தொல்லியலில் மதமும் அரசியலும்... சட்டம் சொல்வதென்ன?


யாழ்ப்பாணம் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், சட்டத்தரணியுமான கலாநிதி கு. குருபரன் அவர்கள் அந்த கற்கை நிலையத்தின் காணொளி ஊடகம் ஊடாக பொதுமக்களுக்கு சட்டங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் அறம் பேசு என்கிற தொடரில் பேசி வருகிறார்.  அதில் இரண்டாவது அத்தியாயமாக "தொல்லியலில் மதமும் அரசியலும்... சட்டம் சொல்வதென்ன?" என்ற தலைப்பின் கீழ் பேசிய விடயங்களின் தொகுப்பு வருமாறு. 

இந்த தலைப்பினுடைய முக்கியத்துவம் பற்றி எதையும் விரிவாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சமகாலத்திலே குருந்தூர் மலையை ஒட்டி நடைபெற்ற சம்பவங்கள் அது தொடர்பாக நடைபெற்ற வழக்கு, அதை விசாரித்த நீதிபதி பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு சென்றுள்ளமை போன்றவை தொல்லியல் திணைக்களத்தினுடைய அதிகாரங்கள் எவை என்பது தொடர்பாக பொதுத்தளத்திலே பல கேள்விகளை முன்னிறுத்துகின்றன. அதற்கு ஒரு மேலோட்டமான விடையை வழங்கும் நோக்கிலாவது இந்தக் காணொளியை பதிவு செய்கின்றோம். 

தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரங்கள் தொல்பொருள் சின்னங்கள் தொடர்பான சட்டம் ஆங்கிலேயரினுடைய ஆட்சிக் காலத்திலே 1940 ஆம் ஆண்டு 9 ஆம் கட்டளை சட்டமாக நிறைவேற்றப்பட்டது. 1955 ஆம் ஆண்டு அது திருத்தப்பட்டது. பின்னர் நீண்டகாலம் திருத்தப்படாமல் இருந்து 1998 இலும் பின்னர் இறுதியாக 2005 ஆம் ஆண்டிலும் இந்த சட்டம் திருத்தப்பட்டது. அதன் பிரகாரம் தொன்மை என்ற சொல்லின் வரைவிலக்கணமானது அந்த சட்டத்தில் பிரிவு 48 இல் சொல்லப்பட்டுள்ளது. 

அதாவது தொன்மை (antiquity) என்ற வார்த்தைக்குள் இரண்டு விடயங்களை சேர்க்கின்றார்கள். ஒன்று தொன்மையான கட்டிடம் (ancient monuments) மற்றையது தொன்மையான பொருட்கள். 

தொன்மையான கட்டிடம் என்று சொல்லப்படுவதற்கு வரைவிலக்கணம் 1815 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னரான கட்டிடங்கள் தொன்மையான கட்டிடங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த தீவின் கட்டுப்பாடு முழுமையாக ஆங்கிலேயரினுடைய ஆட்சிக்கு  வந்த நாளிற்கு முற்பட்ட காலப்பகுதியினை, அந்த  காலப்பகுதிக்கு உரிய கட்டிடங்களை இதனுள் வைத்து நோக்க வேண்டும் என்பது தான் இந்த தொல்லியல் சட்டத்தினுடைய ஏற்பாடாக இருக்கிறது. 

இந்த தொல்லியல் சட்டத்தினுடைய பிரிவு 2 இன் பிரகாரம் ஏதேனும் காணியில், அது தனியார் காணியாக இருக்கலாம், ஏதாவது தொன்மையான பொருள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மேல் சொல்லப்பட்ட வரைவிலக்கணத்திற்கு உட்படும் பட்சத்தில் அந்த பொருள் மீது நீங்கள் உரிமை கோர முடியாது. அந்த தொல்பொருள் அரசுக்குச் சொந்தமானது. வேண்டுமென்றால், அந்தப் பொருளை அது எந்த தனி நபரினுடைய காணிக்குள் இருந்து பெறப்பட்டதோ அவரிடம் அதற்குரிய சந்தை விலையை கொடுத்து அரசாங்கம் வாங்கலாம் என்று சட்டம் ஏற்பாடு செய்கின்றது. ஆனால் அரசாங்கம் அதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படவில்லை.

