ஒரு நாடு பல சட்டங்கள்

 


திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக எல்லையில் காணப்படும் நூறு சதவீதம் தமிழ் மக்கள் வாழும் சாம்பல்தீவு, இலுப்பங்குளம், பெரியகுளம் கிராமசேவகர் பிரிவுகளின் மத்தியிலேயே பெரியகுளம் சந்தி அமைந்துள்ளது. 

அங்கு காணப்படும் முக்கியமான நிலப்பகுதி ஒன்று, "பொரலு கந்த ரஜமஹா விகாரை" என்ற பெயரால், ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இனவாத அரசியலின் கோர முகங்களை கண்ட திருகோணமலை, மீண்டும் கொதித்தெழ தொடங்கியுள்ளது. தமிழ் மக்களின் செறிவைக் குறைக்கும் ஆக்கிரமிப்பு செயற்பாடாகவே இது உள்ளது.

கடந்த 28.08.2023 அன்று திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் திருகோணமலையை சேர்ந்த "கோகர்ண பிக்குகள் அமைப்பு" மேலும் ஒரு சில சிங்கள இனவாதிகள் என்று சுமார் 20 பேர் கொண்ட குழு ஒன்று பாரிய ரகளை ஒன்றினை நடத்தியது. அவர்கள் இலங்கையின் சட்ட திட்டம், அரசியலமைப்பு என்பவற்றை சுக்கு நூறாக்கி, தங்களின் தேவையை சாதித்துக் கொண்டனர். 

திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியை பிக்குகள் மறித்து போக்குவரத்தை சுமார் 2 மணி நேரங்கள் பாரியளவில் தடை செய்தனர். இருந்த போதும், அவர்களை அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்ய காவல்துறையினர் கூட முன் வரவில்லை. இங்கு ஒரு நாடு பல சட்டங்கள்அதன் பின்னர் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்குள் சென்ற பிக்குகள் அங்கு நடந்து கொண்டிருந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை பலாத்காரமாக இடை நிறுத்தினர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர்கள், திருகோணமலையை சேர்ந்த அனைத்து நிறைவேற்று தர அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டிருந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அடாவடியாக மீண்டும் விகாரை கட்ட சம்மதம் தந்தால் மட்டுமே அங்கிருந்து செல்வோம் என்று கூறி அங்கு அமர்ந்து கொண்டனர். கூட்டத்தைக் குழப்பி, ரகளை செய்து சம்மதத்தை எழுத்து மூலம் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, எழுத்து மூலம் எழுதி வாங்கிச் சென்றனர்.

சாதாரண பொது மக்களுக்கு அல்லது ஊடகவியலாளர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு இருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினுள், இவ்வாறு பலாத்காரமாக புகுந்த நபரை காவல்துறை ஒன்றும் செய்யவில்லை. இங்கு இருப்பது ஒரு நாடு பல சட்டங்கள்.

இந்த பிரச்சனைகளின் பின்னணியை எடுத்து நோக்கினால், மைத்திரிபால சிறீசேன தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, ஆயிரம் விகாரைகள் செயல் திட்டத்தின் கீழ் பல புதிய விகாரைகள் அமைக்கப்படுமென கூறப்பட்டது. 

தமிழர்களின் தாயகம் என்று கூறப்படும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தொடு புள்ளியாக இன்று மீதமாக இருக்கும் ஒரு பகுதி திருகோணமலையின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு.

இந்தப் பகுதி பௌத்த மயமாக்கப்படும் போது எதிர்காலத்தில் இணைந்த வடகிழக்கை தமிழர் தாயகமாக கூற முடியாத நிலை ஏற்படும். இதனை கவனத்தில் கொண்டு அரசும், சிங்கள பேரினவாதிகளும் நீண்ட நாள் திட்டத்துடன் குறித்த பகுதியில் சுமார் 33 விகாரைகளை அமைப்பதற்கான வேலைகளையும், அந்த விகாரைகள் ஊடாக விகாரைகளைச் சுற்றி உள்ளகாணிகளை சுவீகரிப்பதற்கான  செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இது குறித்த பகுதியைச் சேர்ந்த அரிசிமலைப் பிக்கு என்பவரின் தலைமையில் பலவந்தமாக இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் ஒரு சில விகாரைகள் அமைப்பதை நிறுத்த எடுக்கப்ப பட்ட முயற்சிகள் தோல்வியுற்ற போதும் அவை அமைக்கப்படுவது கொஞ்சம் காலதாமதம் ஆக்கப்பட்டது. 

