ஈழத்தமிழினம் இனியென்ன செய்ய வேண்டும்?

 


இனத்தின் விடுதலையெனும் இணையற்ற இலக்குடன் பயணித்த மறவர் வழிவந்தும் வரலாறு மறந்த இரண்டாயிரக் குழவிகளின் பட்டியலில் இருந்து நழுவத் துடிக்கும் தமிழினத்தின் தன்னிகரற்ற காதலன் என என்னை முதலில் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். வரலாற்றுத் தடங்களை தொட்டோ, கேட்டோ உணராதவனால் உறுதியான உலகம் நினைவுகூரக்கூடிய வரலாற்றை படைக்க இயலாது. எம்மினத்தின் ஐந்து தசாப்தத்திற்கு அண்மித்த அளப்பரிய போராட்டத்தினையோ, ரணங்களையோ நேரடியாக நான் அனுபவித்ததில்லை. மாறாக மறைமுக வடுக்கள் இன்னமும்கூட வலிக்கச் செய்கின்றன.

ஒரு இனத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச முயற்சியே வரலாறுகளை திரிபுகளின்றி வருங்கால சந்ததிகளின் கைகளில் சேர்ப்பதாகும். வரலாறு எங்கள் வழிகாட்டி என்றுரைத்த அண்ணலின் வழிவந்த வாரிசுகள் வரலாற்றை மறந்திருப்பது மரணதண்டனைக் குற்றத்தின் வரிசையில் அல்லவா சேரும். எம்மினம் கடந்து வந்த பாதையிலிருந்து இன்றைய இளைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும் விட்டுச் செல்ல வேண்டிய விடயங்களும் ஏராளமிருக்கின்றன.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழியென்றும் இனமென்றும் அழைத்துக் கொள்வதால் மாத்திரம் பயனில்லை. இன்றைய தலைமுறையே எம் வரலாறு அறியாமல் இருப்பது எத்தகைய கொடுமையென்பதை கற்பனை செய்யும் போதே இதயம் கனக்கிறது. கடந்து வந்த பாதைகளில் இருந்து கற்றுக் கொண்ட படிப்பினைகளின் உத்வேகத்துடனும் ஈட்டிக் கொண்ட அனுபவங்களின் உறுதுணையுடனும் நாம் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டிய காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பதின்நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்றும் நாம் அதே இடத்தில் அனாதைகளாக நின்று கொண்டிருக்கிறோம். அரசியல், பொருளாதாரம், கலாசாரம், கல்வி என்று துறைகள் அனைத்திலும் கையாலாகாதவர்களாக கலங்கி நிற்கிறோம்.

முப்படை கட்டி தனியரசு நடாத்திய தனித்துவமான இனமொன்று இன்று இலக்கின்றி பயணிப்பது பெருங்கவலைக்குரிய விடயமென்பதில் ஐயமேதுமில்லை. நாட்டின் பொருளாதார, அரசியல் ஸ்திரமற்ற நிலைகளும் நலிவுற்ற எம் சமூகத்தின் இனம் பற்றிய சிந்தனையை மேலும் இழிவாக்கிக் கொண்டே செல்கின்றன. இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவரினதும் இலட்சியம் கனடா தேசமேயன்றி கரிகாலனின் கனவு தேசமல்ல. வெறுமனே பொறுப்பற்ற சமூகம் என்று இன்றைய சந்ததியினரை குற்றவாளிக் கூண்டுகளிலே ஏற்றி விட்டு எட்ட நின்று வேடிக்கை பார்க்க முடியாது. தமிழர் சமூகம் பயணிக்க வேண்டிய பாதையை சரிவர செப்பனிட்டு முறையான கட்டமைப்புடன் வழிநடத்த தவறிய, இனம் சார்ந்து சிந்திக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதற்கான பொறுப்பினை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நடந்தவைக்காக நம்மை நாமே நொந்து கொள்வதால் பயனொன்றும் இல்லை மாறாக இந்நிலையிலிருந்து மீள்வதற்கான மாற்றுவழி குறித்து சிந்திப்பதே உசிதமானது. அதுகுறித்த எமது நகர்வுகள் எவ்வாறானதாக அமைய வேண்டுமென்பதை ஆராயலாம். அடிப்படைத் தேவைகளை அடைந்து கொள்ள இயலாத மனிதனால் அதைத்தாண்டி வேறுவிடயங்களை பற்றி சிந்திக்க முடியாதல்லவா? அவனுடைய தேடல் மூவேளை உணவிலும் உடை, உறையுள் சார்ந்து இருப்பதில் தவறில்லை. அந்த தேடலை செய்யும் அதேவேளை, ஒரே மொழி, கலாச்சாரம் என்பவற்றை கொண்டிருந்து, ஒரே அடக்குமுறைக்கு முகம் கொடுத்து அதற்கும் மேலாக ஒரே கனவுடன் கூட்டிக்கட்டப்பட்ட ஒரு தேசிய இனமாக அனைவருக்கும் அளப்பரிய பொறுப்பிருக்கிறது. 