இந்த சட்டத்தினுடைய முதலாவது பாகம் இந்த பொருட்களை கண்டுபிடித்தல் பற்றியதாக இருக்க, இரண்டாவது தொல்லியல் ரீதியான அகழாய்வை யார் செய்யலாம் என்பது தொடர்பாக இருக்கின்றது. அதன் பிரகாரம் தொல்லியல் திணைக்களத்தினுடைய பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படுகின்ற அனுமதிப்பத்திரம் இன்றி எவரும் தொல்லியல் அகழாய்வு செய்ய முடியாது. 

பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை என்று ஒன்று இருந்தாலும் அங்கு தொல்லியல் வேலை செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் கூட தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெறாமல் தொல்லியல் அகழ்விலே ஈடுபட முடியாது.

அவ்வாறாக அனுமதிப் பத்திரம் பெறாமல் செய்யப்படுகின்ற அகழாய்வுகள் தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றங்கள் என்று சொல்லப்படுகின்றது. இவை தண்டனைக்குரிய குற்றங்களாக 1998 இலும் 2005 இலும் வந்த திருத்தங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதன் பிரகாரம் குறைந்தது 2 வருடங்களும் ஆகக் கூடியதாக 5 வருடங்களும் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம். அதிலே குறிப்பாக சொல்லப்படுகின்ற விடயம் என்னவென்றால் வெறுமனே அனுமதியின்றி செய்யப்படுகின்ற அகழாய்வுகள் மாத்திரமல்லாமல் தொல்லியல் சின்னங்களை அல்லது தொல்லியல் பொருட்களை பாதித்தல், அவற்றை அழித்தல், உருமாற்றம் செய்தல் போன்ற விடயங்கள் கூட குற்றத்திற்கு உரிய விடயங்களாக சொல்லப்பட்டுள்ளன.

இதிலே மிக முக்கியமான விடயம் இந்த சட்டத்தினுடைய பிரிவு 15C இன் கீழ் குறித்த குற்றமானது பிணை வழங்கப்பட முடியாத ஒரு குற்றமாக சொல்லப்படுகிறது. அதாவது தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட இடத்திற்குள் நீங்கள் நுழைந்து ஒரு வேலையை செய்வீர்களாக இருந்தால் அல்லது அங்கு தொல்லியல் சின்னத்தில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக நீங்கள் செயற்படுவதாக கருதினால் அதற்காக நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்களுக்கு பிணை வழங்கப்பட முடியாது என 15C ஏற்பாடு சொல்கின்றது. 

இது ஒரு முக்கியமான விடயம் ஏனென்றால் பிணை வழங்கப்பட முடியாத குற்றங்கள் என்று மிகச் சிறிய அளவிலான குற்றங்கள் தான் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றங்கள் அல்லது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவது போன்ற குற்றங்கள் என்று மிக குறிப்பிட்ட குற்றங்கள் தான் பிணை வழங்கப்பட முடியாத குற்றங்களாக சொல்லப்படுகின்றன. 

அந்த வகையிலே இந்த 15 C இன் கீழ் தொல்லியல் விடயங்கள் தொடர்பாக இழைக்கப்படுகின்ற குற்றங்களும் பிணை வழங்கப்பட முடியாத குற்றங்களாக இருக்கின்றன என்பது பலரும் அறியாத உண்மை.

அடுத்தது மிக முக்கியமான விடயம், 1815 க்கு முற்பட்ட அதாவது இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னரான காலப்பகுதிக்கு உரிய அந்த கட்டிடங்கள் தான் தொல்பொருள் சின்னங்கள் எனப்படும். ஆனால் பிரிவு 16 இன் பிரகாரம் எல்லையில்லா அதிகாரம் ஒன்று அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஒரு வர்த்தமானி  அறிவித்தல் மூலமாக 1815 பங்குனி மாதம் 2 ஆம் திகதிக்கு பிற்பட்ட ஒரு கட்டிடத்தையும் தொன்மையான கட்டிடம் என அறிவித்து பிரசுரிக்கும் ஏற்பாடுகளை சட்டத்திலே கொண்டு வந்திருக்கிறார்கள். 