இந்நிலையில் குறித்த தொடுபுள்ளிகளின் இறுதித் தொடு புள்ளியாக திருகோணமலை நகரத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் காணப்படும் சாம்பல்தீவு, சல்லி, ஆத்திமோட்டை, இலுப்பங்குளம், கோணேசபுரி, வள்ளுவர் கோட்டம், பெரியகுளம் போன்ற முழு தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம் காணப்படுகிறது. 

இப் பிரதேசத்தின் மத்தியில் காணப்படும், அதேவேளை சுற்றுலாத்தலமாகிய நிலாவெளிக்குச் செல்லும் பிரதான பாதையில் உள்ள பெரியகுளம் சந்தியில் ஒரு விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதில் விசனப்படவேண்டிய விடயம், குறித்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு முன்னிற்கும் பிக்கு ஒரு அரைத் தமிழர் என்பதாகும். சுகிதவங்ச திஸ்ஸ தேரர் என தன்னை அடையாளப்படுத்தும் இவர், திருக்கோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் தாய்க்கும். சிங்கள தகப்பனுக்கும் பிறந்த ஒருவர். பிறப்பினாலேயே இரு இனங்களுக்குமிடையேயான முரண்பாடுகளை தீர்த்து வைக்கக்கூடிய பின்னணியை கொண்ட இவரே சிங்கள பௌத்த இனவாதத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு பலியாகிப் போனது அபாக்கியமானது. 

எனினும், இலங்கை அரச நிகழ்ச்சி நிரலில் சர்வதேசத்தின் சில தலையீடுகள் காரணமாகவும், இந்திய அழுத்தம் காரணமாகவும் 13-ஆம் சீர்திருத்தத்தை நியாயப்படுத்தவும் ஆளுநராக கொண்டு வரப்பட்ட செந்தில் தொண்டமான் அவர்கள் குறித்த இடத்தில் இனமுறுகல் ஏற்படும் என்ற அடிப்படையில் விகாரை அமைப்பதற்கு தற்காலிக தடை ஒன்றை ஏற்படுத்தினார்.

என்றாலும் 28.08.2023 நடந்த நிகழ்வுகள் செந்தில் தொண்டமானுக்கு, வடக்கு கிழக்கு தமிழர்களின் இன்னல் நிலையை புரிய வைத்துவிட்டது. உண்மையில் சொல்லப்போனால் திருக்கோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிக்குகளின் ரகளையின் முன் செந்தில் தொண்டமான் எல்லாவித அதிகாரங்களையும் இழந்த ஒரு நிராயுதபாணியாக அவமானத்திற்கு உள்ளானார் என்பதே உண்மை. 

உலகத்தில் புத்த பெருமானுக்கு விகாரை என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலங்களுக்கு முந்திய காலகட்டத்தில் சைத்தி என்ற வடிவமைப்பு தான் அமைக்கப்பட்டது.

அந்த வடிவமைப்பு முதன் முதலில் அமைக்கப்பட்டது, திருகோணமலையின் திரியாய் பகுதியில் காணப்படும் "கிரிகடு சாய" என இன்று அழைக்கப்படும் இடத்தில் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அதனைச் சூழ இருக்கும் எல்லா மலைகளிலும் பௌத்த சுவடுகள் இருக்கும் என்ற எடுகோள் முன்னிறுத்தப் படுகிறது. அந்த அடிப்படையில் அதைச் சூழ இருக்கும் மலைகள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இங்கே குறிப்பாக சொல்லப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், குறித்த சைத்தியை அமைத்தவர்கள் தமிழ் பௌத்தர்கள் என்பதுதான். இந்த வரலாற்று உண்மையை ஏற்க பௌத்த பேரினவாதம் மறுக்கின்றது. 

