இயற்கை வழியில் நெற்செய்கை


நெற்செய்கை தொடர்பிலும், பலபயிர் சாகுபடி தொடர்பிலும் விவசாய திணைக்களத்தின் பண்ணை ஒலிபரப்பு சேவையின் நேரலைக்கு கடந்த 14.07.2023 அன்று  தமிழ்நாட்டு சூழலியலாளர் இயற்கை விவசாய விஞ்ஞானி ரேவதி   அவர்கள் வழங்கிய தகவல்களின் முக்கிய பகுதிகளின் இரண்டாம் பகுதியை இங்கே தருகிறோம். 

நாங்கள் 2005 களில் இருந்தே நிறைய நெற்செய்கை விவசாயிகளுடன் பயணம் செய்திருக்கிறோம். மேட்டு நிலத்தில், தண்ணீரே இல்லாத நிலத்தில் கூட நெற் செய்கையை எப்படி செய்வது என்று நாங்கள் கருத்து பரிமாற்றம் செய்திருக்கிறோம். அந்த விவசாயிகள் அதனை செய்தும் காட்டி இருக்கிறார்கள். நிறைய முற்போக்கு விவசாயிகளை நாங்கள் இந்த பயணத்தில் கண்டிருக்கிறோம். மிகவும் நம்பிக்கை தரக் கூடியதாக அந்த பயணம் இருந்தது.

நெற் செய்கையை பொறுத்தளவில் முக்கியமாக மூன்று விடயங்களை நாங்கள் சொல்கிறோம். நிலத்தை தயார் செய்யும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிலத்தை சமப்படுத்த வேண்டும். நிலம் மேடு பள்ளங்கள் இல்லாமல் சீராக சமமாக இருந்தால், தண்ணீர் தேங்காமல் இருந்தாலே அங்கு விதைக்கக் கூடிய ஒவ்வொரு விதையையும் நாங்கள் காப்பாற்ற முடியும் அதனை முதலில் இருந்து அறுவடை வரைக்கும் கொண்டுவர முடியும். ஆகவே நெற் செய்கையில் முக்கியமானதாக நாங்கள் கருதுவது சமமான பலகை போன்ற நிலப்பரப்பு. அது எவ்வளவு தூரம் சாத்தியமோ அவ்வளவு தூரம் அதனை செய்ய வேண்டும். 

இரண்டாவது அடிப்படை தேவை விதைகள். தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை நாங்கள் பயன்படுத்த வேண்டும். முளைப்புத்திறனை சான்றுபடுத்திய விதைகளை கடைகளில் வேண்டலாம் . அல்லது அவை எங்களிடம் இருக்கலாம். ஆனால் அதற்கும் மேலாக சரியான நிறை உடைய விதைகள் எங்களுக்கு தேவை. எல்லா விதைகளும் தேர்வு செய்யப்பட்ட விதைகளாக இருந்தால் நல்லது. அதாவது 22mg நிறையுள்ள விதைகளாக எடுத்தால் நல்லது. ஆனால் அவ்வாறு தேர்ந்தெடுப்பது சாதாரண விடயம் அல்ல.

அதற்கென நாங்கள் ஒரு எளிமையான முறையை வடிவமைத்து இருக்கிறோம். 15 லீற்றர் தண்ணீரில் 1 லீற்றர் உப்பை கலந்து அதன் அடர்த்தியை கூட்டி ஒரு திரவத்தை தயார் செய்கிறோம். அதில் ஒரு முட்டையை வைத்தால் அந்த முட்டை மிதக்க வேண்டும். பிறகு விதைக்க வேண்டிய நெல்லை அதிலே கொட்டி நன்றாக கலந்தால் அவற்றில் எவை அதிக நிறையை கொண்டு இருக்கின்றனவோ அவை கீழே போய்விடும்.

நிறைகுறைவாக இருக்கின்ற விதைகளும் முளைக்க கூடும். ஆனால் நாங்கள் எதிர்பார்க்கின்ற விளைச்சலை தராது. அதனால் நிறை குறைவான நெல்லை தவிர்த்து அடர் திரவத்தில் கீழே படிந்து இருக்கின்ற நெல்லை எடுக்கிறோம். அவற்றை உடனடியாக நன்னீரில் கழுவுகிறோம். நோய்கள் தாக்காதவாறு சூடோமோனஸ் நுண்ணுயிர் கரைசலிலோ அல்லது நாங்களே தயாரித்து வைத்திருக்கின்ற நுண்ணுயிர் கரைசலிலோ அந்த நெல்லை அரைமணி நேரம் ஊற வைத்து விடுகிறோம். இதனால் அந்த விதைகளுக்கு ஒரு உயிராற்றல் தூண்டப்படுகிறது. அதற்கு எந்தவிதமான பூஞ்சை நோயோ அல்லது பூச்சி தாக்குதலோ ஏற்படாத வண்ணம் ஒரு காப்பாக இருக்கிறது.