குருந்தூர் மலையின் பிரச்சனை பற்றி பேசுவோம். அங்கு இருக்கக்கூடிய விகாரையை இந்த பிரிவு 16 இன் கீழ் தான் 2013 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15 ஆம் திகதி தொல்லியல் திணைக்களத்தை உள்ளடக்கிய தேசிய பாரம்பரிய அமைச்சுக்கு பொறுப்பாக இருந்த (minister for national heritage) கலாநிதி ஜெகத் பாலசூரிய ஒரு வர்த்தமானி அறிவித்தலின் கீழ் ஒரு தொன்மைக்கு உரிய சாதனமாக அறிவித்திருக்கிறார்.

இதிலே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல தொல்லியல் சின்னங்களுக்கான வரைவிலக்கணம் 1815 க்கு முற்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் குருந்தூர் மலையில் இருக்கக் கூடிய விகாரையானது மகாவம்ச காலத்திலிருந்து இருக்கின்ற ஒரு விடயம் என்று சொல்லப்பட்டாலும் அமைச்சரால் விடுக்கப்பட்ட இந்த அறிவித்தலானது பிரிவு 16 இன் கீழ் செய்யப்பட்ட ஒரு பிரகடனம் என்பதனை கவனிக்க வேண்டும். அது 1815 க்கு பின்னரான ஒரு தொல்லியல் சின்னம் என்று தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

எனவே இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் குருந்தூர் மலை விகாரை 1815 க்கு பிற்பட்டது என்பதாகத் தான் பொருள்கோடல் செய்ய  வேண்டும்.

இதற்கு பின்னால் உள்ள உண்மையை நாங்கள் விளங்கி கொள்ள வேண்டும். பிரிவு 16 இல் வரலாற்று ரீதியாக, விஞ்ஞான ரீதியாக உறுதிப்பாடு இல்லாமல் ஒரு குறிப்பிட்டதை தொல்லியல் சின்னம் என்று அறிவிப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. எந்த அளவுகோல்களின் அடிப்படையில் அவை  தொல்லியல் சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் சட்டம் எதுவும் சொல்லவில்லை. 

ஆகவே ஒரு அமைச்சர் தான்தோன்றித்தனமாக தற்துணிவின் அடிப்படையிலே ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தை அல்லது பொருளை அல்லது ஒரு இடத்தை தொல்லியல் சின்னம் என்று அறிவிக்கக்கூடிய ஒரு ஏற்பாட்டை சட்டம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அந்த ஏற்பாட்டைப் பாவித்து  தான் குருந்தூர் மலையில் இருக்கக்கூடிய விகாரையையும் தொல்லியல் சின்னம் என அவர்கள் அறிவித்து இருக்கின்றார்கள் இதனை 15.08.2013 திகதியிட்ட  இலக்கம் 1823 / 73 என்ற வர்த்தமானி மூலமாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கிறது. 

இதில் இன்னொரு வினோதமான பிரிவு இருக்கிறது. அது பிரிவு 16 க்கு அடுத்ததாக வருகின்ற பிரிவு 17. ஒரு மரத்தைக் கூட தொன்மையான கட்டிடமாக கருதலாம்  என பிரிவு 17 சொல்கிறது. இது எதனை குறிக்கின்றது என்பதை உங்களால் ஊகிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இலங்கையில் மாத்திரம் தான் மரங்களை தொல்லியல் சின்னங்களாக சொல்லக்கூடிய ஏற்பாடு இருக்கிறது. ஒப்பீட்டு தொல்லியல் சட்டங்களை, வேறு நாடுகளின் சட்டங்களை படிப்பவர்கள் இதைப்பற்றி எங்களுக்கு சொல்லலாம்.