எங்களுக்கு ஏற்பட்ட இன்னோர் அபாக்கிய நிலை என்னவென்றால், பெரியகுளம் சந்தியில் காணப்படும் மலை மீது நாகம்பிரான் வழிபாடுகள் இருந்து வந்தன. அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சில தமிழ் அரசியல் பலமிக்க நபர்கள் அந்த மலையில் புதையல் தோண்டும் நோக்கில் சில நடவடிக்கைகளை மேற்கொண்ட பொழுது, அங்கிருந்து நாகம்பிரான் சிலை அகற்றப்பட்டிருந்தது. 

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்ட தொல்பொருள் செயலணி இந்த இடத்தையும் ஒரு தொல்பொருள் இடமாக கூறியது. அதனை மையப்படுத்தி சூழ இருந்த மூன்று ஏக்கர் காணிகளை தொல்பொருள் இடமாக வர்த்தமானி பிரசுரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் குறித்த பகுதி அளவீடு செய்யப்பட்டு, கையகப்படுத்தப்படாத நிலையில் திருகோணமலையின் பிரதேச செயலாளரினால் அந்தக் காணிக்கும், பிரதான வீதிக்கும் இடையில் மலை சரிவில் காணப்படும் 27 பேர்ச் காணி விகாரை அமைப்பதற்காக குறித்த பிக்குவுக்கு கையெழுத்திட்டு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அண்மையில் இருக்கும் தனியார் காணி ஒன்றும் தமிழ், சிங்கள கலப்பு குடும்பம் ஒன்றுக்கு சொந்தமானது. 

அந்த காணி உரிமையாளர்களும் குறித்த இடத்தில் பௌத்த விகாரை ஒன்று வருவதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் தொல்பொருள் நிலப்பகுதி, பௌத்த சாசனத்திற்கு வழங்கப்பட்ட அரச காணி, தனியார் காணி என மூன்று விதத்தில் காணிகள் பௌத்த மயமாக்கலுக்கு தயாராக உள்ளன. 

பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் செறிவான பகுதி, இன்று அவர்களின் சதி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் வரலாற்றை நோக்கும்போது, இன்றைய சாம்பல்தீவு, அடுக்குப்பார் மற்றும் கோணேசபுரி போன்ற பகுதிகள் மிந்தன் கொற்றன் என்ற தமிழ் பௌத்த அரண்மனை பிரதானிக்கு மன்னன் ஒருவனால் தன்னிடம் சேவை புரிந்தமைக்காக நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு பின் 1153 ஆம் ஆண்டு இவ்வாறு வழங்கப்பட்டதாக "மாங்கனாய் கல்வெட்டு" என்ற கல்வெட்டு கூறுகிறது. மேலும், இந்த பகுதிக்கு தீங்கு செய்பவர்களுக்கு துன்பம் நேரிடும் என்று விநாயகர் மற்றும் வைணவ மரபில் வந்த புத்தர் மேல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருக்கோணமலை வரலாற்றின் நீண்டகால சுவடுகளைக் கொண்ட பிரதேசமாக இந்த பகுதி காணப்படுகின்றது. 

குறிப்பாக சாம்பல்தீவு என்ற பகுதி திருக்கோணேச்சரத்துடனும் தொடர்புடைய பகுதியாகவும் உள்ளது. திருக்கோணேச்சர ஆலயத்தில் யாகங்கள் செய்த போது அங்கிருந்து சாம்பல் கொண்டு வந்து கொட்டப்பட்ட பகுதியில் "சாம்பல்தீவு" என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாறான தமிழ் வரலாற்றுச் சுவடுகளை கொண்ட பகுதி இன்று பௌத்தமயமாக்கலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. 

முன்னைய ஆளுநர் அனுராதா ஜகம்பத் காலத்தில், சாம்பல்தீவு குடா பகுதியை மையப்படுத்தி, சுமார் 400 ஏக்கர் காணியை "கண்டல் நிலங்களை பாதுகாத்தல்" என்ற போர்வையில் கையகப்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டது. சாம்பல்தீவு சந்தியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு, அதற்கு காவலாக இரண்டு பொலிசார் நிற்க செய்யப்பட்டு, அரச பணம் வீணாக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. செந்தில் தொண்டமானின் நியமனத்தில் பின் குறித்த காணி அபகரிப்பு சற்று ஓய்வுக்கு வந்துள்ளது.

