கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுகிறதா வடக்கு கடற்தொழில் சமூகம்?

 


வடபகுதி கடல் வளம் இன்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் வடபகுதி மீனவர்கள் அல்ல. அவர்கள் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக கடல் வலய தடைச்சட்டத்தின் மூலம் கடலுக்கு போக முடியாமல் இருந்தவர்கள். அதனால் கடலுக்கு மீண்டும் தன்னை புதுப்பிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனவே கடல் வளம் மிகப்பெரிய அளவில் பெருகி இருக்க வேண்டும். அந்த கடல் வளம் இன்று வலுவிழந்து போகின்றது என்றால் அதற்கிடையில் வேறு எதுவோ நடந்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய இழுவைப்படகுகளின் ஆக்கிரமிப்பு தான் அது. 

பணத்துக்காக பேராசைப்பட்டு இன்று பாரிய இழுவைப்படகுகள் ஒன்றல்ல இரட்டை மாட்டுவண்டி என்று மீனவர்கள் சொல்லும் இரட்டை படகுகளை பூட்டி கடலின் நிலத்தை வலை போட்டு அடியோடு இழுத்து கொண்டு போவதன் மூலம் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கரையை ஒட்டிய கடல்களில் பாரம்பரியமாக மீன் பிடிக்க உரிமை இருக்கின்றது என்று சொன்னால் நாங்கள் அதை சாதகமாக அணுகலாம். ஏனெனில் 1983 ஆம் ஆண்டு வரையில் எமது மீனவர்களும் இந்திய கரைக்கு சென்று மீன்  பிடித்தவர்கள் தான். இந்திய மீனவர்களும் இங்கு வந்து மீன் பிடித்தார்கள். ஆனால் அங்கு பாவிக்கப்பட்ட முறைகள் மரபு சார்ந்த இயற்கையோடு ஒன்றித்த தொழிற்பாடு முறைகள்.

இழுவை மீன்பிடித் தொழிலில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று கடல்நில இழுவை (Bottom Trawler, பொட்டம் ரோலர்) என்று சொல்வார்கள் Bottom Trawler என்பது இழுவை மடிகள் என்று சொல்லப்படுகின்ற மிகப்பெரிய பை போன்ற வலையை பயன்படுத்துவது. அந்த பையினுடைய கீழ் பக்கத்தில் இரண்டு தகடுகள் பாரமாக பூட்டப்பட்டிருக்கும். அதை கடலில் இறக்கியவுடன் அந்த இரண்டு இரும்புகளும் கடலின் அடியில் நில மட்டத்தில் அமர்ந்து விடும். மிகவும் பலமான இயந்திரங்களை பூட்டி அந்த வலையை இழுக்கும் போது அது கடலின் அடிப்பரப்பில் இருக்கின்ற எல்லாவற்றையும் இடையூறு செய்து கொண்டு தான் இழுபட்டுப் போகும். 

வடபகுதியில் தற்பொழுது குருநகர் பகுதியில் மீனவர்கள் இழுவைப்படகுகள் வைத்திருக்கின்றார்கள். இவர்களிடம் உள்ள இழுவைப்  படகுகள் அவர்களது கூற்றுப்படி கடல் நிலத்தின் அடியை இழுத்து கொண்டு போகுமளவிற்கு அதிக வலு கொண்ட இயந்திரமோ படகுகளோ இல்லை. எனவே அவர்களால் அப்படியான தொழிலை செய்ய முடியாது என்பது அவர்களுடைய வாதம். அவர்களுடைய இழுவை வலைகளில் போடுகின்ற பலகைகள் இடை நீரில் மிதந்து கொண்டு போகும். எனவே நிலத்தில் இருந்து சில அடிகள் மேலே போய்க்கொண்டு இருப்பதனால் பெரும்பாலும் நிலத்தை சிதைக்காது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இழுவை மடிகள் என்று சொல்லப்படுகிற மிகப்பெரிய உறை கடலுக்குள் ஓடி வரும் பொழுது எல்லா வகையான மீன்கள் சிறிய குஞ்சுகள் எல்லாவற்றையும் இழுத்து கொண்டு வரும். இழுவை முடிந்து படகுக்குள் மீன்களை சேகரிக்கும் போது இவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்து விட்டு மிகுதியை இறந்த நிலையிலோ அல்லது பாதிக்கப்பட்ட நிலையிலோ கடலுக்குள் எறிந்து விடுவார்கள். எனவே சிறிய மீன்கள் எல்லாம் அழிந்து விடும். எனவே கடல் வளம் என்கின்ற விடயத்தில் இழுவை தொழில் என்பது உண்மையில் எந்தவிதத்திலும் பொருத்தமற்றது. 