உயிர்பல்வகைமையை பேணுவதற்காக ஒரு மரத்தை பாதுகாக்க சட்டம் சொல்லலாம். ஆனால் ஒரு மரத்தை தொல்லியல் விடயமாக தொல்லியல் சார்ந்தது என்று சொல்லுகின்ற ஏற்பாடு இலங்கையில் மாத்திரம் தான் இருக்கின்றது என்பதனை பிரிவு 17 ஐ படிக்கின்ற போது விளங்கிக் கொள்ளலாம். ஆகவே உங்களுடைய வீட்டிலே வளர்கின்ற மரத்தைக் கூட தொல்லியல் சின்னமாக அறிவிப்பதற்கு இந்த சட்டத்தின் கீழே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக முக்கியமான பிரிவு பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் (protected monuments) பிரிவு. தொன்மையான கட்டிடம் அல்லாத ஒரு கட்டிடத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் இந்த 18 ஆவது பிரிவின் கீழ் முன்னறிவித்தலை வழங்கலாம். அதற்கு ஆட்சேபனைகளை யாரும் தரலாம் என்று சொல்லி அதற்குரிய சந்தர்ப்பத்தையும் வழங்கிய பின்னர் தான் ஒரு கட்டிடத்தை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கலாம். 

ஆனால் எனது பார்வையில் 18 இன் கீழ் முன்னறிவித்தல் கொடுத்து ஆட்சேபனை பெறுவதற்கான சந்தர்ப்பம் கொடுத்து அதன் பின்னர் தான் அது பாதுகாக்கப்பட்ட சின்னமாக வர வேண்டும் என்ற தேவைப்பாட்டை சட்டம் சொல்கின்றபடியால் அதை தவிர்ப்பதற்காக பிரிவு 16 இன் கீழ் போய் 1815 க்கு பிற்பட்ட குருந்தூர்மலை போன்றவற்றை கூட அவர்கள் தொல்லியல் சின்னமாக அறிவிக்கின்றார்கள். 

1815 க்கு பின்னரான தொல்லியல் சின்னம் என்ற வகைக்குள் வராத கட்டிடங்களை பாதுகாக்கப்பட்ட கட்டிடங்கள் (protected monuments) என்ற வகைக்குள் அறிவிப்பதாக இருந்தால், பிரிவு 19 இன் பிரகாரம் அதற்குரிய முன்னறிவித்தல் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் ஆட்சேபனை தெரிவித்தால், அதன் மீது விசாரணை நடாத்தி அதன் பின்னர் தான் அவ்வாறு அறிவிக்கலாம். என்று சொல்லப்படுகின்றது. அது தனியார் ஒருவரின் காணியில் இருந்தால் பிரிவு 20 ஆனது அவர்களுடன் ஒரு எழுத்து மூலமான ஒரு உடன்படிக்கைக்கு செல்ல வேண்டும் என்று சொல்கிறது. 

பிரிவு 21 முக்கியமானது. இதன் பிரகாரம் எந்தவொரு புராதன கட்டிடத்தின் மீதும் வேலை செய்வதாயின் அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறாக அனுமதி பெறப்படாவிடின் அதற்கும் ஏற்கனவே குறிப்பிட்டது போல குறைந்தது 2வருடங்களும் ஆகக் கூடியது 5  வருடங்களும் தண்டனை விதிக்கப்படும். 

இதிலிருந்து நாங்கள் அடுத்து தொல்லியல் காப்பகம் (Archeology Archive) என்ற விடயத்திற்கு வருகின்றோம். அதன் பிரகாரம் அரச காணியை தொல்லியல் காப்பகம் என்ற வகைக்குள் கொண்டு வந்து அதனை அறிவிப்பதற்கான ஏற்பாட்டைசெய்திருக்கின்றார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட பிரதேசமானது பாதுகாக்கப்பட்டது என்று சொல்லும் போது ஏக்கர் கணக்கான காணியை பற்றி பேசுகின்றோம். 