அண்மைக்காலங்களில் ரணில் அரசாங்கம் இந்தியாவுடனான தனது நட்பு தளத்தை கையாள்வதற்கு திருகோணமலையை அடகு வைத்துள்ளது. இந் நிலையில், திருகோணமலையில் எரிசக்தி உட்பட சக்தி தொடர்பான செயல்திட்டங்களை இந்தியா சார்ந்து முன்னெடுக்க முயன்று வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான முறுகல் நிலைகளும், இனக் கலவரத்திற்கான ஆரம்பங்களும் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு பாதகமாக அமையும். பிக்குகளின் பிடிவாதம் அரசை மீண்டும் நடுத்தெருவுக்கு கொண்டு செல்லும்.

திருகோணமலை பெரியகுளம் சந்தியில் இன நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் அமைக்கப்படவிருக்கும் பௌத்த பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு 03.09.2023 ஞாயிற்றுக்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று திருகோணமலை, சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் அடங்கலாக காலி முகத்திடல் அரகலய போராட்டத்தின் தமிழ் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந், திருகோணமலை வாழ் பொதுமக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

பெரியகுள சந்தியில் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கின்ற விகாரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக திருகோணமலை சாம்பல்தீவு சந்தியில் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் திருகோணமலையின் நிலாவெளி பிரிவு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் திருகோணமலை நீதவான் நிதிமன்றினால் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு 14 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடையுத்தரவை போராட்டக் களத்தில் வாசித்து போராட்டக் காரர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தினர். 

இதனால் நிலாவெளி காவல்துறை பிரிவினை தவிர்த்து அதற்கு அருகாமையில் திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்குள் அடங்குகின்ற சாம்பல்தீவு பாலத்திற்கு அப்பால் சென்று போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தார்கள். 

எனினும் இந்த போராட்டத்தில் திருகோணமலை தமிழரை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் இருக்கையை வைத்திருக்கும் தமிழ் அரசு கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

குறித்த பகுதியில் தமிழ் மக்கள் செறிவாக வாழ்வதனால் அந்தப் பகுதியில் தேவையற்ற விதத்தில் விகாரை அமைப்பதன் மூலம் இன நல்லிணக்கத்தை குழப்ப வேண்டாம் என்ற தொனிப் பொருளில் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்துகளை முன்வைத்தனர். 

திருக்கோணமலை தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்றும், எனினும் சரியான முறையில் தமிழ் தலைவர்களால் திருக்கோணமலை தொடர்பான விடயங்கள் கையாளப்படுவதில்லை என்றும், திருக்கோணமலை மக்களை சரியான முறையில் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்வைத்னர்.

இவ்வாறான அரச நிகழ்ச்சி நிரல் இனங்களுக்கு இடையேயான சுமூக நிலையை குழப்புவதாக அமைந்துள்ளது. மேலும் 13 வது அரசியலமைப்புச் சட்டம் இனப் பிரச்சனைக்கு தீர்வு என்று சொல்லப்படுகிறது. அந்த சட்டத்தின் ஊடாக அதியுச்ச அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்ற மத்திய அரசின் பிரதிநிதியான ஒரு மாகாண ஆளுநரின் அதிகாரம் கூட பிக்குகளுக்கு முன்னால் செல்லுபடி அற்றதாக காணப்படுவது இந்நிகழ்வு மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் 13 ஆம் திருத்ம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வாக முடியும்?

பேரினத்தை சேர்ந்தவர் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியை அவமதித்து ஒருவர் தனக்கு வேண்டியதை பலாத்காரமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். அதே போன்று மற்றைய இன மக்கள் இந்த நாட்டில் செய்வதென்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. 

"ஒரு நாடு பல சட்டங்கள்".


ஆரணியன்-

நிமிர்வு புரட்டாதி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.