இப்பொழுது நிலமும் தயார், விதைகளும் தயார். அடுத்து நாங்கள் வரிசை நடவினை அறிமுகப்படுத்துகின்றோம். எங்களுடைய பகுதிகளில் நாங்கள் ஏக்கர் ஒன்றுக்கு 5 கிலோ விதை நெல்லை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஏனென்றால் இவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்ட விதை நெல் வரிசை நடவு செய்யும் போது இடைவெளிகள் சீராக இருப்பதனால் நிறைய தூர் வைக்கும். வேகமாக 45 நாட்களுக்குள் இடைவெளி மூடப்பட்டு விடும். தூரடிப்பது வேகமாக நடப்பதனால் நெருக்கி நட வேண்டும் என்கிற அவசியம் இருக்காது. நெருக்கி நடுவதனால் கிடைக்கின்ற பயன்களை விட அதிகமான தூர்களையும் அதிகமான விளைச்சலையும் எடுத்து பலமுறை நிரூபித்து இருக்கிறோம். இந்த மூன்று விடயங்களும் அடிப்படையானவை. 

அடுத்து, வரப்புக்களை சுத்தம் செய்தல் முக்கியமானது. நான் பார்க்கின்ற ஒவ்வொரு இடத்திலும் வரப்புக்களை நன்றாக வெட்டி கட்டி செய்கிறார்கள். பின்னர் புல்லும் குப்பையுமாக காணப்படுகின்றன. அங்கு வளரும் அறுகு, கோரை போன்ற புல்வகைகள்  பூச்சிகள் வந்து இருப்பதற்கு அடித்தளமாக இருக்கின்றன. அங்கு பூச்சிகள் இருந்து வளர்ந்து பெருகி நெல் விளைந்ததும் புல்லில் இருந்து நெல்லிற்கு தாவி எங்களுக்கு பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே நெற் செய்கையை ஆம்பிப்பதற்கு முன்னரே வரப்பை சுத்தம் செய்துவிட்டு அந்த வரப்பில் அவரை, துவரை, கடலை, உளுந்து, பயறு இதுபோன்ற பயிர்வகை செடிகளை வளர்க்க வேண்டும். இவற்றின் இலைகள் மென்மையாக இருப்பதனால் பெரும்பாலான பூச்சிகள் நெல்லை தவிர்த்து இச்செடிகளுக்கு போய் விடுகின்றன. அங்கு தீமை செய்கின்ற பூச்சிகள் உட்கார்ந்து சாப்பிட வரும்போது ஏனைய இரை விழுங்கி பூச்சிகள் அவற்றை வேட்டையாடுகின்றன.

மேலும், பூச்சிகளை பிடிக்க கூடிய பறவைகள் உட்காரும் வகையில் தென்னமட்டை, பனைமட்டை பொன்றவற்றை ஒரு பத்து இடங்களில் சேற்றுக்குள் ஊன்றி விட வேண்டும். அதில் சின்ன சின்ன பறவைகள், மைனாக்கள் , கருங்குருவிகள் போன்றன வந்து உட்கார்ந்து பூச்சி பிடிக்கின்றன. இரவில் ஆந்தைகள் வந்து உட்கார்ந்து எலிகளை கட்டுப்படுத்துகின்றன. அதேபோல நாங்கள் விளக்கு பொறியை பயன்படுத்துகிறோம். மாலை 6 மணிக்கு ஒரு விளக்கை எரியவிட்டு கீழே சில சொட்டுகள் வேப்பெண்ணை கலந்து தண்ணீரும் வைத்து விடுகிறோம். விளக்கினால் பூச்சிகள் பெருமளவில் கவரப்பட்டு அந்த நீரில் விழுந்து இறந்து போகின்றன. இதனால் அவற்றின் பரவுதல் வெகுவாக கட்டுப்படுகிறது.  நெல் வயலில் மஞ்சள் பலகைகளையும் வைக்கிறோம். இதன் மூலமும் பூச்சிகளின் பெருக்கத்தை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.