குறிப்பிட்ட பிரதேசமானது ஒரு தொன்மையான தொல்லியல் ரீதியாக முக்கியமான இடம் என்று பிரிவு 33 இன் கீழ் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமானவர் அறிவிக்கலாம். காணி ஆணையாளரின் அனுமதியோடு அல்லது காணி ஆணையாளரின் அனுமதி பெறப்படாதவிடத்து தனது துறைக்குரிய  அமைச்சரிடமிருந்து அனுமதியை பெற்று அந்த இடத்தை தொல்லியல் காப்பகமாக அவர் அறிவிக்கலாம். 

அவ்வாறாக பாதுகாக்கப்பட்ட பிரதேசம் (Archaeological Reserve) என்று அறிவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் யாரும் விவசாயம் செய்ய முடியாது, எந்தவொரு கட்டிடமும் அமைக்க முடியாது, ஒரு மரத்தையேனும் வீழ்த்த முடியாது. அவ்வாறு செய்யுமிடத்து அவர்களுக்கு எதிராக தொல்லியல் தண்டனை சட்டக் கோவையின் கீழ்   வழக்கு தொடரப்பட்டு 3 மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என இந்த சட்டம் குறிப்பிடுகின்றது.

அடுத்து பணிப்பாளர் நாயகத்தின் அதிகாரங்களை பார்ப்போம், இது மிக மிக முக்கியமானது. ஏனென்றால் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி என்பது ஒரு மிகவும் அதிகாரமிக்க பதவியாக காணப்படுகின்றது. தேசிய தொல்லியல் கொள்கையை உருவாக்கி கொள்வதற்கான பொறுப்பை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, அதை உருவாக்கி அதை அமுல்படுத்துகின்ற பொறுப்பு பணிப்பாளர் நாயகத்தினுடையது. 

இரண்டாவது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியமான பிரதேசங்கள் எவை என்பதை பட்டியல் இட்டு கொள்வதற்கான அதிகாரம் அவருடையது.  அவற்றை பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்குமான பொறுப்பு  அவருடையது. அது தொடர்பான ஆய்விலே ஈடுபடுவதற்கான பொறுப்பு அதிகாரம் அவருக்கு இருக்கின்றது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டலை அவர் செய்யலாம். 

இவ்வாறான இடங்களுக்கு உள் நுழைவதற்கான கட்டணங்களை விதிக்கலாம். அபிவிருத்திகள் செய்யும் போது அதனால் தொல்லியலிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன என்பது தொடர்பில் ஆராய்ந்து  அது தொடர்பில் அரசாங்கத்திற்கும் உரிய தரப்பினருக்கும் ஆலோசனை வழங்குகின்ற பொறுப்பும் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். தொல்லியல் என்கின்ற விடயம் 13 ஆவது திருத்தத்திலே  சொல்லப்படுகின்ற 9 ஆவது பிரிவிலே மத்திய அரசாங்கத்திற்கு உரிய பொறுப்பாக இருக்கிறது. ஆகவே (archaeological policy) நிறைவேற்றுவதற்கான பொறுப்பும் மத்திய அரசாங்கத்திற்கு உரியது அல்லது மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்படுகின்ற தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் மாத்திரம் இருக்கக்கூடிய விடயமாக உள்ளது. 

அடுத்து 43 ஆவது பிரிவு என்னைப் பொறுத்தவரையில் ஒரு விசித்திரமான பிரிவு. 1998 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இந்த பிரிவு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமானவர் தனது அதிகாரங்களை யார் யாருக்கு பகிர்ந்தளிக்கலாம்  என்பது தொடர்பாக சொல்கின்றது. பணிப்பாளர் நாயகம் பொதுவாகவும் சிறப்பாகவும் தனது அதிகாரங்களை யார் யாருக்கு பகிர்ந்தளிக்கலாம் என்று பார்த்தால், ஒருவர்  மாவட்ட செயலாளர். அதாவது, தொல்லியல் திணைக்களத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அலுவலகம் அமைக்க முடியாதவிடத்து அந்த மாவட்டத்தினது மாவட்ட செயலாளர் அதாவது அரச அதிபருக்கு அதிகாரங்களை வழங்கலாம். அல்லது தனது அதிகாரங்களை பிரயோகிக்குமாறு தனது திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிக்கு வழங்கலாம். அதிலும் பிரச்சனை இல்லை. அல்லது அரசாங்க அதிபரின் கீழ் மாவட்ட செயலாளரின் கீழ் செயற்படக்கூடிய பிரதேச செயலாளருக்கு வழங்கலாம். அதிலும் பிரச்சனை இல்லை. 