கடலில் தொழில் செய்கின்ற வலைகள், கருவிகள் சம்பந்தமாக உலக உணவு ஸ்தாபனம் மீன்பிடியோடு தொடர்புபட்ட நிறுவனங்களுக்கு மிக தெளிவான வரையறைகளை கொடுத்திருக்கிறது. எவற்றை பிடிக்கலாம் எவற்றை பிடிக்க கூடாது. எத்தனை அங்குல வலைகளை என்னென்ன நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு விடயங்களை தெளிவாக வரையறுத்திருக்கிறார்கள். நோர்வே போன்ற சில மேற்கத்தேய நாடுகளில் ஒரு படகு ஆகக் கூடியது எவ்வளவு கிலோ மீன் பிடிக்கலாம் என்பது கூட வரையறுக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு மேலே அவர்கள் பிடிக்க கூடாது. நியமங்கள் தெளிவாக பேசப்பட்டு இருக்கின்றன.

அப்படியிருக்கும் போது நாங்கள் இங்கு எங்களுடைய இயற்கை வளத்தை கண் மூடிக்கொண்டு அழிப்பவர்களை தடை செய்ய மறுக்கின்றோம். வாயால் தடை செய்வதாக கதைக்கின்றோமே தவிர அவர்கள் இங்கு வந்து செய்வதை பார்த்து கொண்டு இருக்கிறோம். எங்கள் மீனவர்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றோம். அல்லது தேவையில்லாமல் இரண்டு பக்கத்து கரைகளிலும் உள்ள மீனவர்கள் மத்தியில் முரண்பாடுகளை தூண்டுவதன் மூலம் ஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளில் சேதாரத்தை ஏற்படுத்துகின்றோம்.

தமிழ்நாட்டிற்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையில் உள்ள உறவுகளை ஏதோ ஒருவகையில் சீர்குலைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி திட்டத்தின் ஓர் அங்கமாக தான் இந்த இழுவை படகுகளை அனுமதிக்கின்ற ஒரு விடயம் நடக்கின்றதா என்று கூட கேட்க வேண்டி இருக்கிறது.

மறுபக்கத்தில் இழுவை மீன்பிடித் தொழில் இலங்கையில் முழுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்று சுருக்கு வலை தடை செய்யப்பட்டிருக்கிறது. மின்சாரம் பாவித்து மீன் பிடித்தல் தடை செய்யப்பட்டிருக்கிறது. வெடி பொருட்களை பாவித்து மீன் பிடித்தல் தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்படி பல்வேறு விதமான விடயங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இன்றும் இத்தகைய தொழில்களை முல்லைத்தீவு, வடமராட்சி, கிழக்கு, மன்னார் போன்ற பல இடங்களில் பலர் செய்கின்றனர். மீனவர்களின் கருத்துப்படி அவர்கள் மிகவும் செல்வாக்கு கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மீது சட்டத்தின் கரங்கள் இறுகுவதில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

அப்படியென்றால் அர்த்தம் என்ன? நாங்களே ஒரு பக்கத்தால் சட்ட விரோதமான தொழிலை செய்வதற்கு மீனவர்களுக்கு சலுகை அளிக்கின்றோமா? செல்வாக்கு கொண்டவர்களை பாதுகாப்பதற்காக சட்டங்கள் மௌனமாகி போகின்றனவா? பல கேள்விகள் இருக்கின்றன. 

இந்த விடயத்தில் எந்தவொரு தெளிவுமற்ற ஒரு நிலைமை தான் காணப்படுகின்றது. அண்மையில் கூட வடமராட்சி கிழக்கை சேர்ந்த மீனவ சங்க தலைவர் சொல்லி இருந்தார். இந்த சுருக்கு வலை மீன்பிடி செய்பவர்களில் சில கட்சி அங்கத்தவர்கள் கூட இருக்கிறார்கள் என்று.