களையை எடுப்பதற்கு கோனோவீடர் (Cono Weeder) எனும் கருவியை பயன்படுத்துகிறோம். 2 நெல் வரிசைகளுக்கு இடையில் இந்த கருவியை விடும் போது களைகள் வெட்டப்பட்டு மண்ணிற்குள் புதைக்கப்படுகின்றன. இதனால் வரிசைகளுக்கு இடையில் இருக்கின்ற மண் திரும்பவும் உழப்படுகிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து வெள்ளை வேர்கள் பெருக்கம் அடைந்து உயிரோட்டமான வெள்ளை வேர்கள் அதிக தூர்கள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்றது. எங்களுடைய இந்த செயற்பாட்டில் 45 நாட்களுக்குள் இரண்டு முறை களை கருவியை உருட்டுகிறோம். இந்த கருவி எளிமையாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் இரசாயனங்களோ எண்ணெய் செலவுகளோ தேவையில்லை. ஒரே ஒரு பெண்மணியோ அல்லது சில பெண்களோ சேர்ந்தார்கள் என்றால் ஒரு ஏக்கரில் உள்ள களையை ஒரு நாளைக்குள் அகற்ற முடியும். அப்படி இரண்டே தடவை இந்த களை கருவியை நெல் வரிசை இடைவெளிக்குள் உருட்டுவதன் மூலமாக அதிக தூர்களை நாங்கள் உருவாக்க முடியும். இவ்வாறு ஒருங்கிணைந்த முறையை இங்கு நிறைய பேருக்கு பயிற்றுவித்திருக்கிறோம். 

மேலும், முதல் கட்டத்திலேயே நிலம் திறந்து இருக்காமல் நிலப்போர்வையை உருவாக்க நெல் வயலில் அசோலாவை தூவி விடுகிறோம். இவ்வாறு நிலப்போர்வை இருப்பதால் களைகள் வளராமல் அசோலா கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில் நைதரசனை நிலத்தில் சேர்க்க கூடியதாக இருக்கிறது. களை எடுக்கும் கருவியை பிரயோகிக்கும் போது அசோலா நிலத்தில் புதைக்கப்படுவதால் பல மூட்டைகள பசளை போட்டதற்கு சமனாகிறது.

இரசாயன உரங்கள் தூவும் போது காற்றினால் பெருமளவு வெளியேறி விடுகிறது. அதேபோல யூரியா போன்ற பசளைகள் நீரில் விரைவாக கரைய கூடியவை என்பதால் கரைந்து நிலத்தின் ஆழத்திற்கு சென்று விடுகின்றன. நாங்கள் பாவிக்கின்ற பெரும்பாலான இரசாயனங்கள் பயிர் சாப்பிட கூடிய இடத்தில் அதனுடைய வேர் இருக்கின்ற இடத்தில் இருப்பதில்லை என்பது தான் எங்களுடைய ஆராய்ச்சியில் முடிவு. நாங்கள் போடக்கூடிய இரசாயன பசளைகளில் 3% தான் பயிர்களுக்கு கிடைக்கிறது.

உயிர்வேலியில் கிளிசறியா, வாதனாரி  போன்ற பலவகையான இலை தழைகளை கொடுக்க கூடிய, வெட்ட வெட்ட தொடர்ந்து வளர கூடிய மரங்களை வைத்திருக்கிறோம். நீர் பாய்கின்ற வாய்மடையில் ஒரு குழியை வெட்டி ஒரு சாக்கில் அந்த இலைகளையும் சாணத்தையும் கலந்து வைத்து விடுகிறோம். தண்ணீர் உள்ளே பாயும் பொழுது இந்த இலைகள் எல்லாம் அழுகி, தாவர, விலங்கு கழிவுகள் எல்லாம் கலந்த ஒரு அருமையான அடர் பச்சை நிறமாக பாயும். அந்த தண்ணீரில் நெல் நிறைய தூர் அடித்து செழித்து வளர்ந்து அதிக விளைச்சலை தரக் கூடியதாக இருக்கிறது.

இப்படியாக நெல் செய்கையில் வெளியில் இருந்து எந்த பொருளையும் கொண்டு வராத அளவிற்கு ஒரு முறைமையை வடிவமைப்பதற்கு சொல்லி கொடுக்கிறோம்.

