அனுராதபுரத்திற்கு போகலாம், இல்லையென்றால் நேராக போவோமாக இருந்தால் 4 ம் கட்டை அங்கும் தடுப்புகள் இருப்பதாக அறிய கிடைத்தது.

சர்தாபுரத்திலே பெரிய பெரிய மரக் குற்றிகளை போட்டு 100 பேர் அளவில் நின்றார்கள். அவர்கள் சிங்கள மொழியிலே “திரும்பிபோங்கள். இந்த பக்கத்தால் போக முடியாது.” என்று சத்தம் போட்டு கொண்டு வாகனத்தை சூழ்ந்து கொண்டார்கள். 

நினைவேந்தல் ஊர்தியிலே பலமாக ஓங்கி பொல்லுகளாலும் கற்களாலும், தடிகளாலும், கம்புகளாலும் எறிந்து தாக்கினார்கள். இந்த இடத்திலே எங்களுடைய கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வாகனத்திலே பின்னுக்கு திலீபன் அண்ணாவின் நினைவு ஊர்தியிலே வெளிப் பக்கமாகவே இருந்து வந்தார். நான் அந்த வாகனத்தின் சாரதியோடு முன்னுக்கு இருந்தேன். இந்த நேரத்தில் பின்னுக்கு இருந்தவர்கள் இறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்.

மிக அழகாக அந்த வாகனம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சங்கிலி பிணைக்கப்பட்ட நினைவிடமாக இருந்த இடங்கள் எல்லாவற்றையும் அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். அதிலே 4 மின்விளக்குகள் பூட்டி இருந்தோம். அந்த கட்டமைப்பையே சீர்குலைத்தார்கள். பின்பு வாகனத்தினுடைய சாரதி பக்கம் இருந்த கண்ணாடியையும் அடித்து நொறுக்கி சாரதி மீதும் கற்களை வீசினார்கள். அப்பொழுது பொலீசார் எனக்கு பக்கத்தில் வாகனத்தை சூழ்ந்து கொண்டு வரும் போது நான் அவர்களிடம் சொன்னேன், “மக்கள் பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு உரிய பாதுகாப்பில்லை. இது நாங்கள் அமைதியாக கொண்டு வருகின்ற ஊர்வலம். இதனை நீங்கள் இவ்வாறு தாக்குதல் செய்ய இயலாது.” என்று.

வீதியை மறித்து இருக்கிறார்கள். பொலிசார் அங்கு இருக்கிறார்கள் புலனாய்வாளர்கள் எல்லோருமே அங்கு இருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னால் சிங்கள காடையர்கள். 83ஆம் ஆண்டு இப்படி நடந்ததாக சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல இங்கும் கொரியாவத்தை என்று சொல்லப்படுகின்ற இடத்திலிருந்து மீன்பிடி சமூகத்தவர்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றிருக்கவில்லை. ஏனென்றால், சிங்கள பௌத்த பேரினவாத அரசினுடைய இந்த கட்டமைப்புகள் எதுவுமே தமிழ் மக்களுக்கானது அல்ல.

இந்த தாக்குதல் மிக அகோரமாக இருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது தலைக்கவசங்களாலும் தடிகளாலும் மிக மோசமான வகையில் தாக்கினார்கள். ஊர்திக்கு சேதங்களை விளைவித்தார்கள். இதன் பின்பு நாங்கள் தம்பலகாமத்திற்கே திரும்பி கட்சியின் அமைப்பாளரின் வீட்டிற்கு வந்திருந்தோம். மாலை 6.30 மணியளவிலே மூதூர் பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திருகோணமலை பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகரும் வருகை தந்தார்கள். 

அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை சந்தித்து “நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். நீங்கள் இந்த விடயங்களை அறிவித்து விட்டு வர வேண்டும். சிங்கள முஸ்லீம் மக்கள் மிகப்பாரிய அளவிலே இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். உங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வாகனங்களை கொண்டு செல்வது பற்றி தான் நாங்கள் பேச வந்திருக்கிறோம். உங்களுடைய முடிவு என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு “எங்களை பொறுத்தவரையிலே நாங்கள் இந்த அச்சுறுத்தல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். கடந்த காலங்களிலே சிறிலங்கா அரசின் மீதுள்ள எமது சந்தேகம் அவநம்பிக்கை என்பவை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன.

உங்களுடைய புலனாய்வுக் கட்டமைப்பு தான் எங்களை பின் தொடர்ந்து வருகிறது. உங்களுக்கு சகல தகவல்களும் இந்த புலனாய்வு துறையினர் மூலம் வழங்கப்படுகிறது. அங்கே பொலிசார் இருவர் இருக்கிறார்கள் அதேபோல எம்மை தொடர்ந்து வந்த புலனாய்வாளர்கள் அங்கே இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் நீங்கள் பாதுகாப்பு தந்து பவனியை நகர்த்த வேண்டிய தேவையில்லை.

மக்களுடைய பாதுகாப்பு தான் எங்களுடைய பாதுகாப்பு. உங்களுக்கு சிங்கள முஸ்லீம் மக்கள் இதனை தடுக்கிறார்கள் என்ற தகவல் வந்திருந்தால் அவர்களின் சட்டவிரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்துவது தான் உங்களுடைய வேலை. கலவரம் வரும் என்று மிரட்டாமல் கலவரம் வராமல் பாருங்கள்.” என்று கஜேந்திரன் அவர்கள் பதிலளித்தார்.

சிங்கள முஸ்லிம் மக்கள் என்ற போர்வையில் சிங்கள பேரினவாத அரசினுடைய இராணுவ பொலிஸ் காவல் புலனாய்வு கட்டமைப்புகள் தான் இதனை செய்திருக்கின்றன. இந்த விடயங்களை பல இடங்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறோம்.


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.