கட்சியின் அங்கத்தவராக இருப்பது எங்களுக்கு பிரச்சனை அல்ல. ஒவ்வொரு மனிதனும் ஒரு அரசியல் கட்சியுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளலாம். அதற்காக அவனையும் அந்த கட்சியையும் ஒன்றுபடுத்த கூடாது. ஆனால் கடல் வளத்தை சேதப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஒரு கட்சி பாதுகாப்பு வழங்குவதோ அல்லது கட்சி தான் அதை செய்வதாகவோ இருக்க கூடாது. ஆனால், ஏதோ ஒரு விடயம் மீனவர்கள் கட்சியை குறிப்பிட்டு கூறுகின்ற அளவுக்கு நெருடுகின்றது தானே. இந்த சட்டவிரோத தொழில் செய்கின்றவர்கள் தங்களை பாதுகாப்பதற்காக கட்சிகளின் அடையாளங்களின் கீழ் சரணடைந்து உள்ளார்களா? அந்த அடையாளங்களை வைத்து கொண்டு இந்த சட்டவிரோத தொழில்களை செய்கின்றார்களா? அப்படியென்றால் அவர்களை கட்டுப்படுத்துவது அந்த கட்சி நிர்வாகங்களினது பொறுப்பு தானே.

எனவே இங்கு பல விடயங்களை பார்க்க வேண்டி இருக்கிறது. இது வெறுமனே இழுவைப்படகு பற்றிய விடயமாக அல்லது சட்டவிரோத சுருக்கு வலை தொழில் சம்பந்தப் பட்டதாக அல்லது இந்தியா இழுவைப் படகுகள் சம்பந்தப் பட்ட ஒன்றாக மட்டும் பார்க்க முடியாது. 

வட பகுதியின் கடல் தொழில் உண்மையில் அபிவிருத்தி செய்யப்படுகின்றதா இல்லை குறைவிருத்தி செய்யப்படுகின்றதா என்ற ஒரு கேள்வி என்னிடம் ஆழமாக இருக்கின்றது. யுத்தத்திற்கு முன்பு இலங்கையின் மீன்பிடி தேவையில் மூன்றில் ஒரு பங்கை நாளாந்தம் வழங்கி கொண்டிருந்த ஒரு மாவட்டம் யாழ்ப்பாணம். இன்று தனக்கு தேவையான உணவை கூட பெற முடியாமல் அதன் பொருளாதாரம் சிதைக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட ஒற்றை துறை என்றால் அது கடல் பொருளாதாரம் தான். அந்த கடல் தொழிலாளர் சமூகம் தங்களுடைய உற்பத்தி சாதனங்களை தரைகளுக்கு ஊடாக எடுத்து கொண்டு ஓட முடியாமல் அப்படியே விட்டு சென்றது.

அதன் காரணமாக அவர்களது பொருளாதாரம் முழுமையாக இழக்கப்பட்டது. மீள வந்தபோது அவை எதுவுமே புதுப்பிக்கப்படவில்லை. புதுப்பிப்பதற்கான சலுகைகளும் மிக சிறியளவிலேயே கிடைத்தன. சிறிய கண்ணாடி நார் இழை படகுகள் அல்லது சிறிய இயந்திங்கள், வலைகள் கொடுப்பதன் மூலம் இந்த குறைபாட்டை வெற்றிகரமாக முடித்ததாக அவர்கள் நினைத்து கொள்கிறார்கள். இல்லை என்றால் அண்மைக் காலங்களில் கடல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது என்று. இந்திய தூதுவர் வந்து நிவாரணம் வழங்குவார் அல்லது சீன தூதுவர் வந்து நிவாரணம் வழங்குவார். அந்தளவுக்கு நிவாரணத்தில் தங்கி வாழ்கின்ற ஒரு சமூகமாக, எட்டாயிரம் பத்தாயிரம் பெறுமதியான ஒரு உணவு பொதிக்காக கை ஏந்துகின்ற ஒரு சமூகமாக கணிப்பிடுகின்ற அளவுக்கு எங்களுடைய வட பகுதி கடல் தொழில் என்ன அந்தளவுக்கு மோசமாகி விட்டதா? அந்தளவுக்கு இந்த கடல் தொழில் சமூகத்தை ஏளனப்படுத்த தொடங்கி விட்டோமா? எவ்வளவு பெரிய பொருளாதார பலத்துடன் சுதந்திரமாக இருந்த சமூகம் அது. 

இப்பொழுது என்ன நடக்கின்றது? முன்பு கடல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் கடல் தொழில் சமூகத்தின் மத்தியில் மிக பலமானவை. கிராமங்களுக்குள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் செயற்படுவது போன்று கடற்கரையோர கிராமங்களில் கடல் தொழில் சங்கங்கள் மிக பலமாக செயற்பட்டு வந்தன. ஆனால் இவைகள் கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதியப்பட்டவை. மாகாண சபைகள் உருவாகியதன் பின்பு கூட்டுறவு சட்டத்தின் கீழ் இந்த மீன்பிடி சங்கங்கள் பதியப்பட்டிருந்ததால் பகுதியளவில் இவை மாகாண சபையினுடைய கூட்டுறவு திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் வந்தன. ஆனால் மீன்பிடி துறை மத்திய அரசாங்கத்தின் செயற்பாடாக இருந்தது. இதனால் மத்திய அரசாங்கம் சிலவேளைகளில் தன்னுடைய பணிகளை செய்வதில் பல சங்கடங்களை எதிர்நோக்கியது.