ஆனால் பிரச்சனைக்கு உரிய ஒரு பிரிவு இருக்கின்றது. 43:1C அதன் கீழ் அதாவது அகழாய்வு, பேணுகை, மீள் பேணுகை, பராமரிப்பு போன்ற விடயங்களை செய்யக் கூடிய வளங்களும் விசேட நிபுணத்துவமும் உள்ள எந்தவொரு நபருக்கும் அவர் தனது அதிகாரத்தை வழங்கலாம். தற்பொழுது நீங்கள் செய்திகளிலே கேள்விப்பட்டிருப்பீர்கள்.

முல்லைத்தீவிலே இருக்க கூடிய குருந்தூர் மலை விகாரை தொடர்பாக வணக்கத்திற்குரிய கல்கமுவே சந்தபோதி தேரோ என்பவர் தற்பொழுது இராஜினாமா செய்துள்ள முல்லைத்தீவு நீதவான் அவர்களை முதலாம் எதிர் மனுதாரராக காட்டி CA 474 2023 என்ற வழக்கை 14.08.2023 அன்று தாக்கல் செய்திருக்கிறார். அதிலே அவர் இந்த பிரிவை சொல்லாமல் தான் குருந்தூர் மலை விவகாரத்திலே கவனம் செலுத்துவதற்கான காரணம் தொல்லியல் திணைக்களத்திற்கு போதுமானளவு வளங்களும் ஆளணியும் இல்லாததால் தான் என்று சொல்கிறார். குறித்த வழக்கிலே பிரிவு 43:1C யின் கீழ் பணிப்பாளர் நாயகத்தால் தனக்கு அந்த அதிகாரம் உண்மையில் வழங்கப்பட்டுள்ளதா  என்பதை குறித்த வணக்கத்திற்குரிய பிக்கு வழக்கிலே குறிப்பிடாவிட்டாலும் அவ்வாறான அதிகாரம் வழங்கப்பட கூடியதாக இருக்கின்றது என்பதே சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கிறது என்பது தான் எனது நிலைப்பாடு.

அரச உத்தியோகதத்தர் அல்லாத ஒரு நபரிடம் பணிப்பாளர் நாயகம் தனது அதிகாரங்களை வழங்க கூடியவாறு ஏன் சட்டம் பிரிவு 43:1C யின் கீழ் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறது? இது தொல்லியல்  திணைக்களத்தின் வேலையிலே அரசியல் கலப்படம் உருவாகுவதற்கான இடத்தினை வழங்குகின்றது என்று நான் கருதுகின்றேன். இருப்பினும் ஒரு வழக்கை குறிப்பிட்டு இதனை முடிக்கலாம் என்று நினைக்கின்றேன். 

அண்மையில் தீர்க்கப்பட்ட 07.10.2022 Helagama vs ministry of buddhasasana CA 225/2022 என்ற வழக்கு ஒரு தனி நபர் தமது  பிரதேசத்தில் உள்ள ஒரு தொல்லியல் பிரதேசத்தை தொல்லியல் சின்னங்களை தொல்லியல் திணைக்களம் பராமரிக்க தவறியுள்ளது. ஆகவே தன்னிடம் அதனை கையளிக்க வேண்டுமென கூறி தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கிலே மாண்புமிகு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா அவர்கள் இந்த மனிதர் ஏன் தனது செலவில் இதனை பாதுகாக்கிறேன் என்று ஆராய்கிறார். அந்த நபரின்  உண்மையான நலன் என்ன என்பதனை ஆராய்ந்து பார்த்த பொழுது, அவர் அந்த தொல்லியல் பிரதேசத்திற்கு பக்கத்திலே விவசாயம் செய்து வருகின்ற ஒரு நபராக காணப்படுகின்றார். 