எமது சமூகத்தை பல்துறை சார்ந்து பலப்பட்ட அனைத்து வழிகளிலும் வளப்பட்ட கட்டமைப்பாக செதுக்கி எடுப்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, கல்வி ரீதியாக என ஒவ்வோர் துறை சார்ந்தும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் முறையான வழிகாட்டுதல்களுடன் நாம் நீண்டகால இலக்குகளை நிர்ணயித்தாக வேண்டும். ஆகவே எமது தரப்பில் முதலில் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த, அழுக்கான அரசியல் கலப்பற்ற கட்டமைப்புக்களும் குழுக்களும் தோற்றம்பெற வேண்டும். அவ்வாறான பொதுக்கட்டமைப்புக்கள் குறித்த துறைசார்ந்து எம்மினத்தின் வளர்ச்சி பற்றி செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஒவ்வொரு அமைப்புக்களிலும் மூத்தோர், பெண்கள், இளைஞர்கள் என அனைவரினதும் பங்குபற்றுதலுடன் புத்தாக்க சிந்தனைகள் உள்வாங்கப்பட்டு அதிஉத்வேகத்துடன் பயணிக்க வேண்டும் மாறாக பழைய பல்லவியின் பிரகாரம் தேங்கி நின்றுவிடக்கூடாது. 

தலைநிமிர்ந்து நின்றிருக்க வேண்டிய இனம், இன்று சிலரின் தன்னலத்தால் சின்னாபின்னமான வரலாறுகள் நாம் ஆழப்படிக்க வேண்டிய பாடங்களை விட்டுச் சென்றிருக்கின்றன. தியாகத்தின் அர்த்தமாக இன்னுயிர் நீத்த மறவர்களின் அர்ப்பணிப்பு எமக்கு இனத்தின் மீதான காதலை துளிர்க்கச் செய்து கொண்டே இருக்கிறது. இவையெல்லாம் வெறுமனே நினைவேந்தல் நிகழ்த்தவும், சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து கொள்வதற்காகவும் இல்லை. இவற்றை சிரமேற்கொண்டு இலக்கு நோக்கி இன்னமும் உறுதியுடன் அடியெடுத்து வைக்க வேண்டும். 

அந்த இலக்கு என்னவென்ற கேள்வி எழலாம். சமூக,பொருளாதார, அரசியல்,கலாச்சார, கலை, கல்வித் துறைகளில் ஸ்திரமான கட்டமைப்புக்களுடன் கூடிய கனவுகளில் இருந்து விலகாத சமூகமொன்றை கட்டியெழுப்புதலே எம் இலக்காக இருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை இலக்காக கொண்ட அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வேண்டுமென்கிறேன். அதற்கு அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டுமென்றில்லை, அயல்நாட்டிடம் மண்டியிட வேண்டுமென்றுமில்லை.

கவனக்கலைப்பான்களிடம் சிக்கித் திளைக்கும் இளைய சமூகமும், தமது தன்னலங்களுக்காக இளம் சமூகத்தை தவறாக வழிநடத்தும் மூத்த தலைமுறையும் குறுகிய தத்தமது நோக்கங்களைத் தவிர்த்து ஒன்றுபட்ட ஓர் உயரிய இலக்குக்காக ஒரு குடையின் கீழ் அணிதிரள வேண்டும். தற்போதைய தலைமைத்துவ பற்றாக்குறை நம் சமூகத்திலிருந்து அகல வேண்டுமாயின் அரசியல் பொதுவுடமையாக்கப்பட வேண்டும். கட்டுரைகளில் தனிநபர் விமர்சனங்களை வெளிப்படுத்துவது தவறென்பதால் தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் தப்பித்துக் கொண்டனர் இல்லாவிடின் இவர்கள் பற்றிப் பேசித் தீர்க்கவே எனக்கு இருபது பக்கங்கள் போதாது.

எமது தரப்பிலே தரமான தலைமைகள் உருவாக வேண்டும். அதே தலைமைகள் ஆசன ஆசையுடன் ஆயுள் முழுவதும் அவ்விடங்களை அலங்கோலப்படுத்தாமல் அடுத்த தலைமுறையிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு உறுதுணையாக நின்று வழிகாட்ட வேண்டும். தலைவனுக்குரிய அடிப்படைப் பண்புகளுள் ஒன்று அவனுக்கு பின்னால் வழிநடாத்தக் கூடிய தளபதியையாவது தயார்படுத்தி இருப்பதாகும்.