தாங்கள் நினைப்பது போன்று மீனவர்களை கையாள முடியாமல் இருக்கின்றது என்று ஒரு விடயம் மத்திய அரசாங்கத்துக்கு இருந்திருக்கும். அதனால் ஒரு 5 வருடங்களுக்கு முன்பாக கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இருக்க கூடியதாக வேறு புதிய அமைப்புக்கள் மத்திய அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சினால் உருவாக்கப்பட்டன. அவை உருவாக்கப்பட்ட பின்பு அந்த சங்கங்கள் ஊடாக தான் கொழும்பு கடல் தொழில் அமைச்சை அணுக வேண்டும் என்று சொல்லப் பட்டது. அதுவரையும் காலாகாலமாக இருந்து வந்த கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களை பலம் இழக்க வைக்கின்ற ஒரு கபட தனமான முயற்சியாக இது முன்னெடுக்கப்பட்டது. இதனால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களில் இரண்டு சங்கங்களுக்கு இடையில் ஒரு முரண்பாட்டை கொண்டு வருவதன் மூலம் கடல் தொழில் சமூகம் இரண்டு படுத்தப் பட்டது. தங்களுடைய மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கம் என்கின்ற அதிகார போட்டிக்காக கடல் தொழிலாளர்களுடைய ஒரு சமூக நிறுவனத்தை பங்கு போட செய்ததன் மூலம் அந்த சமூகங்களை பிய்த்தெடுக்கின்ற ஒரு கபடத்தனம் இங்கு செய்யப்பட்டது. 

இப்பொழுதும் இந்த கடல் தொழில் சங்கங்களை பலவீனப்படுத்துகின்ற பல்வேறு முயற்சிகள் நடக்கின்றன. அவர்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து அல்லது அவர்களை தவறாக வழிநடத்தி அவர்களின் சம்மதங்கள் பெறப்படுகின்றன. அந்த சம்மதங்களை பெற்றுக்கொண்டு சட்ட விரோத தொழிலுக்கு அனுமதி கொடுத்த சம்பவங்களும் வடமராட்சி கிழக்கில் உண்டு. அதேபோல குருநகர் பாசையூர், அரியாலை கடல் நீரேரிகளில் கடலட்டை பண்ணைகளை போடுவது தொடர்பாக அந்தந்த பகுதிகளின் மீனவ சங்கங்களிடம் சம்மதம் பெற்று எல்லாம் செய்கின்றோம் என்று சொல்கின்றார்கள். மீனவ சங்கங்களிடம் இப்போது உண்மையை கூறி கேட்டபோது அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கின்றார்கள்.

கடல் தொழில் சமூகத்தை பங்கு போடுவது, சிறுமைபடுத்துவது, அவர்களுடைய சிறிய சிறிய தனிப்பட்ட பலவீனங்களை காரணம் காட்டி அவர்களை செயல் இழக்க செய்வது இப்படியான பல விடயங்கள் நடக்கின்றன. எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் பலவிதமான குறைபாடுகள் இருக்கின்றன. நிர்வாக குறைபாடுகள் இருக்கின்றன. நிதி குறைபாடுகள், கணக்கீட்டு குறைபாடுகள், பொறுப்பு கூறல் குறைபாடுகள், இவ்வாறாக பல்வேறான குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை சீர் செய்து அந்த சங்கங்களை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டியது அந்த  சங்கங்களை முகாமை செய்பவர்களின் பொறுப்பு.

மாகாணத்தின் கூட்டுறவு சங்கமாக இருக்கலாம் அல்லது மாகாணத்தின் கடல் தொழில் திணைக்களமாக இருக்கலாம் அல்லது மத்திய அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சாக இருக்கலாம் இது அவர்களுடைய பொறுப்பு. மாறாக அவர்களே சமூகத்தை சின்னாபின்னமாக்குவது மிகவும் அபத்தமானது. அடுத்து அந்த மக்களினுடைய கடல் வளத்தை, கடல் ஆளுமையை அபிவிருத்தி செய்வதற்கு என்ன செய்கின்றோம் என்ன செய்திருக்கின்றோம் என்று  கேள்விகளும் முக்கியமானவை.

செல்வின் இரேணியேஸ்

நிமிர்வு புரட்டாதி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.