ஆகவே அந்த காணியோடு சேர்த்து இந்த காணியையும் சேர்த்து ஆள வேண்டும் என்பதற்காகவே அவர் அந்த பிரதேசத்தை தன்னிடம் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்  என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எந்தவொரு தனி நபருக்கும் தொல்லியல் திணைக்களத்திற்கு உரிய இடத்தை கொடுத்து விட முடியாது என அந்த தீர்ப்பிலே சொல்லப்பட்டிருக்கிறது.

இது என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானது. இந்த தீர்ப்பிலே 43:1C ஐ பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. அதாவது பணிப்பாளர் நாயகம் விசேடமாக எந்தவொரு நபருக்கும் தனது அதிகாரத்தை குறித்தொதுக்கலாம் என்று சொல்கின்ற விடயம் சொல்லப்படாவிட்டாலும் தீர்ப்பிலே தனி நபர் ஒருவருக்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பராமரிப்பதற்கு உரிய அனுமதி வழங்கப்பட முடியாது என்பது சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு பொதுவாக அமுல்படுத்தப்பட்டால் மதத்தின் பெயரால் ஏற்படக்கூடிய தொல்லியல் சின்னங்களுக்கு அரசியல் சாயம் பூசுகின்ற ஒரு செயற்பாட்டை தடுத்து நிறுத்தலாம் என நான் நினைக்கிறேன். 

ஆகவே சட்டத்திற்கு உட்பட்டே தொல்லியலுக்குள் அரசியல் புகுவதற்கான இடைவெளியை சட்டமே செய்து கொடுக்கின்றது. 200 வருடத்திற்கு உட்பட்ட கட்டிடங்களை கூட தொன்மையான கட்டிடங்கள் என்று அறிவிக்க கூடிய அமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரம். தங்களால் பல நூற்றாண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகின்ற குருந்தூர் மலை விகாரை போன்ற இடங்களை கூட இந்த 200 வருடங்களுக்கு உட்பட்ட பிரிவு 16 இன் கீழ் தற்துணிவு அதிகாரங்களை கொண்டு தொன்மையான சின்னங்கள் என்று அறிவிக்கின்ற பாங்கு. மற்றும் பிரிவு 43.1C இன் கீழ் பணிப்பாளர் நாயகம் ஏதேனும் ஒரு நபர் ஒருவருக்கு தனது அதிகாரங்களை பாரமளிக்க கூடிய வகையில் செயற்படலாம் என்பவற்றின் ஊடாக தொல்லியல் சட்டமே தொல்லியல் விடயங்கள் அரசியல் மயப்படுவதற்கான இடைவெளியை வழங்குகின்றது.

இந்த சட்டத்தை அதனூடாக கிடைக்கும் அதிகாரங்களை பொது நம்பிக்கையாக வைத்து செயற்படுத்தல் என்ற விடயத்தை வைத்து பார்க்கின்ற பொழுது தொல்லியல் சின்னங்களை பொது நோக்கத்துக்காக அதாவது அனைத்து மக்களையும் உள்வாங்குகின்ற நோக்கத்திற்காக செயல்படுத்துகின்ற விதத்திலே சட்ட ரீதியாக போராடுவதற்கான இடைவெளி இருக்கிறது. வெற்றி தோல்வி மறுபுறம், ஆனால் அரசியல் மயப்படுத்தப்பட்ட இந்த சட்டத்தையும் நாங்கள் வினைத்திறனாக முழுமையாக

விளங்கி முழுமையான பார்வையின் அடிப்படையில் நாங்கள் சிந்தித்து செயற்படும் போது எம்மிடமிருந்து பறிக்கப்படுகின்ற எமது வரலாற்றை ஓரளவுக்காவது நாம் எம்மகத்தே வைத்திருப்பதற்கான முயற்சியில் ஈடுபடலாம் என நான் கருதுகின்றேன். முயற்சி திருவினையாக்கும்.

கலாநிதி க. குருபரன்- 

நிமிர்வு ஐப்பசி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.