ஒருவேளை மழையே வரவில்லை என்றாலும் அசோலா போன்ற அந்த நிலப்போர்வை இருப்பதனால் வரட்சியை தாங்கி வளரும். இதே சமயத்தில் நெல் செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்னரே பலவகையான ஊக்க மருந்துகளை தரக்கூடிய தாவரங்களை விருத்தி செய்யவதற்கு சொல்லி தருகிறோம். மிகவும் செலவு குறைந்த இலகுவில் கிடைக்க கூடிய இலை தழைகளில் இருந்து தான் இவற்றை சொல்லி தருகிறோம். இவை எல்லாவற்றையும் நீங்கள் தயாரித்து இருந்தீர்கள் என்றால் வரப்போகின்ற பெரும்போகத்தில் பெருமளவு விளைச்சலை சுலபமாக பெற முடியும். 

ஒரு சிறிய நிலத்தில் நீங்கள் இதனை ஆரம்பித்தால் உங்கள் கண்முன்னாலேயி உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும். புதிய முறைக்குள் இலகுவில் நுழைந்து விடுவீர்கள். ஒரு சில தடவைகள் செய்த பின்னர் தற்சார்பான வேளாண்மைக்குள் போய்விடலாம். இந்த நடைமுறைகளை சொல்லி கொடுக்கும் போது விவசாய வேளாண்மை செய்பவர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைகிறார்கள். இப்படி ஒரு முறைமை இருக்கிறதா என்று உற்சாகமாக ஆர்வமாக இருக்கிறார்கள். இது எங்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

இரசாயனங்கள் இல்லாமல் விவசாயம் செய்து உலகில் உள்ள அனைவருக்கும் உணவளிக்க முடியுமா? அது சாத்தியமில்லை என்று சிலரது கருத்து இருக்கிறது. நிலங்கள் மலடாகி கொண்டே வருகின்றன. உலகளவில் 30% நிலங்கள் உப்பாகி விட்டன. அதனால் இரசாயனங்களை பயன்படுத்தினால் தான் விளைச்சல் என்று சொல்வது சரியான ஒரு வார்த்தை இல்லை. அதனுடைய பொருள் சரியில்லை என்பதை உலகம் நிறைய புரிய ஆரம்பித்திருக்கிறது. 

நிலங்களுக்கு தாவர கழிவுகளும் விலங்கு கழிவுகளும் தான் அதிகமாக தேவைப்படுகின்றன. இந்த கழிவுகளினுடைய சுழற்சி தான் எங்களுடைய வேளாண்மைக்கு அத்திவாரம். மண்ணில் இலட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்கின்றன. அவை தான் பல செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. நுண்ணுயிர்கள் இல்லாத உயிரோட்டம் இல்லாத மண்ணில் நாங்கள் எவ்வளவு போராடினாலும் அங்கு எல்லா செயற்பாட்டையும் கொண்டு செல்ல முடிவதில்லை. 

இரசாயன வேளாண்மையை தவிர்க்க வேண்டிய கால கட்டத்தை நோக்கி நாங்கள் எவ்வளவோ தூரம் வந்து விட்டோம். சவால்கள் நிறைந்த உலகத்தில் அதிகம் செலவு செய்துவிட்டு அதிகம் விளைச்சல் வரவில்லை எனும்போது செலவழித்த பணத்தை விவசாயிகள் எடுக்க முடியாமல் உலகம் முழுவதும் வேளாண்மை செய்பவர்கள் கடனாளிகளாகின்றனர். தற்கொலை செய்திருக்கிறார்கள். இது உலகம் முழுவதும் நடக்கின்ற போக்கு. எனவே இது மாற்றப்பட வேண்டி இருக்கிறது. இழந்த பூமியை ஒரு சில மாதங்களில் அற்புதமாக உருவாக்க முடியும். இது விழிப்புணர்வுடன் பல தொடர் நிகழ்ச்சியாக செய்ய வேண்டிய வேலை. இதற்கு உங்களை தயார்ப்படுத்திக் கொண்டால் ஒரு நிரந்தர வேளாண்மைக்குள் போய்விடலாம். 

இரசாயன வேளாண்மையில் ஒவ்வொரு தடவையும் வெளியில் இருந்து பொருட்களை கொண்டுவர வேண்டும். உங்களுடைய சுமை குறைய போவதில்லை. பூச்சிகளும் தமது எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொண்டு விட்டன. எங்களுடைய ஆராய்ச்சியில் கடையில் வாங்க கூடிய எந்தவொரு இரசாயனத்தாலும் பூச்சிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் பூச்சிகளை கட்டுப்படுத்துவது போராட்டமாக இருக்கிறது. இந்த போராட்டமே எமக்கு தேவையில்லை.