ஆக்கபூர்வமான கருத்துக்கள் அனைவரிடமிருந்தும் உள்வாங்கப்பட வேண்டும். எமது இனத்தின் பெருஞ் சாபக்கேடான சாதியம் அடியோடு அழிக்கப்பட்ட வேண்டும். சாதியத்தை சாவடிக்க தற்கொலைக் குண்டுதாரி தேவையென்றால் தயக்கமே இன்றி முதலாவது நபராக நான் அங்கு நின்றிருப்பேன். எனது இனமென்று மார்தட்டிக் கொள்ளும் நான், வெட்கித் தலைகுனியும் ஒரு விடயம் இந்தச் சாக்கடை சாதியமாகும். இந்தச் சாதியவாதமும் பிரதேசவாதமும் என் இனத்திலிருந்து அடியோடு களையப்படும் வரைக்கும் விடிவென்பதில்லை. 

அடுத்ததாக, கடந்த காலங்களில் எமது பயணத்தில் தவறவிடப்பட்ட இன்னுமொன்றை நினைவுபடுத்த வேண்டிய பொறுப்பிருக்கிறது. இற்றைக்கு இருநூறு வருட வரலாற்றைக் கொண்ட எமது மலையக மக்களின் அபிலாஷைகள், அடிப்படைத் தேவைகளைப் பற்றி சிந்திக்க மறந்திருக்கிறோம். சில சந்தர்ப்பங்களில் பேசப்பட்டாலும் அவை பேச்சளவோடு நின்றுவிட்ட சந்தர்ப்பங்களே அதிகம். இனிவரும் காலங்களில் தமிழ் சமூகமென்பது வடக்கு,கிழக்கு, மலையகம் மற்றும் நாடெங்கும் வாழும் அனைத்துத் தமிழ் மக்களின் தேவைகளையும், தேடல்களையும் கருத்திற் கொண்டு ஒரு குடையின் கீழ் ஒருசேர பயணிக்க வேண்டுமென்பது எனது பேரவா.

ஓடாத மீனும், போராடாத இனமும் மீளமுடியாதென்ற கரிகாலனின் கூற்றுக்கிணங்க யாமும் இன்று வரை போராடிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆயுதப் போராட்டம் முடிந்து போராட்ட வடிவம் மாறுபட்டு இருக்கலாம் ஆனால் கனவுகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலாயினும் சரி பிற நினைவு நாட்களாயினும் சரி, நாம் துக்க தினமாக எண்ணி துவண்டு போவதற்காக அல்ல, மேலும் உறுதியுடன் மாறாத இலக்குடன் பயணிப்பதற்காகவே ஆகும். எமது வரலாற்றை வாழ்வியலாக்கி பண்பாட்டு பாரம்பரியங்களோடு அடுத்த சந்ததியிடம் ஒப்படைப்போம். 

புலம்பெயர் சமூகமே உங்களிடம் வினையமாக கேட்டுக் கொள்கிறேன். பொருளாதார ரீதியில் எமது இனம் பலப்படுவதற்குரிய நீடித்த திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். தங்கள் முதலீடுகளை தாயகத்தில் அதிகப்படுத்தி எமது சமூகத்தை உறுதி கொள்ளச் செய்யுங்கள். தாயகப்பரப்பிலே பெருமளவிலான நீண்டகால நிலைத்த தன்மையுடைய முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டு எமது மனித வளங்கள் சுரண்டப்படுவதும், ஏற்றுமதி செய்யப்படுவதும் குறைவடைய வேண்டும். மண்ணையும் மக்களையும் இழந்துவிட்டு எதை நோக்கிப் பயணிக்க போகிறோம் என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.

"உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்" வள்ளுவர் வாக்கினை சிரமேற்கொண்டு நினைப்பதோடு நின்றுவிடாது எம் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க முனைய வேண்டியது இன்றியமையாதது. நாம் பயணிக்க வேண்டிய பாதை, நெறிப்படுத்த வேண்டிய விடயங்கள், களையப்பட வேண்டிய கூறுகள் என பல்வேறுபட்டவற்றை இக்கட்டுரையில் தொட்டுச் சென்றிருக்கிறேன். இவற்றையெல்லாம் நினைவிற் கொண்டு முறையான திட்டமிடலுடன் முழு மூச்சாக இலக்கை நோக்கிய இலட்சியப் பயணத்தில் ஒருமித்த கனவுகளுடனான ஒரு தேசிய இனமென்ற ஆகுதி பூண்டு அடியெடுத்து வைப்போம். 


கேஷிஹன் இளமுருகநாதன்

கணனிப் பீடம், சப்ரகமுவ பல்கலைக்கழகம்

நிமிர்வு கார்த்திகை 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.