களையை கட்டுப்படுத்துவதற்கு நிலத்தை மூடி வைத்தால் நிலத்திற்கு கீழே இருக்க கூடியவற்றிற்கு வெயில் கிடைக்காமல் களை இயல்பாகவே கட்டுப்படுத்தப்படுகிறது. விருப்பமான களையை நாங்கள் உருவாக்கி விட்டால் அது எங்களது தேர்வாக மாறி விடுகிறது. நிலத்தில் உளுந்தோ, பயறோ, கொள்ளோ ஏதாவது ஒரு பசுமையான செடியை வளர்க்கும் போது அது நிலத்தில் திரும்பவும் சத்துக்களை வழங்கி நிலத்தை வளப்படுத்துகிறது.

இரசாயன பயன்பாட்டினால் ஒரு துளி கூட பயன் அடைய முடியாது. களை கொல்லி அடிக்கப்பட்ட அமெரிக்க வயல்களில் இராட்சச களைகள் உருவாகி விட்டன. அந்த களையை அழிக்கவே முடியவில்லை. அங்கும் நிறைய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். நாங்கள் பார்க்கும் போது மலைத்துப் போனோம். 5, 6 அடி அளவில் இறப்பர் மாதிரியான இலைகளுடன் மிகப்பெரிய களைகள் கட்டுப் படுத்த முடியாத அளவிற்கு வலுவாகி விட்டன. 

உங்களுடைய நிலத்தை ஒரு சூழலுக்கு ஏற்ற நிலமாக, சமநிலையானதாக, பல பயிர் சாகுபடி செய்கின்ற நிலமாக, நிலப்போர்வை வடிகாலமைப்பு உள்ளதாக வளப்படுத்தி கொண்டீர்கள் என்றால் சுலபமாக இலாபம் தரக் கூடிய வேளாண்மைக்குள் போக முடியும். இதனை இலட்ச கணக்கான ஏக்கர்களில் பல நாடுகளில் செய்து வெற்றி கண்டதனால் தான் எங்களது பயணம் இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. அத்தோடு நம்பிக்கை தரும் செய்தி என்னவென்றால் உலகில் உள்ள அனைவருக்கும் நிச்சயம் சோறு கொடுக்க முடியும். 

இன்றைக்கும் இரசாயன வேளாண்மை நடந்த இடங்களில் மக்கள் வளமாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இரசாயன வேளாண்மையை மேற்கொண்ட இந்தியாவில் கூட 40 கோடி மக்கள் ஒருவேளை உணவு உண்பவர்களாக இருப்பதாக தான் புள்ளி விபரங்கள் சொல்கின்றன. ஆகவே இந்த வேளாண்மை பெரியளவில் கொடுத்திருக்கிறதா என்றால் உண்மையாக இல்லை என்பதே பதில். இந்தியாவில் அரிசியும் கோதுமையும் முதன்மைப்படுத்தப்பட்டது. அதனால் பல பயிர்களின் சத்தையையும் அவை எடுத்து கொண்டன. பெரிய நிலப்பரப்பில் இந்த இரண்டு பயிரும் விளைந்ததனால் இந்தியாவில் அரிசியும் கோதுமையும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் 42% மக்களும் குழந்தைகளும் அவதிப்படுகிறார்கள். 

ஆகவே ஊட்டசத்து பற்றாக்குறையை ஒழிப்பது என்பதுவும் நாங்கள் எட்ட வேண்டிய இலக்கு. அதில் பல பயிர் சாகுபடி, பல்லுயிர் பெருக்கம் என்பது அத்தியாவசியம். உணவு சமநிலையாக இருந்தால் மட்டும் தான் நோய் இல்லாத ஒரு சமூகத்தையும் வளமான எதிர்காலத்தையும் உருவாக்க முடியும். வெறும் சோறு மட்டும் போதாது.

இயற்கை முறையில் நாங்கள் சொல்கின்ற உயிர்த்தெழும் பூமி வேளாண்மையில் நிச்சயமாக எல்லோருக்கும் உணவு கிடைக்கும். காய்கறி கிடைக்கும். பழங்கள் கிடைக்கும். கீரை கிடைக்கும். ஒரு சமநிலையான உணவு கட்டாயமாக கிடைக்கும். இந்த இலக்கு தான் நாங்கள் அடைய வேண்டிய முக்கியமான இலக்கு. தொடர்ந்து பயணத்தில் சாதித்து கொண்டே தான் இருக்கிறோம். எங்களுடன் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இணைந்து இருக்கிறார்கள்.

தொகுப்பு - ரஜீந்தினி 

நிமிர்வு புரட்டாதி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.